இனிய இலக்கிய உள்ளங்களே!
எல்லோரும் நலம் தானா?
புது வருட பொங்கல் வாழ்த்துக்கள் சகலருக்குமானதாக மலர்க! 2014 கலை இலக்கிய படைப்பாளிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் சுபீட்சமான ஆண்டாக பரிணமிப்பதாக!
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்கள் எல்லோருடனும் முதலில் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். அது நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் திரு. சத்திய நாதன் அவர்களுக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் ”விண்னைத்தாண்டி வருவேனே” என்ற அவரது சிறுகதை மூன்றாம் பரிசினை வென்றிருக்கிறது.
பேருவகையோடு அந்த மகிழ்வை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுகின்ற அதே வேளை அவருக்கு நம் உயர்திணையின் இலக்கிய சந்திப்பின் சார்பாக நம் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்ந்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறோம். மேலும் மேலும் நாம் வாழும் நிலம் சர்ந்தும் வாழ்வு சார்ந்தும் இலக்கியம் பல பூப்பதாக!
அத்தோடு இன்னொரு தகவல். மார்ச் மாதம் 22ம் திகதி எழுத்தாளர் விழா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடக்க ஏற்பாடாகி இருப்பதாக அறிகிறேன். அந் நிகழ்வுக்காக மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து செல்லும் ஜனரஞ்சக எழுத்தாளுமை கொண்ட எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் செல்வதாகவும் திரும்பி வரும் போது சிட்னிக்கு வருவதாகவும் அறிந்து மகிழ்ந்தோம். அவரை நம் மார்ச் மாத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது மிக்க பேரன்போடு வர உறுதி அளித்துள்ளார் என்ற செய்தியையும் உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்வதில் மனம் பெரிதும் மகிழ்கிறது.
கடந்த மார்கழியில் தவிர்க்க முடியாது பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு மேலும் தைத்திங்களில் 26.1.14 அன்று அவுஸ்திரேலிய தினம் காரணமாகவும் நாம் கூடும் பூங்கா அவுஸ்திரேலிய தினத்தால் களை கட்டி இருந்ததன் காரணமாகவும் பாடசாலை விடுமுறை காரணமாகவும் மேலும் ஒரு மாதம் பிற்போடப்பட்டு இம்மாதம் முதலாவதாக நடந்தேற இருக்கிறது.
பலரும் இயற்கை சார்ந்த மூலிகை வாசம் சுமந்து வரும் தென்றல் வருட குருவிகளின் இசைப்பின்னணியில் இலக்கியம் பேசவே பிரியப்படுவதால் தொடர்ந்தும் நம் நிகழ்வுகள் – கட்டிட வசதிகள் இருக்கின்ற பொழுதிலும் – பூங்காவிலேயே இடம் பெறும்.
இம்மாதம் கடந்த மார்கழித்திங்கள் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட நாம் அகத்திய குறுமுனி என நாம் வாஞ்சையோடு அழைக்கும் இலக்கியத்தால் அழகுறும் திரு தனபாலசிங்கம் அவர்களின் சிறப்புரையோடு ஆரம்பமாகிறது.
உங்கள் எல்லோருடய பிரசன்னமும் நிகழ்ச்சியை அழகுறுத்தும் என நான் சொல்லவேண்டியதில்லை.
வந்து இயற்கையோடு இணைந்து இலக்கியமும் நுகர்ந்து செல்க!
உயர்திணை உங்கள் எல்லோரையும் அன்போடு வருக வருக என உள்ளன்போடு அழைக்கிறது. மேலதிக விபரங்களை அழைப்பிதழில் காண்க!
நன்றி.
தமிழால் இணைந்திருப்போம்.
அன்புடன் யசோதா.ப.