RSS

இலக்கிய சந்திப்பு – 3 – ஒரு விமர்சன அரங்காய்….

04 Feb

உயர்திணையின் விமர்சன அரங்கு

 
உயர்திணையின் ஜீவநதி சிறப்பிதழின் விமர்சன அரங்கு சரியாக 10.06.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை மப்பும் மந்தாரமும் மழையுமாய் இருந்த ஒரு மாலைநேரம் சரியாக 1.30 மணிக்கு ஆரம்பமாயிற்று.
 
அரங்கு வழமையான மேடை, சபை என்ற பாணியில் இல்லாமல் எல்லோரும் ஒரேதளத்தில் வட்டமாக ஒரு கலந்துரையாடல் பாணியில் அமைந்திருந்தது.அது சிட்னிக்குச் சற்றே புதிது.
 
சிற்றுண்டிக்கான இடைவேளை விடப்படாதெனவும் விரும்பியவர்கள் விரும்பிய நேரம் மற்றவர்களுக்குச் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தமக்கு செளகரிகமான நேரங்களில் அவற்றைச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் சற்றே புதிது.
 
எதிர்பாராத புலமையாளர் கூட்டம்.
 
பாரதக் கவிஞர் வைதீஸ்வரன் ஐயா,ஈழத்தின் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர், வில்லுப் பாட்டுக் கலைஞர்,சிறந்த ஓவியர் கனகசிங்கம் அவர்கள், சக்கர நாற்காலியில் தூர இடத்தில் இருந்து வந்திருந்த கவிஞர் அம்பி,அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் (அவர் முதல் நாள் தான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்திருந்தார்.),யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ் துறை விரிவுரையாளர். கலையரசி.சின்னையா அவர்கள்,’கலப்பை’ சஞ்சிகை ஸ்தாபகர் Dr.கேதீஸ்,நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்பாண்டுத் தலைவர்.திரு.கதிர்காமநாதன்,வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலைய நடப்பாண்டு அதிபர் கணநாதன் அவர்கள். கம்பன் கழகப் பேச்சாளர்.திருநந்த குமார் அவர்கள், எனத்தொடங்கிய அந்த வரிசை இரண்டாம் சந்ததியின் சிந்தனைகளைக் கொண்டிருந்த இணையம் பிறப்பித்த தமிழ் பிள்ளைகளான மெல்போர்னில் இருந்து இந் நிகழ்ச்சிக்கென வருகை தந்திருந்த ஜேகே, கேதா, மற்றும் வைத்தியக் கலாநிதி.திருமுருகன் ஆகியோராலும் ’ஈழத்து முற்றம்’ ஸ்தாபகர் கானா.பிரபா, இணைய வழியால் இணைந்து கொண்ட ஆழமான வாசிப்பனுபவங்களைக் கொண்ட யசோதரன், சக்திவேல், போன்றவர்களாலும், இந் நிகழ்ச்சி பற்றி இணையமூடாக அறிந்து katoomba வில் இருந்து தொடரூந்து வழியாக வந்த செல்வி.கெளரி போன்றவர்களாலும் அழகு பெற்றிருந்தது.
 
 
 
மகா பாரதத்தில் ஒரு இடம் வரும்.வில்வித்தையில் சிறப்புற்றிருந்த அர்ச்சுணனுக்கும் கர்னனுக்குமான களம் அது. கர்னன் தன்னால் அர்ச்சுணனுக்குப் போட்டியாக வில்வித்தைப் போட்டிக்கு வரத் தயார் நிலையில் நிற்பான். ராஜகுரு கர்னனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.” எந்த சிம்மாசனத்தை நீ அலங்கரிக்கிறாய் கர்னா?” 
 
இணையத்தைத் தமிழால் அலங்கரிக்கும் ஒரு சந்ததி; பாரம்பரிய மரபுவழி சிந்தனைகளின் வழிவந்த மூத்த சந்ததி இரண்டுக்குமான களமாக இது இருந்தது. சமானமான அறிவுப் புலம் கொண்ட இருவேறு அணியை அங்கு வந்திருந்த பலரும் தெளிவாக அடையாளம் கண்டிருப்பர்.மூத்த அறிவுஜீவிதங்களின் சிந்தனை ஓட்டமும் இளைய சிந்தனையாளர்களின் தீவிர சிந்தனையும் அங்கு ஆரோக்கியமாக அமர்ந்திருக்கக் கண்டேன்.
 
 
 
இவர்களை விட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள்! 
 
எல்லோருமாகச் சுமார் 40 பேர்! அது இலக்கத்தினால் அல்லாமல் காத்திரமான அறிவினால் சூழப்பட்ட சபை. அது தான் இதன் தனித்துவமான சிறப்பு.
 
நம்முடய எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட 10 – 15 பேராகத் தான் இருந்தது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். தீவிர வாசகர்கள், எழுத்தாளுமைகள், புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிலர் – இது தான் எங்கள் இலக்காக இருந்தது.
 
இந்த ஆதரவு நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல. இதற்கு முக்கியமான காரணம் எழுத்தாளர் முருக பூபதி அவர்கள்.அவர் நல்ல ஒரு மனிதக் களஞ்சியம்.மற்றும் இளஞ் சந்ததித் தமிழர்களும் அவர்களுடய இணையப் பக்கங்களும். சிட்னியில் இருக்கும் நமக்கே தெரியாத தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களை மெல்போர்னில் இருந்த படியே வரவழைத்த பெருமை ஜேகேக்கும் கேதாவுக்கும் உரியது!
 
உண்மையில் இந்தக் களம் புதிய தலைமுறையையும் மூத்த தலைமுறையையும் சந்திக்கப் பண்ணிய சிந்தனைகளின் மனம் திறந்த ஒரு மோதலாக இருந்தது என்பதையே நான் உணர்கிறேன்.
 
முதலில் ஜீவநதியின் சிறுகதையை முன்வைத்து ஆறு.குமாரசெல்வம் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.மிக மென்மையான போக்கை அது கொண்டிருந்தது.அதற்கு எதிர்வினையாற்றிய ஜேகே சிறுகதை என்பதன் பரிமானங்களை உலக இலக்கியங்களில் இருந்து எடுகோள்காட்டி சில கதைகளை கதைகளே இல்லை என முழுமையாக நிராகரித்து; கோகிலா அவர்களுடய கதையில் இரண்டு கதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறி ஒரு சிறுகதை என்பது ‘ஒரு கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கவேண்டும்’ என்ற கருத்தைக் கூறி சிறுகதைக்கான பரந்துபட்ட வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்.
 
 
இது இப்படியே இருக்க விவசாயத்துறையில் பேராசிரியராய் இருக்கும் எழுத்தாளரான ஆஸி. கந்தராஜா சிறுகதை என்பதற்கு வரைவிலக்கணம் என்பதில்லை.ஆரம்பத்தில் இருந்த சிறுகதைக்கான வடிவம் அதன் அமைப்பிலும் தோற்றத்திலும் கொள்ளளவிலும் எத்தகைய மாற்றங்களைக் காலப் போக்கில் கொண்டுவந்து தந்திருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து தற்போது அது ஒருபக்கக் கதையாகி ஒரு வரிக் கதையாகக் கூட வந்து விட்டது என்ற கருத்தை வைத்தார்.
 
 
அதற்குப் பதிலளித்த கோகிலா அவர்கள் எல்லாவற்றுக்கும் வரவிலக்கணங்கள் உண்டெனவும் இல்லாவிட்டால் ஒரு கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டி முன்னாள் யாழ்பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான கலையரசி. சின்னையா அவர்களைக் இதற்குக் கருத்துக் கூறுமாறு கூறி அமர்ந்தார்.சற்றுப் பொறுத்து அதற்குக் கருத்துக் கூறிய கலையரசி அவர்கள் நிச்சயமாகச் சிறுகதைக்கு வரைவிலக்கனம் உண்டு என்பதை தெளிவாக முன் வைத்தார்.
 
அதன் போது இவற்றை உன்னிப்பாக அவதானித்த படி இவற்றை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த கானா.பிரபா மக்கள் – ரசிகர்கள் – வாசகர்கள் தான் வடிவத்தைத் தீர்மானிப்பார்களே தவிர வரைவிலக்கணங்கள் எது கதை என்பதைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை முன் வைக்க மேலும் இந்த உரையாடல் நகராத படிக்கு நேரம் நகர்ந்து கொண்டிருக்க கதைப்பாகம் முடிந்து கவிதைப் பாகம் ஆரம்பித்தது.
 
 
ஜீவநதியின் கவிதைகளை முன் வைத்து கோகிலா அவர்கள் நன்கு செப்பனிடப்பட்ட பேச்சினை கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். அது சிறந்த ஒரு ஆய்வுக்கட்டுரையின் வடிவத்தை ஒத்திருந்தது. சற்றுமுன்னர் தான் சிறுகதையின் வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சை நிகழ்ந்து முடிந்திருந்ததால் கவிதைக்கான வரையறையை அவர் சொல்லுகின்ற போது கவிதைக்கான வரைவிலக்கணத்தை அழுத்திச் சொல்லி கவிதைகளுக்குச் சந்தம் இருந்தால் அது சிறப்பு என்று முன்மொழிந்து அமர்ந்தார். அவரது அந்தப் பேச்சும் அதற்குப் பதிலாய் அமைந்திருந்த கேதாவினது பேச்சும் எழுத்தினால் விபரிக்கத் தக்கதன்று. அது பார்த்துக் கேட்டு உய்த்து உணரவேண்டியது. இந்நிகழ்ச்சியின் பேரழகாய் அது இருந்தது. அதனை வீடியோக் காட்சியாக இங்கு பதியும் எண்ணம் இருப்பதால் அதனை இப்போதைக்கு ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்கிறேன்.
 
இங்கும் மரபுக்கும் புதுமைக்குமான மோதலை காணமுடிந்தது.புதுக்கவிதையும் ஹைக்கூ கவிதையும் மரபுக்குள்ளும் எதுகைமோனைக்குள்ளும் சந்தத்துக்குள்ளும் சிறைப்பட்டிருந்தால் தமிழுக்குப் புதிய வரவுகள் சித்தித்திருக்குமா என்ற கேள்வியும் உதாரணங்களும் எதிர் எதிராய் வீசப்பட அழகான புலமை யுத்தம் ஒன்று மிக அழகாக ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.
 
உண்மையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான களம் ஆரோக்கியமாக விரிந்து செல்லும் சாத்தியங்கள் நிறையவே இருந்தன. எனினும் நேரம் காரனமாக அதுவும் முடிவுக்கு வர கட்டுரைகள் பற்றிய விமர்சனத்தை இந்துமதி அவர்கள் முன் வைத்தார்.ஆற்றொழுக்கான கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரி அவர். பல கட்டுரைகளை இணைத்தும் சில கட்டுரைகளைச் சிலாகித்தும் சில கட்டுரைகளில் இருந்த திருத்தக் கூடிய அம்சங்களை சொல்லியும் அவர் அமர செளந்தரி கட்டுரைகள் பற்றிய கேள்விகள் சிலவற்றை முன் வைத்தார். 
 
கூடவே முன்னாளில் பல கவிதைகளை எழுதி வந்த  பாமதி கட்டுரைகள் – அதிலும் சமூகம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டும் என்றும் மேம்போக்காக எழுந்தமானமாக தனக்குத் தெரிந்த ஒரு சின்ன வட்டத்தை முழுமையான சமூகத்துக்குமான பார்வையாக வைத்து விட்டுப் போவதில் இருக்கும் சமூகப் பொறுப்பின்மையைக் காரசாரமாகக் கண்டித்தார்.
 
எனினும் கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற அகிம்சை பற்றிய கருத்து பலரினதும் ஆர்வத்துக்குரிய பேசு பொருளாக இருந்தது. ஜீவநதியில் இடம்பெற்றிருந்த செளந்தரியின் அகிம்சைபற்றிய கட்டுரை இக்காலத்துக்கு அகிம்சை பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்வியை முன்வைத்திருந்ததும் அது உணர்வு ரீதியாக பலரின் கேள்வியாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
 
மாகாத்மாகாந்தி வென்றதற்கான காரணம் அவர் தன் கொள்கையில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார் என்பதும் அவருக்கு வாய்த்திருந்த எதிரி மனசாட்சி உள்ளவனாக – தர்மத்துக்குப் பயந்தவனாக இருந்தான் எனவும் பிரவீணன் எடுத்துச் சொல்ல (பிரவீணன் இம்முழு நிகழ்வையும் தொகுத்தளிக்கும் பணியையும் திறம்படச் செய்து கொண்டிருந்தார்) அதற்குப் பதில் கொடுத்த கேதா அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களை அதே ஆங்கிலேயர் எப்படி நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார். தர்மம் வென்றே தீரும் எனவும் அதற்கு நமக்கு பொறுமையும் கொள்கையில் உறுதிப்பாடும் தேவை எனவும் பேச்சுக்கள் சுவாரிசமாய் நடந்து கொண்டிருந்த போது நேரம் 4.25 என கடிகாரம் காட்டியது.
 
திட்டமிட்ட நிகழ்ச்சிப் பிரகாரம் 45 நிமிடங்களைக் குறும்படக்காட்சிக்கும் அது பற்றிய கலந்துரையாடலுக்கும் ஒதுக்கி இருந்தோம் என்பதும் தாமதமாய் உறைக்க இந்த விவாத அரங்கை நெறிப்படுத்திக் கொண்டிருந்த பாஸ்கரன் அவசரமா ஓடி வந்து என்ன செய்வோம் எனக் கேட்டார்.
 
நிகழ்ச்சியை நிறைவு செய்வோம் என்று நன்றி கூடி முடித்த போது நேரம் சரியாக 4மணி.30 நிமிடம்.
 
முழுவதுமாக மூன்று மணி நேரம்! போனதே தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம் 4 மணியளவில் தமக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரி விடைபெற்றதைத் தவிர மற்ற அனைவரும் நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தனர்.
 
இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று என்னை யாரும் கேட்டால் என்ன பதிலைச் சொல்லலாம் என எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டிருந்தார்கள். தம்முடய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தயக்கமின்றி முன்வைத்திருந்தார்கள். அது ஒரு சிறந்த ஆரம்பம் என்றே நினைக்கிறேன். 
 
எனினும், இந்த நிகழ்ச்சியின் பிடியில் இருந்து வெளியே வர எனக்கு 4 நாட்கள் பிடித்தன. மறு நாள் காலை எனக்கு பலவிதமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.நேரிலும் பலர் கருத்துச் சொன்னார்கள்.அவர்களுடய கருத்துக்களை அப்படியே தருகிறேன்.
 
1.”அடுத்த முறை இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வதற்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ. நான் செய்து தாறன். என்ர தொலைபேசி இலக்கம் இருக்குத் தானே!”.- நிகழ்ச்சி முடிவின் போது திரு கந்தசாமி அவர்கள்.
 
2. ”High Quality” – திரு.நாகேஸ்வரன். 
 
3.”பிள்ள இது தான் என்ர இடம். என்ர மகளிட்ட சொல்லியிட்டன். இனி என்னை நீ எங்கும் அழைத்துப் போக வேண்டாம்.மாதம் ஒரு தடவை இங்கு அழைத்து வா அது போதும். நல்ல சந்தோசமா இருக்குப் பிள்ளை.” – ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமதி. நடராஜா.
 
4. ”நீங்கள் ஜீவநதி விமர்சனம் என்று ஒருவரை முழுமையாகப் புத்தகத்தை ஆய்வு செய்யக் கொடுத்து விட்டு மிகுதி நேரத்துக்கு சிறுகதை, கவிதை என்று அதன் ஆழ அகலங்களைக் கண்டு வந்திருக்கலாம். விடயங்கள் கூடி விட்டன”. -க.செளந்தரி.
 
5.”அக்கா,ஒரு விசயத்தை மட்டும் எடுங்கோ. அதப்பற்றி முழுமையாய் ஒரு விமர்சன அரங்கு வையுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் HSC தேர்வு விடயங்களில் எனக்கிருக்கிற அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.மின் தமிழ் பற்றி ஒரு அரங்கு வையுங்கோ.எத்தனை இளம் பிள்ளைகள் வருகிறார்கள் என்று பாருங்கோ”. – கானா.பிரபா.
 
6.”வருசம் ஒருக்கா ஆய்வரங்கை ஒரு நாள் முழுக்கச் செய்யலாம் நீங்கள்”. – எழுத்தாளர் முருக பூபதி.
 
7. ”புத்தகத்தை முதலில் வாசிக்கக் கொடுத்து விட்டு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் இந்த செட்டப் நல்லாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.இதுவும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் என்று நினைத்து வந்திருந்தேன்” –  Dr.பால முருகன்
 
8.”பலரையும் எழுத்துக்களால் மட்டுமே அறிந்திருந்த நமக்கு அவர்களை நேரில் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அது பற்றி நான் பெரிதும் மகிழ்கிறேன். அக்கா ’கேணியடி’ பாருங்கோ. உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.”. – ஜே.கே.
 
9. ”உங்களுடய மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கு இனி நானும் வருகிறேன்”.- யசோதரன்.
 
10.”எங்கட முதல் நிகழ்ச்சி தானே! பறவாயில்லை. திருப்தி”. – எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன்.
 
11.”எனக்கு சந்தோசம். எதிர்பார்த்தத விட நல்லாக நடந்தது. ஆனா இதே தரத்தை நாங்கள் maintain பண்ண வேணும். அது முக்கியம்.நாங்கள் நல்லாக் காலூண்டினாப் பிறகு கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி எண்டும் செய்யலாம்”. – பாஸ்கரன்.
 
12.” இலக்கியம் அதின்ர அழகியல் – இது பற்றிப் பேசிறதில எனக்குப் பிரியமே இல்லை. இலக்கியம் மக்களின்ர பிரச்சினையைத் தொடவேணும். அதப் பேச வேணும்.அதப்பற்றின பகிர்தல் இருக்க வேணும். குடுமிப்பிடிச் சண்டையள், எது இலக்கியம்,எது இலக்கியத்தரம் வாய்ந்தது என்பதெல்லாம் நேரத்தை வீணாக்குகின்ற சண்டைகள். நீங்கள் திசைமாறிப்போகாமல் சரியான பாதையில் போக உங்களைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் அதுவும் இப்பவே” – பாமதி.
 
13. “ நான் நினைச்சத விட வித்தியாசமா நல்லா இருந்துது” – பா.சாந்தி.
 
14. ஒரு email Group  ஒண்ட தயார் செய்யுங்கோ. தமிழ் பள்ளிக்கூட ரீச்சர் மாருக்கும் இப்பிடியான விடயங்களைச் சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்திலேயே 47 ரீச்சர் மார் இருக்கினம்.அவைக்கும் வர விருப்பமா இருக்கும். – இந்து.-
 
15. குறும்படம் ஒரு தனி subject. அத இதோட கலக்காதைங்கோ.ஆனா சரியான நேரத்துக்குத் தொடங்கி சரியான நேரத்துக்கு முடிச்சீங்கள்.
 
என்னைக் கேட்டால் இவை எல்லாமே பெறுமதியான கருத்துக்கள். மிக மிக அவசியமாகத் தேவைப்படுபவை. அனைத்தும் உண்மையான, நேர்மையான விமர்சனங்கள்.
 
இது புதுசு.
 
அது தான் எங்கள் வெற்றி. நேர்மையான விமர்சனத்தை நாம் வென்றெடுத்திருக்கிறோம். உண்மையான சமூகக் கரிசனையோடு அவை முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தினுடய தேவையை அது உணர்த்துகிறது.அது இந்த விமர்சனங்கள் நமக்குத் தரும் நம்பிக்கை.
 
உயர நீண்ட தூரம் இருக்கிறது. சிறுதுளிகளில் இருக்கிறது பெரு வெள்ளத்துக்கான சாத்தியங்கள். சிறு விதையில் இருக்கிறது பெரு விருட்சத்துக்கான இருப்பு. ஒரு ஒளிக்கீற்றுக்குள் அடங்கி இருக்கிறது பல வண்ணங்களின் சூட்சுமம். ஒரு காலடியில் தொடங்குகிறது நீண்ட தூரத்துக்கான பயணம்.
 
இது தள்ளாட்டத்தோடு சேர்ந்த தனித்துவமான முதலடி!
Advertisements
 
Leave a comment

Posted by on 04/02/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: