31.1.15 புதிய வருடத்தின் முதலாவது இலக்கிய சந்திப்பு.
மாலை நேரம் வழக்கமாக நாம் சந்திக்கும் பரமற்ரா பூங்காவின் அறுகோணக் கூடாரம். அன்று வெய்யில். சற்றே வெக்கையான கோடை நாள். 5.00 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கிற்று.
நம் நிகழ்வுக்கு சில நாட்கள் முன்னதாக விக்ரோரியா மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நீர்வை. பொன்னையன் அவர்கள் சிட்னிக்கு வருகை தந்திருக்கிறார்கள் என்ற தகவலைத் தந்து அவரைச் சென்று சந்திக்குமாறு பரிந்துரை செய்திருந்தார்கள்.
ஐயா அவர்களைச் சந்தித்து நம் நிகழ்ச்சிக்கு அழைத்த போது மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டார்கள்.
ஐயா அவர்கள் ஈழத்தின் மூத்த எழுத்தாளர். முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தோடு இணைந்து தன் வாழ்வை கலை இலக்கியத்தின் மூலம் சமூக அரசியல் மாற்றத்துக்கான முன்னெடுப்புகளில் மிகத்தீவிரமாகத் தன்னை இணைத்துக் கொண்டவர்.
அவரின் ’நினைவலைகள்’ என்ற புத்தகம் மிகைகள் பொய்மைகள் கலக்காத ஒரு இலக்கிய போராளியை (வென்ற்வேர்த்வில் கவுன்ஸில் நூலகத்தில் கிடைக்கிறது) அதன் ஆத்மார்த்தமான உண்மை இயல்போடு தன்னை வெளிப்படுத்துகிறது. அதிலிருந்தும்; அவரால் தொகுக்கப்பட்ட ஈழத்துச் சமகால இலக்கிய தொகுதிகள், முற்போக்கு இலக்கிய புனைகதைகள், முற்போக்கு இலக்கியக் கவிதைகள், ஈழத்து முற்போக்கு இலக்கியச் சிறுகதைகள் போன்றவற்றின் மூலமும் அவர் தன் வாழ்நாளை எவ்வாறு எல்லாம் முற்போக்கு சிந்தனைகளுக்கும் மாற்றங்களுக்குமாகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
சுமார் 10க்குமதிகமான சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சிறந்த பாண்டித்தியம் கொண்டிருக்கும் அவர் ஆங்கில சிங்கள மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுக்குத் தந்துள்ளார். அவரின் ’உலகத்து நாட்டார் கதைகள்’ என்ற புத்தகம் இரு பதிப்புகள் கண்டும் (ஒவ்வொன்றும் தலா 1500 பிரதிகள்) இன்று அதனைப் பெற்றுக் கொள்வது கடினமாக இருப்பதொன்றே அவரின் புலமைக்கு சாட்சி.
ஐயா அவர்கள் நம் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்றதுமே ஐயா அவர்களின் இலக்கிய வாழ்க்கை அனுபவங்களை கேட்க வேண்டும் என்ற அவா எல்லோருக்கும். திரு. ரஞ்சகுமார் அவர்கள் இவரின் நீண்ட கால நண்பர். அவரும் அன்று ஐயா அவர்கள் வருவார் என்பது தெரியாமலே நம் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்தார்.
அதனால் நம் உரையாடல் பல சுவாரிஷங்களை; அனுபவ பகிர்வுகளை; நினைவு மீட்டல்களை நோக்கி செல்ல உதவிற்று. ஐயா அவர்கள் மிகுந்த உற்சாகமாகச் சந்தோஷமாக தம் இலக்கிய சம்பந்தப்பட்ட அனுபவங்களை மாத்திரமல்லாது தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் ஒரு வித உற்ற நண்பர்களோடு பேசும் ஒரு வித அன்னியோன்னியத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நேரம் நகர்வது தெரியாத புத்தகங்களில் தேடினாலும் பெற்றுக் கொள்ள முடியாத நினைவுகளை அவர்கள் நம்மோடு பகிர்ந்தது நமக்குச் சாதாரணமாகக் கிடைக்க முடியாத பொக்கிஷங்கள்.
அன்றய தினம் பிரசன்னமாகி இருந்த வலைத்தளங்களில் நன்கு பரீட்சயமாகி எழுத்தாற்றல் மூலமாக பிரபலமாகி வரும் கீதமஞ்சரி. மதிவாணன் அவர்கள் அண்மையில் அவரால் வெளியிடப் பட்ட அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியை ஐயா அவர்களுக்கும் ரஞ்சகுமார் அவர்களுக்கும் பரிசளித்தார்கள்.
ஆங்கிலேய நாடு. சுற்றிலும் வெள்ளைக் காரர் சூழ வாழும் சூழல்! ஒவ்வொரு மனிதரும் தனித்தனிக் கார்களில் தனித்தனியாய் போய் கொண்டும் வந்த படியுமாய், சிலர் ஓடிய படியும் சிலர் நடந்த படியும் , ஆங்காங்கே சில சோடிகள், இன்னும் சில பேர் நாய்களோடு …..இங்கே ஒரு கூடாரத்துக்குள் கொஞ்சமாய் நாங்கள். தமிழ் பேசும் சிறு கூட்டம். பல வயது வித்தியாசங்களில் தேநீரும் சிற்றுண்டியுமாய் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்த படி…..
நேரம் இப்போது 7.30 மணியாகி இருந்தது. கோடை என்பதால் இப்போது தான் சூரியன் தன் வெப்பத்தைக் கொஞ்சம் குறைத்து மஞ்சள் வெய்யிலைப் படரவிட்டிருந்தான். காற்றென்று சொல்ல முடியாமலும் தென்றல் என வகைப்படுத்த முடியாமலுமான ஒரு இடை நிலையில் இதமான குளிர்ச்சி சுற்றுப் புறமெங்கும் பரவ, நாம் விடை பெறும் நேரம்!
ஐயா அவர்கள்அடுத்த ஞாயிறும் சந்திப்பீர்களோ எனக் கேட்டார். சட்டெனத் தொண்டையை ஏதோ அடைத்தது. நாம் வெளி நாடொன்றில் வாழும் யதார்த்தம் முகத்தில் அறைய சாத்தியப்படாது என்பதைத் தெரிவித்த போது ஐயா அவர்கள் தான் 17.2.15 அன்று இலங்கைக்குப் புறப்படுவதாகச் சொன்னார்கள்.
ஒரு முதிர்ந்த படைப்பாளி. தான் எதை நம்பினாரோ அதையே எழுதி; எதை எழுதினாரோ அதன் படி வாழ்ந்து உலகுக்கும் தான் வாழும் சமூகத்துக்கும் உண்மையோடும் விசுவாசத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நடமாடும் இலக்கிய போராளி! அவரிடம் பெற்றுக் கொள்ளவும் அறிந்து கொள்ளவும் நமக்கு நிச்சயமாக பல விஷயங்கள் உண்டு.
விடிந்தால் 17ம் திகதி.
இடையில் சந்திக்கச் சாத்தியப்படவில்லை.
சுகமாகச் சென்று மீண்டும் வாருங்கள் ஐயா.
இன்னுமொரு இலக்கிய மாலையில் சந்திப்போம்.