ஆங்கிலப் புது வருடத்தின் பின்பான நம் முதலாவது புத்தக வெளியீட்டுக்குப் பின் இரு மாத இடைவெளியில் மீண்டும் தமிழ் புதுவருட வாழ்த்துக்களோடும் ஒரு புத்தக அறிமுகமும் வெளிவீட்டு விழாவும் பற்றிய செய்தியோடும் உங்களைச் சந்திக்கிறோம்.
புதுவருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் எடுத்து வருவதாக!
கடந்த தை மாதம் 26ம் திகதி கீதா. மதிவாணனின் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த எல்லோருக்கும் இச் சந்தர்ப்பத்தில் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஏப்பிரல் மாத இறுதி ஞாயிறான 30.4.17 அன்று யாழ் நிகழ்வரங்கில் 3 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வருமாறு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
ஈழத்தின் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமாயும் சிறப்பாயும் வேறுபட்டும் காணப்பட்ட இரு பெரும் இலக்கியப் போக்குகள் போர்கால இலக்கியமும் புலம்பெயர் இலக்கியமுமாகும். இவை இரண்டும் களநிலையிலும் கொள்ளளவிலும் இலக்கிய வரலாற்றில் பெரும் காலடியைப் பதித்த ஈழ இலக்கியங்களாகும். அவற்றினைத் தொகுதியாக வெளியிட்டு ஒருமுகப்படுத்தி வைத்ததில் ‘ஞானம்’சஞ்சிகைக்கும் எழுத்தாளர் ஞானசேகரன் அவர்களுக்கும் பெரும் பங்கு சென்றடையும்.
அந்த வரிசையில் அவர்களின் பெரு முயற்சியினால் மூன்றாவது பெரும் தொகுதியாக தற்போது வெளிவந்துள்ளது ஈழத்து பல்வேறு பட்ட ஆளுமைகளின் நேர்முகங்களின் தொகுப்பு. இதன் இலக்கிய / ஆவண முக்கியத்துவம் துறைசார்ந்த பெரியார்களால் சான்றோர் அவையில் ஆசிரியர் முன்னிலையில் அறிமுகமும் வெளியீடும் செய்யப்பட இருக்கிறது. அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவ சமூகத்தாலும் இலக்கியத்திலும் ஆய்வுப் புலத்திலும் மிக்க ஈடுபாடும் புலமைசார் ஆற்றலும் கொண்ட திரு. தனபாலசிங்கம் ஐயா மற்றும் கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்களாலும் அதன் அறிமுகமும் பார்வையும் நிகழ்த்தப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆசிரியருடய ஏற்புரையும் நிகழும்.
கூடவே தேநீர் சிற்றுண்டி விருந்தோடு ஆர்வலர்கள் ஞானம் ஆசிரியரோடு கலந்துரையாடி கேள்விகள் கேட்டு அளவளாவிச் செல்லவும் அவகாசம் இருக்கும்.
கூடவே ஞானம் சஞ்சிகையினால் ’ஈழமும் தமிழும்’ என்ற தொடரில் சிறு தொகுதிகளாக வெளிவந்துகொண்டிருக்கும் ஈழத்தில் இருந்து மறைந்து போன பலருக்கும் தெரியாதிருக்கும் பல விடயங்கள் பற்றிய சிறு நூல்களும் பார்வைக்கும் ஆச்சரியங்களுக்குமுரியனவாக பார்வைக்கு வைக்கப்படும்.
அதனோடு கூடவே ஈழ, இந்திய, அவுஸ்திரேலிய வரலாறு, பண்பாடு, மரபு .. இவற்றைப் பிரதிபலிக்கும் நாணயங்கள், நோட்டுகள், முத்திரைகள், பாரம்பரியப் பொருட்கள் போன்றனவும் பார்வைக்கு வைக்கப் படும்.
ஆர்வலர்கள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு ஓர் இலக்கிய அனுபவத்தை நுகர்ந்து செல்ல உயர்திணை இலக்கிய அமைப்பு இருகரம் கூப்பி அன்போடு அழைக்கிறது. (அழைப்பிதழ் இணைக்கப் பாடிருக்கிறது)
கடந்த தை மாதம் 26ம் நாள் உயர்திணை அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த திருமதி. கீதா. மதிவாணன் அவர்களின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அவை சம்பந்தப்பட்ட ஒளிப்படங்கள், காணொளிகள் இன்று இங்கு பதிவேறுகின்றன.
இந் நிகழ்வுக்கென இம் மொழிபெயர்ப்பு புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளரான கீதாவினால் இந் நிகழ்வுக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப் பட்டிருந்த மூலக் கதை ஆசிரியரான ஹென்றி லோஷன் அவர்களின் வாழ்க்கைச் சித்திரம் ஆவணப்படமாக அன்றய தினம் காட்சிப் படுத்தப் பட்டிருந்தது.
அதனைப் பார்க்க விரும்புகிறவர்கள் கீழ்காணும் இணைப்புக்குச் சென்று அதனைக் காணலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நம் நிகழ்வு மிகவும் சிறப்புற ஊடக அநுசரனை வழங்கிய SBS வானொலி, ATBC வானொலி, தமிழ்முழக்கம் வானொலி, தாயகம் வானொலி, ஆகிய ஊடகங்கள் மொழிபெயர்ப்புச் சிறுகதையை ஒலிபரப்பியும்; கீதா.மதிவாணனை நேர்முகம் கண்டும் நிகழ்வுக்கு முன்னரே இப் புத்தகத்தின் தரத்தை உலக அரங்கிற்கு அறிமுகம் செய்திருந்தது.
நிகழ்வினன்று அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் பெரு மதிப்பிற்குரிய இருதயசிகிச்சை நிபுணரும் தமிழ் ஆர்வலரும் சமூக சேவையாளருமான வைத்தியக் கலாநிதி மனோமோகன் அவர்கள் நிகழ்வுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்ததோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியின் இறுதி வரை அமர்ந்திருந்து பேச்சளர்களின் உரையை ஆர்வத்தோடு செவி மடுத்து நிகழ்வின் இறுதிவரை அமர்ந்திருந்து பேச்சாலர்களோடும் அளவளாவிச் சென்றது நம்மை மிகுந்த மனநிறைவுக்குள்ளாக்கியது.
நிகழ்வின் பேச்சாளர்களாக கன்பரா மாநிலத்தில் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் மாணவி செல்வி. திவ்யா. கதிர்காமநாதன் தன் கல்விச் சுமைகளுக்கிடையிலும் 3 மணி நேரப் பயணத்தொலைவில் இருந்து வந்து, கலந்து கொண்டார். அவர் மூலக் கதைகளையும் மொழிபெயர்ப்புக் கதைகளையும் வாசித்து ஒப்பு நோக்கி அவரது நோக்கில் கதைகளின் சாயல்களையும் தரத்தையும் உரைத்தார்.
எழுத்தாளரும் நம் இலக்கிய சந்திப்புகளின் ஆர்வத்தோடு கலந்து கொள்பவருமான எழுத்தாளர். கார்த்திக் வேலு தன் பார்வையில் கதைகளின் தரத்தை நிர்ணயம் செய்தார்.
அவருக்கடுத்ததாக நாட்டியக் கலாநிதி கார்த்திகா. கணேசர் ஒரு ரசிகையின் பார்வையில் இருந்து தன் எண்ண ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து கன்பரா மாநிலத்தில் இருந்து வைத்தியக் கலாநிதியாக இருக்கும் திரு.கார்த்திக் அவர்கள் சுமார் 300 மைல்கள் தொலைவில் இருந்து இந் நிகழ்வுக்கென குடும்பத்தினரோடு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வின் வரவேற்பினை தன் கவி வனப்பினால் சொல்லும் முறையினால் கவிதைப் பாங்கினால் நிகழ்வை அழகூட்டியவர் நம் ஆஸ்தான கவி; ஆசுகவி குமார செல்வம் அவர்கள்.
இந் நிகழ்வினை வழமை போலவே சிறப்புற ஒருவித ஈடுபாட்டோடும் இலக்கியப் புலமையோடும் நடத்தித் தந்தவர் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இருக்கும் மகேந்திரராஜா பிரவீனன் அவர்கள்.
நாம் கேட்காமலே ஒளிப்படம் எடுத்தும் காணொளி எடுத்ததோடும் மட்டுமல்லாமல் அவற்றை மறு நாளே தகுந்த பேழைகளில் பதிவு செய்து தந்த அந்தக் காலத்தால் செய்த நன்றியை மறப்பதெங்ஙனம்? கூடவே நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னரே வந்து தொழில் நுட்ப உதவிகள் வழங்கியவர் பொறியியலாளரும் தமிழ் அறிவகத்தின் நிர்வாக உறுப்பினருமான திரு மணிமாறன் அவர்கள்.
கீதாவின் கணவர் திரு மதிவாணன் அவர்களும் அவர்களது மகள் வெண்ணிலாவும் நிகழ்வு சிறப்புற மிகுந்த மகிழ்வுடனான ஆர்வத்தையும் உதவியினையும் ஒத்துழைப்பையும் வழங்கி மகிழ்ந்தார்கள்! அவர்கள் மாண்புடை மாந்தர்கள்…
இந் நிகழ்வின் சிறப்புப் பிரதிகளை வாங்க நாம் நூலகங்களையும் தமிழ் அமைப்புகளையும் வானொலி ஊடகங்களையும் கேட்டிருந்தோம். அவர்கள் எல்லோரும் வருகை தந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். அவர்கள் அனைவரினுடயதும் பெயர்களை இங்கு வழங்க வேண்டியது என் தலையாய பணியாகும்.
1. சிட்னி தமிழ் அறிவகம் சார்பாக அதன் நடப்பாண்டுச் செயலாளர் திரு. ராஜேஷ்வரன் அவர்கள்.
2. பிளக்டவுன் கவுன்சில் நூலகம் சார்பாக பிளக்டவும் கவுன்சிலர் திரு. சூசை அவர்கள்.
3.ATBC வானொலி ஊடகம் சார்பாக அதன் நிர்வாக பீடத்தில் இருந்து திரு ஈழலிங்கம் அவர்கள்.
4.தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் சார்பாக அவ் வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் திரு. எழில் வேந்தன் அவர்கள்.
5.தமிழ் முழக்கம் வானொலியின் சார்பாக அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாலர் திரு. சிறிதரன் அவர்கள்.
6. தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பாக அதன் நடப்பாண்டுச் ச்யலாளர் திரு அனகன் பாபு அவர்கள்.
7. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் சார்பாக அதன் துணைத்தலைவர். ஆசி. கந்தராஜா அவர்கள்.
8.சிட்னி தமிழ் மன்றம் சார்பாக தன் நடப்பாண்டுச் செயலாளர் திரு.பொன்ராஞ். தங்கமணி அவர்கள்.
9. தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பாக அதன் முன்னாள் தலைவர். திரு. வேங்கடம் அவர்கள்.
10. இறுதியாக கீதா. மதிவாணனின் ‘காற்றினிலே வரும் கீதம்’ நிகழ்ச்சியின் ரசிகர். திரு. ஆ. பத்மநாதன் அவர்கள்.
மேற்கூறிய அத்தனை பேரினாலும் அவர் தம் ஆதரவினாலும் வருகை தந்த மக்களின் அங்கீகாரம் மிக்க கரகோஷங்களோடும் விழா இனிதே நிறைவு பெற்றது.
வந்திருந்தோர் சொற்ப பேரே! பொதுவாக இலக்கியக் கூட்டங்களுக்கு வருபவர்கள் ஆர்வமுள்ள சிலரே என்பது தமிழ் உலகறிந்த செய்தி. சுமார் 30 – 35 பேர் வந்தால் அது ஒரு நல்ல இலக்கிய நிகழ்வு என்பது இங்குள்ளோர் அபிப்பிராயம். அன்றய தினம் அவுஸ்திரேலிய தினமாகிய காரணத்தாலும் அண்மையில் இருக்கும் விளையாட்டுத் திடலில் தமிழர்களுக்கான நாள் முழுவதுமான விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த காரணத்தாலும் தம் பிள்ளைகளின் பங்கு பற்றல் நிகழ்வு இருக்கிற காரணத்தால் தம்மால் வர இயலாத நிலையை சிலர் முன் கூட்டியே அறிவித்திருந்தார்கள். SBS வானொலியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு றேமண்ட் செல்வராஜ் அவர்கள் தன் தாயாரின் மரண செய்தி கேட்டு தாயகம் செல்ல வேண்டி இருப்பதை துயரோடு சொல்லிச் சென்றார்.
மிகுந்த மன நிறைவைத் தந்த இன்னொரு விடயத்தை நான் இங்கு நிச்சயம் சொல்லி ஆக வேண்டும்.
வந்திருந்த பார்வையாளர்கள் ஒட்டு மொத்தமாக அத்தனை பேரும் மிக்க ஆர்வத்தோடு நிகழ்வின் இறுதிவரை இருந்து கேட்டு அவதானித்து வேண்டிய இடங்களில் கரகோஷம் எழுப்பி நிகழ்வு முடிந்த பின்னாலும் நம்மோடு அளவளாவி தம் அனுபவத்தைப் பகிர்ந்து சென்றார்கள்.
அத்தனை சிறப்பாகவா நடந்தது என்று நீங்கள் வியக்கக் கூடும். இதில் கற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களும் சிருஷ்டிப் பொட்டுப் போல இருந்தது என்பதும் இங்கு குறிக்கப் பட வேண்டியதே.
அது எழுத்தாளப் பெருமக்கள் சிலரது உள் முகம் கண்டுகொள்ள முடிந்தது என்பது தான்.
அந்தப் பாடம் நம் அமைப்பைப் பொறுத்தவரை நம்மைத் திடம் கொள்ள வைத்தது என்பதும்; நாம் போகும் பாதை சரியென அது நம்மை உறுதி கொள்ள வைத்தது என்பதும் இந் நிகழ்வில் நாம் பெற்றுக் கொண்ட அதி உயர் சன்மானம்….
வந்தும் பங்குபற்றியும் வாழ்த்தியும் சென்ற அத்தனை பேருக்கும் நன்றி.
மீண்டும் ஒரு வெளியீட்டு விழாவில் சந்திப்போம்….
கீதாவின் வலைப்பதிவில் இந் நிகழ்வு பற்றிய குறிப்புகள் உண்டு. அதனைக் காண விரும்புவோர் கீழ் காணும் இணைப்பில் சென்று காண்பீர்களாக!