RSS

இலக்கிய சந்திப்பு – 12 : நிகழ்வுக் காட்சிகளும் நடந்த நிகழ்வுகளும்

10 Jun

Image

இலக்கிய சந்திப்பு 12 மாத இறுதி ஞாயிறான 26.5. 13 அன்று மாலை யாழ் நிகழ்வரங்கில் 5.30 மணியளவில் ஆரம்பமானது. சிறப்பு விருந்தினர்களாக இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ஞானம் சஞ்சிகையின் இணையாசிரியர். திருமதி. ஞானம். ஜானசேகரன் அவர்களும் லண்டனில் இருந்து வருகை தந்திருந்த ‘மண்’ திரைப்பட இயக்குனர் புதியவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அவர்களோடு சிட்னியின் வசிக்கும் குறும்பட இயக்குனர் செல்வன் கலந்து கொண்டமை அன்று நமக்குக் கிட்டிய இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

நாடகத்துறையில் ஆர்வத்தோடு படைப்புகளைத் தந்து கொண்டு இருப்பவரும் ஒவ்வொரு ஞாயிறும் மாலை 5.00 – 8.00 மணிவரை நாடகப்பட்டறையை நிகழ்த்திக் கொண்டிருப்பவருமான கோகிலா.மகேந்திரன் அவர்களும் அன்றய நாளை நமக்காக ஒதுக்கி இணை நாடகதயாரிப்பாளர் பிரவீணனுடன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

Image

இலக்கிய சந்திப்பு 12 மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது. சந்திப்பின் பிரதான பேசுபொருளாக இம்மாதம் அமைந்திருந்தது நம் பலம் என்ற தலைப்பு.

ஞானம்.ஞானசேகரன் தம் பலமாக ஞானம் இருப்பதையும் அதை தாம் நடத்த பலமாயிருப்பது மண்மீதானதும் இலக்கியம் மீதானதுமான ஈர்ப்பு எனக்கூறி தனை நடத்துவதில் தாம் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் சவால்களையும் தாண்டி வந்த விதங்களையும் கூறி தாம் இன்று பலப்பட்டு நிற்பதனையும் இவ் இலக்கிய இதழுக்கு சுஜாதா விருது தமிழகத்தில் இருந்து கிட்டியிருப்பதன் சந்தோஷத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மேலும் ஞானம் இணையத்தில் வாசிக்கக் கிட்டுவது பற்றியும் இதழ் வடிவில் ஸ்பரிசிக்கக் கிட்டுவது பற்றியும் தம் 150வது இதழாக ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்து உலகத்தமிழரின் பாராட்டையும் அதே நேரம் விமர்சனங்களை எவ்வாறு எதிர் கொண்டது என்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.

மேலும் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஞானத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கும் என்று கூறி எல்லோரையும் அவ்விதழுக்கு ஆக்கங்களை எழுதி அனுப்பலாம் என அழைப்பிதழும் கொடுத்தார்.கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் திருமதி.ஞானம்.

Image

ஞானம் சஞ்சிகையின் இணையாசிரியர். திருமதி.ஞானம். ஞானசேகரன்.

Image

Image

குறும்படப் பயிற்சிப்பட்டறையொன்றை நிகழ்த்தி விட்டு ஆர்வத்தோடு நம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர் புதியவன். ஈழத்தின் திரைப்படத்துறைக்கு புதிய ஊட்டச்சத்தினைத் தந்து கொண்டிருப்பவர். ஈழத்துத் திரைப்படத்துறைக்கு புதிய பாச்சல் ஒன்றினைத் தருபவர். ‘யாவும் வசப்படும்’ என்ற திரைப்படத்தை அடுத்த மாதம் சிட்னியில் திரையிட இருப்பவர்.

மிக எளிமையாகத் தோற்றமளித்த இவர் பேச்சிலும் நடத்தையிலும் அதனையே பிரதி பலித்தார்.வன்னிக் கிராமம் ஒன்றில் பிறந்த அவர் இராணுவத்தில் அகப்பட்டு சிறைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கில அறிவினை தன்னோடு இருந்த சக சிறைக்கைதி ஒருவரிடம் தான் கற்றுக் கொண்டது பற்றியும்; தன் சிறைவாச சித்திரவதைகள் பற்றியும் கூறி,அண்ணனின் உதவியால் வெளியேறி லண்டன் வந்து, அனுப்பிய கடனடைத்து படிக்க இருந்த ஒரு சிறு வாய்ப்பினைப் பயன்படுத்தி கணக்காளராக வந்தது பற்றியும்; தன்னுடய கொள்கைகளைக் கருத்துக்களை வெளிப்படுத்த போதிய வாய்ப்புகள் இல்லாதிருந்த ஒரு ஐரோப்பிய சூழலில் தான் திரைப்படத் துறையை தன் கருத்துக்களைக் கூற தேர்ந்தெடுத்தது பற்றியும் கூறி, இத்துறையில் படிப்பதற்காக அதிகளவு சம்பளம் வரும் கணக்காளர் பதவியைத் துறந்து இலண்டன் பல்கலைக் கழகமொன்றில் 18 ஆண்டுகள் விரிவுரையாளராகக் கடமையாற்றிய படி தான் திரைப்படத்துறை பற்றிய படிப்பைப் படித்து முடித்ததாகவும் பின்னரே திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்தது பற்றியும் கூறினார்.

Image

மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் திரைப்பட இயக்குனர் திரு. புதியவன்.உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கும் நெருப்பு சுடர்விட்டுப் பிரகாசிக்க அவர் பேசும் போதும் பெண்களுக்கு தாலிகட்டும் சம்பிருதாயங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் செய்யும் பேதமை பற்றியும் பெண்கள் தம் சுதந்திரத்தை எடுப்பதில் காட்டும் தயக்கம் பற்றியும் பேசிய போது ஒரு கொள்கை வாதியின் தீரத்தையும் அப்படியே வாழ்ந்து காட்டுவதின் இயல்பினையும் காண முடிந்தமை அன்றய நாளின் சிறப்பம்சமாக இருந்தது.

தன்னைக் கண்டறிந்து கொண்ட ஒரு மனிதன் தானே தனக்கு என்று ஒரு புதிய பாதையமைத்து அதில் கம்பீரமாய் சவால்களைத் தீரத்தினால் வென்று படி நடைபோட கண்டோம்.

வியப்பாக இருந்தது. பண்டாரவன்னியன் ஆண்ட மண்ணின் மைந்தன்!

Image

மேலே இருக்கும் புகைப்படத்தில் இருப்பவர் சிட்னியில் வசிக்கும் குறும்பட இயக்குனரும் நடிப்புத்துறையில் அனுபவம் கொண்டவருமான செல்வன்.

Image

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ATBC) வாராந்த காலை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குபவரும் நாட்டியக் கலாநிதியுமான கார்த்திகா. கணேசரை மேலே உள்ள புகைப்படத்தில் காண்கிறீர்கள்.

Image

மேலே உள்ள படம் பல்துறை விற்பன்னர் கோகிலா மகேந்திரனுடன் கார்த்திகா. கணேசர்.

Image

குகமணியம்மா. இன்றய நிகழ்வில் தான் முதன் முதலாகக் கலந்து கொண்டிருந்தார்.நிறைய வாசிப்பவர்.மிக இளம் வயதில் காதல் கணவனை பறி கொடுத்து தன் ஒரே மகனை வளர்த்து ஆளாக்கியவர். தன் பலமாக இருந்தது தனக்குள் இருந்த ஓர்மமே என்றார். தன் மகனை நல்லவனாய் வளர்த்து ஆளாக்கியது தன் வெற்றியென்றும்; நல்லவனாய் வளர்த்தேன் ஆனால் வல்லவனாக வளர்க்கத் தவறி விட்டேன் என்றும் இன்றய உலகத்துக்குள் வாழும் விதமாகவும் பிள்ளைகளை வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் கூறி, தனக்கு இப்போது பலமாக இருப்பது பகவத்கீதையை எளிய விளங்கும் வகையில் தந்த ………………..என்றார்.

Image

தமிழ் பாடசாலையில் HSC வகுப்பு மாணவர்களுக்கு தமிழாசிரியராக இருப்பவரும் தமிழ்பட்டதாரியும் இலக்கிய ஆரவலருமான இந்துமதி.ஸ்ரீநிவாசன் கோகிலா மகேந்திரனுடன் இருக்கிறார்.

Image

Image

பலரது கருத்துக்களோடும் கலந்துரையாடல்களோடும் சென்ற சந்திப்பு எனது தாயார் செய்து தந்திருந்த பகோடாவோடு முடிவுக்கு வந்தது. இரண்டு சிறப்பாளர்களின் பிரசன்னமும் சுவாரிசமான பேச்சும் நேரம் போனதையே மறக்கடிக்கச் செய்து விட்டிருந்தது.

நம் உயர்திணைக்கென ஓவியர் ஞானம் ஐயா செய்து தந்திருந்த இலட்சினையை அவசர அவசரமாகக் காட்டிய போது அது பலரையும் கவர்ந்திருக்க வில்லை என்று தெரிந்தது. அது மரபுவழி ஓவியத்தனமையையும் நிறைய வேலைப்பாடுகளையும் கொண்டிருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மேலும் மிக எளிமையானதாக இருத்தல் சிறப்பெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த புதியவன் தான் மறு வாரம் தமிழகம் செல்ல இருப்பதாகவும் அங்கு தான் நமக்கான இலட்சினையினை வடிவமைத்து அடுத்தமாதம் வரும் போது கொண்டு வருவதாகவும் கூறினார்.

எல்லோரும் இலக்கியம் இணைத்த ஒரு குடும்பமாய் ஆகியிருந்தோம்.

நிகழ்ச்சி நிறைவு பெற்று விட்ட போதும் யாரும் நகர்ந்து போய் விடாமல்  அவரவர் தமக்கு வேண்டியவர்களோடு மேலும் பேசிய படியும் கருத்துக்களைப் பரிமாறிய படிக்கும் தொடர்பிலக்கங்கள் கைமாறிய படிக்கும் இருந்தமை மனதுக்கு நிறைவானதொரு அம்சமாக இருந்தது.

நிகழ்ச்சியின் அழகே அது தானே! சந்திப்பு மிகவும் தித்தித்தது.

இன்னுமொரு விஷயம்.

நேரம் கடந்து மிக போன பின்னரும் பொறுமையோடும் மெளனத்தோடும் வெளியே உரிமையாளார் கதவு பூட்டக் காத்திருந்தார். நமக்கோ பேசிப்பேசித் தீரவில்லை.இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்தைத் தந்து உங்கள் கலந்துரையாடல் முடிந்த பின்னர் குறிப்பிட்ட அந்த தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு அவர் வந்ததும் திறப்பினைக் கொடுங்கள் என்று கூறி நிகழ்வரங்கத்தின் உரிமையாளர் சினேகத்தோடும்  புன்னகையோடும் விடைபெற்ருச் சென்றமை மனம் நிறைந்த ஒரு சம்பவம்.

அதனையும் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்!

Image

Image

Image

Image

Image

Advertisements
 
Leave a comment

Posted by on 10/06/2013 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: