RSS

இலக்கிய சந்திப்பு – 1 –

04 Feb

25.02.2012 அன்று மாலை வேளை பரமற்ரா பூங்காவில் இலக்கியம் பேச பகிர கூடுவதாக ஏற்பாடு.எனக்குத் தெரிந்த மிகச் சிறு நண்பர் கூட்டத்துக்கு மட்டும் அழைப்பிதழை அனுப்பி இருந்தேன்.

இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல்.The poet என்ற திரைப்படத்தை SBS தொலைக்காட்சியில் பார்த்ததில் முளைவிட்ட இந்த ஆசை சிங்கப்பூர் எழுத்தாளர் மாநாட்டுக்குப் போன போதும் மலேஷிய நண்பர் தியாக.ரமேஷ் அனுப்பி வைக்கும் அழைப்பிதழ்களைப் பார்க்கும் போதும் மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு கட்டுப்படுத்த முடியா ஆசையாய் மேல் கிளர்ந்து அதனைப் புதுவருடத்தில் இருந்து அமுல்படுத்துவதாக எனக்குள் தீர்மானமாயிற்று.

இது பற்றி ஈழத்தில் இருந்து தற்போது இங்கு வந்திருக்கும் திருமதி.கோகிலா.மகேந்திரன் அவர்களோடு உரையாடியபோது நல்ல விஷயம் ஆரம்பியுங்கள் என்று உற்சாகம் தந்தார்.அழைபிதழ் ஒன்று தை இறுதியில் ஒருவாறு தயாராயிற்று.பெயர் ‘மனப்பூங்கா’

இதன் நோக்கம் என்னவென்றால் இலக்கிய ஆர்வலர்கள் தாம் எழுதிய ஆக்கங்களைப்; பார்த்து படித்து ரசித்தவற்றை ஒன்றுகூடி பகிர்ந்து கூடிக் கலைதல் மாத்திரமே! இங்கு பதவிகள் இல்லை; பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடில்லை;யார் ஏன் என்ற கேள்விகள் எழ வாய்ப்பே இல்லை.ஒரே ஒரு நிபந்தனை அவர்கள் வரும் போது தான் எழுதிய ஏதாவது ஒன்றை அல்லது படித்து ரசித்த ஏதாவதொன்றை நம்மோடு பகிர்ந்து கொள்ள கொண்டுவரவேண்டும்.

தொலைபேசியிலும் காரணம் சொல்லி அழைப்புச் சொல்லியும் சாட்டுச் சொல்லி காரணம் சொல்லி விலகியவர்கள் போக இறுதியாக நாலு பேர் கூடினோம்.

நான் போனபோது நான் படித்து இரசித்த சங்கஇலக்கியத்தின் புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் கொண்டு சென்றேன்.அது பிசிராந்தையாரின் பாடல்.அது பற்றி ஏற்கனவே இங்கு பகிர்ந்து கொண்டுமிருக்கிறேன்.யாண்டு பலவாக…. என ஆரம்பிக்கும் பாடல் அது.நம் மூதாதையர் எத்தனை தெளிவோடும் இறுமாப்போடும் மகிழ்வோடும் வாழ்ந்திருக்கிறார்கள்! இப்போதைக்கும் கூட அது எத்துணை பொருத்தமானதாக இருக்கின்றது என்ற தொனியில் என் ரசனையை எடுத்துச் சொன்னபோது என் இலக்கிய நண்பர் பாஸ்கரன் ஏன் எல்லோரும் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ள எளிதில் பொருள் விளங்கிக் கொள்ள முடியாவகையில் இருக்கும் பழங்கால இலக்கியங்களில் இருந்து பாடல்களை மேற்கோள் காட்டுகிறார்கள் – எத்தனையோ எளிய தமிழில் நல்ல கருத்தாளம் மிக்க பாடல்கள் தற்காலத்தில் இருக்கத் தக்கதாக – என்ற கேள்வியை முன் வைத்தார்.

அதற்கு அதனை நாம் தற்கால இலக்கிய எளிமைத்துவத்தோடு அவற்றை ஒப்பிட முடியாதென்றும் தமிழின் நீட்சியை இலக்கியத்தின் நீட்சியை பலநூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாட்டை வாழ்க்கை முறையைப் பிரதிபலித்து நிற்பதால் அவை முன்னிலைப் படுத்தப் படுகின்றன என்ற பதிலை எடுத்துரைத்தேன்.

பின்னர் அது தமிழர் பண்பாட்டை நோக்கியதாக உரையாடல் திரும்பியது.தமிழர் பண்பாடு அரசரை முன்னிலைப் படுத்தியதாகவே இருந்து வந்திருக்கிறது.ராஜராஜ சோழனும் பல்லவ மன்னர்களும் முன்னிலைப் படுத்தப் படுவது போல அவர்கள் காலத்து புகழ் பெற்ற கட்டிடங்களைக் கட்டிய சிற்பிகளைப் பற்றிய தகவல் எங்கேனும் காணப்படுகின்றனவா? அரசன் தன் புகழுக்காக வெட்டியெறிந்த கைகள் எத்தனை? தலைகள் எத்தனை? என்ற கருத்தையும்; இன்றுவரை அரசர்களே புகழப்படுகிறார்கள் உதாரணமாக உலகமகா அதிசயமாக இன்றுவரைக் கருதப்பட்டு வரும் தாஜ்மஹால் அதன் பின்னால் இறந்த கலைஞர்கள் கூட்டம் மற்றும் சீனப் பெருஞ்சுவரின் பின்னால் சமாதியானோர் போன்ற தகவல்களை கார்த்திகாவும் பாஸ்கரனும் ஒரு தர்மாவேசத்தோடு முன்வைத்தனர்.

இவ்வாறு அவர்கள் தொடக்கிவைத்த விவாதம் மேலும் சங்க இலக்கியத்தில் கொண்டுபோய் சேர்த்தது.அங்கு நம்மைக் கொண்டுபோய் சேர்த்தவர் பாஸ்கரன்.மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகனையும் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் அவர் காரசாரமாக விமர்சனம் செய்ய அதற்குப் பதிலுரைத்த கவிஞர் செல்வம் ஒரு அரசனை அவன் திறனைப் போற்றிச் சொல்ல எழுந்த கவிதைகளே அவைகள் ஒழிய அவ்வரசன் அவ்வாறு செய்தான் என்று சொல்வதற்கில்லை.தற்காலக் திரைக்கவிஞர்கள்’அந்த நிலாவத் தான் நான் கையில புடிச்சேன் என்ராசாத்திக்காக …’என்று பாடுகிறார்கள். பிடித்துக் கொடுத்தா விட்டார்கள்? அது தம் அன்பினைச் சொல்ல அவர்கள் இவ்வாறெல்லாம் பாடுகிறார்கள் எனப் பதில் சொன்னார்!

அட, இப்படி ஒரு பக்கம் இருக்கிறதா இதற்கு!எனத் தோன்றிற்று எனக்கு!உடனடியாக இலக்கிய நயம் மிக்க இன்னொருபாடல் மனதில் ஓடியது! செளக்கியமா கண்ணே செளக்கியமா என்ற பாடலில் வரும்…”நான் போட்டிருக்கிற மோதிரம் இப்போது காப்பாகப் போகும் படியாக மெலிந்து போனேன் இனி அது ஒட்டியாணமாய் ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்” என்றவிதமாக வரும் அப்பாடலைக் கற்பனை செய்து பாருங்கள்!மோதிரம் ஒட்டியாணமாய் போகின்ற அளவுக்கு ஒரு பெண்னால் மெலிய முடியுமா? ஆனாலும் அந்தக் கவிஞன் எத்தனை அற்புதமாய் மோதிரம் காப்பு ஒட்டியாணம் என வளைந்திருக்கின்ற 3 பெண்ணின் அணிகலன்களையும் பிரிவுத்துயரைச் சொல்ல பாவித்து விட்டான்!ஆஹா, கவிரசம்! என்று ஓடிய மனதைப் பிடித்து நிறுத்தி பூங்காவுக்கு கொண்டுவந்து சேர்த்த போது பாஸ்கரன் தான் இயற்றிக் கொண்டுவந்திருந்த உலக அரசியல் சம்பந்தமான கவிதையை வாசித்துக் காட்டினார்.அவர் வாராந்த மின் சஞ்சிகை ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரது மின் சஞ்சிகை http://www.tamilmurasuaustralia.com என்பதாகும். அதில் அவரது அக்கவிதை ’அரங்கேறும் நாடகம்’என்ற தலைப்பில் பிரசுரமாகி இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து செல்வம் தான் இயற்றிய நட்பு பற்றிய கவிதையை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.இந்தக் கவிஞர் செல்வத்தைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லவேண்டும்.திருச்சியைச் சேர்ந்த இளைஞன். ஒருமுறை ’மின்னம்பலத்தில் இருந்து பொன்னம்பலம் வரை’ என்ற மறவன் புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களுடய thevaram.org என்ற இணையத்தளம் பற்றிய அறிமுகக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு இக்கவிஞன் மிக அருமையான ஒரு கவிதையை வாசித்துக் காட்டி விட்டு மின்னலென சென்று விட்டார்.அவரைச் சென்று பாராட்ட நினைத்த எனக்கு அது கைகூடவில்லை. எனக்கருகில் அமர்ந்திருந்தார் ஒரு இந்தியப் பெண்மணி.(இந்தியப் பெண்களிடம் எப்படி ஒரு தேஜஸ் வந்து அவர்களோடு ஒட்டிக் கொள்கிறது என்று தெரியவில்லை.மூக்குத்தி ஜொலிக்க தெய்வீகக் களையோடு அவர் இருந்தார்.)

அவவின் பெயர் சாந்தி.தமிழ் பாடசாலை ஒன்றின் ஆசிரியை.அவவிடம் அக்கவிஞரைத் தெரியுமா எனக் கேட்டேன்.தன் கணவருக்கு (அண்ணா.சுந்தரம்) தெரியக்கூடும் கேட்டுச் சொல்கிறேன் என என் தொலைபேசி இலக்கத்தை வாங்கினார்.சரியாக நம் ஒன்றுகூடல் ஆரம்பிப்பதற்கு 3 மணி நேரம் முன்னால் செல்வத்தில் தொலைபேசி இலக்கம் எனக்கு SMS இல் வந்திருந்தது.தொடர்பு கொண்டபோது நடந்தாவது வந்துவிடமாட்டேனா என்று சொன்ன அந்த மகிழ்வான கவிஞ மனதை இப்போது நினைத்துக் பார்க்கிறேன்!

நட்பு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் ஒரு நல்ல நட்பு என்னவிதமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் மிக நயம்பட சொன்னார்.அழகானதொரு கவிதை அது.தொடர்ந்து தன்னுடய வாழ்வில் இருந்த தற்போது இறந்து போன தன் நண்பன் ஒருவனைப் பற்றி மனமுருகச் சொன்னார்.சிறுவயதில் இருந்தே தன்னோடு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கும் தன் நண்பன் ஒரு முறை ரயில் பாதை ஓரம் தன்னுடய புது சைக்கிளை அவன் உருட்டியவாறு தான் அருகாக நடந்து வந்து கொண்டிருந்தார்களாம். திடீரென மிக அருகாக ரயில் வந்து விட்டதாம். தான் கரைக்குப் பாய்ந்து விட்டபோதும் தன் நண்பன் தன் சைக்கிளைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்ததாகவும் தான் இழுத்து அவனைக் காப்பாற்றி சைக்கிளை இழந்ததாகவும் அந்த சொற்ப வேளையிலும் தன் உயிரை மதியாது இவருடய சைக்கிளைக் காப்பாற்ற முனைந்த அந்த நட்பின் திறத்தை சொல்லி அப்படிக் காப்பாற்றிய நண்பன் தன் கற்பமுற்ற மனைவி இறந்த செய்தி கேட்டு ( திருச்சியில்)தனக்கு பேஜரில் (அப்போது அது தான் புளக்கத்தில் அதிகம் இருந்ததாம்) தகவல் அனுப்பி விட்டு தான் அங்கு போய் சேர்ந்த போது இறந்து போயிருந்த செய்தியைச் சொல்லி இப்போது அவன் உயிரோடு இருந்திருந்தால் அவனும் தன்னோடு அவுஸ்திரேலியாவுக்கும் இப்போது இந்தக் கலந்துரையாடலுக்கும் வந்திருப்பான் என்றார்.

மனம் கனத்தது.பாஸ்கரன் தனக்கப்படி ஒரு நண்பன் ஈழத்தில் இருப்பதாகவும்; தன் குடும்பத்தையே ஒரு பெரும் றிஸ்க் எடுத்துக் காப்பாற்றி இங்கு அனுப்பி வைத்தது அவன் தான் எனவும் இன்றும் அவர் ஊரிலேயே இருப்பதாகவும் தான் 2,3, வருடங்களுக்கொரு முறை தொலைபேசியில் கதைத்தாலும் விட்ட இடத்திலிருந்து தம்முடய நட்பு தொடரும் எனவும் இத்தனை ஆண்டுகளாகியும் தன்னிடம் எந்த ஒரு பண உதவியும் கேட்பதில்லை என்றும் ஏன் தொலைபேசுவதில்லை எனக் கூடக் கேட்பதில்லை எனவும் சொல்லி அந்த நட்பின் அன்பில் மூழ்கினார்.

இப்படி ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லையே என எனக்கு கவலையாக இருந்தது.அப்படி ஒரு நட்பு கிடைப்பதில் இப்போதுள்ள சிரமங்கள் கடினங்கள் பற்றி நான் சொன்னபோது அவர்கள் இருவரும் புன்னகைத்தனர்; கார்த்திகா மொளனம் காத்தார்.

புல்வெளியில் அவரவர் வசதிப்படி அமர்ந்திருந்த நமக்கு இயற்கைக்கும் இதயத்திற்கும் மிக அருகாக இருப்பதைப் போல ஓருணர்வு!ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை.நல்லதொருவிதமாய் ஒருமணிநேரம் களிந்ததைப் போல ஒரு மன நிறைவு!
அடுத்த முறை வரும் போது மறக்காமல் பருகவும் பரிமாறவும் ஏதேனும் எடுத்து வரவேண்டும் என எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.

ஒவ்வொரு மாதமும் வரும் கடைசி ஞாயிறன்று 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரைக் கூடி பேசிக்கலைவதென தீர்மானமாகி எழுந்த போது ரிஷான் ஷெரீப் எழுதிய ‘காகங்கள் கொத்தும் தலைக்குரியவன்’ என்ற அவரது சிறுகதையை வாசிக்கும் படியும் ’விழிகள் சாட்சி’என்ற திரைப்படத்தைப் பார்க்கும் படியும் பாஸ்கரன் பரிந்துரைத்தார்.

நிறைவாக எழுந்த போது மெல்லியதாய் தூறல்!

மனதுக்குள்ளும்!!

Advertisements
 
Leave a comment

Posted by on 04/02/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: