RSS

பெண் – ஊரிலும் உலகிலும்: கலந்துரையாடலில் கலந்தவை

28 Apr

DSC01658

மங்கிய மாலை. குளிர ஆரம்பிக்கும் கூடாரம்; பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலப் பொழுது. இலக்கிய சந்திப்பு – 11. கலந்துரையாடல் தலைப்பு “பெண்: ஊரிலும் உலகிலும்”

நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் பலருக்கும் பல சோலிகள். எனினும் வழக்கம் போல நாங்கள் ஐந்து பேர் கூடினோம். எண்ணிக்கை குறைவெனிலும் காத்திரம் கனக்க. கடசி நேர அழைப்பிதழுக்கு முன்னரே நிகழ்ச்சி இருக்கிறதா எனக்கேட்டு வந்த இரண்டு செய்திகள் மனதுக்கு உற்சாகமூட்டின.

இம்முறை இம்மாத அதிதியாக கலாநிதி. சந்திரலேகா. வாமதேவா அவர்களை கலந்துரையாடலுக்காய் அழைத்திருந்தேன். அவர் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தவர். சுவீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்தில் தன் கலாநிதி பட்டப்படிப்பை முடித்துக் கொண்டவர்.’சுழலும் தமிழ் உலகம்’ என்ற புத்தகத்துக்குச் சொந்தக்காரர். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சுழலும் தமிழ் உலகம் என்ற நிகழ்ச்சியை வானொலி ஆரம்பித்த காலம் தொட்டு வழங்கி வருபவர்.அமைதியானவர்.கேட்டால் மட்டும் பேசுபவர்.மென்மையான குரலும் இயல்பும் கொண்டவர்.

அவர் பெண் ஊரிலும் உலகிலும் எவ்வாறு வளர்க்கப் படுகிறார்கள்; அது எவ்வாறு பெண்ணை தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உள்ளவளாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பங்காற்றுகிறது என்பது பற்றியும்; நவீன கல்வி தொழில்நுட்ப வசதிகள் புதிய நாடு பற்றிய பரீட்சயம் அவற்றில் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது பற்றியும்; சில ஐரோப்பிய நாடுகளில் நம்மவர் பேசுகின்ற பெண் விடுதலை எவ்வாறு ஆணுக்கெதிரான எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறது என்பது பற்றியும் அவற்றின் மீதான சம்மதமின்மை மற்றும் ஆபத்துக்கள் பற்றியும் உரையாற்றினார்.மேலும் அவர் கூறுகையில் பெண்ணுக்கான விடுதலை அவசியம் என்பதும் அதே வேளையில் அது ஆணுக்கெதிரானதாக இல்லாதிருப்பதன் அவசியம் குறித்தும் நாம் கவனம் கொள்ளுதல் வேண்டும் என தன் கருத்தினை கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

பெண்ணைப் பூட்டி வைத்து இன்னொருவன் கையில் ஒப்படைப்பதே பெற்றோரின் பொறுப்பாக இருந்த காலம் ஒன்றை நினைவு கூர்ந்து, ஆரம்ப காலத்து தாய்வழி சமூக அமைப்பு பின் எவ்வாறு ஆரியர் வருகையைத் தொடர்ந்து மாறத்தொடங்கியது என்பது பற்றியும்; அவ்வாறு இருந்தபோதும் யாழ்ப்பான சமூக அமைப்பில் ஆதி சமூக அமைப்பின் மிச்ச எச்ச சொச்சங்கள் இன்னும் அமுலில் இருப்பது பற்றியும் யாழ்ப்பாண சமூக அமைப்பில் ஆண் திருமணமாகி பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் வீட்டுக்கே வரவேண்டியவர் என்பது பற்றியும் பெண்ணிடம் இருந்த பொருளாதார பலம் அவளை ’றாங்கி’ உடையவளாக வைத்திருந்ததில் ஆற்றிய பங்களிப்புப் பற்றியும் கூறினார். பெண்ணுக்கு வழங்கப்பட்ட சொத்து பெண்ணுக்கே உரித்துடயதாக இருந்ததன் பின்னணியும் ஆண் அவள் வீட்டுக்கு வாழ வந்த தன்மை எவ்வாறு அவளைப் பலமுள்ளவளாக ஆக்கி வைத்ததில் துணை நின்றது என்பதும் சுவாரிசமான விடயமாகப் பட்டது.

