RSS

Monthly Archives: August 2013

Image

இலக்கிய சந்திப்பு – 15

இலக்கிய சந்திப்பு - 15

கடந்த மாதம் இலக்கிய சந்திப்பை சுவையோடு கூடிய ஒரு சந்திப்பாக அஞ்சப்பர் செட்டிநாடு உணவு விடுதியில் சிறப்புற நிகழ்த்தியிருந்தோம். அது பற்றிய குறிப்பொன்றினை நம் நிர்வாக உறுப்பினர் கார்த்திகா. கணேசர் அவர்கள் கடந்த 15.8.13 அன்று பிரசுரிப்புக்காகத் தந்திருந்தார். அங்கு எடுத்த புகைப்படங்களும் ஞாபாகார்த்தக் குறிப்புகளும் மனதிலும் கமறாவிலுமாக எழுத்து வடிவம் பெறாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவை இரண்டையும் பிரசுரிப்பதற்கிடையில் அடுத்த சந்திப்புகாக நாள் கிட்டி விட்டது..(நமக்குத் தான் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடமுடியாத படிக்கு வேலைப் பாரம் நேரத்தை உணவாய் உண்ட படிக்கு இருக்கிறது. விரைவில் அவற்றைப் பிரசுரம் செய்கிறேன்)

நாட்கள் அத்தனை விரைவாக நகர்கின்றன

பருவகாலங்களும் மாறுகின்றன.

சூரியன் இதமான சூட்டோடு வெளியே வருகிறான். தென்றல் இதமாக வருடிச் செல்கிறது.மரங்கள் துளிர்விடுகின்றன. சிட்னியின் அழகு பூக்களாய் மலர்கிறது. ஆம் வசந்தகாலம் ஆரம்பமாகிறது.

இலக்கியங்கள் இயற்கையை பேசியிருக்கின்ற அழகை நாம் சங்ககாலத்தில் இருந்தே காணலாம்.’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே” என்று கொல்லையில் பூத்த பூவைப் பேசிய போர்காலப் பெண்ணை  நாம் இன்றும் நம்மோடு பொருத்திப் பார்க்கலாம். பக்தியைப் பேசுகின்ற போதிலும் கூட ”மாசில் வீணையும்; மாலை மதியமும்; வீசு தென்றலும்; வீங்கிளவேனிலும்; மூசு வண்டறை பொய்கையும் போன்றதே; ஈசன் எந்தை” – என்றே பாடக் கண்டோம். இன்றய நவீன காலத்தில் இயற்கையின் அழகை வியக்கின்ற இசைப்பாடல்கள்  அதிகம். அதன் அதிசயத்தை கவிஞர் வைரமுத்து

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்றும்;ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயம் என்றும் கூறுவார்.

இம்மாத இலக்கிய சந்திப்பு – 15 – வசந்த கால ஆரம்பத்தைக் குறிக்கு முகமாகவும்; நமக்கு மிக அண்மையில் இருக்கும் ஓர்பன் உயிரியல் பூங்காவில் தற்போது “The Cherry Blossom Festival” நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தாலும்  இம்மாத சந்திப்பை கடந்த மாதம் தீர்மானித்த படி இயற்கையைச் சந்திக்கும் ஒரு நிகழ்வாக நிகழ்த்த எண்னியுள்ளோம்.

இலக்கிய நெஞ்சங்கள் இயற்கையுடனான உங்கள் உறவு பற்றிய எண்ணங்களையும் இலக்கிய சிந்தனைகளையும் இயற்கையோடு உறவாடியபடி நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள்.

 
Leave a comment

Posted by on 20/08/2013 in Uncategorized