RSS

Monthly Archives: August 2016

சல்மாவுடனான சந்திப்பும் சில குறிப்புகளும்

13.8.16 மாலை 4.00 மணி. சிட்னி தமிழ் அறிவகம், கேட்போர் கூடம்.

சுமார் 4.05 மணியளவில் சுமார் 18 பேர் கூடி இருந்தார்கள். நிகழ்வு முடிகின்ற போது அத் தொகை 20 க்கு அதிகப்பட்டிருந்தது. எதிர் பாரா திரள் அது. SBS, ATBC மற்றும் தாயகம் வானொலி ஊடகவியலாளர்கள் /  கலைஞர்களோடும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வலைப்பூ சொந்தக் காரர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று ஒன்று கூடிய சபை அது.

மேடைகளும் மைக்குகளும் இல்லாத சம பந்தி. சகஜ சுபாவம் கொண்ட கனமான சபை. ஒரு கலந்துரையாடல் களம்.

இதனைச் சாத்தியமாக்க உதவியவர்கள் இரண்டு பேர். ஒருவர் எழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்கள். கடந்த மாதச் சந்திப்பின் போது சல்மாவின் வருகையை நமக்குத் தெரியப்படுத்தியவர். அடுத்தவர் கவிஞர். நட்சத்திரன். செவ்விந்தியன். தொலைபேசியில் நம்மை அழைத்து இப்படியான சந்திப்புக்கு ஏற்பாட்டினைச் செய்ய நமக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.

இவ்விருவருக்கும் கூடவே நூலகத்தின் பொறுப்பாளர் திரு. மணிமாறன் அவர்களுக்கும் நன்றி சொல்லாமல் அப்பால் நகர முடியாது. இம்மூவருக்கும் முதற்கண் நம் மனமார்ந்த நன்றி உரியதாகுக. இவர்கள் இல்லாமல் இவ் அனுபவம் சாத்தியமாகி இருந்திருக்க வாய்ப்பில்லை.

இவை நிற்க,

சல்மா –

ஓர் அனுபவம்.

பெண்களுக்கே மட்டுமேயான சாத்தியங்களுக்கும் அசாத்தியங்களுக்குமிடையே தன்னை ஒரு ஆய்வு கூடத்துப் பரிசோதனை எலியாக்கி வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவர். அதில் அவர் வென்றதும் கற்றதும் உண்டாயிருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றையும் இலக்கிய வெளியில் அப்பட்டமான நேர்மையோடு முன் வைத்திருக்கிறார் என்பது என் கருத்து.

எனினும், அனுபவம் செய்தல் என்பது கண்களால், காதுகளால், ஆழ்மன உணர்வுகளால், உரையாடல்களால்,மூளையால், மனங்களால் நினைவுத் தடங்களிலேற்றிக் கொள்ளல் / பதிய வைத்தல் மேலும் கேள்விகளால் பதியவைக்க வேண்டியதை தெளிவு படுத்திக் கொள்ளல் என்ற வகை சாரும். அதனை எழுத்தில் கொண்டு வருவதற்கு நிறையப் பிரயத்தனங்களும், நேரமும் நினைவு கொள்ளலும் மொழி ஆழுமையும் வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தம் வாழ்வனுபவம் சார்ந்து தமக்கு தேவையானவற்றை தேவையான முறையில் சேகரித்துக் கொள்வதால் ஒருவர் சொல்வது மற்றவருக்கு மனநிறைவை அளிக்கும் என்றும் சொல்ல முடியாது.

அதனால் ஒன்றைச் சொல்லுதல் அல்லது எழுதுதல் என்பது எப்போதும் பூரணமற்றதாகவே இருக்கிறது. அத்தோடு வந்தோர் அனுபவம் செய்து கொண்ட; சேகரித்துக் கொண்ட பொருள்களுக்கு அப்பால் நான் அடைந்து கொண்ட விதமாக ஒன்றைப் பதிதல் என்பது நாணயம் அற்றதும் கூட. அவரவர் தம் பவித்திரமான அனுபவங்களை மாற்ற நிர்ப்பந்திக்க இந்தப் பொது வெளியில் என் எழுத்துக்கு எந்த அருகதையும் இல்லை. அது அவற்றைப் பங்கப் படுத்துவதுமாகும். அதனால் குறிப்புகளாக சில விடயங்களையும் சில புகைப்படங்களையும் பதிதலே போதுமானதாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.

சல்மா –

அவுஸ்திரேலியாவில் ( Byran bay) பைரன்பேயில் நடக்கும் அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட இருக்கும் 20 உலக  எழுத்தாளர்களுடய கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டுக்காக அத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு சிறுகதையின் கர்த்தா என்ற காரணத்தினால் அவர்களின் அழைப்பின் பேரில் இங்கு வந்திருக்கிறார் .

கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 2 நாவல்கள் மூலமாக உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர். லண்டனில் இயங்கும் பிரபல அலைவரிசை 4 தொலைக்காட்சி ‘சல்மா’ என்ற பேரில் எடுத்த ஆவணப் படம் ஒன்றின் மூலமாக உலக மக்களின் கவனத்துக்கு வந்த இவரின் பெண்ணியப் போராட்ட வாழ்வு மற்றும் சொந்தத் திறமையினால் மிளிரும் வரலாறு பலருக்கும் ஓர் எடுத்துக் காட்டாகும்.

அவர் நம்மோடு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட கவிதை ஒன்றோடு மிகுதியைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.

ஏரி

ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு

ஏரி சலனமற்றிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்

தயக்கமின்றி உன்னிடமிருந்து

காலியான மதுக் கோப்பைகளை

விட்டெறிந்தாய் அதை

மறுக்காமல் பெற்றுக் கொண்டது

ஏரி.

பிறகொரு நாள்

நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தை

கழுவிச் சாம்பலையும் கதைத்தாய்

நேற்றுக் கூட

கசந்து போன நம் உறவினை

இகழ்ந்து எச்சில் துப்பினாய்

தண்ணீரில்

எந்தக் காலமென்றில்லாமல்

எல்லாக் காலங்களிலும்

உன் கழிவுகளைக் கொட்டி

உன்னைச் சுத்தப் படுத்தி இருக்கிறாய்

இன்று இதில் எதையும்

நினைவுறுத்தாது

உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய்

உன் அசுத்தங்களை

அடித்துக் கொண்டு போக

இது நதியில்லை

ஏரி

சலனமற்றுத் தேங்கிய நீர்

பத்திரமாய் பாதுகாக்கும்

ஏதொன்றும் தொலைந்து போகாமல்.

 

அவர் ”ஏரி”யில் விட்டெறிந்த பொருட்களுள் கண்டெடுத்த பொருட்கள் சிலவற்றை  நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

  • மிக எளிமையான மென்மையான பெண்ணாக அவர் தென்பட்டார். ஆனால் கருத்துக்களை முன் வைத்த போது அதில் தெளிவும் உறுதியும் முடிவான நிலைப்பாடும் இருக்கக் கண்டேன்.
  • பெண்ணியம் சார்ந்த கருத்துக்களைத் தன் வாழ்வனுபவத்தில் இருந்தே முன் வைத்தார். அது அவர் பெண் சிசுவாய் பிறந்ததன் நாளில் இருந்து தொடங்கி இருந்தது.
  • கவிஞராய் தன் எழுத்துலக வாழ்வை ஆரம்பித்து சிறுகதை நாவல்களூடாக மிளிர்ந்து ஒரு குடும்பநல வாரியத் தலைவியாய் வர முடிந்ததன் பாதையை அதன் சவால்கள், வலிகள், வெற்றிகள், தோல்விகளூடாக நமக்கு ‘பெண்ணின் பாதையை’எடுத்துக் காட்டினார். அதில் கரடு முரடாய் இருந்ததன் பயண வலி புலப்பட்டது.
  • உண்மையையும் அனுபவங்களையுமே அவர் பேசினார்.
  • பெண்ணை ஆண்கள் உடலாய் பார்க்கும் அவஸ்தைகளையும் உடலாய் மட்டுமே பார்க்கும் அப்த்தத்தினையும் திருமணம் பெண்ணுக்குக் கொடுக்கும் நெருக்கடியையும் கேள்விகளுக்கு கொடுத்த விடைகளினூடே வெளிப்படுத்தினார்.
  • ரஷ்ய இலக்கியங்களும் பெரியாரின் கோட்பாடுகளும் சிறுமியாய் இருந்த 13 வயதுப் பெண்ணுக்கு திறந்து விட்ட பாதைகள் பற்றி; தன் சிறு கிராமத்தில் இருந்த சிறு நூலகம் நான்கு சுவருக்குள் இருந்த இஸ்லாமியச் சிறுமிக்கு திறந்து விட்ட வாசல்களைப் பற்றி; அது கொடுத்த ‘சிந்தனை உடைப்புகள்’ பற்றி; மதம் சார்ந்த நம்பிக்கைகளில் இருந்து; பெண் சார்ந்த கற்பிதங்களில் இருந்து வெளி வந்த வீரியம் பற்றி அவர் கூறிய அனுபவக் குறிப்புகள் எந்தப் பெண்ணுக்கும் நம்பிக்கை ஊட்ட வல்லதாய் இருந்தது.
  • சமையலறையும் (சமையல்) திருமணமும் பெண்ணுக்கு இருக்கும் இரு பெரும் தளைகள் என்பது அவரது வாழ்வில் அவர் கற்றுக் கொண்டதாய் இருந்தது.
  • சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளர் கொடுத்த நம்பிக்கை ஆதரவு எப்படித் தன்னை துவண்டு போகாமல் காப்பாற்றியது என்பதை நெகிழ்வோடு நினைவு கொண்டார். அவர் தனக்குச் சமனான சிந்தனை இருக்கை கொடுத்து மதித்ததை நன்றியோடு நினைவு கூர்ந்தார். கூடவே அவர் கைபட எழுதும் கடிதங்களும் காது கொடுத்து கேட்கும் அக்கறையும் தன் இடத்தில் இருந்து விடயத்தைப் பார்த்து அறிவுரை கூறியதும் தனக்கு எவ்வாறு துவண்டு போன சமயங்களில் எழுந்து நிற்க உதவிற்று என்பது பற்றி நெகிழ்ந்ததை காண முடிந்தது. உண்மையும் உணர்வும் நெகிழ்வும் கூடிய கணம் அது!
  • ஓரின ஆண்பாலுறவு, பெண்பால் உறவு பற்றிய கேள்விகள் அவரை நோக்கி கேட்கப்பட்ட போது சகல சமயங்களுக்கும் சகல சமூகப்பண்பாட்டு கட்டுகளுக்கும் அப்பாலான மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அந் நிலைப்பாட்டை எடுப்பதிலும் சொல்வதிலும் வரக்கூடிய சவால்களையும் பிரச்சினைகளையும் கூடவே தெரிந்து வைத்திருந்தார். அது பற்றி எழுத வேண்டிய தேவையையும் நியாயப்பாட்டையும் எழுதும் நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருக்கிறார்.
  • ஒரு பெண் ‘விடுபட்டு’ வந்த பாதையை எந்த வித பாசாங்கும் இல்லாமல் – மதிப்பீடுகளுக்கு அப்பாலான உண்மையின் பாலிருந்து முன் வைத்திருந்தார். அதில் தொனித்தது நேர்மை; தன்னை ஒரு பரிசோதனை எலியாய் ஆக்கிக் கொண்ட திடம் வியப்பூட்ட வல்லது.
  • அவர் தன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட போது உணர்வு பூர்வமாக எழுதிய காலத்துக்குள் ஆழ்ந்து உண்மையின் பாரத்தைச் சுமந்த படி வெளி வந்த அக் கவிதைகள் ஒட்டுமொத்தப் பெண்களின் வலியை; பாரத்தைச் சுமந்தவாறான நூற்றாண்டுச் சுமைகளைக் கொண்டிருந்தது.
  • கவிதைக் குரல் சூல் கொண்ட மேகத்தின் கனத்தோடும் சிசுவைச் சுமக்கும் தாய் வயிற்றுப் பாரம் போலும் அவை காத்திரம் மிக்க கனத்தோடு விளங்கின. உண்மையும் அனுபவமும் அக் கவிதைகளைத் தாங்கி நின்றன.
  • கவிதை சொல்லப்பட்டுக்கொண்டிருந்த போது ஓரிடத்தில் அது மெளமாயிற்று. எழுத்து இழுத்துக் கொண்டு வர முடியாதமெளனம். அந்த மெளனம் பேசிய பாஷை மிகுந்த அர்த்தம் பொதிந்ததாய் விளங்கிற்று. அந்த கனம் அந்தக் கணத்தில் அறை முழுக்க வியாபித்திருந்தது. மெளனம் பேசிய கணம் அது! அவரவர் அம் மெளனத்தை அவரவர் மொழியில் மொழிபெயர்த்திருப்பர் என்பது திண்ணம். அது பெண் சார்ந்த வாழ்வில் ஒரு சிறு கல்லையேனும் நகர்த்தி இருக்குமானால் அது பெண்ணினத்தின் சிறு வெற்றியே.
  • இடங்களைப் பார்ப்பதை விட மனிதர்களைப் பார்ப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்றார். நமக்குக் கூட கிராமத்தில் இருந்த ஒரு சிறு நூலகம் இப்பெண்ணை ‘உருவாக்கி’ இருக்க, அப்பெண்ணை அந்நிய நாட்டில் ஒரு தமிழ் நூலகத்திலேயே சந்தித்தது சந்தோஷத்தையே தந்தது.

சல்மா – ஓர் அனுபவம்.

பெரும் பாலான குரலற்ற பெண்களின் ஏக பிரதி நிதியாய் விளங்குகின்றன அவர் கவிதைகள்.

நன்றி சல்மா. வாழ்வனுபவத்தைப் பகிர்ந்ததன் மூலம் மணித்துளிகளை  அர்த்தமுள்ளதாக்கினீர்கள்.

கூடவே, வந்திருந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. நிகழ்வின் சில புகைப்படங்களை இத்தோடு இணைக்கிறேன். இவை கைத்தொலைபேசியினால் எடுத்தவை. மேலும் சில புகைப்படங்களை பிரசுரிக்க சிலருக்கு ஆட்சேபனை இருப்பதால் அவற்றை விலக்கி சிலவற்றை  மட்டும் இங்கு பிரசுரிக்கிறேன். புலமையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கை வந்து சேர்ந்ததும் பதிவேற்றப் படும்.

இ.ச.26.2

இ.ச.26.4

 

இ.ச.26.6

 

இ.ச.26.8

இ.ச.26.9

இ.ச.26.10

இ.ச.26.11

இ.ச.26.12

 

தமிழால் இணைந்திருப்போம்.

அன்புடன்,

யசோதா.பத்மநாதன். – உயர்திணை சார்பாக.

 
Leave a comment

Posted by on 16/08/2016 in Uncategorized

 

இலக்கியச் சந்திப்பு – 26 –

இலக்கிய சந்திப்பு - 26 -

 

இலக்கிய உள்ளங்களுக்கு வணக்கம்,

இது ஒரு அவசர மடல்.

கடந்த மாத இலக்கிய கலந்துரையாடலின் போது எழுத்தாளர் ரஞ்சகுமார் மூலமாக கவிஞர் சல்மா அவர்கள் இங்கு வருவது பற்றிய செய்தி கிட்டியது. பின்னர் கவிஞர் நட்சத்திரன். செவ்விந்தியனூடாக இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலிய அமைப்பொன்றின் அழைப்பின் பேரில் இங்கு வருகை தந்திருக்கும் சல்மாவின் தொலைபேசி இலக்கம் கிட்டியது. ( இருவருக்கும் நன்றி.)அவரோடு தொடர்பு கொண்ட போது சனிக்கிழமை மாலை 2 மணி நேரங்களை நமக்குத் தர சம்மதித்திருந்தார்.

அதனால் அவசர அவசரமாக இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப் படுகிறது.

சல்மா – ஒரு Salama1பெண் எழுத்தாளர் -கவிதைகள், சிறுகதைகள், நாவல்களூடாக தமிழ் சமூகத்தில் பரவலான கவனத்தை ஈர்த்தவர். சமூக நலத்துறை வாரியத் தலைவி – இஸ்லாமியம் அவரது குடும்பம் கைக்கொண்ட வாழ்க்கை நெறி. இவரது துறை தொடர்பாக பிரித்தானியாவில் இருந்து ஆவணப்படமொன்றை உருவாக்கச் சென்றவர்கள் அவரது வாழ்க்கையினையும் வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் ஆவணமாக்கியுள்ளனர்.

தயாரிப்பு : Woman make movies.
இயக்குனர் : Kim Longinotto

2013 ஜனவரியில் உருவான இப்படம் 90 நிமிடங்களைக் கொண்டது.
‘சல்மா’ உலகத் திரைப்படவிழாக்களில் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் திரையிடப்பட்டது.இந்த ஆவணப்படத்திற்கு பதின்மூன்று விருதுகள் கிடைத்தன. இதற்காக இயக்குனர் பல விருதுகள் பெற்றுக்கொண்டார்.

இந்த ஆவணப்படத்தையும் காண்பிக்க நாம் முயற்சி செய்கிறோம்.

அவரைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புபவர்கள் –

வருகின்ற சனிக்கிழமை ( 13.8.16 )மாலை 4.00 – 6.00 மணி வரை சிட்னி தமிழ் அறிவகத்தில் ( 191 Great Western Highway, May Hills 2145. (Cnr Great Western Highway and Belinda Place) ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

 
Leave a comment

Posted by on 08/08/2016 in Uncategorized