RSS

சங்க காலத்து ஒளவை: இலக்கிய சந்திப்பு – 17 ஐ முன் வைத்து (பகுதி 2)

11 Mar

Image

உ.வே.சா. போட்டுத்தந்த பாதை வழியே சங்க காலத்துக்குள் வந்தோமில்லையா.

இதோ இப்போது ஊருக்குள் நுழைகிறோம்.

முறம் எடுத்து புலி விரட்டிய பெண்ணும் முல்லைப்பூவோடு கோவித்துக் கொண்ட பெண்ணும் எதிரே கம்பீரமாய் வரும் பிசிராந்தையரும் செவிலித்தாய் விரட்ட விரட்ட சாப்பிடாமல் ஓடித்திரிந்த மகள் எப்படி கனவன் வீடடைந்து வறுமையிலும் செம்மையாய் வாழ்கிறாள் என வியந்து நிற்கும் தாயாரும்,(நற்றினை 110)

‘சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி,
மருகில் பெண்டிர் அம்பல் தூற்’ (149 நற்றினை) றிய படி புறம் பேசும் பெண்களுமாக ஒரு பக்கமும் இன்னொரு பக்கமும், தான் வளர்த்த புன்னை மரத்தை தன் தங்கையாக நினைத்து அம்மரத்தின் கீழ் தலைவனைக் காண நானமுறும் பெண் இன்னொரு பக்கமாக (நற்றினை172) இருக்கிற ஊர் அது.

சில பல வீடுகளில் மாப்பிள்ளைமார் – அது தான் கணவர் மார் – பரத்தைகளிடம் போய் விட்டு வீடு திரும்புகிறார்கள். வரும் போதே சமாதானத்திற்காக சொந்தக்காரரையும் அழைத்து வருகிறார். இந்த அப்பாவித் தலைவி சொந்தக்காரரை கண்ட மாத்திரத்திலேயே அகமும் முகமும் மலர சமையல் செய்யத் தயாராகி விட்டாள், அவன், அந்தக் கள்வன் உள்ளூர ‘சரி இனி எல்லாம் சுகமே என உள்ளூர மகிழ்ந்து போகிறான். இப்படியும் ஒரு சிறுகுடிலுக்குள் நடக்கிறது காட்சி..(நற்றினை120) இன்னொரு இடத்து தலைவனோ வீட்டுக்கு வரும் போதே சமாதானத்திற்காக முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த புதல்வனைத் தூக்கிக் கொண்டு மனைக்குள் நுழைகிறான்.(நற்றிணை 250)

காதலை தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் ஒரு காதலி இப்படி, ’எடியே, நான் பிரிவினால் சாகப்போகிறேன். நான் சாவதைப்பற்றிக் கூட கவலைப்படவில்லை. அதற்குப்பிறகு நான் மீண்டும் பிறக்கும் போதும் அவன் என்னை மறந்துவிடுவானோ என்று தான் எனக்கு அச்சமாக இருக்கிறது’  (நற்றினை 397) என்கிறாள் அவள்.

குறுந்தொகைப்பெண்கள் அம்மாமாரிடம் காதலுக்காக கோலினால் அடி வாங்கி இருக்கிறார்கள். அடியே! உன் மனதை கவர்ந்து உன் உடலைத்தீ ண்டிப்போன காதலனை அறிவாயா என்று கேட்டால் மலைக்கு அந்தப்பக்கம் தான் இருக்கிறான் என்று சமாதானம் சொல்கிறாள், அடி மோட்டுப் பெண்ணே, முகவரி தெரியாமலே காதலித்திருக்கிறாயே இப்ப என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் அவனை விட்டுவிடுவேனா என்ன? ஊரூராக நாடுநாடாகவேனும் போய் தேடி கண்டுபிடித்து விட மாட்டேனா என வீம்பு பேசுகிறாள் இப்படி,

“நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ? “ – வெள்ளி வீதியார்; நற்றினை 130 –

என்ன நிலத்துக்கு கீழ நாக கன்னியரத் தேடிப் போகப்போறாரோ? வானம் ஏறி மேல வான் மகளிரத் தேடிப் போகப்போறாரோ? கடலேறி நாக கன்னியிட்ட போகப்போறாரோ? இங்கனேக்க நாட்டுக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் தானே இருக்கப் போகிறார் என்று ஒரு வித நாட்டாண்மையோடு வருகிறது பதில்.

அடியே, அவன் உன்னைத் தெரியாது என்றால் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் ‘அவன் அப்படிச் சொல்ல முடியாதே; நம் சந்திப்புக்குச் சாட்சியாக நாரை ஒன்று நின்றதே என்கிறாள்.

(சங்க காலத்துக்கு முன்னால் இளமகளிரை பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடய இடுப்பில் கயிற்றைக்கட்டி மற்புறக்கயிறை தங்கள் கையில் தாய்மார் வைத்திருந்தார்கள்.இரவு நேரத்தில் அவர்களின் கால்களில் கயிறுகட்டிக் காத்திருந்தார்கள்.நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக்கயிறு மேகலையாகவும் (ஒட்டியாணம்) கால்கயிறு சிலம்பாகவும் மாறியது.பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் களற்றும் சடங்கு ‘சிலம்புக்கழி நோன்பு’ என்றழைக்கப்பட்டதென பலசுந்தரம் கூறுகிறார். ) (தமிழ் அவுஸ்திரேலியன் பெப்பிரவரி 2014 பக்; 77 ‘காதலைத் தின்ற சங்கப் பெண்கள்; பிரபஞ்சன்)

இப்படியான பெண்கள் கூட்டத்துக்குள் ஒளைவை என்பவள் யாராக இருக்கும்?ஒளவை என்பவள் இவளாக இருக்குமோ அவளாக இருக்குமோ என மனம் அலைபாய ஒளவை என்பவள் இவ்வாறெல்லாம் இல்லை என்ற படியே எம்மை இன்னும் இன்னும் நடத்தி ஊருக்குள் கூட்டி வந்தார் ஐயா.

அப்படி என்றால் எப்படி இருப்பாள்? ஒளவையார் திரைப்படத்தில் வந்த சுந்தராம்பாள் மாதிரி தெய்வீக முகப்பொலிவோடும் நெற்றி நிறைய நீறோடும் சற்றே வளைந்த முதுகோடும் பொல்லூன்றி வருவாளோ?

அப்படியும் இல்லை என்றார். அவர் அறிமுகப்படுத்தப்போகிற ஓளவை எப்படியானவள் என காண ஆவல் கொண்டோம்.அவள்,

1. அரசரோடு கன கம்பீரமாக சரியாசனம் இருந்தவள். தமிழ் கொடுத்த இருக்கை அது.

2. அரசனுக்காய் தூது போய் பெண்ணில் லாவகத்தோடு பெருமையை மிடுக்கோடு சொல்லி வந்தவள்

3. ஏழைகளுக்கு வழிகாட்டி வாழ வழிவகை சொன்னவள்.

4.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என உயர்குடி அரசனோடும் சமமாய் நின்று காட்டியவள்.

5. வரலாற்றில்; இலக்கியத்தில் ஒரு பெண்ணாய் தன்னைப் பதிந்து கொண்டவள்.

இவள் மூதாட்டி இல்லை. திருநீறுக்குள் தன்னை மறைத்துக் கொண்டவள் இல்லை. தமிழ் ஒளி வீச கம்பீரமாய் வாழ்ந்து காட்டிப் போனவள்.அவளுடய பெயரை புனை பெயராக வைத்துக் கொண்டு பின் வரும் நூற்றாண்டுகளில் மேலும் இரண்டு ஒளவைகள் வந்தார்கள்.

ஒருத்தி சோழர்காலத்தில் வாழ்ந்தவள்.கம்பர் காலத்துக்கு சமகாலத்தில் வாழ்ந்தவள்.இவளுடய புலமைக்கு அவளுடய நிந்தாஸ்துதிப் பாடல் ஒன்றே போதும். ( அவலட்சனம் என்பதற்கு அவள் சொன்ன சொற்பதம் எட்டேகால் லட்சணமே! ஏன் தெரியுமா தமிழ் எண்ணில் 8 என்ற இலக்கத்தை சுட்டுவது ‘அ’ கால் அளவைச் சுட்டுவது ‘வ’ அவலட்சணமே என்பதற்கு அவள் எடுத்தாண்ட அடி எட்டேகால் லட்சணமே! எப்படி இருக்கிறது இந்த நிந்தாஸ்துதி! )(ஞானம் பெப்பிரவரி 2014 ‘பரனில் கண்டெடுத்த பைந்தமிழ் கருவூலங்கள்; பாலாபக்கம்) அடுத்த ஒளைவை கிட்டத்தட்ட 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவள். இந்த ஒளவை தான் ஆத்திசூடி கொன்றை வேந்தன் எல்லாம் பாடி ஒளவை பாட்டியாக மனதில் நிலைத்திருப்பவள்.

நாங்கள் காணப்போவதோ சங்க காலத்து original ஒளவை! இவளைத்தான் நாம் தமிழுக்குள் தொலைத்து விட்டோம். பண்பாட்டுக்குள் தவற விட்டு விட்டோம். அவளை இலக்கிய சந்திப்பில் புழுதிக்குள் கிடந்து கண்டெடுத்துத் தந்தவர் ஐயா அவர்கள்.

இவளுடய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் இருக்கிறது. தன்னை ஒரு தமிழ் பெண்ணாக வரலாற்றில்; இலக்கியத்தில் நிலை நிறுத்திப் போனவள் ஒளவை.

அதையிட்டும் பெண்கள் சற்றே பெருமைப்பட்டுக் கொள்லலாம்.

இவள் எப்படி இருப்பாள் என்று காண ஆவலாய் இருக்கிறது தானே! அவள் புறநானூறு – 89 இல் தன்னை வர்ணிக்கிறாள் இப்படி.

பாடல் இது தான்.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!

உரை: “மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னை விழித்துக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

இப்பாடலில் இருந்து இவள் ஒரு விறலி என்றும் (பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விரலி) மைதீட்டிய கண்களும் வட்டமான நெற்றியும் கொண்டவள் என்றும் எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருப்பவள் என்றும் இப்பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அஞ்சியும் ஒளவையும்:

இவள் உயர்குடி மக்கள் இடத்தில் மிகுந்த செல்வாக்கு. தமிழ் கொடுத்த இறுமாப்புடன் கூடிய செல்வாக்கு அது. அஞ்சியும் ஒளவையும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவனோ அரசன். அவளோ தமிழ் புலமை வளர்த்தெடுத்த தமிழ் சீமாட்டி. “இரு பேராண்மை செய்த பூசல்” என ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆழுமைப்பண்பை பேராண்மை என்று விழித்து பெண்ணுக்கு ஆழுமைப்பண்பில் சம அந்தஸ்து கொடுத்தவள். அப்படியே வாழ்ந்தும் காட்டியவள். அதனாலே அவளுக்கு அரசனோடு சரியாசனம்.அரசனோடு சேர்ந்து கள்ளடிக்கிற அளவுக்கு சினேகிதம் என்றால் பாருங்களேன்! அந்த சினேகத்தைச் சொல்கிறது இப்பாடல். (புறம் 236)

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

பொருள் என்னவென்றால்:

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான்.

எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன. அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது.

எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

இவளுடய கவிப்புலமையப் பாருங்கள்! அம்பு பாய்ந்து அஞ்சி இரந்து பட்டான். அந்த அம்பு புறக்கண்ணுக்குத் தான் அஞ்சியைத் தாக்கியது. ஆனால் அதன் தாக்கம் அல்லது அது உண்மையாக தாக்கியது எங்கெங்கெல்லாம் தெரிகிறதா? அது பாணர் கூட்டத்தின் அகன்ற பாத்திரங்கள் – பாணர்களின் அன்றாட வாழ்க்கையை (அவன் கொடை கொடுத்து வந்திருக்கிறான்) இரப்போர் கைகளைத் துளைத்து – இனி இரப்பவர்களுக்கு கொடுப்பார் எவரும் இல்லை. சுற்றத்தாரின் கண்களில் ஒளி மழுங்க – சுற்றத்தாரும் இனி கம்பீரமாய் பவனி வர முடியாத படிக்கு; புலவர்களுடய நாவிலும் சென்று வீழ்ந்திருக்கிறது அந்த அம்பு. இனி புலமையும் அறிவும் உடைய  புலவர்கள் நா எழுந்து பாடி இன்புறவும் சாத்தியமில்லை. என்ன அழகாய் தெளிவாய் சுருக்கென தைக்கத் தக்கதாய் சொல்லி இருக்கிறாள் பாருங்கள்.

அத்தோடு  சமபந்தி போசனத்தை செய்தது மாத்திரமல்ல நறுமணம் உள்ள தன் கையால் புலால் மணக்கும் அவள் தலையை வருடிக் கொடுக்கிற அளவுக்கு அன்பு பாராட்டுகிற நண்பனாகவும் அஞ்சி இருந்திருக்கிறான் இல்லையா?

இந்த இடத்தில் நம் கார்த்திகா – நாட்டியக்கலாநிதி – அவர் நாட்டியப்பாடசாலை நடத்துபவர். மேலும் நாட்டியக்கலை பற்றிய புத்தகங்கள் பல வெளியிட்டவர். இப்போதும் புதிய ஒரு நாட்டியகலை சம்பந்தமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருப்பவர். அவர் “நித்ய சுமங்கலிகளின்” வேரை ஆராய்ந்து கொண்டிருப்பவர். இந்த இடத்தில் ஒளவை அதன் மூலத்தில் இருந்திருப்பாளோ என்பது அவரது சந்தேகமாக இருந்தது.

அதற்கு இல்லை என்பதும் இது தூய நட்பே என்பதும் ஐயா அவர்களின் பதிலாக இருந்தது. (அஞ்சி தன் அத்தை மகளை மணந்திருந்தான் என்றும் அவளும் பாவன்மை படைத்தவளாக இருந்தாள் என்றும் ஒரு கிடைத்திருக்கிற தகடூர் யாத்திரை என்ற நூலில் ஒளவை சொல்லி இருக்கிறாள் என்று ஓர் இணையச் செய்தி கூறுகிறது.) அதே நேரம் நெடுமான் அஞ்சிக்கு பொகுட்டெழினி என்றொரு மகன் இருந்து தந்தை காலமான பின் இவன் அரசு கட்டில் ஏறும் வரை ஒளவை அவர்களோடு நட்புறவோடு இருந்ததற்கும் சான்றுகள் உண்டு)

இப்படி எல்லாம் உரிமையும் நட்பும் அன்புறவும் கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அது வெகுமதி அளிக்க தாமதமாகி விட்ட கோபம். தமிழ் பொங்கி எழுந்து விட்டது. தன்மான உணர்வும் தான். பாடல் பிறந்தது இப்படி:

“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“ (புறம் 206)

இப்பாடலின் பொருள்.

வாயிற் காப்போனே! வாயிற் காப்போனே!
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே!

தலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா?
இல்லை என் தரத்தை அறியமாட்டானா?

அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே!

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.(இவள் விறலி என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி)

மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு (கோடாலியோடு) காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி நாங்கள் எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.

என்ன ரோசம் பாருங்கள். இது தமிழ் கொடுத்த தீரம்தானே?

Who cares? என்று புரம் தள்ளிப் போகிற ரோசம்!

(பிறகு நெடுமான் அஞ்சி வெகுமதிகளைக் கொடுத்தான் என்றும் அவள் பிரிந்து போகின்ற போது அவளுடய பிரிவாற்றாமல் கொள்ளைக்காரர்களை அனுப்பி அவள் பொருளைச் சூறையாட வைத்து அவளைத் திரும்பி ( கோபத்தோடு ) வரச் செய்தான் என்றும் கதை உண்டு. பிரிவாற்ற முடியா அத்தனை நேசம் அவனுக்கு இவள் பால்.

இவன் இவளுக்கு நெல்லிக்கனி ஈந்தது பற்றி சொல்ல வேண்டியதில்லை தானே!

பெண்கள் – குறிப்பாக ஒளவை அரசகாரியமாக தூது போயிருக்கிறாள். அது அரச தூது. போரை நிறுத்தும் வல்லமை கூட பெண்ணுக்கும் தமிழுக்கும் சங்கத்தில் வாய்த்திருந்ததற்கு இவ் ஒளவை சாட்சி. இவள் ஒரு தடவை தொண்டமான் என்பானிடம் போய் அஞ்சியைப்பற்றிச் சொல்கிறாள் இப்படி.

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.

பொருளை உரை வழி இணையம் இப்படித்தருகிறது.

தொண்டைமான் : வாருங்கள் புலவரே…
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது…

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா…

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்…
வாருங்கள்…
பாருங்கள்…….
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன………….?

ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா….. !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்…

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.

தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்…
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்….!

ஔவையார் : ஆம் மன்னா…

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான ஆயுதங்கள் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

ஔவையார் பாடலின் உட்பொருள்…

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு…….

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்….
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்…

உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது..

ஏழை விறலிக்கு வழிகாட்டிய ஒளவையை இப்போது பார்ப்போம்.

அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில் ஒரு
இடத்தில் தன் சுற்றத்தோடு தங்கியிருந்த விறலி யொருத்தியைக்
கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து,
“கவிழ்ந்துகிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்?”
என ஏங்கியிருப்பதைக்  கண்டு, “சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி
அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான்; அவன்பாற் செல்வாயாயின்,
அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப உடையன்;
அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்க”என,
இதனால் ஆற்றுப்படுத்துள்ளார்.

இது தான் அந்தப்பாடல்.

ஒருதுலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரனமுத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே. (103)

இவளை இப்போது

1. அரசரோடு கன கம்பீரமாக சரியாசனம் இருந்தவள். தமிழ் கொடுத்த இருக்கை அது.

2. அரசனுக்காய் தூது போய் பெண்ணில் லாவகத்தோடு பெருமையை மிடுக்கோடு சொல்லி வந்தவள்

3. ஏழைகளுக்கு வழிகாட்டி வாழ வழிவகை சொன்னவள்.

4.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என உயர்குடி அரசனோடும் சமமாய் நின்று காட்டியவள்.

5. வரலாற்றில்; இலக்கியத்தில் ஒரு பெண்ணாய் தன்னைப் பதிந்து கொண்டவள்.

என்று சொல்லலாமில்லையா?

எங்கே தொலைத்தோம் இன்றிவளை?

இப்பாடகளூடாக இவளைக் நமக்கு அடையாளம் காட்டியது யாவும் இலக்கிய வித்தகர் ’குறுமுனி’ தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.

ஐயா அவர்களுக்கு நன்றி

( பிற்குறிப்பு: நேரமின்மை கருதி பாடல்களும் உரையும் இணையத்தில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. நன்றி இணையம்)

 
Leave a comment

Posted by on 11/03/2014 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 
%d bloggers like this: