எல்லோருமாகச் சேர்ந்து தூணாக நின்று நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்தி இருந்த அறிவு நிறைந்த சான்றோர்க்கும் அன்பு நிறைந்த நண்பர்கட்கும் நன்றி நவிலும் நேரமிது.
முதற்கண் நிகழ்ச்சியின் பிரதம அதிதியாக வந்து ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபின் இன்றய நிலை பற்றி தகுந்த முன் தயார் படுத்தல்களோடு வந்து நிதானத்தோடும் சிறப்போடும் மிக தெளிவாக எல்லோருக்கும் புரியும் படியாகவும் அதிலும் மிக விஷேடமாக மிகச் சரியாக கொடுக்கப்பட்ட நேரமான 45 நிமிடத் துளிகளில் தன் பேச்சை நிறைவு செய்த ‘ஞானம்’ ஞானசேகரன் அவர்களுக்கு மீண்டும் நம் நன்றிகள்.
சிறப்பான திட்டமிடலும் நிதானமான பேச்சும் பொருட் செறிவும் ஞானம் சஞ்சிகையின் சிறப்பைச் சொல்லவும் போதுமானதாக இருந்தது.
நிகழ்ச்சிக்கு மிகத் தாமதமாக ஆரம்பித்துத் தர கேட்ட கோரிக்கைக்கு தயக்கமின்றி சம்மதித்து சரியான நேரத்திற்கு வந்து ஆரம்பித்து வைத்த திரு. திருமதி. ஈழலிங்கம் அவர்களுக்கும் எங்கள் மிகுந்த அன்புக்கும் மரியாதைக்குமுரிய தனபாலசிங்கம் ஐயா அவர்களை விருது வழங்க கேட்ட போது உடனடியாக சம்மதம் சொன்ன அந்த அன்புக்கும் எங்கள் அன்பும் பணிவும் மிக்க நன்றி.
பாராட்டுரை தந்த பேராசிரியர். ஆ.சி. கந்தராஜா அவர்களும் அவ்வாறே. ஞானம் ஐயா குறிப்பிட்டது போல புகலிடத் தமிழுக்கு புது வளம் சேர்ப்பவர். அது பற்றி 2011ல் சிங்கப்பூரில் இடம் பெற்ற உலகத்தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் ’தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் – புதிய போக்குகள்’ என்ற தலைப்பின் கீழ் ”OZ தமிழ் 2011 – சில அவதானிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் என்னால் அளிக்கப்பட்ட உரையிலும் அதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் வந்து வழங்கிய பாராட்டுரை ஒரு கச்சித பொருத்தம். கேட்டவுடன் சம்மதம் தந்த அவர் தம் எளிமைக்கும் நன்றி.
சிறுமிகள். லக்ஷினி.லோகேஸ்வரன், கேசினி.கேதீசன் பாரம்பரிய உடையோடு குறித்த நேரத்திற்கு வந்து தங்கள் மழலைக்குரலால் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தார்கள். குறிப்பாக அச் சிறுமிகளின் பின்னால் நின்று அதனைச் சாத்தியமாக்கிய அத்தனை பேருக்கும் எங்கள் கனிவான நன்றிகள்.
கார்த்திகா.கணேசர். நம்மில் ஒருவர். வேலைகள், உளைச்சல்கள், அங்கத்தவர்களை ஒன்று சேர்ப்பதில் வருகிற சிரமங்கள், நல்லதொரு கட்டிடம் இல்லாமை போன்ற இன்னோரன்ன காரணங்களால் கடந்த 4,5 மாதங்களாக நம் இலக்கிய சந்திப்புகள் நடைபெறவில்லை. ஒரு நாட்காலை என் தொடர்மாடிக் குடியிருப்பின் உயரத்தில் இருக்கும் என் வீட்டின் அழைப்பொலி விடாமல் ஒலித்தது. யாரடா இது இந்த அதிகாலை நேரம் (எனக்கு) என ஒரு வித சலிப்போடு யார் எனக் கேட்டால் ’நான் கார்த்திகா. கதவைத் திறவும்’ என்று ஓர் குரல். வழக்கமாக உயரத்துக்கு ஏற மிகத் தயங்கும் கார்த்திகா அக்கா பட படவென மேலே வந்தார். திரு ஞானம் ஞானசேகரன் அவர்கள் இங்கு வந்திருக்கிறார். அவருக்கு நாம் நம் அமைப்பின் சார்பாக ஒரு பாராட்டு வைபவம் ஒன்று செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடங்கிய அவரது செய்திறன் நிகழ்வின் ஒவ்வொரு துளியிலும் அடங்கி இருக்கிறது. கட்டிட ஏற்பாட்டில் இருந்து நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அழைப்பித்தது வரை அவரது அயராத செய்திறனைக் கண்டு வியந்தேன். அவருக்கு என் நன்றி சொல்வது சரியல்ல.என் அன்பு தான் அவருக்கு உரித்தாக்கக் கூடியது. அவரிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் எனக்கு அநேகம் இருக்கின்றன.
பிரவீனன். தெல்லிப்பழை, விழிசிட்டி என்ற கிராமம் உலகத்துக்குத் தந்த ஒரு புத்திஜீவி.ஒரு எழுத்தாளினி பெற்ற இரண்டாம் தலைமுறை தமிழ் ஆர்வலன். விழி மைந்தன் என்ற பெயருக்குள் ஒளிந்திருந்து தமிழில் மிக அரிதாக வரும் விஞ்ஞானக் கதைகளையும் கவிவிதை என்ற புதிய பரிசோதனை முயற்சியில் புதிய விதமான எழுத்துக்களையும் முன் வைப்பவர். சிலரோடு பேசினால் மனம் மகிழ்வுறும். சிலரோடு பேசினால் மனம் சாந்தி பெறும், சிலரோடு பேசினால் மனம் மேன்மையான உலகில் சஞ்சரிக்கும். பிரவீனனோடு இலக்கிய உரையாடல்களில் ஈடு படும் போது நான் இவற்றை எல்லாம் அனுபவம் செய்வேன். எங்கள் நிகழ்ச்சியை நீங்கள் நடத்தித் தரவேண்டும் என்று கேட்ட போது சிறு தயக்கம் இருந்த போதும் நீங்கள் கேட்டால் நான் செய்தாக வேண்டும் என்ற சொல்லோடு அதை ஒரு கட்டளை போல ஏற்று இந் நிகழ்வைச் சிறப்பாக ஈடுபாட்டோடு நடத்தித் தந்தார். அந்த அன்பு என்னை நெகிழச் செய்தது என்றே சொல்வேன். இந்த இளம் புத்திஜீவிக்கு வெறெதை நான் சொல்ல இயலும்?
’தம்பி உள்ளோன் சண்டைக்கு அஞ்சான்’ என்பார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் பாஸ்கரன் அவ்வாறே. பெரிதாக எதுவும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் உதவி என்று கேட்டால் தயங்காமல் வந்து சிறப்பாக அதைச் செய்து தருவதில் வல்லவர் பாஸ்கரன். ஒளிப்படமும் ஒலிப்பதிவும் செய்து தரக் கோரினேன். பலருக்கு பலவித சிரமங்கள் இருக்கும். 3 மணி நேரத்தை ஒன்றுக்குச் செலவளிப்பதென்பது இங்கு எவ்வளவு பெறுமதியானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அன்றய மாலை வேளை மாத்திரம் 3 நிகழ்வுகள் 3 வெவ்வேறு இடங்களில். தவிரவும் குடும்ப ஒன்றுகூடல்கள் கொண்டாட்டங்கள் போன்றனவும் வார இறுதியிலேயே நடப்பது வழக்கம். அதற்குள் சுழித்துக் கொண்டு வர வேண்டும். பாஸ்கரன் அதனை செய்தார். மிக்க நன்றி பாஸ்கரன். அது மட்டுமன்றி தன் இணையப்பத்திரிகை தமிழ்முரசு அவுஸ்திரேலியாவிலும் நம் அழைப்பிதழை பிரசுரித்து பலரறியச் செய்ததோடு மட்டுமல்லாமல் முதல் நாள் நடந்த நிகழ்வை புகைப்படங்களோடு தன் பத்திரிகையில் மறுநாள் காலையிலேயே பிரசுரித்து பலரறியச் செய்ததும் அவரையே சாரும். காண்க
http://www.tamilmurasuaustralia.com/2016/05/blog-post_3.html
கொஞ்சும் தமிழுக்குச் சொந்தக்காரி என் அன்புத்தோழி, என் பாசத்துக்குரிய தங்கை கீதா.மதிவாணன். தமிழ் மீது மிக்க வாஞ்சையுள்ள பெண். அந்த தமிழின் பரிமானங்களை அவரது http://geethamanjari.blogspot.com.auஎன்ற வலைப்பூவில் நீங்கள் காணலாம். தவிரவும் ATBC யில் ’காற்றினிலே வரும் கீதம்’ உங்களுக்குக் கீதாவை அறிமுகப்படுத்த தோதாக இருக்கும் இன்னொரு ஊடகம். அந்தக் கொஞ்சுதமிழில் நன்றியுரை சொன்னாள் தமிழ் பாவை.கீதா. கீதாவுக்கு என் வாஞ்சை மிக்க அன்பு.
ஒரு நிகழ்வுன்றினை நடத்துகின்ற போது நாம் சந்திக்கின்ற ‘எதிர்பாரா சம்பவங்கள்’ அனேகம். எப்படித்தான் திட்டமிட்டாலும் நடை முறையில் சில விடயங்களைச் சாத்தியமாக்க முடியாது போய் விடுவதுண்டு. ஒத்துழைப்பும் பொறுப்புணர்வும் சில வேளைகளில் கூடி வர சிரமப்படும்.
சில பேர் வருவார்கள். யாரென்றே தெரியாதவர்களாக, அமைதியாக அறிவினைச் சேகரித்துக் கொண்டு போகிறவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். விடயதானத்தின் காத்திரமான பொருள் உணர்ந்த மனிதர்கள் அவர்கள்.
கடந்த நிகழ்வில் அவை இரண்டையும் நாம் அனுபவம் செய்தோம் என்றே இப்போது தோன்றுகிறது.
இலக்கிய உலகில் இருப்பதாகச் சொல்பவர்கள், அவற்றுக்குத் தாம் பங்களிப்புச் செய்வதாக உணர்பவர்கள் பலரை இந் நிகழ்வுக்கு அழைத்திருந்தேன். அதில் ஓரிருவரைத் தவிர வேறு எவரையும் வரக் காண்கிலேன். அது என்னை மிக விரக்தியுறச் செய்திருந்தது. நாட்டியக் கலாநிதி. கார்த்திகா கணேசர் அவர்கள் ‘ஆக்களுக்குச் சொன்னீரா,ஆக்களுக்குச் சொன்னீரா?’ என்று அடிக்கடி என்னை அன்புத் தொந்தரவு செய்து கொண்டிருந்த போதெல்லாம் அவருக்கு நான் சொன்னது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ‘கார்த்திகா அக்கா, சொல்வது நம்கடமை, வருவது அவர் உரிமை’ யாரையும் நாம் வற்புறுத்தவோ நம் முகத்துக்காக வரும்படி சொல்வதோ கூடாது. தெரிவு செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். நாம் ஓர் அறிவுப் பகிர்வை இலவசமாகக் கொடுக்கிறோம். அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டும். ஒரு 15 பேர் வந்தாலும் அவர்கள் அறிவைச் சேகரித்துச் செல்பவர்களாக இருந்தால் அது வெற்றிகரமான நிகழ்வு தான்’ ’ என்பதாக அது இருந்தது. கார்த்திகா அக்காவுக்கு அதில் சம்மதம் இல்லாதிருந்தது. அவர் தானாக தனக்குத் தெரிந்த கூட்டங்களிலெல்லாம் சென்று பேசியும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியும் மண்டபத்தை அங்கத்தவர்களால் நிறையச் செய்திருந்தார்.
மண்டபம் நிறைந்திருந்தால் என்ன? அதில் எத்தனை பேர் இலக்கியத்தில் உண்மையான ஈடுபாட்டோடு ஐயா அவர்களின் பேச்சினைச் செவி மடுத்திருப்பார்கள் என்ற கேள்வியும், ஏன் இலக்கிய ஆர்வலர்களுக்கு இலக்கிய சம்பந்தமான உரையைக் கேட்க ஆவலோ ஆர்வமோ அற்றுப் போகிறது என்ற கேள்வியும் எனக்கு எழாமல் இல்லை.
எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டதால் கேட்க விருப்பமற்றுப் போய் விட்டதா? அல்லது தமிழின் ஆழம் பற்றிய புரிதல் வேண்டியதில்லை; நாம் அகல சிறகு விரித்தால் போதும் என்ற எண்ணம் தோன்றி விட்டதா தெரியவில்லை. அந்தக் கேள்வி சுடுகின்ற கேள்வியாகவே இற்றைவரை இருக்கிறது. இனியும் இருக்கும் என்றே தோன்றுகிறது.
ஆனால், இன்றுகாலை மின் அஞ்சலைப்பார்த்த போது அதனை எல்லாம் தணிக்கின்றது போல ஓர் ஒளி ஒலிப் பதிவு என்னை எதிர்பாரா சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டது. எங்கோ யாரோ ஒருவர் அந்த சிறந்த ஒரு சிந்தனைப் பகிர்வை ஒரு கிண்ணத்தில் ஏந்தி என்றென்றைக்குமாக அதனைச் இணையப் பரப்பில் உலவ விட்டிருக்கிறார் என்ற உணர்வு என்னை மிகுந்த திருப்தியுறச் செய்கிறது. நாங்கள் சொல்லாமலும் நாங்கள் காணாமலும் ஒருவர் அதைச் செய்திருக்கிறார். அதற்கு உரித்தானவர் Dr.ரவி அவர்கள். அவருக்கு நம் உயர்திணை அமைப்பின் சார்பாக நன்றிகள்.( https://www.youtube.com/watch?v=OBji7EF7Hyc )
மிக மிக வெற்றிகரமாக நிகழ்வு நடந்தது எனச் சொல்ல மாட்டேன். தவறுகள் இருந்தன. தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு அடுத்தடுத்த நிகழ்வுகளை நாம் சிறப்புறச் செய்வோம் என்ற உறுதியை இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளைச் செய்ய இந் நிகழ்வு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது என்பதை உறுதியாகச் சொல்லிக் கொள்வேன்.
மற்றும் ஞானசேகரன் ஐயாவின் குடும்பத்தார், கார்த்திகா அக்காவின் மகனார் அமிழ்தன், மயூரா ஸ்தாபனத்தார் – நீங்கள் எல்லோரும் வழங்கிய ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
யசோதா.பத்மநாதன்.
( உயர்திணை அமைப்பினர் சார்பாக)
பிற்குறிப்பு:
நிகழ்வு சம்பந்தமான புகைப்படங்களையும் நிகழ்வின் காணொளியினையும் ஏற்கனவே இங்கு கடைசி இரு பதிவிலும் பதிவேற்றி இருப்பதால் நிகழ்வின் இரண்டாம் அங்கமான ‘இராவணேசன்’நாட்டுக்கூத்து பற்றிய அறிமுகத்தை நிகழ்த்தும் கார்த்திகா கணேசரையும் பார்வையாளராக அமர்ந்திருப்போரையும் கீழ் வரும் மூன்று புகைப்படங்களிலும் காணலாம்.