RSS

உ.வே.சா. போட்டுத்தந்த பாதைவழியே இலக்கிய சந்திப்பு – 17 – குழுவினர் (பகுதி 1)

10 Mar

அது ஒரு பொன்மாலை நேரம்.

23.2.14.

பரமற்றா பூங்காவினுள் இருக்கும் தேநீர் விடுதிக்கு முன்பாக இருக்கும் மணிமண்டபம்.

Image

Image

உ.வே.சா. போடுத்தந்த சங்கத் தமிழ் வீதி வழியே நம்மை ஒளைவையிடம் அழைத்துச் செல்ல வந்திருந்தார் நம் தமிழ்குறுமுனி தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.

Image

ஒரு வீட்டில் குடி இருக்கும் இரு சூரியர்கள் பானு, ரவி. எப்போதும் சரியான நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்னால் வந்து எனக்கு மிஸ்கோல் தந்து வரவை உறுதிப்படுத்தும் மழைக்காரி ஷிரயா, ஐந்து மணிவரை நாட்டிய வகுப்புகளை நடத்தி விட்ட பின்னாலும் களைப்பற்று புத்துணர்வோடு எப்போதும் தவறாமல் கலந்து கொள்ளும் நம் பலமான தூண் கார்த்திகா, மற்றும் நான் 4.30க்கு வேலை முடித்து வரும் போதே சுடச்சுட கொழுக்கட்டைகளைச் செய்து தகுந்த டப்பாக்களில் செம்மையுற அடுக்கி தானும் தயாராகி நிற்கும் என் அம்மா, எப்போதேனும் அபூர்வமாய் ஆனால் நம் நிகழ்ச்சிகளின் விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் சரியான தருணங்களில் நிகழ்ச்சிகளைக் கைகொடுத்து தூக்கி விடும் புத்தர் எல்லாவற்றுக்கும் மேலாக 4.45 மணிக்கே தன் வீட்டுக்கு வெளியிடத்தில் இருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்ற போதும் பாரியாரோடு வந்து விட்டேன் என அறியத்தந்த குறுமுனிவர் தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ( இவர்கள் இடம் தெரியாது தடுமாறி நின்ற போது நம் அன்பு புத்தர் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார்) …. இப்படியாக எல்லோரும் ஒன்று சேர்ந்த போது மாலை 5.10ஐக் கடந்து விட்டிருந்தது. ( திரு.சத்தியநாதன் அவர்கள் தனக்கின்று வேலைநாள் என்பதால் வர இயலாமையை ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி இருந்தார்.)

வரலாற்று வீதி வழியே பின்னொக்கி பயணப்படுகிறோம்.

ஐயா முன்னோக்கிப் போக நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

Image

Image

வீதி வழியே பின்னோக்கி பயணிக்கையில் அந்த வரலாற்றுப்பயணத்தில் இந்த வீதி போட்டுத் தந்தவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் ஐயா.

இந்த இடத்தில் ஐயா அவர்களை முதலில் நான் அறிமுகப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் என் ஆத்துமம் சாந்தி பெறாது. இவர் இலங்கையின் வடபுலத்தில் இணுவில் என்ற சிற்ரூரில் பிறந்து கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு பிறகு கனக்கியலில் மேலதிக படிப்புக்காக லண்டனில் சிலகாலம் தங்கி( 1974ம் ஆண்டுக்காலப்பகுதி) இருந்து 1979 ல் சிட்னிக்கு வந்தவர்.மிகவும் வலிந்து கேட்டுப் பெற்ற தகவல்கள் இவை.

அவருடய கல்வித்தகைமையும் வாழ்க்கை ஓட்டமும் வேறாக இருந்த போதும் சொந்த ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் முதலானவற்றைக் கற்றறிந்ததாகச் சொன்னார். தன்னைப்பற்றிச் சொல்வதில் மிகுந்த கூச்சசுபாவம் உள்ளவராக இருந்தார். நமக்குக் கொடுப்பதற்காக “சிலப்பதிகார சிந்தனைகள் என்ற அவருடய வானொலியில் ஒலிபரப்பான இலக்கிய ரசத்தை இறுவட்டில் அடைத்துக் கொண்டு வந்திருந்தார். அதற்கு ஆனசெ லவைப் பெறுமாறு வேண்டிய போது தீ சுட்டதைப் போல பதறிப்போனார்.

தான் ஒன்றும் பெரிய இடத்துப் பையன் இல்லை என்றும் ஒருவாறு லண்டனுக்குப் போய் அங்கு லண்டனில் கல்விகற்ற போது பகுதி நேர வேலைக்கு தான் எதிலும் தேர்வாகவில்லை என்றும்; தான் சிறிய மனிதராக இருந்த காரணத்தால் ஒரு நாடகக் கம்பனியில் இடைவேளையின் போது பொருட்கள் விற்கும் வேலை தான் தனக்குக் கிட்டிற்றிறென்றும்; அது தனக்கு இலவசமாகவே ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்ததென்றும் அதனால் ஆங்கில இலக்கியத்தின்பாலும் நாட்டம் ஏற்பட்டதென்றும் கூறினார். (ஐயா அவர்களை அந்தக் கணத்திலேயே நமக்கு ஆங்கில இலக்கிய சுவையை அறியத்தர வேண்டிக் கொண்டோம்) ஆங்கில இலக்கியங்கள் கூடுதலாக மன போராட்டங்களை உள்ளூர நிகழும் கேள்விகளைப் பதிலை சொல்வது போல் அமையப்பெற்றவை என ஐயா அவர்கள் சொன்ன முதல் கூற்றே நமக்கு புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அதனை அர்ச்சுணனின் போர்களத்து மனப்போராட்டக் காட்சியோடு ஒப்பிட்டுப் பேசினார்.

நாம் ஒரு அரிய பொக்கிஷத்தினைக் கண்டு பிடித்த உணர்வினைப் பெற்றிருந்தோம்.

நம் சந்திப்புக்கு அன்று குழுமியவர்கள் ஒன்பது பேர்.அது போதுமாக இருந்தது அவரைப்பின் தொடர. கன்று தாயின் பின்னால் துள்ளியோடும் கன்றுக்குட்டிகளாய் நாம் அவரை – அவர் சொல்லைப்பின் தொடர்ந்தோம்.

Image

Image

Image

Image

Image

Image

Image

நேரடியாகவே நிகழ்ச்சிக்குள் நுழைந்தோம்.ஐயா அவர்கள் இன்று சங்க காலத்து ஒளைவையை அறிமுகப்படுத்த முற்பட நாம் அவளைக் காணத்தயாரானோம்.அவளைக்காண நம்மை சங்ககால சமூக சபைக்குள் அழைத்துப் போனார் ஐயா.முதலில் சங்ககால நூல்கள் வழியாக போக வேண்டி இருந்ததால் அந்த நூல்வந்த வழியை சொன்னார்.

இதிலிருந்து தமிழ் அருவி ஒன்று தங்குதடை இன்றி எதுகை மோனைகளோடும் பாடல் வரிகளோடும் ஓடுவதைக் கற்பனை செய்க!

நீங்கள் எப்போதேனும் 1 – 3 ம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எப்படி இன்றய நிலையை அடைந்தது என்பது பற்றி சிந்தித்ததுண்டா?

அங்கு தான் ’தமிழ் தாத்தா’, ‘வாழ்ந்த ஒரு தமிழ் நூலகம்’ பற்றிய அறிமுகம் நமக்குத் தேவைப்படுகிறது. கல்லில் எழுதப்பட்ட தமிழ் எழுத்து பிராமி வரி வடிவங்கள் பின்னர் சமண முனிவர்கள் தமிழ் கடமையாக அவற்றை ஏட்டில் எழுதி வைக்க சமயக்காழ்ப்புணர்ச்சியால் அவை வெளிவராது இருப்பது கண்டும் அறியாமையால் அவை கறையானுக்கு இரையாவதன் முன்னர் அவற்றை மீட்டு மிகப்பக்குவமாக அச்சுக்கு அத்தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை கொண்டுவந்த பெரு மனிதர் இவர்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், இலக்கணநூல்கள், பிரபந்தங்கள் என இன்று நமக்குக் கிட்டியுள்ளவை எல்லாம் உ.வே.சா. உயிர்ப்பித்தவையே.

அவர் தன் என் சரித்திரம் என்ற அவரது முற்றுப்பெறாத இறுதி நூல் இவ்வாறு கூறுகிறது..”….சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்தார்.என்ன என்ன படித்திருக்கிறீர்கள் என அவர் கேட்ட போது ஐயர் தாம் படித்த அந்தாதி கோவை, பிள்ளைத்தமிழ் நூல்களை எல்லாம் வரிசையாக ஒப்பித்தார்.இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம் என அவர் கேட்க, மேலும் தான் படித்த நூல்களின் பட்டியலை ஐயர் வாசித்தார். கம்பராமாயணத்தைப்படித்துள்ளதாகவும் அவர் சொன்னர். இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள் தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப்பாடல்களை படித்திருக்கிறீர்களா? சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை படித்ததுண்டா என்று ராம சாமி முதலியார் கேட்டார்.

நம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திசைவழியை தீர்மானித்த கேள்வியாக அது அமைந்தது. அதன் பிறகு தான் அய்யர் அவர்களின் வேட்டை துவங்கியது. சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை தெளிவுறப்புரிந்து கொண்டு பதிப்பிக்கும் நோக்கில் சமண சம்பிருதாயங்களை கும்பகோணத்தில் இருந்த சமணர்களிடம் சென்று பாடம் கேட்டுத்தெரிந்து கொண்டார் ஐய்யர்……அரசாங்கத்தாரும் கிறிஸ்தவ மிசனறிமார்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த அச்சுயந்திரத்தை 1835ஆம் ஆண்டு முதல் இந்தியர்களும் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டதைத்தொடர்ந்து ஓலைச்சுவடியாக இருந்த தமிழ் நூல்கள் அச்சுப்புத்தகங்களாக வரத்துவங்கின…….எனத்தொடரும் அவர் தமிழ் வரலாற்றுச் சரிதம் தன் பதிப்புத்துறையில் அவர் கொண்ட சிரமம் பற்றி இப்படிச் சொல்கிறது. (அவர் இது பற்றிச் சொல்லி இராவிட்டால் நமக்கு இதன் சிரமம் அவரின் தமிழ் தொண்டு பற்றி தெரிய வராமலே போயிருக்கும்.)

’……..சங்க இலக்கியங்கள், காவியங்கள் என 1878 துவங்கி 1942 வரை 62 ஆண்டுக்காலம் 102 நூல்களை உ.வே.சா. பதிப்பித்திருக்கிறார்.இந்த ஓலைச்சுவடிகளுக்காக ஊரூராக அவர் அலைந்தார். வீடு வீடாகக் கையேந்தி நின்றார்.

செய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.

எழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எழுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.

அப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.

ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா

என்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.

நாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.

படிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .

கல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.

இப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.

அடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.

பல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.

தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.

சுவடிகளைத்தேடுவது ஒரு போராட்டம் எனில் அவற்றைப் பதிப்பிப்பது அடுத்த போராட்டம்.ஏனெனில் ஒரு நூலைப்பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மானவர்களுக்கு அதைச் சொல்லிக் கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள்.இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற மற்றச் செய்திகளையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக் கொள்வதுண்டு. மற்ரவர்கள் அதைப்பார்த்து பிரதி செய்து கொள்ளும் போது அந்தக் குறிப்புகளை பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். இதே போன்று எழுதுவதில் ஏராளமான பிழைகள்  ஏற்படும்.சுவடிகளில் மேற்கோள் செய்யுள்களைப் பிரித்தறிவது கடினம். உரை இல்லாத மூலங்கள், எழுத்தும் சொல்லும் குறைந்தும் பிறழ்ந்தும்,திரிந்தும் பலவாறு வேறுபட்டிருக்கும். சில சுவடிகள் சிதைந்தும் கிடைக்கும். மிகுந்த பொறுமையுடனும் பொறுப்புடனும் வேறுபிரதிகளுடனும் உரையாசிரியர் குறிப்புகளுடனும் ஒப்பிட்டுப்பார்த்து இரவு பகலாக உழைத்து மெய்ப்பு திருத்தி உ.வே.சா. இப்பதிப்புகளைக் கொண்டுவந்தார் என்பர்.

உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம்.

அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர்.

ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம்.

( பதிப்பித்தலில் இருக்கின்ற சிக்கல் நிலை பற்றி சி.வை. தாமோதரம்பிள்ளை இப்படிச் சொல்கிறார்.” பதிப்புச்சிக்கல் பற்றி அவர் குறிப்பிடும் போது ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை)

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

கிடைத்தற்கரிய இத்தகைய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை “என் சரித்திரம்” என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர். என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க, பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுல தான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.

மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்… “ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில…சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்”… என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.

1906ம் ஆண்டு தமிழ் தாத்தா தமிழ்நூலகம் உ.வே.சா.அவர்களுக்கு ‘மகா மகோ பாத்தியாய’ என்ற பட்டத்தை இந்திய அரசு வழங்கிய போது பாரதியார் அவரைப்பற்றி பாடிய வரிகள் இவை.

“ நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே”.

இவ்வாறு தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிரமப்பட்டு போட்டுமுடித்து கட்டிக்காத்து தந்த இந்தத் தமிழ் வீதி வழியாக நாம் சங்க காலத்துக்குள் புகுகிறோம்.

Image

Image

Image

அதோ ஒளைவையில் குரலும் குடிலும் தூரமாய் தெரிகிறது……

சங்ககாலத்து ஊருக்குள் நுழைகிறோம்.

.Image

தொடரும்….

 
Leave a comment

Posted by on 10/03/2014 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 
%d bloggers like this: