Monthly Archives: May 2014
இலக்கியச் சந்திப்பு – 18 : நிகழ்வும் நிழல் படங்களும்
ஓர் இலையுதிர் காலத்து மாலை நேரமாக இருந்த ஒருபங்குனித் திங்கள் 30ம் நாள் நிகழ்ந்தது நம் இலக்கிய சந்திப்பு 18.மிக அதிகளவு ஆர்வலர்கள் பங்கு பற்றியதும் தமிழ் முரசு அவுஸ்திரேலியா என்ற மின் பத்திரிகை மற்றும் தமிழ் அவுஸ்திரேலியன் என்ற மாதாந்த சஞ்சிகை போன்றவற்றில் நிகழ்வு பற்றிய செய்திகள் வெளியாகி நம் நிகழ்வுக்கு பரவலான அங்கீகாரத்தை தந்ததுமாக அந் நிகழ்வு இருந்தது.
அவ்விரு சஞ்சிகைகளும் தாமாகவே அவற்றைப் பெருந்தன்மையோடும் பேரன்போடும் பிரசுரித்து நம்மைப் பெருமைப்படுத்தின என்பதை இத்தருணத்தில் தெரிவித்து அவற்றின் காரணகர்த்தாக்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றியினை உயர்திணை அங்கத்தவர் சார்பாக சொரிந்து மகிழ்கிறேன். குறிப்பாக தமிழ்முரசு அவுஸ்திரேலியா மின் பத்திரிகை ஸ்தாபகர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கும் தமிழ் அவுஸ்திரேலியன் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் திருமதி. சந்திரிக்கா. சுப்பிரமணியன் அவர்களுக்கும் நம் நன்றியறிதல் என்றும் உரியதாகும்.
உங்கள் ஊடக அனுசரனை நமக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுடன் கூடிய தொலைபேசி அழைப்புகளையும் விருந்துபசாரங்களையும் காண்போரெல்லாம் உங்களைப்பார்த்தோம் உங்கள் நிகழ்ச்சி பற்றி அறிந்து கொண்டோம் என்றெல்லாம் சொல்லும் வகையில் நெஞ்சை நிறைத்துச் சென்றன!
இவை எல்லாம் வெளிப்புறமாக நடந்ததென்றாலும் சந்திப்பின் போது பல இலக்கிய உறவுகளை முதன் முதலாக சந்தித்த நிகழ்வாகவும் பல புத்தக அறிமுகங்கள் கிட்டிய மாலையாகவும் கூட அது இருந்தது.அவர்கள் எல்லோருக்கும் நன்றியும் நல்வரவும்.
இவை எல்லாம் நிகழ்ந்து இரண்டு மாதத்தின் பின்னால் எழுதப்படுகிறது இந்தப்பதிவு.கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளி. இடையில் இருந்த இந்த வெற்றிடத்துக்கு காரணம் நான் சொல்லியாக வேண்டும்.
”இறைவனின் பிரம்படியில் சத்தங்கள் கேட்பதில்லை” என்று ஹிந்தி மொழியில் பிரபலமான சொற்தொடர் ஒன்றுண்டு. நண்பர்களின் இழப்பும் என்னைப் பொறுத்தவரை ஒரு வித தண்டனையாகவே எனக்குப் படுகிறது. நண்பர்களின் இழப்பு என்பதற்கப்பால் நட்பின் இழப்பு என்பது பெருந்துயர்! ஒரு பெரு வெற்றிடத்தை அது வாழ்வில் விட்டுச் சென்று விடுகிறது.
என் வேலைத்தலத்து இரண்டு நண்பர்களின் திடீர் மரணம்! றே என்பான் விடுமுறை என்று போனான். விபத்தில் மரணமாகி திரும்பாமலே போய்ச் சேர்ந்தான். ரெங்கோ என்பான் வேலைத்தலத்தில் வேலைசெய்து கொண்டிருந்த போதே மாரடைப்பில் ஸ்தலத்திலேயே மரணமானான். வாழ்வின் பாதிக்காலத்தைக் கூட தாண்டாத; சிறு குழந்தைகளோடு கூடிய தம் குடும்பத்தை திடீரென பாதியில் விட்டு என்றென்றைக்குமாக மறைந்து போனார்கள்.
இச் சம்பவங்கள் முகத்தில் ஒரு பேருண்மையை அறைந்து சொல்லிச் சென்றது. வாழ்க்கையில் எங்கு போய் கொண்டிருக்கிறோம்? எங்கு போக வேண்டும்? என்ற தத்துவார்த்த சிந்தனையில் இருந்து இன்னமும் விடு பட முடியவில்லை.இலக்கும் தீர்மானங்களும் இன்னமும் அடையப்படாது இருக்கின்ற போதும் காலம் யாருக்காகவும் காத்திருக்கப் பாவதில்லையே! இதோ அடுத்த மாதத்தைத் தாண்டி அதற்கடுத்த மாதமும் வந்தாகி விட்டது.
நேற்றய தினம் நினைவு படுத்தல் குறுஞ்செய்தி மழைஷிரயாவிடம் இருந்து வந்திருந்தது.ஞாபகமூட்டப்பட்ட செய்தி அடுத்த ஞாயிற்றுகிழமை இலக்கிய சந்திப்பு இருக்கிறது அழைப்பிதழை தாமதியாது அனுப்புக என்பது அச்செய்தியின் சாரம்.
இதோ அந்த அழைபிதழ் அனுப்பப்படுவதற்கு முன்னால் இப்பதிவு வருகிறது.
பின் மாலை நேரத்துப் பூங்கா. திட்டமிட்டிருந்த கூடாரத்தில் யாருடயதோ பிறந்த நாள் நிகழ்வால் நாம் புல்வெளிக்கு இடம் மாற வேண்டி இருந்தது.முன் மாலை நான் நிகழ்வுக்காக பிஸ்கட்டுகள் வாங்க கடையில் காத்திருந்த சமயம் மழைப்பிரியை ஷிரயா நான் கோப்பி கொண்டு வருகிறேன். நீங்கள் அதற்கு தயார் படுத்த வேண்டாம் என்று தொலைபேசியில் அழைப்பொன்று தந்தார்.நல்லதாய் போய் விட்டது அப்படியானால் நான் தேநீர் எடுத்து வருகிறேன் விரும்பியவர்கள் விரும்பியதைக் குடிக்கட்டும் என்றவாறு என் தாயார் சிரத்தையோடு செய்து தந்திருந்த பைத்தம் பணியார உருண்டைகளையும் எடுத்துக் கொண்டு அவ்விடம் போய் சேர்ந்த போது ரவியும் பானுவும் சொல்லாமலே வடையும் சட்னியும் கொண்டு வந்திருந்தார்கள்.
ஒவ்வொருவரும் படிப்படியாக வர ஆரம்பித்தார்கள். முதலில் பல புதிய முகங்கள் பிரசன்னமாகி இருந்த படியால் முதலில் ஒவ்வொருவரும் தம்மைத்தாம் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்.அதற்கிணங்க எல்லோரும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.சற்றே கூச்சம் சற்றே வெட்கம் சற்றே தயாரின்மை இன்னும் சற்றே எதிர்பாராமை எல்லாம் தொனிக்க நடந்த அந்த அறிமுகப்படலம் ஒரு ஆசுவாசத்தையும் சகஜ நிலைமையையும் நிகழ்ச்சிக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தது.
அன்றய தினத்து நிகழ்வு ”வாழ்வனுபவங்களும் வாசிப்பனுபவங்களும்” என்ற தலைப்பில் அமைந்திருந்தது. அன்பு நண்பர் சத்திய நாதன் அவர்களின் பரிசுச்சிறுகதை வாசிப்பனுபவத்திற்காகவும் வாழ்வனுபவம் என்ற தலைப்பில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் கலந்துரையாடுவதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு அது.எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் மிகக் கலகலப்பானவர். எழுதுபவர்கள் மற்றும் வாசிப்பவர்கள் எல்லோரும் அவருக்கு தன்குடும்பத்தவர்கள் போன்று போஷிப்பவர்.அவர் வாழ்வனுபவங்கள் எவ்வாறு இலக்கியமாகின்றன என்பது பற்றியும் எல்லோரும் பார்ப்பதை ஒரு எழுத்தாளன் எவ்வாறு பார்த்து அதனை கலைவடிவமாக்கிக் கொள்கிறான் என்பது பற்றிப் பேசினார்.காலையில் எழுந்து முதல் நீங்கள் செய்வது என்ன என்ற வினாவினை எழுப்பி நம் அவதானிப்புகள் சிலவேளைகளில் எவ்வளவு மேலோட்டமாக அமைந்து விடுகிறது என்பதற்கு ஒரு சிறு பயிற்சியும் தந்து விளக்கினார்.
எழுந்தவுடன் மணிக்கூட்டைப் பார்ப்பதாக பலரும் சொல்ல அது என்ன வடிவத்தில் அமைந்த கடிகாரம் என்ன தயாரிப்பு போன்ற வினாக்களை எழுப்பி நம் பார்வை விசாலிக்க வேண்டிய தேவைகளைப்பற்றிச் சொல்லியது கேட்போரைச் சற்றே நிமிர்ந்திருக்கச் செய்தது.அவுஸ்திரேலிய முதியோர் தாம் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒன்றுகூடி வாழ்வனுபவப்பகிர்வுகளை மேற்கொள்ளுகிறார்கள் என்றும் அது சம்பந்தமான அழைப்பிதழ் ஒன்று தனக்குக் கிட்டியதாகவும் தான் சென்று வந்தது பற்றியும் சொன்னார்.
மேலும் சத்திய நாதன் அவர்களுடய சிறுகதையைப் பற்றி சொன்ன போது அது புதிய களத்தினையும் புதிய பார்வையினையும் தந்திருப்பதாகவும் தமிழுக்கு அது ஒரு புதிய பரிமானத்தைத் தருவதாகவும் சொன்னார்.அது புலம் பெயர்ந்து வந்ததனால் விளைந்த பார்வையும் சிந்தனையும் என்பது பார்வையாளர்கள் முன் வைத்த கருத்தாக இருந்தது.
பாஸ்கரன் அக்கதையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த போது இந்தக் கதை ஒரு புதிய களத்தையும் புதிய பரிமானத்தையும் புதிய பார்வையையும் வழங்குவதாகவும்; நாம் சுற்றிச் சுற்றி ஒரே கதைக்களத்தையும் கதைப்பாணியையுமே கைக்கொள்ளுகிறோம் என்றும்; அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வந்து புது மண்ணில் கால்பதித்த பின்னாலும் ஈழம் அரசியல் அது சம்பந்தப்பட்ட விடயங்களைத் தாண்டி நம் கால்பதித்திருக்கிற மண்ணில் நிகழும் சம்பவங்கள் விடயங்களில் நாம் கருத்துச் செலுத்த மறுக்கிறோம் என்றும்; விரிந்த பார்வையையும் வெளிச் சிந்தனைகளை உள்வாங்க வேண்டிய தேவையையும் இலக்கியம் வேண்டி நிற்கிறது என்றும்; தனக்கு இக்கதை மிகப் பிடித்துப் போயிருந்ததற்கு அது ஒரு முக்கிய காரணம் என்றும் அதன் காரணத்தால் தன் மின் பத்திரிகையிலும் இக்கதையைத் தான் பிரசுரித்திருந்ததாகவும் கூறினார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் தான் ஒரு மின் பத்திரிகை ஆரம்பிப்பதற்கே அது தான் முழுக்காரனம் என்றும் சொன்னார்.
இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் இருந்து வருகைதந்து தற்சமயம் இங்கு தங்கி இருக்கும் தாமரைச் செல்வி அவர்கள் தன் கணவரோடு வந்திருந்து இந் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டி இருந்தார். அவர் முன் கூட்டியே திரு. சத்தியநாதன் அவர்களுடய சிறுகதையை அனுப்புமாறு கூறி அதனை வாசித்து விருப்போடு தன் சகோதரியோடும் கணவரோடும் நிகழ்ச்சியில் சமூகமளித்திருந்தார்.
அவர் அது பற்றி கருத்து தெரிவித்த போது விறுவிறுப்பும் சுவாரிசமும் குன்றாமல் ஒரு வித்தியாசமான கருவைத் தேர்ந்தெடுத்து அதனை அதன் சிறப்புக் குன்றாமல் அந் நிகவு பற்றிய நுட்பமான குறிப்புகளோடு அதாவது இயந்திரங்கள் தொழில் நுட்பங்கள் பற்றிய சரியான தகவல்கள் அடங்கிய விதமாக அக்கதை புனையப்பட்டிருந்தது என கருத்துத் தெரிவித்தார்.
இந்த இடத்தில் இசை மற்றும் திரைப்பட அறிவு மிக்க கொண்டவரும் ஊடகத்துறையில் பலவருட காலமாக ஆர்வத்தோடு இயங்கி வருபவரும் மிகுந்த அவதானிப்புக் கொண்டவருமான கானாபிரபாவின் அமைதியை கலைத்து அவருடய பார்வையை கேட்க விரும்பி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் பிரபா என்று கேட்டேன்.புன்னகையைப் பதிலாய் தந்த அவர் தனக்கு கதை வாசிக்கக் கிடைக்கவில்லை என்றும் தான் இனி வாசித்துப் பார்ப்பதாகவும் கூறிய அவர் அண்மையில் மணிரத்தினம் அவர்களுடனான பேட்டி பற்றிய புதிய பார்வை கொண்ட புத்தகம் ஒன்று பற்றி விதந்து கூறி புதிய பார்வைகள் புதிய வடிவங்களில் பதியப்படுகின்றன வெளிவருகின்றன என்றும் தேடலும் ஆர்வமும் தான் அத் தீனியை நாம் கண்டடய வழி வகுக்கும் என்றும் ஒரு ஊடகவியலாளனின் கைகளில் ஒரு கலைஞனின் ஆழுமைப் பிரகாசிப்பும் விகசிப்பும் எவ்வகையில் தங்கி இருக்கிறது என்பதையும் அவ் ஊடகவியலாளன் எவ்வாறான தகுதிகளை அறிவினை பரந்து பட்ட அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றி அப்புத்தகத்தை முன் வைத்து பேசினார். எல்லோரும் நினைப்பது போல சொல்லப்படுவது போல காட்டப்படுவது போலல்லாத மணிரத்தினத்தின் முழுமையான ஆழுமையை – அம்மனிதனின் உள்லார்ந்து ஒளிர்ந்தபடி இருக்கும் பிரகாசிப்பை விகசிப்பை தான் அப்புத்தகத்தில் கண்டதாகவும் அது அவ் எழுத்தாள ஊடகவியலாளனின் ஆழுமைப்பண்பையே வெளிப்படுத்தி நின்றதாகவும் கூறினார்.
அவ்வாறான புத்தகங்கள் தமிழுக்கான நல்வரவுகள் என்றும்; அவ்வாறான புத்தகங்களும் நல்லதொரு வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவத்தையும் ஒருங்கே தரும் என்றும் கூறினார்.
தாமரைச் செல்வியின் கணவர் திரு.கந்தசாமி அவர்கள் ’விண்ணைத்தாண்டி வருவேனே’ என்றஅக்கதையை வாசித்த ஆர்வத்தோடு வந்திருந்தார். அவர் அக்கதை பற்றிக் கருத்துத் தெரிவித்த போது எந்தக்கதையாக இருந்தாலும் சரி எந்தக் களத்தில் எத்தனை புத்திசாலித்தனமாக நிகழ்ச்சிகள் கதையில் நடந்தாலும் சரி அங்கு உள்ளீடாக ஒரு விடயம் இருக்கிறது. நமக்கான ஒரு செய்தி அங்கிருக்கிறது. அது தர்மம் வாழும் என்பதாகும். அது அவுஸ்திரேலியக் களமாயினும் என்ன ஈழத்துக் களமாயினும் என்ன மனிதம் என்பதும் தர்மம் என்பதும் பிரபஞ்சத்துச் சட்டம் என்பதும் எங்கும் ஒரே மாதிரியாகவே நிலைநாட்டப் படுகிறது. இக்கதையும் அதையே புலப்படுத்துகிறது. அந்த வகையில் இக்கதை சிறப்புப் பெறுகிறது. இக்கதையை நான் அவ்வாறு தான் பார்க்கிறேன் என்றார்.
இந்தப் பெரியவரைப் பற்றியும் தாமரைச் செல்வி அவர்களோடு எனக்கிருக்கும் உறவு பற்றியும் ஒரு குறிப்புச் சொல்வது இவ்விடத்தில் சற்றே சுவாரிசமாக இருக்கும். அப்போது நான் பல்கலைக்கழகத்துக்குத் தேர்வாகி இருந்த சமயம். தாயார் செய்யும் சமயலுக்கு உதவாமல் தொட்டாட்ட வேலைகளையும் புறக்கணித்து தலையணைமேல் புத்தகம் வைத்து குப்புறப்படுத்து காலாட்டியபடி சுவாரிசமாய் புத்தகம் படிக்கும் கனவுகள் சுமந்த பருவம். எனக்குக் கிடைத்த புத்தகம் தாமரைச் செல்வியின் ‘சுமைகள்’ என்ற நாவல்.தொடத் தொடக் குறையா சுவாரிசமும் அதற்குச் சற்றும் குறையா மண்வாசமும் யதார்த்த நிகழ்வுகளும் கூடிய வன்னி மண்ணின் சுவையை தமிழ் நல்லுலகத்துக்குக் கொண்டு வந்த நாவல்.
புத்தகம் பெரிதும் பிடித்துப் போய் ஒரு ரசிகையாய் அவவுக்கு நான் ஒரு பாராட்டுக்கடிதம் எழுதியது நல்ல நினைவு.அது தான் நான் எழுதிய முதலும் இறுதியுமான படித்துப் பாராட்டிய கடிதம். நாவலின் செந்தில் என்ற பாத்திரமும் தாமரைச்செல்வி,குமரபுரம், பரந்தன் என்ற விலாசமும் இன்னும் நினைவாக இருக்கிறது.
பதில் ஏதும் வந்ததாய் நினைவில்லை.அவ்வருட இறுதியில் பல்கலைக்கழகம் புகுந்த போது பகிடிவதைகளுக்கு ஒளித்துத் திரிந்த ஒரு இடைவெளியில் கெளரி (தாமரைச் செல்வியின் தங்கை) என்னைக் கண்டடைந்தாள்.தன்னை எழுத்தாள அக்காவின் தங்கை என அறிமுகப்படுத்தினாள்.அன்று தொடங்கிய அந்த நட்பு இன்று புலம் பெயர்ந்த பின்னாலும் ஒரே மண்ணில் ஒரே சிற்றூரில் வாழக் கொடுத்து வைத்த நட்பு அது.
அப்போது அன்று தன் அக்காவைப்பற்றி அவர் பேசியதை விட தன் பெரிய அத்தானைப்பற்றி பேசியது அதிகம்.தம் குடும்பத்தில் அதிக அங்கத்தவர் என்றும் திருமணம் முடித்து மூத்த அத்தானாக அவர் எங்கள் வீட்டுக்கு வந்த போது அவர் கொண்டு வந்தது ஒரு சூட்கேஸ் நிறைய வெட்டிச் சேகரிக்கப்பட்ட பத்திரிகை பொக்கிஷங்கள் என்று சொன்னது நினைவுக்கு வர இவ்விடயத்தையும் அங்கு பகிர முடிந்தது.
மேலும் சிலர் தமக்கு இக்கதை வாசிக்கக் கிடைக்கவில்லை என்றும் இனித் தாம் வாசித்து தனிப்பட்ட முறையி கதாசிரியரோடு அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இத்தகய கருத்துக்கள் சொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயம் தேநீர் சிற்றுண்டிகளை பரிமாற சில நண்பர்கள் உதவ சிலர் தாமாகவே தமக்குப் பிடித்தமானவற்றை எடுத்துக் கொள்ள அந்த இடைவெளியில் ஏற்புரை வழங்க திரு சத்தியநாதன் அவர்கள் வருமுன்னர் சில புத்தக சஞ்சிகை அறிமுகங்கள் நிகழ்ந்தன. திரு. கருணாகரன் அவர்கள் நாடகத் துறையில் பல வருடங்களாக ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்.பல வேலைகளுக்கும் மத்தியில் திரு முருகபூபதி அவர்களின் அழைப்பின் பேரில் வந்திருப்பதாகத் தெரிவித்த அவர் ’உடல்’ என்றொரு காலாண்டு சஞ்சிகை பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருவதாகவும் அதன் ஆசிரியர் நம் இந்த இலக்கியச் சந்திப்பில் அச் சஞ்சிகையை அறிமுகப்படுத்தி அதற்கு நம் இலக்கிய ஆர்வலர்கள் இலக்கிய கலை சம்பந்தமான விடயங்களை தமக்கு எழுதி அனுப்பலாம் என்ற விடயத்தைத் இங்கு தெரிவிக்கும் படி சொன்னதாகத் தெரிவித்தார்.அச் சஞ்சிகை” ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபுசார்ந்த கலைகளின் வரலாறே தீர்மானிக்கிறது. அதுவே மனித சமூகத்தின் வரலாறுமாகும்” என்ற தாரக சிந்தனையை முன் வைத்து ஈழத்து நாடக வடிவங்களைப் புத்துயிர்க்கச் செய்யும் பணியினை – தொண்டை ஆற்றி வருகிறது.உலகு தழுவிய நாடகச் சிந்தனைகளையும் நாடு தழுவிய பார்வைகளையும் கொண்ட ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் கொண்டிருக்கிற அச்சஞ்சிகைப்பணி தொடர்வதாக!
அதே நேரம் ஆரிப் இஸ்மயில் என்பார் – அவரும் எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் அழைப்பின் பேரில் வந்திருந்தவர் – அவர் ஈழத்து எழுத்தாளர் மருதூர் கனியின் புதல்வர்.அவர் தன் தந்தையின் புத்தகங்கள் நாவல்கள் சிலவற்றை அன்பளிப்பாய் தந்து புன்னகையோடு தன் தந்தையை நமக்கு அறிமுகப்படுத்தினார். மருதூர் கொத்தன் கதைகள், மண்பூனைகளும் எலி பிடிக்கும் என்ற புத்தகமும் ஈழத்தின் இஸ்லாமிய இலக்கிய வளத்துக்கு புதுச் செழுமையையும் இலக்கிய ஊட்டத்தையும் அளிப்பவையாக உள்ளன.இஸ்லாமியப் பேச்சு வழக்கும் கதைக்களங்களும் வாசிக்க வாசிக்க அலுக்காதவை.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல ”மருதூர்கனியின் சிறுகதைத் தொகுதியில் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை கவித்துவ ஆற்றலுடன் வெளிப்படுகிறது.கிழக்கிலங்கை ஊற்றுக்களில் மருதூர்கனியும் ஒருவர்” என்பது முற்றிலும் உண்மையே. மதிப்பார்ந்த மருதூர் கனி அவர்கள் அன்றயதினம் அங்கில்லாத போதும் அவரது பிரதிநிதியாய் அவரது மகன் அவர் புத்தகங்களூடாக நமக்கு அவரை அறிமுகப்படுத்திச் சென்றது மனதுக்கு நிறைவான ஓரம்சமாக அமைந்திருந்தது.
சற்றே எல்லோரும் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர் திரு சத்திய நாதன் அவர்கள் தன் ஏற்புரையை வழங்கினார்.இக்கதை உண்மையில் ஆங்கிலப்பத்திரிகையில் வந்த ஒரு செய்தி என்றும்; இங்கு இதற்கு முன்னரும் இவாறான துணிகரமான சம்பவங்கள் நிகழ்ந்தது உண்டு என்றும்; சிறுகதைப் போட்டி பற்றிய செய்தியை யசோதா இலக்கிய சந்திப்புக் குழுவினருக்குத் தெரிவித்த போது இச்செய்தியைக் கதையாக்கும் எண்ணம் தனக்குதித்ததாகவும் இரவோடு இரவாக இக்கதையை கையெழுத்துப் பிரதியாக எழுதி ஸ்கான் பண்ணி குறிப்பிட்ட தாய்தமிழ் பள்ளி போட்டியாளருக்கு அனுப்பியதாகவும் கூறி கதைக்களம் உருவாகிய முறையையும் அதற்காகத் தான் தேடிய தொழில் நுட்ப விடயங்களையும் கூறி அதனை சரியாகப் பொடுத்துவதில் கொண்ட சிரமம் மற்றும் சிரத்தைகளையும் சுவை படக் கூறினார்.
பல புதிய சொல்வழக்குகள், மரபுத் தொடர்களையும் கூறினார். (பல நினைவழிந்து போய் விட்டன. சந்திக்கின்ற போது மீண்டும் கேட்டு பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்) அதில் ஒன்று ஆங்கிலேயர்கள் ஒருவர் உடனான நெருக்கத்தைச் சொல்ல தேநீர் குவளைக்கும் உதட்டுக்குமான அளவு தூரம் என்று சொல்வார்கள் என்பது போன்ற சுவாரிசங்களையும் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக இப்படியான ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தி எல்லோரும் சந்தித்து அளவளாவிச் செல்லும் வகையில் இச்சந்திப்புகளை ஒழுங்கு செய்யும் யசோதாவுக்கு நன்றி கூறி அமர பொழுது சாய ஆரம்பித்திருந்தது. நேரமும் தோதாய் முடிவுக்கு வந்திருந்தது. ‘எல்லாரும் குறூப் படம் எடுக்க வாங்கோ” என்று பூபதி அண்ணா ஆரவாரப்பட எல்லோருமாக குறூப் படம் எடுத்துக் கொண்டோம். பலரும் பலரையும் பலகாலங்களின் பின் இவ்வாறான ஒரு சந்தர்ப்பதில் சந்தித்துக் கொண்ட காரணத்தால் தத்தமது தோழமைகளோடு சுதந்திரமாய் கதைத்து குசலம் விசாரித்து மகிழ்ந்துகுலாவி அளவளாவி செல்வதைக் காண மனம் குளிர்ந்தது.
ஒரு தாய்மை கொள்ளும் மன நிறைவு போன்றதது.
எல்லோரும் கலைந்து சென்ற போது பொருட்களின் பாரங்களைப் பகிர்ந்து கொண்டபடி மழைஷிரயா என்னோடு வந்தார்.குளிரும் இருளும் சூழ ஆரம்பித்திருந்த அப்பொழுதில் என்னிடம் கேட்க ஒரு கேள்வி மிஞ்சி இருந்தது அவரிடம்.’ ஏனக்கா எல்லாரும் தங்களை அறிமுகப்படுத்தச் சொல்லேக்க தாங்கள் செய்யிற வேலையத் தான் தங்கட அடையாளமா – அறிமுகமா சொல்லீனம். வேலை முடிஞ்சாப்பிறகு அவை யார்?’
யாராவது பதில் சொல்வீர்களா?
அதில் ஆரம்பத்தில் சொல்லி இருந்த என் தத்துவார்த்தத் தேடலுக்கான பதிலும் மறைந்திருக்கக் கூடும்.