அன்புள்ள இலக்கிய உள்ளங்களே!
மனங்கள் எல்லாம் சுகம் தானா?
கடந்த இரண்டு வாரங்களின் முன்னால் நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் யாழ்புத்தர் என இணையத்தளங்களுக்கு அறிமுகமான திரு. இரட்னசீலன் அவர்களின் மைத்துணர் அகால மரணமான செய்தியை நாம் எல்லாம் அறிந்திருப்போம். முதலில் அத் துயரை உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்வதோடு அவ் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.
வாழ்க்கையோ நகர்ந்து கொண்டிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ நாமும் நகர நிப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.
கடந்த சந்திப்பில் நம் ’குறுமுனி’ தனபால சிங்கம் ஐயா அவர்கள் “சங்ககாலத்து ஒளவையை” நமக்கு அடையாளம் காட்டிச் சென்றார். அச்சந்திப்பின் பருமட்டான தொகுப்பு இருபகுதிகளாக நம் உயர்திணை இணையப் பக்கத்திலும் அஷ்யபாத்திரம் என்ற இணையப்பக்கத்திலும் பிரசுரமாகி இருக்கிறது. அதைப் பற்றிப் பார்க்க, கருத்துச் சொல்ல விரும்புகின்ற நலன் விரும்பிகள்
http://akshayapaathram.blogspot.com.au/
http://akshayapaathram.blogspot.com.au/
ஆகிய இணையப் பக்கங்களுக்குச் சென்று பார்க்கலாம். கருத்துக்கள் கிட்டினால் உவப்பாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லைத் தானே!
இம் மாதம் ஏற்கனவே உறுதிப் படுத்தி இருந்த படி மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் விழாவுக்காக குயின்ஸ்லாந்து மாநிலத்துக்குப் பயணமாகும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் விழாவினை முடித்து திரும்பும் வழியில் நம் சந்திப்பிலும் கலந்து கொள்வதற்காக சிட்னி மாநகருக்கு வருகிறார்.
அதே வேளை நம் உயர்திணை அங்கத்தவர் திரு. சத்தியநாதன் அவர்களின் சிறுகதைக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” என்ற தலைப்பில் பிறிஸ்பேர்ன் தாய் தமிழ் பள்ளி நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிட்டியிருப்பதையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அச்சிறுகதையை நம் எல்லோருக்குமான வாசிப்பனுபவத்துக்காக திரு. சத்தியநாதன் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்.
வாழ்வனுபவத்தை இம்மாத அதிதி திரு. முருகபூபதி அவர்கள் நிகழ்த்துவார்கள். வாசிப்பனுபவத்தை – இச் சிறுகதையை வாசித்த அனுபவத்தை அங்கத்தவர்கள் பகிர்ந்து கொள்ள அதன் ஏற்புரையை – எழுத்தனுபவ சிலிர்ப்பை – அதன் ஆதர்ச உருவாக்க அனுபவத்தை பரிசுச் சிறுகதை ஆசிரியர். திரு. சத்தியநாதன் அவர்கள் நிகழ்த்துவார்கள்.ஆகையால் இலக்கிய சுவைஞர்கள் வரும்போதே இச் சிறுகதையை வாசித்து அதன் அனுபவத்தைச் சொல்ல ஆயத்தமாக வருவீர்களாக!
எதிர்பாராவிதமாய் குயின்ஸ்லாந்து மாநில தமிழ், மெல்போர்ன் மாநிலத் தமிழ், மற்றும் நியூசவுத்வேல்ஸ்மாநிலத் தமிழின் சங்கமமாக நிகழ இருக்கும் இந் நிகழ்வு வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும் இலக்கிய வடிவமாகும் இயலை நமக்கு தந்து போகும் நல் அனுபவமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சியை செழுமைப்படுத்தும் என்பது நிச்சயம்.வாருங்கள்! இயற்கையோடு இணைந்து இலக்கியமும் நுகர்ந்து செல்வோம்.
மிக்க நன்றி.
தமிழால் இணைந்திருப்போம்.
இன்றயநாளும் இனி வரும் நாளும் இனியவையாகுக!
yarlputthan
27/03/2014 at 10:50 PM
திரு சத்தியநாதனின் சிறுகதையை வாசிக்க ஆவலாய் உள்ளேன் தயவு செய்து அவரது வலைப்பதிவின் விலாசத்தை அறியதரமுடியுமா?
uyarthinai
29/03/2014 at 11:24 PM
மிக்க மகிழ்ச்சி புத்தன். அவரிடம் வலைப்பதிவு இல்லை என நம்புகிறேன். இதோ இப்போது உடனடியாகவே அக்கதையைப் பிரசுரம் செய்கிறேன்.
உங்கள் வரவுக்கும் ஆர்வத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.