பெண்கல்வியும் பெண் சைக்கிள் ஓட ஆரம்பித்ததும் தான் கல்வி கற்கும் நாட்களில் கண்முன்னால் கண்ட மாற்றங்கள் என்று மேலும் அவர் கூறினார்.இதனை அவர் கூறிய போது ஆசியாவிலேயே முதன் முதல் பெண்கள் கல்லூரி ஒன்று உடுவிலிலே அமைந்ததும்; உலகத்தின் முதல் பெண் பிரதம மந்திரி இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்பதும்; ஆண்பெண் இருபாலாருக்கும்  ஆசியப்பிராந்தியத்தில் முதன் முதல் வாக்குரிமையை வழங்கிய நாடு இலங்கை என்பதும் மின்னலென மனதில் தோன்றி மறைந்தது. உலகிலேயே  முதன் முதல் அமைக்கப்பட்ட விலங்குகள் சரனாலயம் இலங்கையிலேயே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் போராளிகள் உருவாக்கப் பின்னணியில் இதுவும் சற்றே செல்வாக்கு செலுத்தியிருக்குமோ என்ற சந்தேகம் சட்டென என் மனதுக்குள் தோன்றி மறைந்தது.மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் ஒரு பெண் தானே சகலதும் செய்யும் ஒருத்தியாகத் யாரிலும் தங்கியில்லாத நிலைமைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் – பொருளாதார ரீதியாகவும் கூட – பற்றியும் விதந்துரைத்தார்.

பெண் என்ற பிராகிருதி அவள் பெண் என்ற தோற்றப்பாட்டைக் கொண்டிருப்பதனால் தன் சக ஆண் பிராகிருதியிடம் இருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்லலாம் என்பது இன்று இந்த 21ம் நூற்றாண்டில் முதலாம் உலக நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்ற பாகுபாடின்றி எல்லா நாடுகளிலும் பெண் எதிர்கொள்ளும் சவால் – பிரச்சினை – அதற்கான உதாரணங்கள் அவுஸ்திரேலியாவில் உயர்குடிமக்கள் வசிக்கும் மலைசார்பகுதிகளில் வசிக்கும் இளம் பெண் தன் 18 வயது தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்கு (பக்கத்துவீடு) சென்று விட்டு இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது காரில் வந்த ஐவர் கொண்ட குழு அவளைக் கடத்திச் சென்று குழுவாகக் கற்பழித்து நடுக்காட்டில் எறிந்து விட்டுப் போனது கடந்த மாதம் தான் நிகழ்ந்து முடிந்தது. இந்தியாவில் பகிரங்கமாக நிகழ்ந்து முடிந்த கற்பழிப்புக் கொடூரத்தின் பின்னாலும் ஒரு பிரித்தானிய உல்லாசப்பயணிக்கும் சுவீற்சிலாந்து உல்லாடப்பயணிக்கும் நிகழ்ந்து முடிந்த சம்பவங்கள் இந்தியா பற்றிய எண்ணத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதன் தாற்பரியத்தை சுட்டி நிற்கின்றன என்பதும்: யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மூன்று வயது சிறுமிக்கு நிகழ்ந்த வன்புணர்வுக் கொலை ஆண் சமூகத்தின் வக்கிர மனப்பிரழ்வு பெண்மீது அது நிகழ்த்தும் அத்து மீறல்கள் பற்றிய பேச்சை நோக்கியதாய் கலந்துரையாடல் முன்னகர்ந்தது.

தன் சக சோடியை வன்புணர்வுக்கு உட்படுத்துதல் மனித மண்டலத்தில் மாத்திரமே நிகழும் ஒரு அவலம் என்றும் மிருக இராச்சியங்களில் அது பறவைகளோ விலங்குகளோ ஊரவனவவோ பறப்பனவோ அவை எதிலும் – நாம் ஓரறிவு ஈரறிவு மூவறிவு நாலறிவு ஐந்தறிவு என பிரித்து உணரும் சகல உயிர் வாழ் இனங்களிலும் நிகழாது ஆறறிவு கொண்ட மனித உயிரினத்தில் மாத்திரமே நிக்ழ்கின்றது என்பது நினைவுகூரப்பட்டது.

