RSS

இலக்கிய சந்திப்பு – 2 –

04 Feb
25.03.2012 ஞாயிற்றுக்கிழமை.இன்று இரண்டாவது இலக்கிய சந்திப்பு.

காலையில் இருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்தது சிட்னி.கூடவே மழைத்தூறலும்!மாலைநேரம் குளிர் ஆரம்பித்து விட்டிருக்கும். மழை வேறு பெய்தால் நம் இலக்கியச் சந்திப்பு என்னாகும் என்று யோசனையாய் இருந்தது.
ஆனால்,நல்லவேளையாக மாலைநேரத்துச் சூரியன் ஈரலிப்பான மேகப்பஞ்சில் முகம் துடைத்து பளீச்சென்றிருந்தான்.thank you suryan!

இன்று புதிதாக இரண்டு பேர் அறிமுகமாகி இருந்தார்கள்.ஒருவர் கோகிலா மகேந்திரன்.மற்றவர் இந்துமதி ஸ்ரீநிவாசன்.முன்னவர் ஈழத்தவர்களால் நன்கறியப்பட்ட எழுத்தாளர் மற்றவர் ATBC வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.இவர்களோடு நம் ஆரம்ப நண்பர்கள் செல்வமும் கார்த்திகாவும்.வேலை அலுவலாக புறநகர் பகுதியில் நிற்பதால் இன்று வரமுடியாத சூழல் என பாஸ்கரன் அறிவித்திருந்தார். பவானி என்ற புதியவரும் வரமுடியாத நிலைமையை இன்று குறுந்தகவல் மூலம் சொல்லி இருந்தார்.செளந்தரியும் பாமதியும் இந்த நிகழ்ச்சிச் சுருக்கத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தி இருந்தனர்.

எனவே நாங்கள் ஐந்து பேர்.

பரஸ்பர அறிமுகங்களின் பின்னால் றோசா வண்ண சேலையில் றோஜா மலரைப்போல பச்சைப் புல் வெளியில் அமர்ந்திருந்த கோகிலா மகேந்திரன் அவர்களிடம் பஹாய் சென்ரரில் நேற்றய தினம் நடந்த ஹோம்புஷ் தமிழ் பாடசாலையின் 25வது ஆண்டு நிகழ்வு பற்றிச் செல்வம் கேட்ட கேள்வியோடு நம் நிகழ்ச்சி ஆராம்பமாயிற்று. 

அன்றய தினம் கோகிலா அவர்களின் நெறியாள்கையில் ஒரு நாடகம் இடம்பெற்றது தான் அதற்குக் காரணம்.”புரிதலின்மை” பற்றியதாக அந்த நாடகம் இருந்தது என்றும் ஒரு நாடகப் பட்டறை ஒன்று சில மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தகவலையும் விரும்பியவர்கள் சேரலாம் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.நாடகம் என்பதற்கு நெறிமுறைகளும் வரையறைகளும் ஒழுங்கு முறைகளும் உள்ளன என்பதும் ஒரு பரதத்தை,பாரம்பரிய இசையை நாம் சரியாகக் கற்காமல் எப்படி மேடை ஏற்ற முடியாதோ அது போலவே நாடக வடிவத்தையும் சும்மா மேடை ஏற்ற முடியாதென்பதை அவர் சொன்ன போது அத்துறை மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டையும் அக்கறையையும் நன்றாகக் உணர முடிந்தது. அப்போது அவரிடம் அறிவும் உண்மையின் ஒளியும் சுடர் விடக்கண்டேன்.ஓர் அரிய அடக்கமும் உறுதியும் ஆளுமையும் மிக்க பெண்மணிக்கருகில் நான் அமர்ந்திருப்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.

நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் பாஸ்கரன் வந்திருந்தால் அது ஒரு நல்ல விவாதத்துக்கான களத்தைத் திறந்து விட்டிருக்கும்! 

உரையாடல் பிறகு சுகி.சிவம் அவர்கள் வந்திருந்த போது இடம் பெற்ற ”புலம்பெயர்ந்து நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?” என்ற பட்டிமன்றம் பற்றிய கலந்துரையாடலுக்கு திரும்பியது. இப்படியான பட்டி மன்றங்கள் என்றால் தானும் கலந்து கொள்ள விரும்புவதாக கோகிலா மகேந்திரன் சொன்னது உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது.அப்பட்டிமன்றத்தில் செல்வமும் இந்துவும் கலந்து கொண்டிருந்ததும் இன்று அவர்கள் இங்கு பிரசன்னமாகி இருந்ததும் ஒரு பெரும் சிறப்பு.

 அது பிறகு தமிழ்,தமிழ் மொழி இழப்பு,இருப்பு,புதிய சொற்களின் அறிமுகம்,பழைய சொற்களின் வழக்கொழிவு,இந்தியாவில் தமிழின் பயன்பாடு,எழுத்தாளர்கள்,வெளியீடுகளின் பெருக்கம்,இங்குள்ள தமிழ் பாடசாலைகள்,அவற்றின் பயன்பாடுகள்,முதியோர் இல்லங்கள்…..என்று தமிழ் மொழியோடும் தமிழ் வாழ்வோடும் கொஞ்சம் குலவினோம்.’உலகத்தமிழ் ஆட்சி மன்றம்’பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கு எப்படி தமிழ் கற்பிக்கிறது என்றும் ஒரு பிரெஞ்சு நாட்டவர் எப்படி தமிழை அங்கு ஒரு வருடத்துக்குள் கற்று தன்னோடு தமிழில் பேசினார் என்றும் கார்த்திகா சொன்னார்.நாப்போலி என்று தட்டச்சி ஒரு இத்தாலியர் எப்படி இரண்டு வருடம் இமையமலையில் தங்கி இருந்து தமிழ் இந்துவானார் என்று யூரியூப்பில் பார்க்கலாம் என்று இந்து சொன்னார்.

உண்மையில் இவ்வாறான தகவல் பரிமாற்றங்களும்,நேரடியான நெருக்கமான விமர்சன உரையாடல்களும் கலைஞர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை அன்றய உரையாடலின் சுவாரிசமும் ஈடுபாடும் நமக்குக் காட்டியது.ஒரு கலைஞனுக்கான ஊட்டம் அது தானே? ஒரே விதமான ஆர்வம் கொண்டவர்கள் கூடினாலே சொந்தம் சொல்லிக் கொள்ளாமல் உட்கார்ந்து கொள்ளும்அங்கொரு பந்தம் குடி கொண்டு விடும்.இங்கும் அது தான் நடந்தது.ஒரு மடை திறந்த வெள்ளமாய் சுவையான சொற்கள் பெருகி ஓடின!அது தமிழ் வெள்ளம்.தேனாறு! 

ஆனால் நேரத்தை என்ன நிறுத்தி வைக்கவா முடியும்? நேரம் சற்றே சறுக்கிக் கொண்டிருந்ததால் கொண்டு சென்றிருந்த பிஸ்கட்டோடு தேனீரையும் பருகியபடி அவரவர் கொண்டு வந்திருந்த பகிர்வுகளைப் பகிர ஆரம்பித்தோம்.கோகிலா அவர்கள் கொண்டு வந்திருந்த பகிர்வை காண,கேட்க நாம் எல்லோரும் ஆர்வமாக இருந்தோம். அவர் கடந்த வாரம் தான் எழுதிய சிறுகதை ஒன்றை தன் கம்பீரக் குரலின் ஏற்ற இறக்கங்களோடு அவர் வாசிக்க ஆரம்பிக்க நாமும் அவரோடு பயணிக்க ஆரம்பித்தோம்!

ஆஹா! என்ன ஒரு பயணம் அது!!யாழ்ப்பாணத்து மினிபஸ்சில் பயணித்து அப்படியே அவுஸ்திரேலியா வந்து அவுஸ்திரேலிய பஸ்சில் பயணம் செய்து நம்மை எதிர் பாரா திருப்பம் ஒன்றில் சட்டென இறக்கி விட்டுச் சென்றது அந்தக் கைவண்ணம்.கேகேஎஸ் வீதியால் புறப்பட்ட மினிபஸ்சில் உண்மையாகவே பயணம் செய்து வந்ததைப் போல ஒரு ஓட்டமும் தத்ரூபமும் அதில் இருந்தது.பெற்ற தாயை விட வேறு யாருக்குத் தெரியும் தன் குழந்தையின் பவித்ரம்! அவரது குரலில் உணர்ந்து அவர் சொல்லும் பாங்கோடும் ஏற்ற இறக்கங்களோடும் அதனைக் கேட்கமுடிந்தவர்கள் உண்மையில் பாக்யசாலிகள் தான்.

 இப்படியான விடயங்கள் அரியவை. மிக மிக அபூர்வமாகக் கிடைப்பவை.சேகரித்து வைக்கப்பட வேண்டியவை. இப்படியான சிறு சிறு சந்திப்புகளில் மட்டுமே இப்படியான அபூர்வ ருசிகள் கிடைக்கும்.புத்தகத்தில் நம் கண்கள் படிக்கின்ற போது நிச்சயமாக இப்படி ஒரு சுவை கிட்டாது. அடுத்த முறை வரும் போது ஒரு கையடக்க ஒலிப்பதிவுக்கருவியைக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.இந்தக் கதையை நீங்கள் அவுஸ்திரேலிய சிறப்பு வெளியீடாக வெளிவர இருக்கும் ஜீவநதி சஞ்சிகையில் இன்னும் 3 மாதத்தில் காணலாம்.

அதன் பின் இந்துமதி ஸ்ரீநிவாசனின் முறை வந்தது.தான் உண்மையில் தயாராக வரவில்லை என்றும் என்றாலும் நாளொன்றுக்கு ஒருமுறையேனும் அரைமணிநேரமென்றாலும் பாரதி பாடலை தான் எடுத்துப் படிப்பதாகவும் கூறி பாரதியின் ”….கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி….” என்ற பாடலின் நயத்தை சிறப்பாகச் சுவைத்துச் சொல்லி அது பிறகு எப்படி இப்போது…கொலைவெறி…கொலைவெறிடி…”பாடலில் போய் முடிந்திருக்கிறது என்று முத்தாய்ப்பாய் நிறுத்தினார். அந்த இடத்தில் அவர் ஒரு சிறந்த வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று தெரிந்தது.குரல் கம்பீரமாய் ஒலித்தது.

அந்தக் ’கள்வெறியும்’ இந்தக் ’கொலைவெறியும்’ சொல்லும் பொருள் ஒன்று தான்; இரண்டுக்கும் இடையில் காலம் தான் வேறுபட்டிருக்கிறது என்று செல்வம் சொன்னார்.இரண்டுக்கும் இடையில் முரண்பட்டு நிற்பது கோகிலாவின் நாடகத்தில் வந்த அந்தப் ’புரிதல்இன்மை’ தான் என்று மேலும் அவர் விளக்கி எப்படி இளம் சந்ததியினருக்கு இவ்வாறான பாடல்கள் பிடித்துப் போய் விடுகிறது என்பது பற்றியும் நமக்கு அது பிடிக்காமல் போய் விடுவதன் காரணம் பற்றியும் பேசிய போது ஒரு தந்தையின் – மேலும் ஒரு ஆசிரியனின் புரிதலை – செல்வத்தில் காண முடிந்தது. 

தற்செயலாகவும் இயல்பாகவும் இடம் பெற்ற இந்த கள்வெறி; கொலைவெறி;புரிதலின்மை ஆகிய 3 கலைமுத்துக்களையும் சிறப்பாக இணைத்து மாலையாக்கி அந்த நிகழ்ச்சியை நம் கைகளில் தந்து சிறப்பாக்கினார் செல்வம். 

இப்போது காலத்தைத் துரத்திக் கொண்டிருந்தோம்.இந்து தன் குழந்தைகளை அண்ணன் வீட்டில் விட்டு விட்டு வந்திருந்தார்.என்றாலும் செல்வத்தின் கவிதை கேட்க ஆவலாக இருந்தார்.இம்முறை செல்வம் தன் நண்பர்களின் (ஊரில் இருந்து மகள்மாரின் குழந்தைப் பேற்றிற்காக வந்து போய் கொண்டிருக்கும்) அம்மாமாரின் அன்பில் தோய்ந்த/ தோய்த்த கவிதைகளை எடுத்து வந்திருந்தார்.அவை பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய ரம்யமான கவிதைகள். தாயை இழந்த ஒரு தனயனின் சோகமும் தேடலும் பாசமும் அந்தக் கவிதைகள் எங்கும் ஈரம்படிந்த படி கிடந்தன.”நல்ல சொல் வீச்சுக்கள்” என்று நான் சொன்ன போது “அந்தச் செல்லம்மாள் (அவர் தாயார் பெயர்) தந்தது இந்தச் சொல்லம்மாள்” என்றார்.
அந்தச் செல்லம் தந்தது இந்தச் செல்வம் என்று தோற்றிற்று எனக்கு. 

அந்தக் கவிதைகளைச் சொல்லிக் கொண்டு போன போது அந்தத் தாய்மார்களின் மூன்று மகள்மாரின் பெயர்கள் பேச்சின் போதும் கவிதையின் போதும் வந்து போயின. அப்பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

1.சோலை
2.நிலவு
3.நப்பின்னை(வேறொரு சந்தர்ப்பத்தில்)

எத்தனை அழகான பெயர்கள் இல்லையா? தமிழ் நாட்டுத் தாய்மார் வைத்த இன்றய தாய்களின் பெயர்கள்!!

இப்போது சாம்பல் நிறத்துக்கும் கருப்பு நிறத்துக்கும் இடையே பொழுதிருந்தது.மெல்லியதான குளிர் பரவி விட்டிருந்தது.நேரம் 7.15. செல்வம் வேறு ஒருவரை 7 மணி அளவில் சந்திக்க வேண்டி வேறு இருந்தது.கோகிலா அவர்களுக்கும் நாடகப் பட்டறைக்கு நேரமாகிவிட்டிருந்தது.இந்து தன் பிள்ளைகளை அண்ணன் வீட்டில் விட்டு விட்டு வந்த தாய்மையின் பதட்டத்தோடு இருந்தார். நியாயத்தோடு கூடிய ஒரு வித அவசரம் எல்லோரிடமும் தொற்றிவிட்டிருந்தது. 

அத்தனை அவசரத்துக்குள்ளும் மாதத்தில் வரும் இறுதி ஞாயிற்றுக் கிழமை என்பதில் வரும் இறுதி என்ற சொல் எனக்குப் பிடிக்கவில்லை அதனை முதல் ஞாயிறென மாற்றினால் என்ன என்று செல்வம் கேட்ட போது ஏனைய எல்லோருக்கும் அது உடன்பாடாய் இருந்தது.எனவே 5வது வாரம் முதல் ஞாயிற்றுக் கிழமை கூடுவோம் எனக் கூறிக் கலைந்தோம்.நானும் கார்த்திகாவும் அவர்களைப் பின் தொடர்ந்தோம்.

காருக்குள் ஏறி உட்கார்ந்த போது செல்வம் கோர்த்து தந்திருந்த மூன்று மணிகள் கோர்த்த இலக்கிய மாலையும் அபூர்வமாகக் கதாசிரியரின் குரலில் கேட்கக் கிட்டிய யாழ்ப்பாணத்து மினி பஸ்பயணமும் மனதில் நிறைந்திருந்தது.

எப்படியேனும் நேரத்தைச் சற்றே ஒழுங்கு படுத்த வேண்டிய தேவை ஒன்று இருக்கிறது. இனிக் குளிர்காலம். வேளைக்கு இருளும்.குளிர் உட்புகாக் கட்டிடம் ஒன்றையும் தயார் படுத்தி இவர்களை அழைக்க வேண்டிய பொறுப்பொன்று எனக்கிருக்கிறது.

HSC பரீட்சையை இந்த வருடம் எடுக்கின்ற பிள்ளைக்குத் தந்தை செல்வம்! இரண்டு சிறு குழந்தைகளின் தாயார் இந்து!! ஐந்து மணிவரை நடனப் பள்ளி நடத்துகின்ற ஆசிரியை கார்த்திகா! தூர இடத்திலிருந்து மகனோடு வந்து சேரும் கோகிலா!!

இலக்கியம் கொண்டுவந்து சேர்த்த என் தோழமைகளே! உங்களை நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சு நெகிழ்கிறது.

உங்கள் அன்புக்கும் அர்ப்பணிப்புக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்.மீண்டும் சந்திப்போம்!!

………………………………..

26.03.2012.

இன்று டென்மார்க் இலக்கிய நண்பர். திரு.ஜீவகுமாரன் ஈழத்து மலையக எழுத்தாளர் தெளிவத்தை யோசெப் அவர்கள் அவசர இருதய அறுவை சிகிச்சைக்காக கொழும்பு டேடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்ற தகவலையும் அவர் இலக்கிய அன்பர்களிடம் உதவி கேட்டிருக்கிறார் என்ற தகவலையும் அறியத் தந்திருந்தார்.

 மலையகத்து மக்களுக்காக குரல் எழுப்பிய தெளிவத்தை யோசெப் அவர்கள் ஒரு சமூகச் சொத்து. தன் குடும்பத்துக்காக எதையும் சேர்த்து வைக்காது பாடுகளைச் சுமந்திருந்த ஒரு சமூகத்துக்காக ஓங்கிக் குரல் கொடுத்த அவரைக் காக்க வேண்டியது நம் சமூகக் கடன் அல்லவா?

அதனால்,உடனடியாக நம் இலக்கிய அன்பர்களிடம் உதவித் தொகை கேட்டிருந்தேன்.சுமார் அரைமணி நேர தொலைபேசி உரையாடலில் கிட்டிய தொகை $670.00 கள்.(கேட்டு வருத்தப்படுத்தி விடக் கூடாது என்பதால் சில நல்ல உள்ளங்களிடம் குறிப்பறிந்து கேட்பதைத் தவிர்த்துக் கொண்டேன். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக!) மேலதிகமாக $82.00 களை இணைத்து ஒரு லட்சம் இலங்கை ரூபாய்கள் TSS நிறுவனத்தினூடாக (அவர்கள் அதை இலவசமாக அனுப்பி வைத்தார்கள்) அனுப்பியது மேலும் ஒரு மன நிறைவைத் தந்தது.

 தென்னம்பிள்ளையை நட்டு வைத்ததைப் போல ஒரு மனநிறைவு!!

Advertisements
 
Leave a comment

Posted by on 04/02/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: