RSS

இலக்கிய சந்திப்பு – 8 – அழைப்பிதழோடு….

04 Feb

கடந்த மாதம் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பு – 7 – இல் நிகழ்ந்த நிகழ்வின் சுருக்கம் வாசிக்கப்பட்டு திருத்தங்கள் கோரப்பட்டன. வாசிக்கப்பட்ட நிகழ்வின் சுருக்கம் இங்கே பதிவாக!

இலக்கியச் சந்திப்பு – 7 (30.09.2012)

படம்: பெளர்ணமி நாள் (30.09.2012)

சந்தியாகால நேரம். பெளர்னமி நாள். வசந்த காலம். புல் தரையும் ஓங்கிய மரங்கள் ஓரமாயும் அமையப் பெற்றிருந்த மைதானம் ஒன்றை ஒட்டி இருந்த நவீன வசதிகள் கொண்ட சிறு மண்டபம் ஒன்றில் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்தது.

மூன்றே மூன்று பேர். கார்த்திகா, ஷிரேயா, யசோதா!

முதலில் வந்து சேர்ந்தவர் ஷிரேயா. வரும் போதே பார்த்தீர்களா? இன்றய பெளர்னமியை? கோழிக் குஞ்சின் வண்ணத்தில் பென்னாம் பெரிசாய் மரங்களிடையே அது பிரகாசிக்கிறது என ஆர்ப்பரித்த வண்னமாக வந்தார். சில நிமிட தாமதத்தில் வந்த கார்த்திகா ஒரு வருடத்தில் இன்றய மாதத்து பெளர்னமி தான் எபோதுமே பெரிதாக இருக்கும் என்ற செய்தியோடு வந்து இன்று சீனர்களின் moon festival என்ற தகவலையும் தந்தார்.

வெளியே சென்று பெளர்னமியை சில நிமிடங்கள் ரசித்தோம்.அது உயரத்தில் போய் பால் வெளிச்சத்தில் பூமியைப் பரிபாலித்துக் கொண்டிருந்தது.

குளிர் உந்தித் தள்ள உள்ளே வந்தோம். வழமையாக வருபவர்கள் எவரும் வராமையால் நம்முடய சந்திப்பின் எதிர்காலம் குறித்துக் கொஞ்ச நேரம் பேசினோம். ஆதரவற்றிருப்பதால் இச் சந்திப்பை நிறுத்துவதா என்ற கேள்வியை யசோதா முன் வைக்க மற்றிருவர் கண்களிலும் மெல்லியதான ஏமாற்றமும் சற்றே வருத்தமும் தொனித்தது.

இல்லை; இதனை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும்; வரும் காலத்தில் விருந்தினர் ஒருவரை அழைப்பித்து அல்லது ஒரு குறிப்பிட்ட விடயம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது பற்றிப் பேசுவதாக நிகழ்ச்சியை மாற்றி அமைக்கலாம் என்ற கருத்தை கார்த்திகா முன் வைத்தார்.. அடுத்த தடவை சந்திப்புக்கு திரு பாரதி அவர்களை பிரதம விருந்தினராக அழைப்பதென்றும்: சின்னத் தம்பிப் புலவரின் பாடல்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டோம்.

அதே நேரம் ஆதரவாளர்களுடய ஆதரவைப் பெற்றுக் கொள்ளாமல் செலவெதுவும் இல்லாத பூங்காவில் அல்லது யாரேனும் ஒருவருடய வீட்டிலும் கூட இவ்வாறான சந்திப்புகளை ஒழுங்கு செய்யலாம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்ததோடு நம் சந்திப்பை தொடர்ந்து நடத்துவதோடு வருடம் ஒரு தடவை நம் வருடாந்த பிறந்த தினத்தை அதன் முத்திரையை சமூகத்துக்கு வெளிப்படுத்தும் விதமாக ஒரு அழகான நிகழ்ச்சியை தனித்துவமான முறையிலும் கச்சிதமான வகையிலும் செய்து நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உறுதிப் படுத்தலாம்; காலப்போக்கில் பலர் இணையும் சாத்தியக் கூறுகள் இருக்கும். அவர்கள் வலுவான அடித்தளத்துக்கு உதவுவார்கள் என்ற ஆக்கபூர்வமான கருத்தை கார்த்திகா வெளியிட; காயப்பட்டிருந்த மனதுக்கு அது ஒரு இதமான ஒத்தடமாக இருந்தது.

அதனோடு தொடர்பு பட்டதாக இருந்தது யசோதா கொண்டு சென்றிருந்த பத்திரிகைச் செய்தி ஒன்று. அது கொழும்பில் பாடிப்பறை என்ற சமூகக்கல்வி வட்டம் நிகழ்த்திய நிகழ்ச்சி பற்றிய விமர்சனக் குறிப்பாகும்.அது தன் ஆண்டு நிறைவின் போது மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதைப் பற்றியும்;’சுட்ட சாம்பலில் சுடர் மிக எழுவோம்’ என்ற கவியரங்கம் பற்றிய நிகழ்வும் பாரம்பரிய மேடை நாடகத்தினதும் வீதிநாடகப் பாணியினதும் கலவையாக நடந்த நாடகமும் பேராசிரியர் மெளனகுருவின் அரங்க ஆய்வுக் கூடம் நிகழ்த்திய இசை ஆற்றுகையும் சிறப்பாக எடுத்துக் காட்டி தனித்துவமான வகையில் செய்திருந்தது நினைவு கூரப்பட்டது. அது மாதிரி நாமும் நம்முடய ஓராண்டு நிகழ்வை ( மாசிமாதம்) ”2000ம் ஆண்டுகால பழமை எங்களுக்கு” என்ற கவிஞர் முருகையனின் கவிதையை அடிப்படையாகக் கொண்டு களைய வேண்டிய குப்பைகளாக என்னென்ன இருக்கிறது என்பதை சமுதாயம், சமயம், பண்பாடு, தொழில்நுட்பம் என்ற வகையில் வகைப்படுத்தலாம் என்றும் அல்லா விட்டால் சிந்தனை அரங்காக மனக் குப்பை, பண்பாட்டுக் குப்பை, சமூகக் குப்பை, சமயக் குப்பை, உலகக் குப்பை என்ற வகையாக ஒரு சிந்தனை அரங்கையும் ; உலக இலக்கியத்தில் இருந்து மொழிபெயர்ப்பு ஆக்கங்களுக்கான ஒரு களத்தை அமைக்கும் விதமாக ஒரு மொழிபெயர்ப்பு அரங்கொன்றையும் குறும்படக் காட்சி மற்றும் அது பற்றிய கலந்துரையாடல் ஒன்றையும் செய்யலாம் என்று கூறி அபிப்பிராயம் கேட்கப் பட அது ஏகமனதாக நிறைவேறிற்று.

ஒரு நாள் ஒன்று எவ்வாறு இனியதாகிறது என்பது பற்றி ஷிரேயா தான் படித்த ……………….கவிதை ஒன்றை முன்வைத்துப் பேசினார். கவிதை இது தான்.

சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்…
ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி

சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது

காற்றின் துணையும் உண்டு

நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?

சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது

அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?

இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிந்திராதது அது.

http://poetdevadevan.blogspot.com.au/2011/04/blog-post_9766.html

இன்றய நாள் எவ்வாறு இரண்டு சிறு குழந்தைகள் காலையில் எழுந்து நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை என்று வைத்த முறைப்பாடுகள் தன் நாளை இனியதாக்கியது என்பது பற்றிப் பேசி தான் கார் கழுவிய அனுபவம் பற்றிப் பேசி இருந்தார். அவை எல்லாம் எவ்வாறு மனதுக்கு மகிழ்ச்சியை கொண்டுவந்து சேர்க்கிறது என்ற விதமாக அவர் பேசியது உண்மையில் நினைவில் நிறுத்தக் கூடியதும் சிந்திக்கக் கூடியதுமான ஒரு விடயமாகவே எனக்கும் பட்டது. ஒரு கார் ஒன்றை முழுவதுமாகக் கழுவும் அனுபவமும் அதன் பின்பான திருப்தி தரும் சுகானுபவமும் விதந்து பேசப்பட்டது. பார்க்க http://mazhai.blogspot.com.au/ 01.10.2012 அவர் அந்த முழுமையான மனநிறைவு தரும் சுகானுபவம் பற்றிப் பேசிய போது அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் படித்த தேவதேவனின் கவிதை ஒன்று நினைவுக்கு வர அதை அவரோடு பகிர்ந்து கொண்டேன். அக்கவிதை இது தான்

அந்த இசை (2.4.11) சனிக்கிழமை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை

புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
அதன் பின்னர் மகிழ்ச்சியான மனநிலைகளும் வாழ்க்கை தருகின்ற பரிமானங்களும் பற்றியதாகக் கலந்துரையாடல் திரும்பியது.. பெண்ணும் அவளின் கடந்து போக வேண்டி இருக்கின்ற பாதைகளும் பற்றி; ஒரு பெண் எவ்வாறு தன்னுடய காலில் தான் நிற்கத் தக்கவளாகவும் தன்னைத் தான் புரிந்து கொள்பவளாகவும் வாழவேண்டிய அவசியம் குறித்த கலந்துரையாடல்கள் மனதின் பலம் பலவீனம் எவ்வாறு அன்றாட வாழ்க்கையில் ஜீவிதங்களைத் தீர்மானிக்க துணை புரிகிறது என்ற விதமான சிந்தனைகள் தூவப்பட்டன.

திருமணவாழ்க்கை அது தரும் நிழல் அது சட்டென இல்லாது போகும் போது வரும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது, சமூகத்தின் இயல்பு, அதில் பெண்னின் நிலை, திருமண வட்டத்தை விட்டு வெளிவரும் போது அவள் எதிர்கொள்ளும் சவால்கள், உண்மை என்பதன் சுயரூபம் வெளிப்படும் போது ஏற்படும் அதிர்ச்சிகள், மன உழைவுகள், திருமண வட்டத்துக்குள் நிற்கும் போது சார்ந்து நிற்கும் அனுபவங்கள், பெண் தன்னை அடையாளப் படுத்தும் படியாக இருப்பதற்கு திருமண வட்டத்துக்குள் தடையாய் நிற்கும் காரணிகள், வாழ்க்கையின் நிலையற்ற தன்மை… போன்ற விடயங்கள் விமர்சன ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் முன் வைக்கப்பட்டன.

மூன்று பெண்களும் மூன்று விதமான வாழ்க்கைப் அனுபவப் பின்னணியில் இருந்து வந்ததும்; அவ்வுரையாடலில் நேர்மையாக எந்த ஒரு ஒழிவுமறைவும் இல்லாமல் உண்மைகள் அனுபவப் பின்னணியில் தயக்கமின்றி முன் வைக்கப் பட்டமையும் ஒரு சிறப்பென்று சொல்லியே ஆக வேண்டும். அது உண்மையான அனுபவப் பகிர்வு! ஒரு அனுபவச் செல்வம்! அது அந்த சந்திப்பின் ஹைலைட் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பெண்கள் மட்டும் சேர்ந்து கொண்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

9.30 மணிக்கு குறியீட்டு இலக்கம் அழுத்தி வெளியே வந்த போது வானில் நிலவு பிரகாசித்த படி இருந்தது.

சந்திரனை மனதுக்கு அதிபதி என்று சொல்வார்கள். முழுமையான பூரண நிலவு பிரகாசித்த படி இருந்த அந்த இரவில் நாமும் மனம், சமூகம், பண்பாடு, வாழ்க்கை இயல்புகள், அதில் பெண்கள் என்ற விதமாக பேசியது பொருத்தமாகவே இருந்தது.

மனதிலும் அதே பெளர்னமி நிலவு குளிர்மையாகப் பிரகாசித்த வண்ணம்!!

தொகுப்பு: யசோதா.ப.

16.10.12

Advertisements
 
Leave a comment

Posted by on 04/02/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: