RSS

Monthly Archives: September 2014

இலக்கிய சந்திப்பு – 21 –

அன்புக்குரிய இலக்கிய நெஞ்சங்களே!

உங்கள் இலக்கிய இதயங்கள் நலம் தானா?

இரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

வசந்த காலம் ஆரம்பித்து விட்டது.

இருள் விலகி சூரியன் இதமாய் மேல் வர மெல்லிய தென்றலோடு பூக்ககளின் வாசம் பூலோகமெங்கும்!இலைகளும் பூ மொட்டுக்களும் துளிர்க்கின்றன.கிளிகளும் பறவை இனங்களும் ஆங்காங்கே இணைகளோடு தென்படுகின்றன!! தோற்ற அளவில் மனிதர்களும் கம்பளி ஆடைகள் தவிர்த்து புன்னகை இழையோட பாரமற்று நடக்கக் காண்கிறோம்.

மகிழ்ச்சியாக இருக்கிறது!

குளிர் நீங்கி விட்டதால் நாமும் இனி இயற்கையோடு இணைந்து கொள்ள காலம் கைகூடி விட்டது. பழைய படி பூங்கா கைவிரித்து நம்மை அணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறது.

நிலமையினைக் கண்டு வர கடந்த வார நடுப்பகுதி ஒன்றில் பூங்காவுக்குப் போனேன்.வசந்த கால மலர்களோடு நம்மை வரவேற்ற படி காத்திருக்கிறது பூங்கா.

ஆம். பூக்களால் நிறைந்து போயுள்ளது பூங்கா! அது மட்டுமல்ல, ஓவியக் கண்காட்சி மற்றும் Cumberland மனநோயாளர் வைத்தியசாலையைச் சேர்ந்தோரது  அரும்பொருள் காட்சியகம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கைவினைப் பொருட்களின் கடைகளும் உணவு விற்பனைகளும் அமோகமாக நடைபெறுகின்றன.

இம்மாத இறுதி வர மட்டுமே இத்தகைய அரிய காட்சிகள் அங்கிருக்கும்.

புல் தரையில் பூக்களின் ஊடே நடப்பதுவும்; ஓவியக்கண்காட்சியின் காட்சி விரிவில் இலயிப்பதுவும்; கூடவே உள்ளத்துக்கும் உடலுக்குமாக உறவின் விசித்திரங்களை தரிசிப்பதிலும்; கூடவே,  நீரோடை அருகே உட்கார்ந்து தேநீரோடு தாம் கண்டு கொண்ட கருப்பொருள் பற்றி கலந்துரையாடி அவற்றினூடே இலக்கியக் கருக்களை இனம் கண்டு கொள்வதும் இம்மாத சந்திப்பின் நோக்கமாகும்.

பூவுக்குள் தேனை வைத்து, தேனின் இருப்பிடத்தை தேனீக்களுக்கும் பறவைகளுக்கும் மாத்திரம் சொல்லி வைத்த இயற்கையிடமும் ஓவியக்காட்சிகளுக்குள்ளும் 19ம் நூற்றாணடின் உள்ளத்து நோயின் வாழ்க்கைச் சுவடுகளுக்குள்ளும் ஒழிந்து போயிருக்கின்றன ஓராயிரம் இலக்கியங்களுக்கும் கலைகளுக்குமான கருக்கள்!

கண்டடைய வாருங்கள்!

இம் மாத இறுதி இம்முறை இன்னும் சிறப்பாக நீண்ட வார இறுதி விடுமுறையாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறை விடப்பட்டிருப்பதால் எல்லோருமாக கூடி இருந்து அனுபவம் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் என நான் சொல்ல வேண்டியதில்லைத் தானே!

வருக! நாளாந்த வாழ்வின் இறுக்கங்களில் இருந்து சற்றே விடுபட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியும் புது வெளிச்சமும் பெற இந் நாள் உதவும்.

உங்கள் இன்றய நாளும் இனி வரும் நாட்களும் இனியதாகுக!

தமிழால் இணைந்திருப்போம்.

 
Leave a comment

Posted by on 18/09/2014 in Uncategorized

 

சொல்லவேண்டிய கதைகள் – முருகபூபதி

20130914_090033      20130914_090229
.
இயற்கை தந்துள்ள கொடைகளை இலக்கியத்திற்கும் பயன்படுத்துவோம்

நாடுகளுக்கும் மனிதர்களுக்கும் இனங்களுக்கும் மொழிகளுக்கும் வரலாறு இருப்பதுபோன்று இயற்கை தந்த கொடைகளான தாவரங்கள் மற்றும் மரங்கள் செடி கொடி மலர்களுக்கும் அவற்றின் அழகை நாம் ரசிக்கும் பூங்காக்களுக்கும் வரலாறுகள் இருக்கின்றன.
உலகநாடுகளில் பெருநகரங்களில் எங்காவது ஒரு புறநகர் பிரதேசத்தில் தாவரவியல் பூங்காக்களை பார்த்திருப்பீர்கள். தாவரவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கும் அந்தத்துறை பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் சுற்றுச்சூழல் குறித்து அக்கறை செலுத்தும் சமூக நலன் விரும்பிகள் யாவரும் பூங்காக்களை நேசிப்பது இயல்பு.
எம்மவர்கள் இலங்கையில் பெரும்பாலும் விடுமுறைக்கால உலாத்தலுக்கும் தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காகவும் பூங்காக்களுக்கு செல்வார்கள்.
கொழும்பிலிருக்கும் விஹாரமாதேவி பூங்கா, நுவரேலியாவிலிருக்கும் ஹக்கல பூங்கா, ( இந்தப்பிரதேசத்தில்தான் இராவணன் சீதையை சிறைவைத்த அசோகவனம்

இருந்ததாக ஐதீக கதைகள் இருக்கின்றன.) பேராதனை பூங்கா , யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா ( இந்தப்பூங்கா பற்றி இயக்குநர் மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஜாதா ஒரு வசனமும் எழுதியிருக்கிறார்) எனது பூர்வீக ஊர் நீர்கொழும்பிலிருக்கும் ராஜபக்ஷ பூங்கா முதலானவற்றுக்கெல்லாம் சென்றிருக்கின்றேன்.
ஆனால் – அந்தப்பூங்காக்களினுள் பிரவேசித்தபொழுது கிட்டாத புதிய அனுபவம் எனக்கு அவுஸ்திரேலியாவில் சில மாநிலங்களிலிருக்கும் பூங்காக்களுக்குள் பிரவேசித்த பின்னர் கிட்டியது.
இந்நாட்டில் பூங்காக்களில் கோடைகாலத்தில் பாபர்கியூ எனப்படும் திறந்த வெளி குடும்ப – நண்பர்கள் ஒன்றுகூடும் விருந்துக்கொண்டாட்டங்கள் நடக்கின்றன. திருமணங்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் இடம்பெறுகின்றன. அதற்காக எந்தக்கட்டணமும் இல்லை. ஒன்று கூடல் விருந்து முடிந்ததும் அவ்விடத்தை சுத்தப்படுத்திச்செல்வதுதான் முக்கியமான கடமை. அதனைச்சரிவரச்செய்துவிட்டால் அதன்பிறகு அவ்விடத்திற்கு வந்து தங்கள் ஒன்று கூடல்களை நடத்தவிருப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த புதிதில் மெல்பனில் சில நண்பர்கள் இணைந்து மக்கள்குரல் என்ற மாதாந்த கையெழுத்து இதழை வெளியிட்டார்கள். அதில் இணைந்து நானும் மக்கள்குரலில் அவ்வப்பொழுது ஆக்கங்கள் எழுதியிருக்கின்றேன்.
பெரும்பாலும் குறிப்பிட்ட இதழ் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் வெளிவருமுன்னர் அதற்கு முதல் மாத இறுதியில் வாரவிடுமுறையில் நாம் எங்காவது ஒரு பூங்காவில் ஒன்றுகூடுவோம். நண்பர்களின் மனைவிமார் மற்றும் குழந்தைகளும் வருவார்கள். புற்தரையில் நாம் அமர்ந்து மக்கள் குரலில் பதிவுசெய்யப்படவேண்டிய படைப்புகள் பற்றி கலந்துரையாடி விவாதிப்போம்.
நண்பர்களின் மனைவிமார் வேறு ஒரு திசையில் அமர்ந்து உரையாடுவார்கள். அவர்களின் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடுவார்கள். இயற்கையை ரசித்தவாறு இதமான தென்றல் காற்று தழுவிச்செல்ல சுவாரஸ்யமான கலந்துரையாடலை நடத்திவிட்டு வீடுகளுக்கு மனநிறைவுடன் திரும்புவோம்.
பின்னாளில் நாடகக்கலைஞரும் எழுத்தாளருமான நண்பர் மாவை நித்தியானந்தன் மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர் அவர் உருவாக்கிய மெல்பன் கலைவட்டம் என்ற அமைப்பும் இவ்வாறு கோடைகாலங்களில் பூங்காக்களில் இலக்கிய சந்திப்புகளை நடத்தியிருக்கிறது.

1990 களில் மெல்பன் தாவரவியல் பூங்காவில் அவ்வாறு ஒரு சந்திப்பில் கலந்துகொண்டபின்னர் வீரகேசரி வாரவெளியீட்டில் கோடையில் மலர்ந்த சிந்தனை மலர்கள் என்ற கட்டுரையும் எழுதியிருக்கின்றேன்.2001 ஆம் ஆண்டு மெல்பனில் முதல் தடவையாக எனது நண்பர்களுடன் இணைந்து முதலாவது எழுத்தாளர் விழாவை ஜனவரி மாதம் கோடைகாலத்தில் இரண்டு நாட்கள் நடத்தினேன். முதல் நாள் முழுநாள் நிகழ்ச்சியும் ஒரு மண்டபத்தில் காலை முதல் இரவு வரையில் நடைபெற்றது.

மறுநாள் மெல்பனில் பிரசித்திபெற்ற பண்டூரா என்ற இடத்தில் அமைந்த பெரிய பூங்காவில் ஒன்றுகூடல் சந்திப்பு கலந்துரையாடலுடன் ஒடியல்கூழ் விருந்தும் வழங்கி விழாவை இனிதே நிறைவுசெய்தோம்.
இந்நிகழ்வில் ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் தம்பதியர் கலாமணி தம்பதியர் மற்றும் அவரது பிள்ளைகள், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம் தம்பதியர், சிட்னியிலிருந்து வருகைதந்த கவிஞர் அம்பி, டொக்டர் வாமதேவன் , பாஸ்கரன், சந்திரஹாசன், பாமதி, சந்திரலேகா (இலங்கையர்கோன் மகள்) நடராஜா கருணாகரன், மற்றும் மெல்பன் படைப்பாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மிகவும் உற்சாகமான நாளாக அந்தத் திறந்தவெளி பூங்கா ஒன்று கூடல் இன்று வரையில் பேசப்படும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதன்பின்னர் அடுத்துவந்த சில எழுத்தாளர் விழக்களின் இரண்டாம் நாள் நிகழ்வு அதே பூங்காவில் கவியரங்குடன் இனிது நிறைவெய்தியது. ஒரு தடவை கவிஞர் அம்பியின் தலைமையிலும் மற்றுமொரு தடவை கவிஞர் பாடும் மீன் சு. ஸ்ரீகந்தராசா தலைமையிலும் அந்தப்பூங்காவில் கவியரங்குகள் நடந்துள்ளன.
சிட்னியில் சில வருடங்களாக இயங்கும் உயர்திணை சந்திப்பு நிகழ்வொன்றுக்கு என்னையும் சமீபத்தில் அழைத்திருந்தார்கள். இதனை சரியாக நெறிப்படுத்தி நடத்திவருபவர்  யசோதா பத்மநாதன். இலக்கிய ஆர்வலர். தேர்ந்த வாசகர். ஒவ்வொரு மாதமும் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் சிட்னியிலிருக்கும் பிரசித்திபெற்ற பரமட்டா பூங்காவில் ஒன்று கூடுகிறார்கள். ஒருவரை விசேட பிரதிநிதியாக அழைத்து கலை, இலக்கியத்தலைப்பொன்றில் பேசவைத்து அதன்பின்னர் கலந்துரையாடுகிறார்கள்.
பல மாதங்களாக இந்நிகழ்வு சிட்னி பரமட்டா பூங்காவில் நடைபெறுகிறது.
நான் கலந்துகொண்ட சந்திப்பில் இலங்கையிலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளி தாமரைச்செல்வி தனது கணவர் மற்றும் தங்கையுடன் வந்திருந்தார். முன்னர் இலங்கையில் தரமான நாட்டிய நாடகங்களை அரங்கேற்றியிருப்பவரும் நாட்டியக்கலை தொடர்பான சில ஆய்வு நூல்கள் எழுதியிருப்பவருமான திருமதி கார்த்திகா கணேசரை நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அங்கு அன்று சந்தித்தேன். தாமரைச்செல்வியும் நானும் இலங்கையில் என்றைக்குமே சந்தித்துக்கொண்டவர்கள் இல்லை. அன்றுதான் முதல் முதலில் புகலிட நாட்டில் சந்தித்தோம்.
சிட்னி உயர்திணை அமைப்பு சில வருடங்களுக்கு முன்னர் ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்புமலருக்கெனவும் ஒரு விமர்சன அரங்கை நடத்தியது என்பதை இங்கு நினைவூட்டுகின்றேன்.
வழக்கமாக மண்டபங்களில் அல்லது வீடுகளில்தான் இலக்கியச்சந்திப்புகள் நடக்கும். சற்றுவித்தியாசமாக திறந்தவெளிகளில் பூங்காக்களில் – கடற்கரைகளில் அவற்றை நடத்திப்பாருங்கள். உங்களை அறியாமலேயே உற்சாகம் பிறக்கும். மண்டபங்களுக்குள் நெருக்கியடித்துக்கொண்டு இருக்கும்பொழுது ஒருவகையான இறுக்கம் அங்கு தவிர்க்கமுடியாததாயிருக்கும்.
ஆனால் – பூங்காக்களில் கடற்கரையோரங்களில் அத்தகைய சந்திப்புகளை நடத்தும்பொழுது இயற்கையின் எழிலையும் பருகி உள்வாங்கியவாறு உரையாடும்பொழுது வித்தியாசமான அனுபவங்களுடன் வீடு திரும்புவீர்கள்.
அண்ணாத்துரை தமிழகத்தின் முதலமைச்சரான 1967 காலப்பகுதியில் தனது அமைச்சரவைக்கூட்டத்தை சிறிது காலம் மெரீனா பீச்சில்தான் நடத்தியிருக்கிறார்.
எங்கள் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, டானியல், எஸ்.பொ., ரகுநாதன், பசுபதி உட்பட பலர் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் முற்றவெளியிலும் கடலேரிக்கு சமீபமாகவும் இலக்கிய சந்திப்புகளை நடத்தியிருக்கிறார்கள்.
அதுபோன்று இலங்கையில் எம்மவர்கள் (படைப்பாளிகள் – இலக்கிய ஆர்வலர்கள் – ஊடகவியலாளர்கள் ) மண்டபங்களை விட்டு வெளியே வந்தால் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கருத்தாடல்களையும் ஆரோக்கியமாக நடத்தலாம் என நம்புகின்றேன்.
அங்கிருக்கும் மூத்த படைப்பாளிகளை மாதம் ஒரு தடவையாதல் அழைத்து அவர்களின் எழுத்துலக வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை பூங்காக்களில் அல்லது திறந்தவெளி மைதானங்களில் நடத்திப்பாருங்கள். எங்களை அறியாமலேயே மனமும் விசாலமடையும். புதிய தேடல்களுக்கும் வழிபிறக்கும்.
இயற்கை தந்துள்ள கொடைகளை இலக்கியத்திற்கும் பயன்படுத்துவோம்.
(நன்றி: ஜீவநதி இதழ் (ஓகஸ்ட் 2014) – யாழ்ப்பாணம்)

நன்றி: தமிழ்முரசு அவுஸ்திரேலியா 14.9.14

20130914_085806         20130914_085656

 

(புகைப்படங்கள்: யசோதா: பரமட்டா பூங்கா; 2013 வசந்தகாலம்)

 
Leave a comment

Posted by on 17/09/2014 in Uncategorized