RSS

Monthly Archives: June 2014

இலக்கிய சந்திப்பு – 20 –

Image

 

இனிய இலக்கிய உள்ளங்களே!

அகமும் புறமும் நலம் தானா?

நாம் சந்தித்து ஒரு மாதத்திற்கு 1 நாள் மீதமிருக்கிறது. இன்று சற்று முன்னர் தான் இங்கு வர காலமும் வாழ்வும் என்னைப் பணித்திருக்கிறது. பலருடய கடிதங்கள் திறக்கப்படாமல் அப்படியே இருப்பது இன்னும் மனதை உறுத்துகிறது. எல்லோருக்கும் பதில் வரும்.விரைவாக.

என்னை மன்னியுங்கள். காரணங்களைக் காட்டி வக்காலத்து வாங்குவது உங்களை அவமானப்படுத்துவது போலாகும் என்பதால் அதனை சொல்லாமலே நகர்கிறேன்.

கடந்த மாத இலக்கிய சந்திப்புக்கு வழக்கமாக வருபவர்களோடு என் வலையுலக தோழி கீத மஞ்சரி முதன் முதலாய் வந்து நம்மைப் எதிர் பாராமல் பெருமைப்படுத்தி இருந்தார். குமார செல்வம் தன் சொந்தத் தோட்டத்தில் விளைந்த சுவைதரு கவிக்கனிகளோடும் முகம் நிறைந்த புன்னகையோடும் வந்திருந்து நம் வழக்கமான அங்கத்தவர்களை வசப்படுத்தி இருந்தார். மழைக்காரி தன் புதிய முகமொன்றை பிரசன்னப்படுத்தி நம்மை அதிசயத்தில் ஆழத்தி இருந்தார். நான் கொண்டு போனவைகள் இன்னொரு வகை சார்ந்ததாக அமைந்திருந்தன. அவைகள் எல்லாவற்ரறையும் கவிதா பஞ்சாமிர்தம் என்று  சொல்லலாம்.

ஆனாலும் அன்று நடந்த கவிதா அற்புதங்களும் விவாதங்களும் விளக்கங்களும் பகிரப்பட்ட விடயங்களும் சொல்லப்படாமலே மனதுள் புதைந்து போய் இருக்கின்றன.விரைவில் அவற்றை பதிகிறேன்.

நண்பர்களே! காலம் விரைந்து வந்து விட்டது.மிகத்தாமதமாக இந்த அழைப்பிதழ் உங்களை நாடி வருகிறது. அது மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்னரே அனுப்பி இருந்திருக்க வேண்டிய அழைப்பிதழ். அப்படி இருந்தாலும் கூட நேர நெருக்கடிக்குள் சில மணித்துளிகளை ஒதுக்குவதன் சிரமங்கள் நான் அறியாததல்ல.

மிக தாமதமாக இந்த அழைப்பிதழ் அனுப்பப் படுகின்ற போதும் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ‘குறுமுனி’ என கம்பன் கழகத்தினர் மிக சரியாக விதந்துரைத்த என் பெரு மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய உயர்திரு தனபாலசிங்கம் ஐயா அவர்கள் “ஆங்கில இலக்கிய அறிமுகம்; ஷேக்ஸ்பியர்” என்ற தலைப்பில் அதிதி உரையாற்ற வருகிறார். ஐயா அவர்களை சுமார் இரு மாதங்களுக்கு முன்னரேயே கேட்டுவைத்து கொண்ட நிகழ்வு இது. ஐயா அவர்களின் அறிவும் ஆற்றலும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

செவிக்கும் அறிவிற்கும் அளவளாவுவதற்கும் ஏற்றதான இந் நிகழ்வில் நீங்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடும் உரிமையோடும் உங்கள் எல்லோரையும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இப்போது வாடைக்காலம் ஆரம்பித்து விட்டதால் குளிரும் இருளும் மிக விரைவாகவே சூழ்ந்து கொள்கிறது. இயற்கை நாம் மண்டபம் ஒன்றுக்கு இடம் மாற வேண்டிய தேவையை தந்துள்ளது.பென்டில்கில்லில் அமைந்துள்ள அம்பி உணவகத்தில் முன்மாலை நேரம் மிகச்சரியாக 3.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். அதே போல மிகச்சரியாக 5.00 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெறும். நிகழ்ச்சிக்கு முன்னரும் பின்னரும் உணவு விடுதி பொது மக்களுக்கு திறந்து விடப்பட இருப்பதால் நீங்கள் எல்லோரும் மிகச்சரியான நேரத்துக்கு வந்து நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்கவும் நிறைவு செய்யவும் உதவுவீர்களாக!

மீண்டும் மிகத்தாமதமான அழைப்பிதழுக்கு உங்கள் ஒவ்வொருவரிடமும் என் குற்ற உணர்வுடனான மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இன்றய நாளும் இனி வரும் நாளும் இனியதாகுக!

தமிழால் இணைந்திருப்போம்.

 
Leave a comment

Posted by on 27/06/2014 in Uncategorized