இதற்குப் பொதுப்புத்தி வழி வந்த பண்பாட்டுச் சிந்தனைகள் மிகுந்த பங்காற்றுகின்றன என்றே நான் நினைக்கிறேன்.கம்பன் தன் ஆற்றுப்படலத்தில் பெண்ணின் விழியை “பூசலம்பு” என்கிறான். அதாவது பூசல்: குழப்பம் / பிரச்சினை – அம்பு; கணை / தாக்கச் செல்லும் போர்கால ஆயுதம். – பூசலை விளைவிக்கின்ற அம்புகளாம் பெண்ணின் கண்கள்.ஒரு பெண் பார்க்கின்ற பார்வைக்கு ஆணின் பக்கத்தில் இருந்து எத்தனை விதமான விமரிசனங்கள் / மொழிபெயர்ப்புகள்?

இந்தச் சிந்தனைப்புலத்தில் இருந்து நாம் மாற்றங்களை காணத்தொடங்க வேண்டுமோ என எனக்குத் தோன்றிற்று அங்கே!.

இவற்றுக்கெதிராக பெண் எவ்வாறு தன்னை தற்காத்துக் கொள்ளலாம் என்ற கேள்வியும் அதற்கு பெண் சட்டத்தையும் நீதியையும் எதிர்பார்த்திராமல் ஒவ்வொரு பெண்ணும் தற்காப்புக்கலையை அறிந்திருத்தலும் விழிப்புணர்ச்சி பெறுதலும் தன்னம்பிக்கையோடு எதிர்பாரா சம்பவங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை அவள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பெண் மென்மையானவள் ஆணால் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்ற பொய்யான கோட்பாடுகளிலும் மயக்கக் கருத்துக்களிலும் கருதுகோள்களிலும்  இருந்து அவள் யதார்த்தம் உணர்ந்து வெளிவர வேண்டிய தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

DSC01659

 குடும்பம் என்ற வலையமைப்புக்குள் நிகழும் வன்முறை பற்றிய விவாதப்புள்ளியை ஆரம்பித்து வைத்தார் திருமதி. கார்த்திகா கணேசர். ஒரு பெண்ணுக்கு ஆண் துணை கிடைப்பதென்பது ஒரு தற்செயலான அதிஷ்ரமே என்பது அவரது ஆணித்தரமான அபிப்பிராயமாக இருந்தது. ஒரு பெண் காதலித்து திருமணம் முடித்தாலும் சரி பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாயினும் சரி குறிப்பிட்ட ஆணோடு ஒரு கூரையின் கீழ் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும் வரை அம் மனிதனின் உண்மையான (அகத்) தோற்றம் தெரியவருவதில்லை என்ற கருத்தை அவர் முன் வைத்தார். சமூகத்துக்கும் உலகத்துக்கும் தெரிகின்ற முகங்கள் மிக மிக வேறானவை என்பதும்; குடும்பத்துக்குள் அங்கத்தவர்கள் எதிர்கொள்ளும் முகங்கள் மிக வேறானவை என்பதும் அவரது கருத்தாக இருந்தது.

எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து பம்பாயில் இருந்த சிறந்த கல்விப்பின்புலத்தைக் கொண்ட பெண்ணை மணமுடித்த ஆண் அப்பெண்ணை திருமண விருந்தில் ஆணோடு கைகுலுக்க வேண்டாம் என்று சொன்ன சந்தர்ப்பத்தையும்; உளவியல் ரீதியான சிக்கலுக்கு உட்பட்டிருக்கும் வேறு சில கல்வியாளர்கள் தாம் உளவியல் பிரச்சினைக்கு ஆட்பட்டிருக்கிறோம் என்ற உண்மையையே ஏற்றுக்கொள்ளவும் சிகிச்சை பெற்றுக்கொள்லவும் தயாரற்ற தன்மையில் இருக்கின்ற நிலைமையையும் அதனால் குடும்ப அங்கத்தவர்கள் கொள்ளும் இடர்பாடுகளையும் மன உளைச்சல்களையும் கூடவே அவர் வெளிக்கொணர்ந்தார்.

மேலும் அவர் சொல்லும் போது தன் மனைவி அழகியாய் இருப்பதனால் ஆண் கொள்ளும் சந்தேகம் மற்றும் அவளைப்பார்த்து புன்னகைப்பவர் மீதான வெறுப்புணர்வு பெண்ணுக்கு எவ்வாறு அன்றாட வாழ்வியல் சிக்கலை உருவாக்குகின்றது என்பது வெளியிலே அதிகம் தெரிய வராத உளவியல் சித்திரவதை என்பது சிந்தனைக்குரிய அவரது சிந்தனைப்பகிர்வாக இருந்தது.மேலும் வேலைக்குச் செல்லாது மறித்தல், பொருளாதரீதியாக பெண்னை முடக்குதல், தன்னில் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குல்,வெளியே செல்ல அனுமதியாதிருத்தல், பெண்ணைத்தொடர்ந்து கண்காணித்தல் போன்ற நிகழ்வுகள் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தில் இருக்கிறது என்ற செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டதோடு உளவியல் ரீதியான இச் சித்திரவதை வெளியே தெரிய வராத சொல்லப்படாத நிலைமைகள் என்றும் தமக்கது தெரிந்த போதும் தம்மால் அதிகம் ஒன்றும் செய்யமுடியாதுள்ளதென்றும் சொன்னார்.

“living with enemy” திரைப்படமும் யூலியா ரொபேட்டும் ஒரு கணம் நினைவில் வந்து போயின.இத்தகைய ஒரு வாழ்க்கை எத்தகைய தரத்தை உடையதாய் இருக்கும் என்பது என் மனதில் பட்டுப்போன ஒன்றாய் இருந்தது. கூடவே ஏன் இத்தகைய பெண்கள் தமக்குரிய வாழ்வொன்றை தாமே தீர்மானித்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்ற சிந்தனை என் மனதில் எழுந்த தருணம் மழை ஷிரயா, இவ்வாறு ஒரு பெண் இருக்கிறாள் எனத்தெரிந்தும் அவளுக்கு நாம் உதவாது இருப்பது எவ்வகையில் நியாயம் என்ற கேள்வியை எழுப்பினார்.அது ஒரு சிக்கலான பதிலைக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றிற்று.

ஒரு பெண் தனக்கு என்ன வேண்டும் என்பது பற்றியும் தனக்குரிய சுயமரியாதை என்ன என்பது பற்றியும் தெரியாத போது; தெரிந்திருந்தாலும் கூட மற்றும் சமூக அழுத்தங்கள், உறவுகளுக்குள் ஏற்படப்போகும் விரிசல்கள், தமிழ் சமூகம்  தன்னை எவ்வாறு காணும் அல்லது நடத்தும் என்பது பற்றிய பயம், தன்னம்பிக்கையை பெண்ணில் வளர்த்துவிடாத பெண்வளர்ப்பு, பொருளாதார பலம் போன்ற இன்னோரன்ன காரணிகள் அவளை அழுத்துகின்ற போதும் அவைகளில் இருந்து அவள் தனக்குரிய தெரிவை செய்து கொள்கிறாள். வெளியே வந்து ’ தனித்து’ நிற்பதை விட இத்தகைய நாளாந்த உளவியல் காரணிகளைச் சுமப்பது அவளுக்கு ஏற்புடையதாக இருக்கின்ற பட்சத்தில் அன்னியரின் ‘உதவி’ என்பது அவளுக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக அமையாது என்பதும் : தனக்கான தெரிவுகளை அவளே மேற்கொள்ள வேண்டும் என்பது அதற்கான என் பதிலாக இருந்தது.

ஆகக் குறைந்த பட்சம் இவ்வாறான பாதைகள் இருக்கின்றன என்பதைச் சொல்வது மாத்திரமே நமது கடமை என்பதையும் தெரிவையும் தீர்மானங்களையும் புறப்பாடுகளையும் அதற்கான தெரிவையும் தன்னம்பிக்கையையும் சம்பந்தப்பட்ட பெண்ணே மேற்கொள்ள வேண்டும் என்பது என் க ருத்தாக இருந்தது. மேலும், அவ்வாறு உதவ இருக்கும் பெண் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுவாள் என்பதும்; குறிப்பிட்ட அப்பெண் அவளுக்கு எவ்வாறு சுமையாக ஆகக் கூடிய ஆபத்து இருக்கிறது என்பதும் மேலும் அவள் சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் உதவிய பெண்ணே சம்பந்தப்பட்ட பெண்ணால் சந்திக்கிழுக்கப்படுவாள் என்பதும் பார்க்கப்பட வேண்டிய இன்னொரு பக்கம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் பயணங்களின் போதும் சமூக நிகழ்வுகளின் போதும் ஆண்கள் நடந்துகொள்ளும் நடத்தைகள் மீதான கேள்விக்கு அடுத்த உரையாடல் திரும்பிற்று. பொது வாகனங்களில் போகும் போது கைகளைப் போடுவோர்,முட்டி மோதி நிற்போர், முகமன் கூறி அணைப்பதில் இருக்கும் வேறு பாடுகள் பொருளொன்றை நீட்டும் போது ஸ்பரிசித்தல் போன்ற இயல்புகள் பெண்ணால் வெளியே சொல்லப்படாத இன்னொரு வித அவஸ்தை என்றும் அவை பொதுவாக நெருங்கிய உறவினர்களாலேயே நடந்து முடியும் காரியம் என்றும்  அவற்றை எவ்வாறு முறியடிக்கலாம் அல்லது எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்றும் பேச்சுத் திரும்பியது. கார்த்திகா மேலும் கூறுகின்ற போது பாஸ்கரன் எழுதிய கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தார். அக்கவிதை வீட்டில் வந்திருந்த ஒருவருக்கு தேனீர் கொடுக்கும் போது கைகளை ஸ்பரிசித்தபடி தேநீர் பெறும் விருந்தாளியைப் பற்றியதாக அது இருந்ததெனவும் நாம் வெளியே சொல்லத் தயங்கும் ஒரு விடயத்தை ஒரு ஆண் எவ்வாறு கவிதை மூலமாக பெண் உணர்வை வெளிக்கொணர்ந்தார் என மேலும் அவர் விதந்துரைத்தார்.சந்திரலேகா அவர்கள் இதற்குக் கருத்துத் தெரிவித்த போது தாம் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் நாட்களில் பஸ்சில் பயணம் செய்யும் போது குண்டூசி அல்லது ஊசி கொண்டே வெளிக்கிடுவதாகவும் அவ்வாறான அவஸ்தைகள் பிரயாணங்களில் நிகழும் போது தாம் ஊசிகளால் குத்துவது உண்டென்றும் அவர்களும் அவற்றை அவர்கள் சகித்த படி நிற்பது சுவாரிசமான ஒன்று என்றும் சொன்னார்.

அவர் இதனைச் சொன்ன போது கோகிலா மகேந்திரனின் எப்போதோ வாசித்த ஒரு சிறுகதை ஒன்று நினைவில் வந்து போனது.இவ்வாறு சொறிகின்ற மனிதர்கள் பற்றிய கதையாக அது இருந்தது. அதற்கு அவர் அதில் ஒரு தீர்வை வைத்திருந்தார். காஞ்ஞூன்றிக் காய் என்று நினைக்கிறேன். அது பட்டால் பட்ட இடத்தைச் விடாமல் சுரண்டிக்கொண்டிருக்கத் தோன்றுமாம். அதனால் உரோஞ்சி விடுங்கள் ‘சொறிந்து கொண்டே இருக்கட்டும் என்பது கதைக்கருவாக இருந்தது இவ்வாறு மன அழுத்தத்தையும் வெறுப்பினையும் உண்டுபண்னும் இத்தகைய செயல்கள் பொதுவாக இலங்கை இந்தியா சீனா யப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளில் கானப்படுவதற்கும் .மேலைத்தேய நாடுகளில் மேலைத்தேயக் கலாசாரங்களில் இத்தகைய தன்மை காணப்படாமைக்கும் அடிபடையில் உள்ள காலாசார வேறுபாடே காரணம் என என் சிந்தனை ஓடிற்று.

இவ்வாறான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டிருந்த போது ஷிரயா யாழ்ப்பாணத்தில் கடந்த தைமாதம் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார். அதனை அவரது வலைப்பூவில் இந்த முகவரியில் நீங்கள் சென்று காணலாம். அது இன்னொரு விதமாக பெண் சந்திக்கும் உளவியல் சித்திரவதையைச் சொல்கிறது.

http://mazhai.blogspot.com.au/2013/02/blog-post.html

கூடவே நான் அவுஸ்திரேலிய நாட்டுக்கு வந்த ஆரம்ப காலங்களில் ஒரு அழகிய பொஸ்னிய இளந்தம்பதிகளைச் சந்திக்க நேர்ந்த சந்தர்ப்பம் ஒன்றில் நிகழ்ந்த உரையாடல் நினைவுக்கு வந்து போயிற்று.பொஸ்னிய ஆணிடம் உன்மனைவி மிக அழகானவள் என்று நான் சொன்னபோது அவன் மகிழ்ந்து பின்னொரு சம்பவத்தை நினைவு கூர்ந்தான். அதாவது தானும் இப்படித்தான் ஒரு தமிழ் தம்பதியரைப் பார்த்தாராம். இதே வசனத்தைத் தானும் சொன்னாராம். அதன் பின் அந்தக் கணவன் தன்னோடு பேசுவதையே நிறுத்தி விட்டாராம். ஏன் என்று என்னிடம் கேட்டார். பெண்னைத் தன் சொத்தாகப் பார்க்கும் முறை தான் அதற்குக் காரணம் என்பதா? மனவிசாலமற்ற தன்மை தான் அதற்குக் காரணம் என்பதா? இது அன்றைக்கு மாத்திரமல்ல இன்றைக்கும் ஆண் பெண் இரு பாலாருக்கும் நடக்கும் ஒன்று தான் என்பது என் எண்ணம்.வயதான திருமணமான ஆண் ஒருவரோடு ( மனைவி அருகிருக்கும் சந்தர்ப்பத்திலும்) பேசுகின்ற போது தன் கணவரைக் கவர்ந்து கொண்டு போக வந்தவளாக பார்த்து முறைத்த பெண்ணை நான் சந்தித்தது மிக அண்மைக்காலத்தில் தான். இவற்றை என்னவென்று சொல்வது? குடும்ப உறவுகளுக்குள்; சமூகத்துக்குள் இழையோடிப்போயிருக்கும் களைகள் எனவே இவற்றை எனக்குச் சொல்லத்தோன்றுகிறது. ஒரு விதமான பதட்ட நிலைமையிலேயே ஆண்பெண் திருமண உறவு நிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றனவோ?

உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பண்பாட்டியல் ரீதியாகவும் பல்வேறு தளங்களில் பார்க்கப்பட்ட பெண் என்ற எண்ணக்கரு இலக்கிய வடிவங்களில் அதே காத்திரத்தோடும் வேகத்தோடும்  சித்திரிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வி காத்திரமான ஆனால் மெளனத்திலான கேள்வி ஒன்றை விதைத்துச் சென்றிருந்தது. மரபு வட்டம் மீறாத – இலட்சுமணக்கோடு தாண்டாத – எழுத்துக்களின் பாதுகாப்பில் தான் அவுஸ்திரேலிய தமிழ் சமூக இலக்கியம் இன்னும் இருந்து வருகிறது.அதற்கு பெண்ணிடம் இருக்கின்ற தன்னம்பிக்கை இன்மை,விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியின்மை, இருப்பதோடு திருப்திப்பட்டுக்கொள்ளும் தன்மை, தன்னையறிதலில் உள்ள கல்வியியல் தடை, போன்ற பெண்ணுக்கு பெண்ணே போட்டுக்கொண்டிருக்கிற தளைகள் ஒரு பிரதான காரணம்.

பெண்ணுகான அவ் உரிமை பற்றிய விழிப்பு பெண்ணுக்கு ஏற்படும் வரை வேறு எவரும் நமக்கு அதை வழங்க மாட்டார்கள் என்ற சிந்தனைக்கு அப்பால் நான் உரிமைகளால் மறுக்கப்பட்டிருக்கிறேன் என்ற விழிப்புணர்வு பெண்ணுக்கு வர வேண்டும். அதனைச் சரியான தூரநோக்குக் கல்வியோடும் அறிவோடும் அவள் அதை அணுகி சரியான உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தனக்கான உரிமைகள் பற்றி பெண்ணே பேச வேண்டும். அவை இலக்கியமாக பிரதி பலிக்க வேண்டும்.

( நம் சந்திப்பின் அங்கத்தவர்கள் இலக்கிய நாடக நடன விற்பன்னர்கள்.சமூகத்தின் இயல்பை பிரதிபலிப்பவர்கள்.அவர்கள் தம் கலைப்படைப்புகளில் இவற்றைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளூர)

பேச்சு சுவாரிசமாகப் போய் கொண்டிருந்த போதும் இருட்ட ஆரம்பித்திருந்தது. குளிர்காற்றும் தன் இருப்பை சொல்லிய வண்ணமாய் இருந்தது. இவ்வாறான சம்பாசனையில் இருந்த படியே  என் தாயார் சுவையாகச் செய்து சுடச்சுடத் தந்திருந்த கொழுக்கட்டைகளை உண்டோம். காலம் இப்போது எட்டுமணியை நெருங்கியிருந்தது. இனி குளிர்காலம் ஆரம்பிக்கப் போவ தால் இயற்கையான இந்த அமைவிடத்தை மாற்ற வேண்டிய தேவையையும் அது சொல்லி நின்றது. எனவே நம் பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினோம்.

உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் பெண் எதிர்கொள்ளும் உழைவுகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு பகிர்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.அன்றய தினம் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த சுகி. சிவம் அவர்களுடய சொற்பொழிவு ஒன்று இருந்ததால் மெல்லினத்தின் ஆசிரியராக இருக்கும் செல்வத்தால் இம்முறை கலந்து கொள்ள முடியவில்லை என்ற செய்தியைத் தெரிவித்திருந்தார். திரு.ரவி சந்திரலேகா அவர்களின் பேச்சைக் கேட்க ஆவலோடு இருந்த போதும் சுகவீனம் காரணமாக வரமுடியாமையைத் தெரிவித்திருந்தார். பானு அமைதியாக அனைவரின் பேச்சுக்களையும் உள்வாங்கிய படி அமைதியாய் அமர்ந்திருந்தார். முழுக்க முழுக்க பெண்களாக அமைந்திருந்த இப்பெண்கள் பற்றிய கலந்துரையாடல் ஆண்பக்க கருத்துக்கள் எதுவும் இல்லாது முடிவடைந்தது சற்றே குறைபாடெனவே தோன்றியது. எனினும் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லையே! இதுவும் ஒரு சமூகப் இயல்பு என்றளவில் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றே.

எல்லோருக்கும் வருகைக்கு நன்றி கூறி ஏற்கனவே உறுதி கூறிய படி கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்களை வீட்டடியில் இறக்கி விட்ட போது என் தாயார் அவருக்கென தனியாகக் கொடுத்து விட்டிருந்த கொழுக்கட்டையை நினைவுறுத்தி என் கணவருக்கு மிகப் பிடிக்கும் இது என்றார். அவர் இதனைச் சொன்ன போது நேற்றய தினம் லிவர்பூலுக்கு போன போது அங்கிருந்த இந்திய உணவு விடுதியில் நானும் என் தாயாரும் தேனீர் அருந்தப் போயிருந்த போது (Woodlands) தேநீரோடு வந்த வடையில் ஒன்றை தன் கனவருக்காக எடுத்து வைத்து வீடு வந்ததும் என் தந்தையிடம் அதைக் கொடுத்த என் தாயாரின் நினைவு வந்தது. ஒரு பரம்பரையினரது வாழ்வு முறை ஒன்றும் அந்த அன்னியோன்னியமும் பெண்காட்டும் உயரிய அந்த அன்பும் நெஞ்சை நிறைத்துச் சென்றது.

ஒரு பெண்ணின் அன்பென்பது…………………………….

(சிலர் தம் புகைப்படங்கள் இணையத்தில் வருவதை விரும்பாத காரணத்தால் அவற்றைத் தவிர்த்து சில படங்களைப் பிரசுரிக்கிறேன்.)

 

அன்புடன்,

ஈழத்தின் வடபுலத்தில் இருந்து ஓசானியாக் கண்டத்துக்குப் புலம்பெயர்ந்து வாழும் கமலேஸ்வரியின் மகள் யசோதா. பத்மநாதன் எழுதியது.

10.3.2013.

 

பின்னிணைப்பு:

பெண்கள் எடுக்க வேண்டிய ஆயுதம் ; சாருமதி. தினக்குரல் ஞாயிறு வாரமலர்; 14.4.13. பக்: 36.

வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமன்றி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் பெப்பர் ஸ்பிறே, துப்பாக்கி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பெண்களுக்கு அவசியம் தானா?

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உடல் வலிமை குறைவு என்ற எண்ணத்தில் தான் அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆண் தன்னோடு இருந்தால் பாதுகாப்பு என்ற நிலையும் இப்போது தலைகீழாகி விட்டது. டில்லி சம்பவத்தில் ஒரு ஆண் தன் பக்கத்தில் துணையாக இருந்த போது தான் பெண் தாக்கப் பட்டிருக்கிறார்.அதனால் ஆண்களும் சில நேரங்களில் வலிமை குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.பெரும்பாலான பணக்காரர்களும் வியாபாரிகளும் தங்கள் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி வைத்திருப்பதே நம்பிக்கையின்மையைத் தான் காட்டுகின்றது.

துப்பாக்கி போன்ற கருவிகள் அவசியம் என்பதை ஆண்களும் உணர்ந்திருக்கிரார்கள். இது போன்ற கருவிகளைக் கையில் வைத்திருப்பது பெண்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும். ஆனால் என்நேரமும் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் ஒரு விதமான அச்ச உணர்வுக்கு உள்ளாவார்கள். அதன் தொடர்ச்சியாக நிதானம் தானாகவே போய் விடும். அதே நேரம் பெப்பர் ஸ்பிறே, கத்தி போன்ற ஆயுதங்களை வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. தனியாகப் போகும் பெண்கள் கையில் பெப்பர் ஸ்பிறே இருப்பது எதிராளிக்கு அச்சத்தைத் தரும் என்பதே போதும்.

சமூகக் கொடூரங்களில் இருந்து பாதுகாப்பைப் பெற ஆயுதத்தைப் பயன் படுத்துவதை விட உடல் நீதியாகத் தங்களைத் தயார் செய்து கொள்வது நல்லது. குழந்தைகளை நடனம், பாட்டுப் போன்ற வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர் அவர்களைக் கராத்தே, குஃபு வகுப்புகளிலும் சேர்த்து விடலாம். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.ஒரு கருவியாக இருக்கும். மனதையும் உடலையும் தைரியமாக வைத்திருக்கும் பெண்ணிடம் நெருங்க அன்னிய ஆண்கள் பயப்படுவார்கள். இந்த ஆயுதத்தைப் பெண்கள் கையில் எடுத்தாலே போதும்.என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

பெண்கள் கையில் ஆயுதத்தைக் கொடுப்பதை விட அவர்களை மனதளவில் தயார் படுத்துவது தான் நல்லது. ஆயுதங்கள் எந்த ஒரு பிரச்சினைக்கும் எப்போதும் தீர்வல்ல. ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி ஆக்குவது தான் சமூகத்தில் நெடுங்காலம் இருந்து வருகிறது.பெண் தரப்பில் இருக்கும் குற்றத்தை நியாயப்படுத்த வரும் ஆட்கள் மீது சட்டம் பாய்ந்தாலே போதும். பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்லலாம். ஒரு இடத்தில் தவறு நடந்தால் அக்கம் பக்கத்தில் இருப்போரே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள் என்பதே குற்றவாளிக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது.

 

எந்த ஒரு இடத்தில் பெண் வன்முரைக்கு உள்ளாகிறாளோ அங்கு கூச்சல் போட்டு அநியாயத்தைத் தட்டிக் கேட்க எல்லோரும் முன்வர வேண்டும். இந்த விடயத்தில் பெண்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக தங்கள் எதிப்பை வெளிப்படுத்த வேண்டும். பெண்களை ஒரு பாலியல் பண்டமாகப் பார்க்காமல் அவர்களைத் தங்களைப் போன்ற உயிராக ஆண்கள் நினைத்தாலே சமூகம் திருந்தி விடும்.

பணியிடத்தில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள் பாடசாலைகளில் பாதிக்கப்படும் குழந்தைகள் ஆகியோரைக் காக்க உடனடியாக ஒரு சட்டம் தேவை. சட்டங்களைக் கடுமையாக்குவதோடு தண்டனைகளையும் தாமதியாது கொடுக்க வேண்டும்.

இரவு நேரங்களில் வெளியே வரக் கூடாது, நாகரிக உடை ஆபாசம், ஆண்நண்பரோடு சுற்றாதே என்ற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் தூர எறிந்து விட்டு உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்பிள்ளைகளை முதலில் ஒழுங்கு படுத்துங்கள். பெண்களை மதித்து நடக்கக் கற்றுக் கொடுங்கள். இது மட்டுமே சமுதாயத்தில் மிச்சமிருக்கும் பெண்களைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதம்.

நன்றி:தினக்குரல், வாரமலர், 14.4.13.

 

 

 

 

 

 

 

Advertisements
 
Leave a comment

Posted by on 28/04/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: