RSS
Aside
04 Feb

மழையொன்று நதியாகி……

 
கடந்த 26.08.2012 அன்று நடந்த இலக்கிய சந்திப்பில் 3 புதியவர்கள்! மூவரும் இளைய சந்ததி; நமக்கும் அது புதிய அனுபவச் சூழலை / ஒரு வித உற்சாகத்தை / மகிழ்ச்சியைத் தந்து சென்றது.
மழையோடு ஆரம்பித்தது சந்திப்பு. அது பின்னர் கம்ப மழையாய் பெருகி, தொழில் நுட்ப சாதனங்களை நனைத்த படி, பேயோடு பேசி, ஒரு பிரபஞ்சப் பயணம் செய்த நிறைவோடு முடிந்தது.
ஆரம்பத்தில் இந்தப் பதிவை இலக்கிய சந்திப்பில் நிகழ்ந்தவை பற்றிய பகிர்வாகவே ஆரம்பித்தேன். ஆனாலும் அது விடாப்பிடியாக இப்படித்தான் இருப்பேன் என்று ஒரு வித வடிவெடுத்திருக்கிறது. இது ஒரு அடாப்பிடி பதிவு! கோவிக்காதைங்கோ.பிள்ளையார் பிடிக்க அது …. மாதிரி, கழுதை தேஞ்சு…… மாதிரி.
இலக்கிய சந்திப்பு – 6 பற்றி தனியாக ஒரு பதிவு பிறகு வருகிறது.
ஆனால் மிக்க நன்றி ஷ்ரேயா. உங்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு எப்படி என்று ஒரு கேள்வியையும் கேட்டு, இப்படி ஒரு மழையை எனக்குள் பொழியப் பண்ணிப் போனீர்கள். பல சிந்தனைகளை உங்கள் மழை தந்து போயிருக்கிறது. அது பெருக்கெடுப்பதைத் தடுக்க முடியவில்லை. நான் ஏன் பதிவெழுதுகிறேன் எனப் பல நாட்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். இன்னும் தெளிவான பதில் கிடைத்த பாடில்லை. ஆனால், வயதான ஒரு காலத்தில் (இருந்தால்) என்னைத் திரும்ப்பிப் பார்க்க; திருப்பிப் பார்க்க; எது எல்லாம் என்னைக் கவர்ந்திருக்கிறது; எப்படி எல்லாம் இருந்திருக்கிறேன் என்று இரை மீட்ட அது உதவும் என்பது ஒரு காரணம் என்பது நிச்சயம்.
இலக்கிய சந்திப்பு பற்றி எழுதுவதற்குக் காரணம் அது ஒரு நடந்த நிகழ்வொன்றின் அடையாளமாக இருக்கட்டும் என்ற ஒன்றுக்காக. இவற்றைத் தாண்டியும் ஏதோ ஒன்று இருக்கிறது. என்னவென்று கண்டு பிடிக்க வேண்டும். சில வேளை மனக் அடுக்கில் கோப்புகள் நிரம்பிவிட்ட காரணமோ? பகிர வேறுமனங்களில் இடமில்லை அல்லது நம்பிக்கை இன்மை அல்லது விருப்பமின்மை காரணமோ? அல்லது மனக் குப்பைகளைக் கொட்ட ஒரு இடமோ? ஏதோ ஒன்று. கண்டு பிடிக்க வேண்டும்.
இங்கு வருகை தருகிற பலரும் வலைப்பூக்களின் உரிமையாளர்கள். உங்களுக்கு ஏதேனும் பிரத்தியேகக் காரணங்கள் இருக்கின்றனவா? சொன்னால் எனக்கும் ஒரு தெளிவு பிறக்கும் அட, இது தான்! இது தான்! என என்னையும் அந்தக் காரணங்களோடு இணைத்துக் கொள்ளும்.
ஆனால், உங்களைச் சித்திரவதைப் படுத்துவது – இப்படி சலிப்பூட்டும் அல்லது வெறுப்பூட்டும் எழுத்துக்களால் அவஸ்தைப் படுத்துவது நிச்சயமாய் ஒரு காரணம் அல்ல. (என்னைச் சகித்துக் கொண்டு இது வரைக்கும் வந்திருக்கிறீர்கள் 🙂
சரி, அது போகட்டும்.மழைக்கு வருவோம்.
மழை! ஒரு பாட்டம் பெய்து ஓய்ந்த மழை!! இந்த மழையோடு தான் ஆரம்பித்தது அந்தச் சந்திப்பு!! இலக்கிய சாந்திப்பு – 6
மழைக்கும் தனக்குமான நட்பை மழை ஷ்ரேயா சொல்லச் சொல்ல எனக்குள்ளும் பெருமழை!
அவருடய மழை இப்படிப் பெய்தது.

“ கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. நனையாமல் பார்க்கும் போதும் நல்லாய் தான் இருக்கிறது” என்று ஆரம்பித்த அந்த மழையின் பாடல் ,”சாரலாய் தொடங்கும் ஒரு நட்பின் தொலைபேசி அழைப்பு,அடைமழைப் பேச்சு,இடியென முழங்கி வார்த்தையால் ஆலங்கட்டி மழை போல் தாக்கும் கோபங்கள்,துளித்துளியாய் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்கின்ற ஆசீர்வாதங்கள். மழை எப்போதும் எல்லோரையும் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்த படியே தான் இருக்கிறது” என்ற சொல்லிய படிக்கு எல்லோரையும் சாரலை அனுபவிக்கும் படிக்கு தூறியவாறு, “ இலைகள் தெளிக்கும் பன்னீராய் தரை தொட்டு, கண்னாடியில் கூரையில் எங்கும் நெளி நெளியாய் பளிங்குப் பாம்பாய் நெளிந்து ஓடுகிறது மேகத்திறங்கிய நீர்”  என்றவாறு பெய்து ஓய்ந்தது ஷ்ரேயாவின் மழை.

 

மழை மீது எனக்கொன்றும் தனிப்பட்ட பிரேமை இல்லை. மழை என்றால் எனக்கு நினைவுக்கு வருவது பெருமழை பெய்து நிலம் எல்லாம் கழுவுப்பட்ட பின்னால் நிலம் இருக்கிற புதுசுத் தன்மை! அதில் கஞ்சல் குப்பைகள், தென்னை மரத்தில் இருந்து விழுந்த ஓலைகள், கிடுகுகள் எல்லாம் கரை ஒதுங்கி, மழை போன பாதையை சாட்சியாய் அது அதில் வரைந்து வைத்திருக்கும். மழையின் பாடல் அது, அதன் குணம் அது. மனிதர்கள் ஆக்கி வைத்த அழுக்குகளை அது எந்த வித பிரதி பலனும் எதிர்பாராமல் கழுவி சுத்தம் செய்து விட்டுப் போயிருக்கும். ஒவ்வொன்றினுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு தானே? இதன் குணம் அப்படி.நான் இப்படித்தான் என்று மழை வரைந்து விட்டுப் போன ஓவியம் அது. இயற்கையின் பாஷை. மற்றும் வண்ணங்கள்!

அதில் புதிதாய் கால் பதித்து ஒரு வித ஆர்வத்தோடு மழை என்னவெல்லாம் செய்து விட்டுப் போயிருக்கிறது என்று வளவு எல்லாம் குடும்பத்தோடு கூட்டமாய் போய் பார்க்கும் சந்தோஷம்! வானம் கூட துடைத்து வைத்தது போல பளீச்சென்றிருக்கும். புதுசாய் பிறந்த பூமி போல அழகாய்! புதுசாய்! புத்தம் புதுசாய்! பூமியை அது பிறப்பித்து விட்டுப் போயிருக்கும். அது பிடித்துப் போனதுக்கு எனக்கும் அப்போது அது புத்திளம் பருவமாய் இருந்ததும் ஒரு  காரணமோ என்னவோ!

அது போல மழையின் வரவின் பின்னால் வீட்டு வழவுகளில் நிற்கும் ஜாம் மரங்கள், நெல்லி மரங்களை எல்லாம் உலுப்புகின்ற போது முத்து முத்தாய் கொட்டுண்னும் குண்டு குண்டு துளிகள் அழகானவையும் தான். இந்த மழையை வைரமுத்து ”முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ” என்று வேறுவிதமாய் உலகியல் வாழ்வோடு சம்பந்தப் படுத்திப் பார்ப்பார்.

அழகு, ரசனைகள் அது பற்றிய பார்வைகள் எல்லாம் காலங்களினோடும் வயதுகளினாலும் மாற்றம் பெறுகின்றனவோ என்னவோ?

இப்போதெல்லாம் மழை எனக்கு ஒரு வித சோகத்தினைத் தந்து செல்கிறது. மழை மட்டுமென்றில்லை. இளமைக்கால புகைப்படங்கள், ஒரு சில பாடல்கள், தனிமையைச் சந்திக்கின்ற கருக்கல் மாலைப் பொழுதுகள், ஏதேனும் ஒரு விஷேசமான உணவு, பழைய வாழ்வையும் நினைவுகளையும் ஒரு வித ஏக்கத்தையும் தந்து விடப் போதுமானவையாக இருக்கின்றன.பொதுவாக மாலையும் இரவும் சந்திக்கிற பொழுதில் பெய்கிற மழையோடு தனிமை சேர்ந்தால் அது ஒரு சொல்லவொணா வாழ்க்கை நிலையாமையைச் சொல்லிச் செல்கிறது. இப்போதெல்லாம்!

உங்களுக்கு எப்படி?

எனினும் பொதுவாக இயற்கையோடு நமக்கான பிணைப்பு பற்றி ஒரு தத்துவார்த்த ஈடுபாடு எனக்கிருக்கிறது.

அதற்கென்று ஒரு சட்டம் இருக்கின்றது என்பது என் நம்பிக்கை. இயற்கையின் சட்டங்களால் நாம் ஆளப்படுகிறோம் என நான் வலுவாக நம்புகிறேன். இலக்கியங்களும் இவை பற்றி நிறையவே பேசுகின்றன.

இயற்கை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்த இயற்கைக்கும் நம் உடம்புக்கும் இருக்கிற தொடர்பைப் பாருங்கள். பிரபஞ்சத்தில் இருக்கிற பஞ்ச பூதங்களால் தான் நம் உடம்பும் ஆக்கப் பட்டிருக்கிறது. அதனால் அதிலிருந்து நாம் வேறு பட்டவர்கள் அல்ல. அப்படி ஆகி விடவும் முடியாது.

அவ்வாறு ஆக்கப்பட்டது மாத்திரமல்ல; பிறந்த பின்னரும் கூட அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் சாத்தியமா?  சுவாசிக்காமல் நாம் இருத்தல் இயலுமா? நீரின்றி வாழ்தல் சாத்தியமா?  என்று நாம் நம் மூச்சை நிறுத்துகிறோமோ அன்று நம் உடம்பு ஒன்றுமற்றதாகி விடுகிறது.இல்லையா?

இந்த இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு பற்றி சித்தர் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது.

“ கூறுவேன், தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்பு தனை காலாய் நாட்டி
மாறு படா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலிந்து கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்ரமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வு தனை உண்டாக்கி
அப்பனே! தேகமென்று கூறுண்டாச்சே!

என்கிறது. எப்படி எல்லாம் சிந்தித்திருக்கிறார்கள் இல்லையா? இலக்கியத்தில் முந்தி இருக்கிற தொல்காப்பியம்,

“நிலம்,தீ, நீர், வளி, விசும்போடைந்தும்
கலந்த மயக்கம் உலகமாதலின்” (86)

என்று உரைக்கிறது. புற நானூற்றின் காலத்திலேயே நம் தமிழர் எத்தனை இயற்கை பற்றிய தெளிவைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.அதன் 87 வது பாடல், “அணுச் செறிந்த நிலனும், அந் நிலத்தின் கண் ஓங்கிய ஆகாயமும், அவ் ஆகாயத்தைத் தடவி வரும் காற்றும்,அக் காற்ரின் கண் தலைப்பட்ட தீயும், அத் தீயோடு மாறுபட்ட நீருமென ஐ வகைப் பெரிய பூதத்தினது தன்மை போல….” என உரைக்கிறது.

இந்த ஐம் பெரும் பூதங்களைக் அடிப்படையாகக் கொண்டே ஐம் புலன்களும் அவற்றை நுகரும் பொறிகளும் உண்டாகின்றன என்று பரிபாடல் குறிப்பிடுகிறது. பார்க்க விரும்புபவர்கள் பரிபாடல் 88 ல் அதைக் கானலாம்.

அதற்குப் பிற்பட்ட திருக்குறள், “சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் …(குறள் 106) என்றும் கண்டு, கேட்டு,உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன் (குறள் 90) என்றும் பகுத்து விளங்கி வைத்திருக்கிறது.

“அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்து நாம் பார்க்கும் போதே”

என்று ‘சட்டமுனி ஞானம்’ உரைக்கிறது. இடைக்காட்டுச் சித்தர் இன்னொரு விதமாய் அதைச் சொல்லுவார்.

“மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவை ஒளி ஊறு ஓசை யாம் காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே”

என்கிறார்.இப்படிப் பல பாடல்கள் ; பழங்கால இலக்கியத்துக்குள்ளே தத்துவப் புதயலையும் தமிழருடய பரந்த உலக அனுபவத்தையும் அவர்களுக்கும் இயற்கைக்குமான புரிந்துணர்வின் விளக்கத்தின் சாயலையும் சொல்லிய வண்ணமாக இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் முந்திய வேதத்திலேயே தாயின் கருவறையில் ஓர் உயிர் பஞ்ச பூதங்களின் அம்சமாய் எவ்வாறு தோற்றம் பெறுகிறது என்று மிக விரிவாக (மாதம் மாதமாக) சொல்லி இருக்கிறது என்றால் பாருங்களேன்.

சரி, நாம் அதை விட்டு வெளியே வருவோம்.எனக்கும் இயற்கைக்குமான உறவு ஒரு தத்துவ சார்பானதாக இருக்கிறது. முன்னர் சொன்ன மாதிரி. அது பேசுகிறது தன் மொழியில். ஆனால், மிகச்சிலரே அதனை மொழிபெயர்க்கின்ரனர் தம்முடய பாசையில்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக. இவர் மழையோடு பேசுவது மாதிரி. காற்றும் மரமும் பேசிக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? காற்றை உணரத்தான் முடியும்; பார்க்க முடியாது. மரத்துக்கு பாஷை இல்லை.sign language  தான். என்னமாய் தலையாட்டி தலையாட்டி மரம் பதில் சொல்கிறது பாருங்கள்.

அது மாதிரித்தான் இயற்கை / பஞ்சபூதம் ஒவ்வொன்றும் தத் தம் மொழிகளில் நம்மோடு பேசுகின்றன. உறவு கொண்டாடுகின்றன. தென்றல் என்னமாய் நம்மை முத்தமிட்டுச் செல்கிறது. பூக்கள் என்ன அழகாய் நம்மைப் பார்த்து புன்னகைக்கின்றன? மாலை நேர ஆகாயம் எத்தனை எத்தனை சித்திரங்களைத் தான் ஒவ்வொரு நாளும் வரைந்து காட்டி விட்டுப் போகிறது? ஒரு குத்து விளக்கின் முத்துச் சுடர் ஒளிர்வது அழகாயில்லையா?

அன்பை மட்டுமா பகிர்கின்றன? கோபத்தையும் கூடத்தான்.

தென்றல் புயலாகித் தன் கோபத்தைக் காண்பிக்கிறது. தீக்கு கோபம் வந்து எரித்துப் பொசுக்கியவை எத்தனை? எத்தனை? அண்மையில் சுனாமியாய் வந்த தண்னீரின் கோபத்தை நம் தலைமுறை அத்தனை இலகுவில் மறக்க முடியுமா? மண்சரிவுகள் பூமி பிளந்து மாண்டு போனவர்கள் பட்டியல் 1000 கணக்காய் நீள்கிறது வரலாற்றில்.இப்போது பனி உருகி நீர்மட்டம் உயர, மழை குறைந்து வரட்சி வியாபிக்க,Global worming பயமுறுத்திய படிக்கும், இன்னும் நீண்ட படிக்குமாக……
இந்த பஞ்ச பூதங்களுக்கிடையே நல்லதொரு நட்புறவும் இருக்கிறது.       ஆகாயத்துக்கும் பூமிக்கும்  messengerஆக இருக்கிறது மழைச் சரம். தண்ணீரும் நிலமும் நல்ல நண்பர்களாய் இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று அத்தனை துணை. அது போல நெருப்புக்கு காற்று ஒத்து ஊத வல்லவர். எரிகிற நெருப்புக்கு எண்னை வாத்துவிட வல்ல நண்பனைப் போல காற்றுக் காரன்.நீருக்கும் நெருப்புக்குமோ எட்டாம் இடத்தில் பொருத்தம். ஒரு பொழுதும் அவர்கள் சேர்ந்திருக்கப் போவதில்லை./ அவர்கள் இணைதல் என்பது சாத்தியமற்ற ஒன்று. ஆகாயமும் பூமியும் கூட ஒரு போதும் இணைய முடியாது. காற்று எட்டி எட்டி வீசினாலும் அதன் எல்லை கொஞ்சம் தான்.

ஆகாயமோ  மேற்குடி வகுப்பைச் சார்ந்தது போலும்! தொடர்பெல்லைக்கப்பால் ஆகாயம்! மழை மட்டும் வந்து ஆகாயத்தின் செய்தியை பூமிக்குச் சொல்லிப் போகும்; அவ்வப்போது! பூமி கொஞ்சம் மழை முகிலை அனுப்பி சுகம் விசாரித்துக் கொள்ளும். அவ்வளவே அவர்களால் முடிந்தது. ஒரு வித தொலைபேசிச் சம்பாசனை போல அது!

சில வேளைகளில் பூமியின் பொக்கிஷங்களின் மேல் பொறாமை வந்து விடுகிறது காற்றுக்கு. ஆனாலும் அது நிலத்தை ஒன்றும் செய்து விட முடியாது பாருங்கள்! அது மாதிரி பூமியும் காற்றை / அதன் கோபமான புயலைப் பார்த்து அலட்டிக் கொள்வதில்லை. பூமி அது பாட்டுக்கு இருக்கிறது. ஒட்டிக் கொள்ள முடியாத படிக்கு. அது போல நெருப்பு ஆகாயத்தை எட்ட முடியாது. ஆனாலும் நெருப்பின் அம்சமாய் ஆகாயத்துக்கு ஒரே ஒரு சூரியன். ஒன்றுக்கொன்று அணிகலனாய். ஆகாயம் அது ஒன்று மட்டும் போதுமென்று நினைத்து விட்டதோ என்னமோ! அவர்களுக்குள் அப்படி ஒரு ஈடுபாடு, பிணைப்பு, பந்தம்.

பூமியோ எல்லாவற்றையும் பார்த்த படியும் தாங்கிய படியும் பொறுமையாய் இருக்கிறது.பொறுமை எல்லை மீறுகிற சந்தர்ப்பத்தில் மாத்திரம் தன் வாயைத் திறந்து அபாய எச்சரிக்கையாய் நில நடுக்கத்தை தந்து விட்டுப் போகிறது. ’கவனம் பிள்ளை’ என்று சொல்லுகிற ஓர் அம்மா மாதிரி!

இவற்றை  எல்லாம் நம் மனித உறவுகளோடும் நாம் பொருத்திப் பார்க்கலாமில்லையா?
இப்படியாக இயற்கை தன் உணர்வுகளையும் குணங்களையும் தன் பாசையில் சொன்ன படிக்குத் தான் இருக்கிறது.
இயற்கை தனக்கென ஒரு நியதியையும் வைத்துக் கொண்டிருக்கிறது. அதனோடு, அதனுடய நியதியோடு, எனக்கு ஒரு பெரும் கோபம் கூட இருக்கிறது. அது என்னவென்றால், ’வலியது வாழும்’ என்ற அதன் பிரபஞ்சச் சட்டம். அது அப்பாவிகளை வாழ விடுவதில்லை. வல்லவர்களை மட்டும் வாழ வைக்கிறது. மெலியதை வலியது பிடித்துத் தின்ன இயற்கையால் சபிக்கப்பட்டிருக்கிறது  இந்தப் பூமி.இது சம்பந்தமாக அதனோடு நித்தமும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் பூமிப்பந்தில்லாமல் வேறொரு பிரபஞ்சத்தின் கிரகமொன்றில் வேறொரு அதன் நியாயமான நியதிகளால்  சூழப்பட்ட ஓரிடத்தில் பிறக்கப் பண்ணு என்பது என் பிரார்த்தனை. அதனிடம் நான் வைத்திருக்கிற விண்ணப்பம்.
( Application போட்டிருக்கு. பாப்பம்.நீங்கள் என்ன மாதிரி?…..ஆதலால், இப்படியாக இப்பதிவு நதியாக உருவெடுக்க; தொப்பலாய் நனைந்து போக, ஷ்ரேயா தான் காரணம். அவவைக் காண விரும்புபவர்கள் இந்த முகவரிக்குச் செல்லலாம். http://mazhai.blogspot.com.au/மழையுடனான அவரை நீங்கள் அங்கு கண்டு நீங்களும் நனையலாம்.

மழையொன்று நதியாகி……

Advertisements
 
Leave a comment

Posted by on 04/02/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: