கடந்த இலக்கிய சந்திப்பு – 19ல் எனக்குப் பிடித்த கவிதையும் காரணமும் என்ற கருப்பொருளில் ஒரு கவிக்களியாட்டத்தைக் கண்டு களித்திருந்தோம். அது சம்பந்தப்பட்ட பதிவு எழுதப்படாமல் மனதில் தேங்கிப்போய் இருக்கிறது. அதனை எழுதினால் தான் ஆத்துமம் சாந்தி பெறும். அதற்கிடையில் அடுத்த சந்திப்பு வந்திருந்தது. அது ஆங்கில இலக்கிய அறிமுகத்தை ஷேக்ஸ்பியர் ஊடாக தரிசிக்கும் வாய்ப்பினை தந்திருந்தது.
இந்த இடத்தில் ஐயா., குறுமுனி தனபாலசிங்கம் ஐயா அவர்களைப்பற்றி அவசியம் நான் சொல்ல வேண்டும்.அவர் பேசுவதைக் கேட்கின்ற பொழுதுகளில் ஒரு துறை போந்த தமிழ் பேராசிரியர் ஒருவர் பேசுவதைக் கேட்பது போல இருக்கும். அது ஒரு சுகானுபவம். உலக இலக்கியங்களின் இன்னமும் திறக்கப்படாத ஊற்றுக்கண்களை ஐயா ஒரு தந்தைமையின் தற்பரியங்களோடு காட்டிச் செல்லும் பரிவும் அக்கறையும் அந்த மனிதர் பாலான மதிப்பை உயர்த்த வல்லது. ஈரச் சுணைகள் தென்படும் இடங்களை சுட்டிக் காட்டி ஒப்புவமை சொல்லி நம்மை அறியப் பண்ணும் பாண்மையில் தமிழ் பண்பாடு மிளிர்ந்து நிற்கும்.அதில் ஆசிரியத்துவம் இருப்பதில்லை. ஆராய்ச்சிக் கண்ணோட்டம், உலக ஒப்புவமை, சிந்தனையைத் தூண்டிவிடவல்ல; எங்களைத் தேடப்பண்ணும் ஒரு வித ஈர்ப்புசக்தி, தமிழ் சுவையை பண்ணோடும் பாடலோடும் தெளிவாக ஒப்புவிக்கும் பாடமாகிப்போன பாடல்கள், அவை ஆற்றிழுக்காக உடைப்பெடுத்து ஓடும் பெருக்கு, மேலும் வீரியம் மிக்க விதைகளை அவ்வப்போது தூவிக்கொண்டு போகும் விரித்துப் பார்க்க வேண்டிய இடங்கள்…. என ஐயா அவர்கள் ஒரு மகா சமுத்திரம்.
ஆத்மார்த்த சுத்தியோடு சொல்வதாக இருந்தால் அந்தச் சந்திப்புப் பற்றிய தொகுப்பான பதிவை எழுதுவது சாத்தியம் இல்லை. எத்தகைய சிந்தனைகளை அந்தச் சந்திப்பு ஏற்படுத்திக் கொடுத்தது அவர் காட்டிச் சென்ற ஊற்றுக் கண்கள் என்னென்ன என்பது பற்றி வேண்டுமானால் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. அன்றய தினம் பிரசன்னமாகி இருந்த மழைஷிரயா, ரவி, பானு, கமலா, கீதமஞ்சரி, கார்த்திக் வேலு, சுந்தரவடிவேல் போன்றோரும் அவ்வாறே உணர்ந்திருப்பர்.
அவர் நம்மக்குக் கிடைத்ததும் நம்மோடு பேச அவர் மனமுவந்ததும் நாம் செய்த புண்ணியம். கார்த்திக் வேலு அவர்கள் சொன்னது போல ஐயா அவர்களின் பேச்சை ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சாலப் பொருந்தும். அதனை அவர் வேண்டுகோளாகவே விடுத்திருந்தார். அதனையே மழை ஷிரயாவும் மறு நாள் நினைவூட்டி தான் ஓர் ஒலிப்பதிவு கருவி வாங்குவதாக வாக்களித்திருந்தார்.
உண்மையில் ஐயா அவர்களுடய பேச்சை எழுத்தில் கொண்டுவருவதற்கு என் தமிழாற்றல் போதாது. போதவே போதாது. இதே மனநிலையை ஐயா அவர்கள் சங்க காலத்து ஒளைவை பற்றிய சந்திப்பின் போதும் தெளிவாக நான் அனுபவித்தேன். ஆகையால் இத்தடவை ஷிரயாவின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன். இருவருமாக அந்தப் பதிவை எழுதுவதாக ஒத்துக் கொண்டிருக்கிறோம். அது விரைவில் வெளிவரும்.
இவை நிற்க,
சில மாதங்களாக உயிரிழப்புகள் பலவற்றை சந்திக்க நேர்ந்தமையை இட்டு சோர்வுற்று பதிவுகள் எழுதப்படாமலும் இலக்கிய நண்பர்களின் அன்பார்ந்த கடிதங்களுக்குப் பதில் எழுதாமலும் மனச்சோர்வுற்றிருந்தேன். இரு மாதங்களுக்கு முன்னரான பதிவில் நாம் யார் என்ற கேள்வியை எழுப்பி நாம் வந்ததன் அடையாளமாக எதை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்ற தத்துவார்த்த சிந்தனையை எழுப்பி இருந்தேன். அதற்கு நம் பிள்ளைகளே நாம் விட்டுச் செல்லும் அடையாளம் என்று நண்பர் திரு சத்திய நாதன் அவர்களும்; சில வினாக்களுக்கும் ஏன் இப்படி நடக்கிறது என்ற புதிருக்கும் நம்மிடம் விடை இல்லை என்ற கருத்தை அன்பு அண்ணன் எழுத்தாளர் முருகபூபதி அவர்களும் தந்து சென்றிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் இச் சந்தர்ப்பத்தில் என் அன்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அவற்றினைச் சொல்லி ஒரு மாதம் ஆகவில்லை இன்னொரு உயிரிழப்பைச் சந்திக்க நேர்ந்தது என்னிடம் வந்து சேர்ந்த இன்னொரு துர் அதிஷ்டம். இருந்த போதும் இலக்கிய சந்திப்பினை மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் ஒரு நாளைக்கு முன்னர் தான் அழைப்பிதழ் அனுப்பி இருந்த போதும் ஒன்பது பேர் வந்திருந்து நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக மழைஷிரயாவுக்கு என் தனிப்பட்ட நன்றிகள் என்றும் உரியதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு முன்னரே அவரிடம் இருந்து நினைவூட்டல் குறுஞ்செய்தி வந்து விடும். பல பெறுமதி வாய்ந்த இலக்கிய அன்பர்களை அரிமுகப்படுத்துவதிலும் அவர் தேர்ந்தவர். இவ்வாறு பார்க்கின்ற பொழுதுகளில்”இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது இதுவரையில் எனக்கிருந்த துன்பம் தொலையுது என்றபாடல் உதட்டில் வந்து ஒட்டிக் கொள்கிறது. மகிச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.
இவைகள் எல்லாம் சேர்ந்து ஒழுங்கு படுத்தப்பட்ட இலக்கிய சந்திப்பு என்னை தூக்கி நிறுத்தி விட்டது. இதோ விழித்தெழுந்திருக்க வைத்து விட்டது தமிழ். அம்பி உணவகத்தில் பெருக்கெடுத்தோடிய தமிழ் ஆற்றின் பெருக்கில் பல்வேறு ஊற்றுக் கண்களை இனங்காட்டிப் போனது ஐயாவின் தமிழ் கண்கள்.
அவர் காட்டிச் சென்ற ஊற்றுக் கண்கள் பல.
* சோழ சாம்ராஜ்யம் கம்பனை புறக்கணித்ததா? / முதலாம் எலிசபெத் காலத்தில் ஷேக்ஸ்பியர் மதம்சார்ந்து அதே மாதிரியான நெருக்கடியைச் சந்தித்தாரா?
* உலகம் ஒரு நாடக மேடை; தமிழியச் சிந்தனை / As you like it என்பதில் 7 பருவங்களும் சொல்லப்படுகிறது.
* உலகம்; அம்பலம் / அரங்கு ; நாடக மேடை – ஒப்பீடு
* மொழியின் தோற்றத்தில்/ வளத்தில் சொல் உருவாக்கத்தின் பங்கு – வடமொழி சமஸ்கிருத செல்வாக்கில் இருந்து தனியாகத் தமிழ் கிளர்ந்தது ;கம்பராமாயணம். / பிரெஞ் லத்தீன் மொழிகளில் இருந்து தனியாக ஆங்கிலம் வளர்ந்தது.ஷேக்ஸ்பியர், ஹோமர்… நாடக ஆசிரியர்கள்./ 21,000க்கு மேற்பட்ட ஆங்கிலச் சொற்கள் உருவாக்கப்பட்டன 11 – 15ம் நூற்றாண்டுகளுக்குள்
* கதாபாத்திர வார்ப்பு, உலகுதழுவிய தன்மை, சொல்லாக்கம் அதாவது மொழிவளம், சொன்னமுறை ; – இவைகளூடாக உலக இலக்கியங்களுடனான கம்பராமாயண ஒப்பீடு.
* பாரதி – அக்கவிஞன் அறிவும் ஆற்றலும் மேலைத்தேய அறிவியல் சிந்தனையை பெயர்த்து வந்த ஆற்றல்.
*உலக இலக்கியங்களில் ஹீட்ஸ் கசநோயில் பீடிக்கப்பட்டு 29 வயதில் காலமானதும் பாரதி 37 வயதில் காலமானதும் அதற்கிடையில் அவர்கள் சாதித்து விட்டுப் போன நிகழ்வுகளும். “ இறப்புக்குப் பின்பான வாழ்க்கையை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்” – ஹீட்ஸ் –
* யவனர் – தமிழகத் தொடர்புகள் / சங்கப் பாடல் சான்றுகள் / பிராமிக் கல்வெட்டுக்கள் / வைன் / வரலாற்றுச் சான்றுகள் காணப்படாமை / அதற்கு அரசு நிதி ஒதுக்காமையால் கிட்டாமல் போகும் துர்பாக்கியம்.
அதில் ஒன்று தான் அந்த ஊற்றில் இருந்து பெருகும் இந்தச் சொற்பெருக்கு.
என் இனிய இலக்கிய நண்பர்களே! உங்கள் உள்ளங்களிலும் புதிது புதிதான சிந்தனைகளை ஐயா அவர்களின் சந்திப்பு தந்து போயிருக்கும். எனக்கு உதிக்காத பல அதில் செறிந்திருக்கும். அவற்றை உடனடியாக எழுதி உயர்திணைக்கு அனுப்பி வையுங்கள். அவை உள்ளவாறே உங்கள் பெயரோடு பிரசுரமாகும் என்பதை இச் சந்தர்ப்பத்தில் மிக்க சந்தோஷத்தோடு சொல்கிறேன். குறைந்த பட்சம் பின்னூட்டத்திலேனும் அச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டால் தமிழ் பெருக்கெடுத்து பாயுமல்லவா?
………………………………………………………………………………………………….
மத்திய காலம் என்று சொல்லப்படும் 11 – 15ம் நூற்றாண்டுக்குள் மேலத்தேயங்களில் பிரெஞ் மொழியும் இலத்தீன் மொழியும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. ஆங்கில மொழி பாமர மக்கள் பேசும் ஒரு மொழியாக நாட்டுப்புறங்களில் புழங்கப்பட்ட ஒரு மொழியாக வாய் மொழியாக இருந்தது. இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ’Canterbury tales’ ஆங்கில மொழி வளர்ச்சிக்கு சுமார் 21,000 அதிகமான சொற்களை உருவாக்கி ஆங்கிலத்தை வளம் படுத்திக் கொடுத்தது. அதனை ‘coin the load’ என்றனர். அத்தோடு ஆங்கிலம் பிருத்தானிய தேசத்தை அடிப்படையாகக் கொண்டு நாடு தழுவிய தன் இராச்சியத்தை அமைத்துக் கொண்டு சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டதுடன் தன் சுவீகரிக்கும் இயல்பை தன் மொழி சார்ந்தும் வளர்த்ததோடு தான் காலூன்றிய நாடுகளில் விருட்சமாய் வளர்ந்து நின்ற மொழியில் இருந்தும் தனக்கு வேண்டியவற்றை எந்த வித தயக்கமும் இன்றி சுவீகரித்து தன்னை வளம் கொண்ட மொழியாக வளர்த்துக் கொண்டது.
( இது பற்றி நேற்றயதினம் வீட்டுக்கு வந்திருந்த இங்கு பிறந்த என் பெறாமகனோடு பேசிய போது; ஆம், அது தன்னை வளம் படுத்திக் கொண்டது; ஆனால் அதற்கு தமிழைப் போல தனித்துவம் கிடையாது; அடையாளம் கிடையாது என்று சாதாரனமாய் சொல்லி விட்டுப் போகிரான். மொழியில் ”multiculturalism” போலும்!)
இன்று சர்வதேச மொழியாக தன்னை தங்க வைத்துக் கொண்டமைக்கு அதன் எளிமையும் சுவிகாரப் பண்பும் பிரதான காரணம் என்பதை பலரும் ஏற்பர்.
இவற்றினை அங்கேயே விட்டு விட்டு நாம் தென் தமிழகம் வந்து பார்த்தால் தமிழின் நிலைப்பாடு தெரியும்.சங்க காலத்தில் தமிழின் நிலை எவ்வாறு இருந்ததென்பதற்கு தமிழ் செம்மொழி அந்தஸ்து ஒன்றைப் பெற்ரிருப்பதொன்றே சான்று பகரும்.தமிழின் செம்மொழி ஆழ அகலம் அறிய
http://akshayapaathram.blogspot.in/2010/11/blog-post_24.html இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்.
ஆனால் இது பற்றி எல்லாம் நாம் அதிகம் பெருமைப்பட முடியாது. அந்தப் பெருமைக்கு முற்றிலும் தகுதியானவர் உ.வே.சா, சி.வை. தாமோதரம் பிள்ளை போன்றவர்கள் தான். அது பற்றிய பிரக்ஞை கூட குறுமுனி ஐயா அவர்கள் சங்ககாலத்து ஒளைவையைப் பற்றிச் சொன்ன பொழுதொன்றில் தான் நமக்கும் புலப்பட்டது. அப்போதுகளில் இத்தகய தமிழ் கருவூலங்கள் இருந்த போதும் வடமொழியான சம்ஸ்கிருதமே உயர்ந்தோர் மொழியாகவும் மேல்தட்டு வர்க்க மொழியாகவும் பண்டித்தியத்துக்குரிய மொழியாகவும் செல்வாக்குற்றிருந்தது. தமிழோ கோயில் கருவறைகளிலும் நிலவறைகளிலும் கறையான்களுக்கு இரையாகும் தறுவாயில் இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தான் உ.வே.சா போன்றவர்கள் அவற்றை உயிர்ப்பித்து அச்சுவாகனம் ஏற்றினார்கள். அது கரையான்கள் அரிக்கும் தறுவாயில் இருந்ததென்றும் அவற்றில் பல ஆடிப்பெருக்கில் ஆற்றோடு போட்டு விட்டோம் என்றும் நெய்யூற்றி எரித்து விட்டோம் என்றும் சொல்லப்பட்டு அழிந்தது போக மிஞ்சி இருப்பவை தான் இன்றைக்குக் கிடைத்திருக்கிற சங்க கருவூலங்கள். அவைகள் கூட ஏடுகளில் எழுதப்பட்ட போது (சமண துறவிகள்) அவற்றில் குற்றுகள் வைக்கப்படுவதில்லை. காரணம் ஏடு கிழிந்து விடும் என்பது தான். அதே நேரம் எழுதியவர் பிரதி எடுக்கும் போதோ அல்லது சொல்வதைக் கேட்டு எழுதும் போதோ தன் குறிப்பையும் எழுதியவர் அதில் சேர்த்திருப்பார். அவற்றை அகற்றி உள்ளதைத் தேர்ந்தெடுக்கும் பாரிய பொறுப்பும் உள்ளது. சிலவேளைகளில் ஏடுக்கற்றைகள் இடம் மாறி முன் பின்னாகக் கூட கோர்க்கப்பட்டிருக்கும். மேலும் சிலவோ உழுத்து செல்லரித்து பிரிக்கும் போதே உலுர்ந்து கொட்டுண்ணும் தறுவாயிலும் அமைந்திருந்ததாம். உ.வே.சா. என்று அழைக்கப்படும் தமிழ் தாத்தாவுக்கோ வறுமை வாட்டி எடுத்தது. இவை எல்லாவற்ருக்குள்ளாலும் தான் தமிழை அந்த மனிதன் மீட்டெடுத்துத் தந்தார். இவை எல்லாம் கூட நான் சங்க காலத்து ஒளைவையைக் காணும் பொழுதொன்றில் தான் ஐயா மூலமாக அறிந்து கொள்ள முடிந்தது. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள்
http://akshayapaathram.blogspot.com.au/2014/03/17_10.html சென்றோ அல்லது https://uyarthinai.wordpress.com/2014/03/10/ சென்று பார்க்கலாம்.
15 நூற்றாண்டளவில் உருவான ஆங்கிலம் இன்றைக்கு சர்வதேச மொழியாக வளர்ந்த போதும் அது செம்மொழி அல்ல. தமிழோ செம்மொழி.தமிழுக்குள் கொஞ்சம் குளித்தெழ ஆசை வந்தது ஐயா காட்டிய நீர் திவலை ஒன்று என்னில் தெறித்த காரணத்தால்.
நீர்திவலை: “ஆங்கிலம் நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாய் புதிய சொற்களைச் சுவீகரிக்கும் தன்மை கொண்டதாய் அவற்றை உள்ளவாறே ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டதாய் இருந்தது,. அதனால் அது விறுவிறு என வளர்ந்தது”
பழமை, பெருமை,ஆழம்,அகலம், ஆற்றல், அழகு இருந்தும் தமிழ் என்ன செய்தது?
ஆங்கில அரசாட்சி உலகின் பலபாகங்களிலும் நிலைநிறுத்தப்பட்டதால் அதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தன. தமிழுக்கும் அரச ஆதரவு இருந்த சந்தர்பங்களில் அது அபரிதமாக வளரவே செய்தது. சமஸ்கிருத சொற்கள் மாத்திரமன்றி தம்மை ஆட்சி செய்த அன்னிய அரசுகளின் சொற்களையும் அது சேர்த்துக் கொள்ளவே செய்தது. உதாரணமாக “தமிழனா தமிங்கிலனா” என்ற புத்தகத்தில் காசி ஆனந்தன் இப்படிச் சொல்கிறார்.சற்றே நீண்ட போதும் உண்மையும் சுவாரிசமுமாக இருப்பதால் அதனைத் தருகிறேன்.
“வீட்டுக்கதவைக் கள்ளச் சாவியால் திறந்து – பீரோவில் இருந்த துட்டையும் கோணிப்பையில் இருந்த பப்பாளிப்பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும் கொய்யாப்பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ ரிக்ஷாவில் தப்பி ஓடிய போது தகவல் அறிந்த பொலிஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின” – இது செந்தமிழ் தான் என நினைக்கிறோம். ஆனால் தமிழா இது?
சாவி – போர்த்துக்கேயம்
பீரோ – பிரெஞ்
துட்டு – டச்
கோணி – ஹிந்தி
பப்பாளி – மலாய்
சப்போட்ட – ஸ்பானிஷ்
கொய்யா – பிரேஷிலியன்
சுமார் – பேர்ஷியன்
வயது – சமஸ்கிருதம்
கில்லாடி – மராத்தி
ஆட்டோ – கிரேக்கம்
ரிக்ஷா – ஜப்பானியம்
தகவல் – அரபி
பொலிஸ் – இலத்தீன்
ஏட்டு – ஆங்கிலம்
துப்பாக்கி – துருக்கி
தோட்டா – உருது (தமிழனா தமிங்கிலனா, காசி. ஆனந்தன், 1.11.95 சென்னை,பக் 12) மேலும் காசி ஆனந்தன் சொல்லும் போது வடமொழியை ஓடக்கலைத்த மறைமலை அடிகள் மறைந்து 50 ஆண்டுகள் கூடக் கழியவில்லை. வட மொழியின் இடத்தில் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டாடுகிறோம் என்கிறார்.
நேற்று-
அக்கிராசனரை தலைவர் ஆக்கினோம்.காரிய தரசியை செயலாளர் ஆக்கினோம்.சபா கூட்டம் ஆகியது. பிரச்சினை சிக்கல் ஆகியது.ஆலோசனை கலந்துரையாடல் ஆயிற்று.
ஆனால், இன்று
எங்க போய் வாரீங்க? ‘மீட்டிங்குக்கு.
யார் யார் வந்தாங்க? பிரசிடன், செக்ரட்ரி எல்லாருமே வந்திருந்தாங்க.
என்ன பண்ணினீங்க? எல்லா பிரொப்ளம் பற்றியும் டிஸ்கஷன் நடந்துச்சு.
– அக்கிராசனரை தலைவர் ஆக்கினோம் அவர் பிரசிடெண்ட் ஆனார். காரியதரசியை செயலாலர் ஆக்கினோம் அவர் செகரட்ரி ஆனார். சபாவைக் கூட்டம் ஆக்கினோம் அது மீட்டிங் ஆனது. பிரச்சினையைச் சிக்கல் ஆக்கினோம். அது ப்ரப்ளம் ஆனது.ஆலோசனையைக் கலந்துரையாடல் ஆக்கினோம். அது மீட்டிங் ஆனது. வடமொழியில் இருந்து தப்பிப் பிழைத்த தமிழன் ஆங்கிலத்தில் வழுக்கி விழுந்தான் என்கிறார் உனர்ச்சிக் கவிஞர். காசி ஆனந்தன். மேலும் அவர் திரையுலகில் இருந்து எடுத்துக் காட்டு கூறுகையில்
ஊமைத்திரைப்படங்கள் (1915) உருவாகிய காலத்தில் கீசகவதம், திரெளபதி வஸ்திராபரனம், மீனாட்சிகல்யானம், பீஷ்ம பிரதிக்ஞா, கஜேந்திர மோட்ஷம்… என சம்ஸ்கிருதப் பெயர்களாக இருந்தன. பேசும் படம் வந்த பின்பும் ஆரியமாலா, ஜலதல பிரதாபன் என வட மொழியிலேயே பெயர்கள் அமையப்பெற்றன. மறைமலை அடிகளின் தாக்கத்தால் பின்னர் நாம் இருவர், வாழ்க்கை, ஒளவையார், பார்த்தால் பசிதீரும், படித்தால் மட்டும் போதுமா? நாடோடி மன்னன், தொழிலாளி என்று தமிழ் பெயர் தாங்கிய படங்கள் வந்தன. இன்று ஜெண்டில் மேன்,டூயட், மம்மிடடி, ஐ லவ் இண்டியா,லவ் பேட்ஸ் …இப்படி எல்லாம் தமிழ் திரைப்படங்கள்.
அது போல பட்டப்பெயர்களையும் அவர் பட்டியல் இடுகிரார்.பஞ்ச நாதப்பிரம்மம்’பரமசிவம் பிள்ளை, நவரசதிலகம். நடராச பிள்ளை, சங்கீத சண்ட மாருத சக்கரவர்த்தி சின்னப்பா பாகவதர், கானலோல கானாமிர்த வர்ஷினி சுந்தராம்பாள் இப்படி வடமொழிப்பட்டங்கள் சூட்டப்பட்டன. பின்னர் வந்த தனித்தமிழ் இயக்கத்தால் ‘இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன், நடிப்பிசைப்புலவர்,இராமசாமி, நடிகமணி நாராயனசாமி, இசைச் சித்தர் சிதம்பரம் செயராமன், நடிகவேள் ராதா எனத் தனித்தமிழாகின. இன்று, சுப்பஸ்ரார் ரஜனிக்காந், அக்ஷன் கிங் அர்ஜுன், கொமடிக் கிங் எஸ்வி சேகர் என்று வெள்ளைக்காரப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன என ஆதங்கப் படுகிறார். ( மேற்படி, பக்; 36 – 39)
ஐயா அவர்கள் சந்திப்பின் போது ஆங்கில மொழியில் சொல் ஆக்கம் பற்றிக் கூறிய போது வழக்கொழிந்து போன பண்டைத்தமிழ் பற்றிக் கூறி தமிழில் நாங்கள் இப்போது மிருகங்களின் குட்டிகள் எல்லாவற்றையும் குட்டிகள் என்றே சொல்லுகிறோம் என்றும் ஒவ்வொரு மிருகங்களின் குட்டிகளுக்கும் ஒவ்வொரு குறிச் சொற்கள் இருந்தன என்றும் ஆதங்கப்பட்டுக் கூறினார். அதே நேரம் பழையன கழிதலும் புதியன புகுதலும் மாற்றங்களுக்குட்பட்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்ளுதலும் சகலதுக்கும் வழமைதானே என்ற இயற்கையின் கோட்பாட்டைச் சொல்லிச் செல்லவும் தவறவில்லை.
மாற்றங்களை எதிர்கொள்வது எப்போதும் சுலபமானதாக அமைந்து விடுவதில்லைத் தானே! உண்மைகள் வலிக்கவே செய்கின்றன என்ற போதும் தக்கனதானே பிழைத்துக் கொள்ளும்.அதனால் தானோ என்னவோ வலியன வாழ்கின்றன.
ஐயா அவர்கள் அந்த பண்டைத்தமிழ் சொற்களைப்பற்றிச் சொன்ன போது என்னிடம் இருக்கும் சூடாமணி நிகண்டு என்ற ஆறுமுகநாவலரால் பதிப்பிக்கப்பட்ட செய்யுள் வடிவிலான அகராதி (சூடாமணி நிகண்டு மூலமும் உரையும், ஆறுமுகநாவலர் அவர்கள் மாணாக்கரின் மாணாக்கரும் மதுரைத்தமிழ்சங்கப் புலவரும் அத்துவித சித்தாந்த மதோத்தாரணரும் ஆகிய யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான், நா. கதிரைவேற்பிள்ளை அவர்களால் பரிசோதித்த பிரதிக்கிணங்க, சென்னை திருமகள் விலாச அச்சுக் கூடத்தில் பதிக்கப்பட்டது; 1938) நினைவுக்கு வர சந்திப்பு முடிந்து வந்ததும் அதனைப் புரட்டிப் பார்த்தேன். எத்தனை அழகழகான தமிழ் முத்து முத்துச் சொற்கள். அது சம்பந்தமான சுவாரிசமான பதிவொன்றையும் முன்னொரு பொழுதில் பதிந்திருந்தேன். சுவாரிஷமாகப் பார்க்க வேண்டுபவர்கள் இந்த இணைப்பில் சென்றும் அதனைப் பார்வை இடலாம்.
http://akshayapaathram.blogspot.in/2011_02_01_archive.html
விட்டு விட்டு வந்தவைகள் எவ்வளவு அழகியன என்ற போதும் அவற்றை மீண்டும் பார்க்கின்ற போதும் மனதுக்கு கொஞ்சம் கஸ்ரமாக இருக்கிறது என்று சொல்வதில் வெட்கமேன்? இல்லையா. இப்போது மீண்டும் ஒரு தடவை புரட்டிப் பார்க்கும் போது எவ்வளவு நுட்பமும் அழகும் ஆழமும்,செறிவுத்தன்மையும் பழம் பெருமையும் கொண்டதாக அவை இருக்கின்றன என்பதைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. எதோச்சையாக விரித்த ஒரு பக்கத்தில் இருந்த சொற்கள் இவை.
நாயுருவி – சரமஞ்சரி
கொத்தமல்லி – உருளரிசி
பாக்கு – துவர்காய்
காட்டு மல்லிகை – மெளவல்
செவ்வரத்தம் பூ – மந்தாரம்
பனை – தாலம், புற்பதி, தாலம்
முள்முருக்கு – கிஞ்சுகம்
முழங்கை – கூர்பரம்
விரல் – அங்குலி
நகம் – உகிர்
மேல் உதடு – ஓட்டம்
கீழ் உதடு – அதரம்
மணிக்கட்டு – கிலுத்தம்
உச்சியின் பெயர் – சுடிகை / சூழி
ஆண்மயிர் – குடுமி, பித்தை, ஓரி, குழல், கார், குஞ்சி, சிகை
பெண்மயிர் – குருள், குழல், குந்தலம் ,கூந்தல்
பொதுவான மயிர் – குழல், கதுப்பு, கேசம் – இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பென்று ஆனபின் அவற்றைக் கைவிட்டு தொழில் நுட்பச் சொற்களோடு கைகுலுக்க தமிழ் தயாராக வேண்டும். அது பற்றி ஷிரயா ஒரு இணையப்பக்கத்தை குறிப்பிட்டு அவர்கள் எவ்வாறு ஆங்கிலத் தொழில் நுட்பச் சொற்களுக்கு தனித் தமிழ் சொற்களைக் கண்டுபிடிக்கிரார்கள் எனற தகவலைத் தந்திருந்தார். அந்த இணைப்புப் பக்கம் இது தான்.
http://valavu.blogspot.com
அதனை அவர் குறிப்பிட்ட போது அப்போது தான் புத்தம் புதிதாய் படித்திருந்த குங்குமத்தில் வெளிவந்திருந்த “தமிழ் சொற்களை உருவாக்கும் சொல் வங்கி” என்ற ஆக்கம் சட்டென நினைவுக்கு வந்தது.( குங்குமம்;21.4.14 பக்;42 – 45) அவர்கள் தொழில் நுட்பச் சொற்களுக்குப் பொருத்தமான தனித்தமிழ் சொற்களை உருவாக்கும் பணியில் ஈடு பட்டிருக்கிறார்கள்.அவர்கள் குறிப்பிட்டிருக்கிற சில சொற்கள்:
flash news – பளீர் செய்தி
call taxi – அழைப்புந்து
fruit salad – பழச் சலாது /பழக்கூட்டு
lassie – குடி தயிர்
noodles – இழையுணவு
anti virus – நச்சு முறி மென்பொருள்
two wheel – ஈருருளி
signal – வழிக்குறி
online – இணையத்தடம்
ஊன் வெஞ்சன ரொட்டி – Berger
பொதியப்பம் – pizza
தானியங்கிப் பணப்பொறி – ATM
களவினை – பிரச்சாரம்
வான் சிவிகை – helicopter
வான் ஊர்தி – aeroplane
ஆக்கத் துணை – sponsorship
இப்படியாகச் சொல் ஆக்கங்களைச் செய்கிறது தமிழ் நாட்டின் தமிழ் வளர்ச்சித் துறை. வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்று மாதம் ஒரு முறை கூடி பிற மொழிச் சொற்களை ஆராய்ந்து அதற்கிணையான தமிழ் சொற்களை உருவாக்கும் பணியைச் செய்கிறது என மேலும் குங்குமச் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.உதாரணமாக மவுஸ் என்ர சொல்லை எடுத்துக் கொண்டால் அதன் நேரடியான மொழிபெயர்ப்பு எலி என்பதாகும்.அதனால் மவுஸ் செய்யும் பணி பற்றி யோசித்து விவாதித்து தேடு பொறி என்ற பெயரைத் தீர்மானித்தோம் அதன் பின்னரே சொற்களைப் பயன் பாட்டுக்கு அளிக்கிறோம் என்கிறார்கள்.( – பேராச்சி கண்ணன்)
உணர்ச்சிக் கவிஞரும் தமிழரும் சற்றே ஆசுவாசமாக மூட்டு விட்டுக் கொள்லலாம் இல்லையா.
அது பற்றி இணையத்தில் தேடிய போது கிட்டிய இணைப்பு இது
http://aatcichcol.blogspot.com.au/2011/04/2-chickungunya-ego.html
ஆனால் சில தமிழ் பதங்களை மருவிய வடிவில் பிழையாக சில சந்தர்ப்பங்களில் உபயோகிக்கிறோமே அதன் திருந்திய வடிவம் என்னவெண்று சற்றுப் பார்ப்போமா?
அருணாக் கொடி – அரை நாண் கொடி
எல்லோரும் – எல்லாரும்
வலைது பக்கம் – வலப்பக்கம்
எண்ணை – எண்ணெய்
சம்மந்தம் – சம்பந்தம்
முன்னூறு – முந்நூறு
வல்லுனர் – வல்லுநர்
முயற்சித்தல் – முயற்சி செய்தல் / முயலுதல்
முயற்சித்தான் – முயன்றான்
குண்டுமணி – குன்றுமணி
சக்களத்தி – சக களத்தி
சீயாக்காய் – சிகைக் காய்
கறாராக – உறுதியாக
வாபஸ் வாங்கப்பட்டது – திரும்பப் பெறப்பட்டது
புகார் செய்யப்பட்டது – முறையீடு செய்யப்பட்டது
அமுல் படுத்துதல் – செயற்படுத்துதல்
ஆதாரம் – சான்று
இலகு – எளிது
அநர்த்தம் – அழிவு/ கேடு
இப்படியாக திருத்திப் பாவிக்க வேண்டிய சொற்களைப்பற்றி இணைய கலை இலக்கிய சஞ்சிகை ( காற்றுவெளி; 27.3..14 பக்; 34 – 35 நுணாவிலூர். கா. விசயட்ரத்தினம், லண்டன்) சொல்கிறது. அதன் இணைப்புப் பக்கம்
http://kaatruveli-ithazh.blogspot.com.au/
ஐயா காட்டிப் போன ஒரு தமிழ் ஊற்றுக் கண் இப்படி ஒரு பதிவைத் தந்து போனது.
இச் சந்தர்ப்பத்தில் நமக்கு குளிருக்கு இதமான இடமும் இருக்கைகளும் வெளிச்சமும் தந்து சந்திப்பைச் சாத்தியமாக்கிய அம்பி உணவகத்தாருக்கு – அதிலும் குறிப்பாக நிர்வாகி திரு கணேஷன் அவர்களுக்கு ( புகைப்படங்களில் இறுதியாகக் காட்சியளிக்கிறார்) உயர்திணை அங்கத்தவர்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றி.கேட்டவுடன் நேரத்தையும் இடத்தையும் தந்துதவினார்.



