Monthly Archives: February 2013
“உயர்திணை” யார்? ஏன்? – 2013 –
“உயர்திணை”
யார்? ஏன்? – 2013 –
சுமார் ஒரு வருட காலமாக அமைதியான இலக்கிய சந்திப்புகளை மாதாந்தம் நடத்தி வருகிறது உயர்திணை அமைப்பு.
இப் புது வருடத்தில் அது தன்னை உருப்படுத்தும் ஒரு முயற்சியாக தன்னை இனம் காட்டிக் கொள்ள முனைகிறது.
’உயர்திணை’ சிட்னியைச் சேர்ந்த மரபு சார்ந்த பதவிகள் எதையும் கொண்டிராத குழுவாகச் சேர்ந்து இயங்கும் ஓர் இலக்கியசபையாகும்.
அது சிட்னியில் கடந்த மாசி மாதம் 2012 இல் இருந்து மாதம் ஒரு தடவை அமைதியாக இலக்கியச் சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறது.
கலை இலக்கியத்தில் மனிதத்தையும் உண்மையையும் நேர்மையையும் மானுட சுபீட்சத்தையும் அழகுகளையும் அவலட்சணங்களையும் அதன் சவால்களையும் மறைபொருள்களையும் தேடுதலும் சொல்லுதலும் கடந்த வருடத்தில் அதன் இருப்பாகவும் இயல்பாகவும் இருந்து வந்திருக்கிறது.
அது தன் இலக்காகவும் நோக்காகவும் கட்டுப்பாடற்ற பேச்சு எழுத்து கருத்து சுதந்திரத்தையும் அரசியல் சார்பற்ற எல்லைகள் ஏதுமற்ற உலக மனிதாபிமானத்தையும் சகிப்புத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
மேலும்,
1.கலா இலக்கிய வெளிப்பாடுகளில் வாழ்வியலின் தரிசனங்கள் வெளிப்படும் ஆற்றை ஆய்தலும் ரசித்தலும் மேலும், அவற்றில் ரசனைகளை ரசங்களை காணுதலுக்கும் சுவைத்தலுக்குமான மகிழ்வெளியாக மாதம் ஒருமுறை கடசி ஞாயிறில் அது தன் இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தும்.
அது தனிப்பட எழுதியதை ரசித்ததை பார்த்ததை வியந்ததைப் பகிரும் ஒரு உயிரோட்டமுள்ள களமாகவும் மொழி இட கலாசார எல்லைகளற்ற உரையாடலுக்கான தனி வெளியாகவும் கலைஞர்கள் இலக்கியவாதிகள் ரசிகர்கள் சந்திக்கும் ஒரு நிகழ்வாகவும் இருக்கும்.
2.புதிய பாதைகள்: புதிய ரசனைகள்: புதிய கலை இலக்கிய உத்திகள் இவற்றை இனம் காணுதலும் பகிர்தலும் தமிழுக்கு அவற்றை அறிமுகம் செய்தலும்
- கலை இலக்கியத்துறையில் உயர்தர ரசனையைப் பேணுதலும் அவற்றின் சவால்களை ஆராய்தலும் அவ்வாறான படைப்புகளுக்கு ஆதரவு வழங்குதலும்..
- ஒற்றுமையினதும் புரிந்துணர்வினதும் அடிப்படையில் விமர்சனத்தினூடாக தரமான கலை இலக்கியப் படைப்புகளையும் கலைஞர்களையும் இனங்காணுதலும் சமூகத்தில் அதன் இருப்பை உறுதிப் படுத்தலும்.
- .புதிய தலைமுறைக் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் இனம் கண்டு தமிழுக்குப் புதிய வாசல்களைத் திறந்து வைத்தல்.
- கலை இலக்கியம் சிகிச்சையாகும் ஆற்றை ஆய்வு செய்தலும் பயன் படுத்தலும்.
- அவுஸ்திரேலியத் தமிழரின் வாழ்வியலை – நம் கலை இலக்கியத்தினூடாகத் தமிழுக்கு வந்த புதிய சிந்தனைகளை ஆராய்ச்சி நோக்கில் அணுகுதலும் இலக்கிய வடிவில் ஆவனப்படுத்தலும்
8 கலைஞர்கள் இலக்கியவாதிகளுடன் சந்திப்புகளை ஏற்படுத்துதலும் கலை,இலக்கிய அறிவுப் பகிர்வும்
போன்ற நோக்கங்களைக் கொண்டு இயங்க ஆரம்பித்துள்ளது.
அறிவித்தல்கள்: தமிழ் ஆவண மாநாடு – 2013
நூலகம் நிறுவனம் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆவணமாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளது. இம்மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுவதாக நூலகம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது பற்றிய விபரங்களை வலைப்பதிவு நண்பர்களுக்காக இணைக்கிறேன்.
திகதி
ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில், 2013
இடம்
கொழும்பு தமிழ்ச் சங்கம், இலங்கை
மின்னஞ்சல்
noolahamfoundation@gmail.com
தொலைபேசி (இலங்கை)
0094 112363261
அறிமுகம்
இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய , எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக ”தமிழ் ஆவண மாநாடு 2013” ஐயும் நடாத்தவிருக்கின்றது. ‘தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வரும் 2013 ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறும்
ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
பல்வேறுபட்ட துறைசார்ந்த விடயங்களையும் ஆவணப்படுத்தல், பேணிப்பாதுகாத்தல் மற்றும் அறிவைப்பகிர்தல் ஆகிய பணிகளில், இதுவரைகாலமும் அடையப்பட்ட இலக்குகளையும் அடையத் தவறவிடப்பட்ட இலக்குகளையும் அடையாளம் கண்டு, வெளிப்படுத்துதலை இம் மாநாடு நோக்கமாக கொண்டுள்ளது. இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பல கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்குபற்றும் இம் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க விரும்புவோரிடமிருந்து கீழ்வரும் விடயப்பரப்புகளுக்கு அமைவான ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப் படுகின்றன. இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும்.
ஆய்வுக்கட்டுரைகளுக்கான விடயப்பரப்புகள்
1. வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும்
2. ஒலி, ஓளி, புகைப்பட ஆவணங்கள்
3. தனிமனித ஆளுமைகள், நிறுவனங்கள்
4. சமூகத்தை ஆவணப்படுத்தல்
5. மொழி இலக்கியப் பதிவுகள்
6. அறிவுப்பகிர்வும் கல்வியும்
7. ஆவணப்படுத்தலில் தொழினுட்பப் பயன்பாடுகள்
8. எண்ணிம நூலகங்கள் [Digital Libraries], இணையத் தளங்கள், தரவுத் தளங்கள்
9. நூல் விபரப்பட்டியலும் நூலகவியலும்
10. கலை பண்பாடு நினைவுகளும் ஆவணப்படுத்தலும்
ஆய்வரங்குகளில் பங்குபெற்ற விரும்பும் ஆய்வாளர்கள், தாம் சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான முன்வரைவை 400 சொற்களுக்கு மேற்படாதவாறு அனுப்பி வைக்க வேண்டும். இம் முன்வரைவு 15-01-2013 அன்று அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவை தமிழ் ஒருங்குறி [Unicode] எழுத்துருக்களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் noolahamfoundation@gmail.com அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. அதேவேளை தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், நியமிக்கப்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்ட குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட முன்வரைவுகள் பற்றிய விபரம் இரு வாரங்களுக்குள் அவற்றை அனுப்பியவர்களுக்கு அறிவிக்கப்படுவதோடு மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான அழைப்பும் பதிவுசெய்தல் பற்றிய விபரங்களும் அறிவிக்கபடும்.
தெரிவு செய்யப்பட்ட முன்வரைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் தமது இறுதி வடிவத்துடன் 01-03-2013 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 சொற்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும்.
மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் நூலக நிறுவனம் மாநாட்டின் ஆரம்ப நாள் அன்று வெளியிட உள்ள மாநாட்டுச் சிறப்பு மலரில் இடம்பெறும். கட்டுரையாளர்கள் மற்றும் பதிவு செய்த பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாடு நடைபெறும் நாட்களில் மாநாட்டு சிறப்பு மலர், வெளியீடுகள், கோப்புக்கள் போன்றவை வழங்கப்படும்.
முழுப்பெயர், மின்னஞ்சல், வதிவிட முகவரி ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்கட்டுரைகளுக்கான முன்வரைவுகள், கட்டுரைகள் ஆகியவற்றை அனுப்புதலுக்கும் பிற தொடர்புகளுக்குமான முகவரி:
Noolaham Foundation
No 7, 57th Lane, (Colombo Tamil Sangam)
Colombo-06, Sri Lanka
Phone (Land): 0094 112363261
இலக்கிய சந்திப்பு – 9 – சிந்தனையை முன்னிறுத்தி……
சிதைந்து போன ஒரு சமூகத்தில் இருந்து ஒலிக்கும் ஓர் ஒற்றைக் குரலும் இலக்கிய சந்திப்பின் இம்மாத சிந்தனையும்
ஒரு முன்னாள் போராளிப் பெண்ணின் வாக்குமூலம்:
( நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளிமலர்: 7.11.12 பக்: 150 – 155 )
பெண்களை முதன்முறையாக மரபு வழியாகப் போராட வைத்த எல்.ரீ.ரீ. ஈ இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?
1985 ஆவனி மாதம் 18ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோக பூரவமான பயிற்சிப்பாசறை ஆரம்பிக்கப்பட்டது.அன்றில் இருந்து ஈழப்போராட்டத்தின் இறுதிக்கணம் வரை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தூண்கள் பெண்கள் படையணி. பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப்பெரிய சமூகப் புரட்சி.சாதிக்கொடுமைகளும் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.ஆண்கள் படையணி மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிமீதும் இருந்தது.பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மட்டும் போராடவில்லை.அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை.ஆனால் பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டு விட்டது.
அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில் பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?
ஒரு நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர்.ஒரே துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர்.அவர் இறந்தவுடன் ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத்தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம் போல் உணருகிறோம்.
இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?
ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி.ஆனால் பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்.
என்ன நடந்தது?
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்த போது சக போராளி கீரனைக் காதலித்து மணந்து கொண்டேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின் போது அனந்தபுரத்தில் ரசாயணக் குண்டடித்து இறந்து போன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.அவர் இறந்தவுடன் எனக்கிருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறக்கப் போகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நான் கவலைப்படவில்லை.ஆனாலும் நான் மனம் தளராமல் போராடினேன்.எமது போராட்டத்தில் நாம் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை. ஆனாலும் நாங்கள் தோற்று விட்டோம்.எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன்னேற்பாடும் எங்களிடம் இல்லை.
முள்ளிவாய்க்காலில் இருந்தூ நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப்பிரதேசங்களுக்குள் எனது இரண்டு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக் ஃபாம் முகாமில் தங்கி இருந்த போது இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டென். எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரனைக்காக அநுராதபுர முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு கொண்டு செல்லப்பட்ட முதல் நாளே விசாரனை என்னும் பெயரால் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பளிக்கப்பட்டேன்.காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன். சுமார் 50க்கு மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.
அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளினால் கற்பழிக்கப்பட்டனர். சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர். சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தை தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர். காமப் பசியாறுவதற்காக அவர்கள் என்னைக் கற்பழிக்கவில்லை.’தமிழ் பெண்களைக் கற்பழிக்கிறோம்’என்ற மிருகவெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கைகொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.
கூட்டாகக் கற்பழிக்கும் போதே இரத்தப் பெருக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பிறப்புறுப்பில் பெற்றோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டிச் ரசித்தனர். அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி அவர்களின் மலத்துவாரத்தில் இரும்புக் குளாய்களைச் செலுத்தி அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர். பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர். எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்.
விசாரணைச் சித்திரவதையில் இருந்து எப்படித்தப்பினீர்கள்?
சிறிது காலத்தில் அவர்களாகவே என்னை விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு விட்டனர். அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையால் வடிக்கமுடியாது. பின் ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்து தான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்.
நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்….?
பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில் தான் இயங்குகின்றன.முன்னாள் போராளி எனத்தெரிந்தும் யாரும் உதவக் கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தினார்கள். எங்களுடன் பேசினால் கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினார்கள். எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம்.பசியால் பிஞ்சுக்குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம் தான் சகித்துக் கொண்டிருப்பது? பால் சுரக்காத முலையச் சப்பியவாறு பால், பால் என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித்தம்பி சகித்துக் கொண்டிருப்பது? எனக்கு வேறு எந்தவழியும் தெரியவில்லை
ஏன் நீங்கள் வேலை தேடவில்லையா..?
எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக் கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்…. எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை. யாப்பாணம் பழைய புகையிரத நிலயத்தில் பசி வயிற்றைச் சுருக்க படுத்திருந்த போது அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன்.அவர் என்னை படுக்க அழைத்தார். சென்றேன். அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித்தந்தார். அன்றில் இருந்து தான் நான் ஒரு பாலியல் தொழிலாளியானேன்.தம்பிக்காகப் போராளியான நான் எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளியானேன்.
யாரெல்லாம் உங்கள் வாடிக்கையாளர்கள்?
பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மானவர்களும் வருவார்கள். ஆனால் அவர்களை நான் அனுமதிப்பதில்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வருவதில்லையா?
அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத ஆரசாங்கத்தின் ஏஜெண்ட் போலவே செயல்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்து கொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப் போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?
( அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது ) இந்தியாவில் இருந்து கொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.’ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்” என்கிற நிர்வான கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதனால் தான் இன்றும் இனி ஒரு ஈழப்போர் வெடிக்கும்.பிரபாகரன் திரும்பி வருவார் என்றெல்லாம் சும்மா எழுதிக் கொழுத்திப் போடுகின்றனர். எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப் பட்டுவிட்டது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து ’எப்போது உங்கள் அடுத்த போராட்டம்” என்று கேட்டால் விளக்குமாறால் அடிப்பேன்.(சட்டென ஆற்றாமை பொங்க குரல் உடைந்து அழுகிறார்) இந்தியத் தலைவர்களே! … உங்களைக் கைகூப்பித் தொழுகிறேன்….எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.எமது சஅடுத்த சந்ததி வாழவேண்டும். ஒரு நாளேனும் நின்மதியாக உறக்கம் கொள்ள வேண்டும். உங்களுடய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.
ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே… உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்து போன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக் கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கண்டிருந்தால் நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்.
உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை விபசாரி என விமர்சி…
(கேள்வியை முடிக்கு முன்னே சுளீர் எனச் சொல்கிறார் ) நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆண்மாவை அல்ல!.
( பேட்டி கொடுத்தவர் பற்றி:)
எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை.1995 யூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தோம். சுமார் 500 பேர் அங்கு குடிபெயர்ந்திருந்தோம்.9ம் திகதி புக்காரா விமானங்கள் நடாத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். என்னுடன் அந்தக் கனம் வரை சிரித்து விளையாடிக்கொண்டிருந்த என் 2 வயதுத்தம்பி உடல் இரண்டு துண்டாகி செத்துப் போனான்.ஒருவாரம் மயக்கமாகி ஆஸ்பத்திரியில் இருந்து விழித்த போது தம்பியோடு தாயையும் இழந்திருந்தேன்.சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்களைக் கூட கழிக்க முடியாத குழந்தை அவன்.என்ன பாவம் செய்தான்? தமிழனாய் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்படுவதை எத்தனை காலத்துக்குத் தான் சகித்துக் கொண்டிருப்பது? எவ்வளவு காலத்துக்குக் குழந்தைகளைப் பலி கொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்கும் கடமை எனக்கிருப்பதாகத் தோன்றியதால் போராட்டத்தில் இணைந்து கொண்டேன்)
…………………..
உண்மை போடுகின்ற சூடு! வாழ்க்கை ஒன்றின் அவலக்குரல்! வலியால் எழுதப்பட்ட வார்த்தைகள்! யதார்த்தத்தின் நிதர்சனங்கள்!!
ஈழத்து இலக்கியம் இதுவரை கண்டிராத ஒரு வாழ்க்கைக் கோலம்! மேலும் ஒரு மறு பக்கப் பார்வை! ஒரு சமூகம் இது வரை காண்டிராத ஒரு போரியலின் பின்பான அவலம்!
ஒரு சமூக விமர்சனம்!
நாங்கள்! எங்கள் சிந்தனைகள்!! இவை எல்லாம் எங்கே நிற்கின்றன!!! என்ன செய்து கொண்டிருக்கின்றோம் நாம்? என்ன செய்யவேண்டும் நாம்? நாம் உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன? என்கின்ற கேள்விகளுக்கு நாங்கள் விடைகளைக் காணுகின்ற போது அவலமாய் மாண்டு போன எல்லா ஆத்மாக்களுக்குமான சாந்தியும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவலங்களுக்கான சாந்தியும் கூடக் கிட்டக் கூடும்!
இழப்புகளை நினைவுகூரும் இம்மாதத்தில் நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகளும் செயல்படவேண்டிய தேவைகளுக்கான சாத்தியப்பாடுகளையும் இப் பேட்டி நமக்குச் சொல்லி செல்கிறது என நம்புகிறேன்.
மக்களை: மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்காத; மனிதத்தைப் பேசாத இலக்கியம், இலக்கியச் சந்திப்பு பயனற்றது.
கடந்த மாத இலக்கிய சந்திப்பில் ஈழத்தின் பிரபல வன்னி மண் பிறப்பித்த எழுத்தாளர் தாமைரைச் செல்வி அவர்களை விருந்தினராக அழைப்பித்து ”சமகால ஈழத்துச் சூழலும் வெளிவரும் கலை இலக்கியப் படைப்புகளும்” பற்றி உரையாடி இருந்தோம். அதில் சமகால ஈழத்துச் சூழலும் நடைமுறைச் சிக்கல்கலும் இலக்கியமாகப் படைக்கப்படாத சில வரலாற்று உண்மைகளும் பற்றிய விடயம் பிரதான ஆர்வத்துக்குரிய பேசுபொருளாய் அமைந்திருந்தது.
அதன் இன்னொரு பரிமானம் மேற்கண்ட பேட்டியில் வெளியாகி இருக்கின்றது. ஆகையினால் ஒவ்வொரு மாத இறுதி ஞாயிறிலும் நடைபெறும் நம் வழமையான இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி இம்முறை மேற்சொன்ன பேட்டியை முன்னிறுத்தி; அதனை இம்மாத சிந்தனையாக முன் வைத்து, மாண்டு போன அனைத்து மக்களுக்கும் மரியாதை செலுத்து முகமாகவும் வாழ்கின்ற மக்களின் அவலத்தை ஒரு கனம் நெஞ்சில் இருத்து முகமாகவும் இடம்பெறாது என்பதையும் இவ்வருடத்துக்கான கடைசிச் சந்திப்பு 2.12.2012 அன்று பரமற்றா பூங்காவில் மாலை 5 மணிக்கு அமைதியான முறையில் இடம் பெறும் என்பதையும் அறியத்தருகிறோம்.
அனைத்து உயிர்களும் அமைதியில் நிலைபெறுவதாக!
தர்மம் வெல்வதாக!
இலக்கிய சந்திப்பு – 8 – அழைப்பிதழோடு….
கடந்த மாதம் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு – 7 – இல் நிகழ்ந்த நிகழ்வின் சுருக்கம் வாசிக்கப்பட்டு திருத்தங்கள் கோரப்பட்டன. வாசிக்கப்பட்ட நிகழ்வின் சுருக்கம் இங்கே பதிவாக!
இலக்கியச் சந்திப்பு – 7 (30.09.2012)
படம்: பெளர்ணமி நாள் (30.09.2012)
சந்தியாகால நேரம். பெளர்னமி நாள். வசந்த காலம். புல் தரையும் ஓங்கிய மரங்கள் ஓரமாயும் அமையப் பெற்றிருந்த மைதானம் ஒன்றை ஒட்டி இருந்த நவீன வசதிகள் கொண்ட சிறு மண்டபம் ஒன்றில் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்தது.
மூன்றே மூன்று பேர். கார்த்திகா, ஷிரேயா, யசோதா!
முதலில் வந்து சேர்ந்தவர் ஷிரேயா. வரும் போதே பார்த்தீர்களா? இன்றய பெளர்னமியை? கோழிக் குஞ்சின் வண்ணத்தில் பென்னாம் பெரிசாய் மரங்களிடையே அது பிரகாசிக்கிறது என ஆர்ப்பரித்த வண்னமாக வந்தார். சில நிமிட தாமதத்தில் வந்த கார்த்திகா ஒரு வருடத்தில் இன்றய மாதத்து பெளர்னமி தான் எபோதுமே பெரிதாக இருக்கும் என்ற செய்தியோடு வந்து இன்று சீனர்களின் moon festival என்ற தகவலையும் தந்தார்.
வெளியே சென்று பெளர்னமியை சில நிமிடங்கள் ரசித்தோம்.அது உயரத்தில் போய் பால் வெளிச்சத்தில் பூமியைப் பரிபாலித்துக் கொண்டிருந்தது.
குளிர் உந்தித் தள்ள உள்ளே வந்தோம். வழமையாக வருபவர்கள் எவரும் வராமையால் நம்முடய சந்திப்பின் எதிர்காலம் குறித்துக் கொஞ்ச நேரம் பேசினோம். ஆதரவற்றிருப்பதால் இச் சந்திப்பை நிறுத்துவதா என்ற கேள்வியை யசோதா முன் வைக்க மற்றிருவர் கண்களிலும் மெல்லியதான ஏமாற்றமும் சற்றே வருத்தமும் தொனித்தது.
இல்லை; இதனை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும்; வரும் காலத்தில் விருந்தினர் ஒருவரை அழைப்பித்து அல்லது ஒரு குறிப்பிட்ட விடயம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது பற்றிப் பேசுவதாக நிகழ்ச்சியை மாற்றி அமைக்கலாம் என்ற கருத்தை கார்த்திகா முன் வைத்தார்.. அடுத்த தடவை சந்திப்புக்கு திரு பாரதி அவர்களை பிரதம விருந்தினராக அழைப்பதென்றும்: சின்னத் தம்பிப் புலவரின் பாடல்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டோம்.
அதே நேரம் ஆதரவாளர்களுடய ஆதரவைப் பெற்றுக் கொள்ளாமல் செலவெதுவும் இல்லாத பூங்காவில் அல்லது யாரேனும் ஒருவருடய வீட்டிலும் கூட இவ்வாறான சந்திப்புகளை ஒழுங்கு செய்யலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்ததோடு நம் சந்திப்பை தொடர்ந்து நடத்துவதோடு வருடம் ஒரு தடவை நம் வருடாந்த பிறந்த தினத்தை அதன் முத்திரையை சமூகத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக ஒரு அழகான நிகழ்ச்சியை தனித்துவமான முறையிலும் கச்சிதமான வகையிலும் செய்து நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப் படுத்தலாம்; காலப்போக்கில் பலர் இணையும் சாத்தியக் கூறுகள் இருக்கும். அவர்கள் வலுவான அடித்தளத்துக்கு உதவுவார்கள் என்ற ஆக்கபூர்வமான கருத்தை கார்த்திகா வெளியிட; காயப்பட்டிருந்த மனதுக்கு அது ஒரு இதமான ஒத்தடமாக இருந்தது.
அதனோடு தொடர்பு பட்டதாக இருந்தது யசோதா கொண்டு சென்றிருந்த பத்திரிகைச் செய்தி ஒன்று. அது கொழும்பில் பாடிப்பறை என்ற சமூகக்கல்வி வட்டம் நிகழ்த்திய நிகழ்ச்சி பற்றிய விமர்சனக் குறிப்பாகும்.அது தன் ஆண்டு நிறைவின் போது மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதைப் பற்றியும்;’சுட்ட சாம்பலில் சுடர் மிக எழுவோம்’ என்ற கவியரங்கம் பற்றிய நிகழ்வும் பாரம்பரிய மேடை நாடகத்தினதும் வீதிநாடகப் பாணியினதும் கலவையாக நடந்த நாடகமும் பேராசிரியர் மெளனகுருவின் அரங்க ஆய்வுக் கூடம் நிகழ்த்திய இசை ஆற்றுகையும் சிறப்பாக எடுத்துக் காட்டி தனித்துவமான வகையில் செய்திருந்தது நினைவு கூரப்பட்டது. அது மாதிரி நாமும் நம்முடய ஓராண்டு நிகழ்வை ( மாசிமாதம்) ”2000ம் ஆண்டுகால பழமை எங்களுக்கு” என்ற கவிஞர் முருகையனின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு களைய வேண்டிய குப்பைகளாக என்னென்ன இருக்கிறது என்பதை சமுதாயம், சமயம், பண்பாடு, தொழில்நுட்பம் என்ற வகையில் வகைப்படுத்தலாம் என்றும் அல்லா விட்டால் சிந்தனை அரங்காக மனக் குப்பை, பண்பாட்டுக் குப்பை, சமூகக் குப்பை, சமயக் குப்பை, உலகக் குப்பை என்ற வகையாக ஒரு சிந்தனை அரங்கையும் ; உலக இலக்கியத்தில் இருந்து மொழிபெயர்ப்பு ஆக்கங்களுக்கான ஒரு களத்தை அமைக்கும் விதமாக ஒரு மொழிபெயர்ப்பு அரங்கொன்றையும் குறும்படக் காட்சி மற்றும் அது பற்றிய கலந்துரையாடல் ஒன்றையும் செய்யலாம் என்று கூறி அபிப்பிராயம் கேட்கப் பட அது ஏகமனதாக நிறைவேறிற்று.
ஒரு நாள் ஒன்று எவ்வாறு இனியதாகிறது என்பது பற்றி ஷிரேயா தான் படித்த ……………….கவிதை ஒன்றை முன்வைத்துப் பேசினார். கவிதை இது தான்.
சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்…
ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி
சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது
காற்றின் துணையும் உண்டு
நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?
சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது
அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?
இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிந்திராதது அது.
http://poetdevadevan.blogspot.com.au/2011/04/blog-post_9766.html
இன்றய நாள் எவ்வாறு இரண்டு சிறு குழந்தைகள் காலையில் எழுந்து நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை என்று வைத்த முறைப்பாடுகள் தன் நாளை இனியதாக்கியது என்பது பற்றிப் பேசி தான் கார் கழுவிய அனுபவம் பற்றிப் பேசி இருந்தார். அவை எல்லாம் எவ்வாறு மனதுக்கு மகிழ்ச்சியை கொண்டுவந்து சேர்க்கிறது என்ற விதமாக அவர் பேசியது உண்மையில் நினைவில் நிறுத்தக் கூடியதும் சிந்திக்கக் கூடியதுமான ஒரு விடயமாகவே எனக்கும் பட்டது. ஒரு கார் ஒன்றை முழுவதுமாகக் கழுவும் அனுபவமும் அதன் பின்பான திருப்தி தரும் சுகானுபவமும் விதந்து பேசப்பட்டது. பார்க்க http://mazhai.blogspot.com.au/ 01.10.2012 அவர் அந்த முழுமையான மனநிறைவு தரும் சுகானுபவம் பற்றிப் பேசிய போது அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் படித்த தேவதேவனின் கவிதை ஒன்று நினைவுக்கு வர அதை அவரோடு பகிர்ந்து கொண்டேன். அக்கவிதை இது தான்
அந்த இசை (2.4.11) சனிக்கிழமை
மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை
புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
அதன் பின்னர் மகிழ்ச்சியான மனநிலைகளும் வாழ்க்கை தருகின்ற பரிமானங்களும் பற்றியதாகக் கலந்துரையாடல் திரும்பியது.. பெண்ணும் அவளின் கடந்து போக வேண்டி இருக்கின்ற பாதைகளும் பற்றி; ஒரு பெண் எவ்வாறு தன்னுடய காலில் தான் நிற்கத் தக்கவளாகவும் தன்னைத் தான் புரிந்து கொள்பவளாகவும் வாழவேண்டிய அவசியம் குறித்த கலந்துரையாடல்கள் மனதின் பலம் பலவீனம் எவ்வாறு அன்றாட வாழ்க்கையில் ஜீவிதங்களைத் தீர்மானிக்க துணை புரிகிறது என்ற விதமான சிந்தனைகள் தூவப்பட்டன.
திருமணவாழ்க்கை அது தரும் நிழல் அது சட்டென இல்லாது போகும் போது வரும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது, சமூகத்தின் இயல்பு, அதில் பெண்னின் நிலை, திருமண வட்டத்தை விட்டு வெளிவரும் போது அவள் எதிர்கொள்ளும் சவால்கள், உண்மை என்பதன் சுயரூபம் வெளிப்படும் போது ஏற்படும் அதிர்ச்சிகள், மன உழைவுகள், திருமண வட்டத்துக்குள் நிற்கும் போது சார்ந்து நிற்கும் அனுபவங்கள், பெண் தன்னை அடையாளப் படுத்தும் படியாக இருப்பதற்கு திருமண வட்டத்துக்குள் தடையாய் நிற்கும் காரணிகள், வாழ்க்கையின் நிலையற்ற தன்மை… போன்ற விடயங்கள் விமர்சன ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் முன் வைக்கப்பட்டன.
மூன்று பெண்களும் மூன்று விதமான வாழ்க்கைப் அனுபவப் பின்னணியில் இருந்து வந்ததும்; அவ்வுரையாடலில் நேர்மையாக எந்த ஒரு ஒழிவுமறைவும் இல்லாமல் உண்மைகள் அனுபவப் பின்னணியில் தயக்கமின்றி முன் வைக்கப் பட்டமையும் ஒரு சிறப்பென்று சொல்லியே ஆக வேண்டும். அது உண்மையான அனுபவப் பகிர்வு! ஒரு அனுபவச் செல்வம்! அது அந்த சந்திப்பின் ஹைலைட் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பெண்கள் மட்டும் சேர்ந்து கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம்.
9.30 மணிக்கு குறியீட்டு இலக்கம் அழுத்தி வெளியே வந்த போது வானில் நிலவு பிரகாசித்த படி இருந்தது.
சந்திரனை மனதுக்கு அதிபதி என்று சொல்வார்கள். முழுமையான பூரண நிலவு பிரகாசித்த படி இருந்த அந்த இரவில் நாமும் மனம், சமூகம், பண்பாடு, வாழ்க்கை இயல்புகள், அதில் பெண்கள் என்ற விதமாக பேசியது பொருத்தமாகவே இருந்தது.
மனதிலும் அதே பெளர்னமி நிலவு குளிர்மையாகப் பிரகாசித்த வண்ணம்!!
தொகுப்பு: யசோதா.ப.
16.10.12
மழையொன்று நதியாகி……


“ கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய் தான் இருக்கிறது” என்று ஆரம்பித்த அந்த மழையின் பாடல் ,”சாரலாய் தொடங்கும் ஒரு நட்பின் தொலைபேசி அழைப்பு,அடைமழைப் பேச்சு,இடியென முழங்கி வார்த்தையால் ஆலங்கட்டி மழை போல் தாக்கும் கோபங்கள்,துளித்துளியாய் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கின்ற ஆசீர்வாதங்கள். மழை எப்போதும் எல்லோரையும் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்த படியே தான் இருக்கிறது” என்ற சொல்லிய படிக்கு எல்லோரையும் சாரலை அனுபவிக்கும் படிக்கு தூறியவாறு, “ இலைகள் தெளிக்கும் பன்னீராய் தரை தொட்டு, கண்னாடியில் கூரையில் எங்கும் நெளி நெளியாய் பளிங்குப் பாம்பாய் நெளிந்து ஓடுகிறது மேகத்திறங்கிய நீர்” என்றவாறு பெய்து ஓய்ந்தது ஷ்ரேயாவின் மழை.

மழை மீது எனக்கொன்றும் தனிப்பட்ட பிரேமை இல்லை. மழை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது பெருமழை பெய்து நிலம் எல்லாம் கழுவுப்பட்ட பின்னால் நிலம் இருக்கிற புதுசுத் தன்மை! அதில் கஞ்சல் குப்பைகள், தென்னை மரத்தில் இருந்து விழுந்த ஓலைகள், கிடுகுகள் எல்லாம் கரை ஒதுங்கி, மழை போன பாதையை சாட்சியாய் அது அதில் வரைந்து வைத்திருக்கும். மழையின் பாடல் அது, அதன் குணம் அது. மனிதர்கள் ஆக்கி வைத்த அழுக்குகளை அது எந்த வித பிரதி பலனும் எதிர்பாராமல் கழுவி சுத்தம் செய்து விட்டுப் போயிருக்கும். ஒவ்வொன்றினுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு தானே? இதன் குணம் அப்படி.நான் இப்படித்தான் என்று மழை வரைந்து விட்டுப் போன ஓவியம் அது. இயற்கையின் பாஷை. மற்றும் வண்ணங்கள்!
அதில் புதிதாய் கால் பதித்து ஒரு வித ஆர்வத்தோடு மழை என்னவெல்லாம் செய்து விட்டுப் போயிருக்கிறது என்று வளவு எல்லாம் குடும்பத்தோடு கூட்டமாய் போய் பார்க்கும் சந்தோஷம்! வானம் கூட துடைத்து வைத்தது போல பளீச்சென்றிருக்கும். புதுசாய் பிறந்த பூமி போல அழகாய்! புதுசாய்! புத்தம் புதுசாய்! பூமியை அது பிறப்பித்து விட்டுப் போயிருக்கும். அது பிடித்துப் போனதுக்கு எனக்கும் அப்போது அது புத்திளம் பருவமாய் இருந்ததும் ஒரு காரணமோ என்னவோ!
அது போல மழையின் வரவின் பின்னால் வீட்டு வழவுகளில் நிற்கும் ஜாம் மரங்கள், நெல்லி மரங்களை எல்லாம் உலுப்புகின்ற போது முத்து முத்தாய் கொட்டுண்னும் குண்டு குண்டு துளிகள் அழகானவையும் தான். இந்த மழையை வைரமுத்து ”முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ” என்று வேறுவிதமாய் உலகியல் வாழ்வோடு சம்பந்தப் படுத்திப் பார்ப்பார்.
அழகு, ரசனைகள் அது பற்றிய பார்வைகள் எல்லாம் காலங்களினோடும் வயதுகளினாலும் மாற்றம் பெறுகின்றனவோ என்னவோ?
இப்போதெல்லாம் மழை எனக்கு ஒரு வித சோகத்தினைத் தந்து செல்கிறது. மழை மட்டுமென்றில்லை. இளமைக்கால புகைப்படங்கள், ஒரு சில பாடல்கள், தனிமையைச் சந்திக்கின்ற கருக்கல் மாலைப் பொழுதுகள், ஏதேனும் ஒரு விஷேசமான உணவு, பழைய வாழ்வையும் நினைவுகளையும் ஒரு வித ஏக்கத்தையும் தந்து விடப் போதுமானவையாக இருக்கின்றன.பொதுவாக மாலையும் இரவும் சந்திக்கிற பொழுதில் பெய்கிற மழையோடு தனிமை சேர்ந்தால் அது ஒரு சொல்லவொணா வாழ்க்கை நிலையாமையைச் சொல்லிச் செல்கிறது. இப்போதெல்லாம்!
உங்களுக்கு எப்படி?
எனினும் பொதுவாக இயற்கையோடு நமக்கான பிணைப்பு பற்றி ஒரு தத்துவார்த்த ஈடுபாடு எனக்கிருக்கிறது.
அதற்கென்று ஒரு சட்டம் இருக்கின்றது என்பது என் நம்பிக்கை. இயற்கையின் சட்டங்களால் நாம் ஆளப்படுகிறோம் என நான் வலுவாக நம்புகிறேன். இலக்கியங்களும் இவை பற்றி நிறையவே பேசுகின்றன.
இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த இயற்கைக்கும் நம் உடம்புக்கும் இருக்கிற தொடர்பைப் பாருங்கள். பிரபஞ்சத்தில் இருக்கிற பஞ்ச பூதங்களால் தான் நம் உடம்பும் ஆக்கப் பட்டிருக்கிறது. அதனால் அதிலிருந்து நாம் வேறு பட்டவர்கள் அல்ல. அப்படி ஆகி விடவும் முடியாது.
அவ்வாறு ஆக்கப்பட்டது மாத்திரமல்ல; பிறந்த பின்னரும் கூட அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் சாத்தியமா? சுவாசிக்காமல் நாம் இருத்தல் இயலுமா? நீரின்றி வாழ்தல் சாத்தியமா? என்று நாம் நம் மூச்சை நிறுத்துகிறோமோ அன்று நம் உடம்பு ஒன்றுமற்றதாகி விடுகிறது.இல்லையா?
இந்த இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு பற்றி சித்தர் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது.
“ கூறுவேன், தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்பு தனை காலாய் நாட்டி
மாறு படா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலிந்து கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்ரமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வு தனை உண்டாக்கி
அப்பனே! தேகமென்று கூறுண்டாச்சே!
என்கிறது. எப்படி எல்லாம் சிந்தித்திருக்கிறார்கள் இல்லையா? இலக்கியத்தில் முந்தி இருக்கிற தொல்காப்பியம்,
“நிலம்,தீ, நீர், வளி, விசும்போடைந்தும்
கலந்த மயக்கம் உலகமாதலின்” (86)
என்று உரைக்கிறது. புற நானூற்றின் காலத்திலேயே நம் தமிழர் எத்தனை இயற்கை பற்றிய தெளிவைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.அதன் 87 வது பாடல், “அணுச் செறிந்த நிலனும், அந் நிலத்தின் கண் ஓங்கிய ஆகாயமும், அவ் ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும்,அக் காற்ரின் கண் தலைப்பட்ட தீயும், அத் தீயோடு மாறுபட்ட நீருமென ஐ வகைப் பெரிய பூதத்தினது தன்மை போல….” என உரைக்கிறது.
இந்த ஐம் பெரும் பூதங்களைக் அடிப்படையாகக் கொண்டே ஐம் புலன்களும் அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் குறிப்பிடுகிறது. பார்க்க விரும்புபவர்கள் பரிபாடல் 88 ல் அதைக் கானலாம்.
அதற்குப் பிற்பட்ட திருக்குறள், “சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் …(குறள் 106) என்றும் கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் (குறள் 90) என்றும் பகுத்து விளங்கி வைத்திருக்கிறது.
“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்து நாம் பார்க்கும் போதே”
என்று ‘சட்டமுனி ஞானம்’ உரைக்கிறது. இடைக்காட்டுச் சித்தர் இன்னொரு விதமாய் அதைச் சொல்லுவார்.
“மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவை ஒளி ஊறு ஓசை யாம் காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே”
என்கிறார்.இப்படிப் பல பாடல்கள் ; பழங்கால இலக்கியத்துக்குள்ளே தத்துவப் புதயலையும் தமிழருடய பரந்த உலக அனுபவத்தையும் அவர்களுக்கும் இயற்கைக்குமான புரிந்துணர்வின் விளக்கத்தின் சாயலையும் சொல்லிய வண்ணமாக இருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் முந்திய வேதத்திலேயே தாயின் கருவறையில் ஓர் உயிர் பஞ்ச பூதங்களின் அம்சமாய் எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்று மிக விரிவாக (மாதம் மாதமாக) சொல்லி இருக்கிறது என்றால் பாருங்களேன்.
சரி, நாம் அதை விட்டு வெளியே வருவோம்.எனக்கும் இயற்கைக்குமான உறவு ஒரு தத்துவ சார்பானதாக இருக்கிறது. முன்னர் சொன்ன மாதிரி. அது பேசுகிறது தன் மொழியில். ஆனால், மிகச்சிலரே அதனை மொழிபெயர்க்கின்ரனர் தம்முடய பாசையில்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக. இவர் மழையோடு பேசுவது மாதிரி. காற்றும் மரமும் பேசிக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? காற்றை உணரத்தான் முடியும்; பார்க்க முடியாது. மரத்துக்கு பாஷை இல்லை.sign language தான். என்னமாய் தலையாட்டி தலையாட்டி மரம் பதில் சொல்கிறது பாருங்கள்.

அது மாதிரித்தான் இயற்கை / பஞ்சபூதம் ஒவ்வொன்றும் தத் தம் மொழிகளில் நம்மோடு பேசுகின்றன. உறவு கொண்டாடுகின்றன. தென்றல் என்னமாய் நம்மை முத்தமிட்டுச் செல்கிறது. பூக்கள் என்ன அழகாய் நம்மைப் பார்த்து புன்னகைக்கின்றன? மாலை நேர ஆகாயம் எத்தனை எத்தனை சித்திரங்களைத் தான் ஒவ்வொரு நாளும் வரைந்து காட்டி விட்டுப் போகிறது? ஒரு குத்து விளக்கின் முத்துச் சுடர் ஒளிர்வது அழகாயில்லையா?
அன்பை மட்டுமா பகிர்கின்றன? கோபத்தையும் கூடத்தான்.
ஆகாயமோ மேற்குடி வகுப்பைச் சார்ந்தது போலும்! தொடர்பெல்லைக்கப்பால் ஆகாயம்! மழை மட்டும் வந்து ஆகாயத்தின் செய்தியை பூமிக்குச் சொல்லிப் போகும்; அவ்வப்போது! பூமி கொஞ்சம் மழை முகிலை அனுப்பி சுகம் விசாரித்துக் கொள்ளும். அவ்வளவே அவர்களால் முடிந்தது. ஒரு வித தொலைபேசிச் சம்பாசனை போல அது!
சில வேளைகளில் பூமியின் பொக்கிஷங்களின் மேல் பொறாமை வந்து விடுகிறது காற்றுக்கு. ஆனாலும் அது நிலத்தை ஒன்றும் செய்து விட முடியாது பாருங்கள்! அது மாதிரி பூமியும் காற்றை / அதன் கோபமான புயலைப் பார்த்து அலட்டிக் கொள்வதில்லை. பூமி அது பாட்டுக்கு இருக்கிறது. ஒட்டிக் கொள்ள முடியாத படிக்கு. அது போல நெருப்பு ஆகாயத்தை எட்ட முடியாது. ஆனாலும் நெருப்பின் அம்சமாய் ஆகாயத்துக்கு ஒரே ஒரு சூரியன். ஒன்றுக்கொன்று அணிகலனாய். ஆகாயம் அது ஒன்று மட்டும் போதுமென்று நினைத்து விட்டதோ என்னமோ! அவர்களுக்குள் அப்படி ஒரு ஈடுபாடு, பிணைப்பு, பந்தம்.
பூமியோ எல்லாவற்றையும் பார்த்த படியும் தாங்கிய படியும் பொறுமையாய் இருக்கிறது.பொறுமை எல்லை மீறுகிற சந்தர்ப்பத்தில் மாத்திரம் தன் வாயைத் திறந்து அபாய எச்சரிக்கையாய் நில நடுக்கத்தை தந்து விட்டுப் போகிறது. ’கவனம் பிள்ளை’ என்று சொல்லுகிற ஓர் அம்மா மாதிரி!
( Application போட்டிருக்கு. பாப்பம்.நீங்கள் என்ன மாதிரி?…..

ஆதலால், இப்படியாக இப்பதிவு நதியாக உருவெடுக்க; தொப்பலாய் நனைந்து போக, ஷ்ரேயா தான் காரணம். அவவைக் காண விரும்புபவர்கள் இந்த முகவரிக்குச் செல்லலாம். http://mazhai.blogspot.com.au/மழையுடனான அவரை நீங்கள் அங்கு கண்டு நீங்களும் நனையலாம்.
மழையொன்று நதியாகி……
இலக்கிய சந்திப்பு – 6 –
புலம்பெயர்ந்தோர் வள நிலயத்தின் ஆதரவோடு சிட்னி உயர்திணை அமைப்பினர் நடாத்தும் மாதாந்த இலக்கிய ஒன்று கூடல் நிகழ்ச்சி வழமை போல மாதாந்த இறுதி ஞாயிறான 26.08.2012 அன்று மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை நடைபெறும்.
இடம்: The Oakes Room, No: 1, Oakes St,