RSS

Monthly Archives: May 2017

ஈழத்துச் சிற்றிதழ்கள்

ஈழத்துச் சிற்றிதழ்கள்.
-ஞானம் ஆசிரியர். தி. ஞானசேகரன்

(அவுஸ்திரேலிய சிட்னி உயர்திணை அமைப்பு 30–04-2017 அன்று நிகழ்த்திய ‘ஈழத்து தமிழ் நவீன இலக்கிய வெளி” – ஞானம் 200 ஆவது இதழ் (சிறப்பிதழ்) அறிமுக விழாவில் ஆற்றிய உரை)

சிற்றிதழ்கள் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம்யாது? என்பதை முதலில் விளங்கிக்கொள்வது முக்கியமானது.
சிற்றிதழ்கள் என்பவை ஒரு நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள், இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப்போக்குகள், கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக்கண்ணாடியாகத் திகழ்பவை. சிற்றிதழகள்; ஒரு தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகரைச் சென்றடையும் இதழ்களாகும.; சிற்றிதழ்களின் முதன்மை நோக்கம் கருத்துப் பகிர்வே. அவை வியாபாரநோக்கில் இலாபமீட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொள்பவை அல்ல.

ஒத்த இலக்கியக் கருத்துக்கொண்ட ஒரு குழுவினர் தம்மிடையே கருத்துப் பரிமாறிக்கொள்ளவும் தொடர்பிற்காகவும் தரமான உண்மையான மொழி இனம் நாடு தொடர்பான வரலாற்றுக் கருத்துக்களையும் நடப்பியல் நிகழ்வுகளையும் நுட்பமாகப் பதிவுசெய்கின்ற அச்சுவடிவில் வரும் இதழ்களை சிற்றிதழ்கள் எனச் சொல்லலாம்.

சிற்றிதழ்களுக்குச் சில பண்புகள் இருக்கின்றன. அவற்றை முதலில் பார்ப்போம்.
1) சிற்றிதழ்களின் வாசகர்கள் பெரும்பாலும் அறிவு ஜீவிகள். சமூக மட்டத்தில் இவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும். இந்த இதழ்கள் குறைந்த எண்ணிக்கையிலான கூட்டத்தினரிடையே வலம்வரும்.
2) இந்த இதழ்கள் படைப்பாளிகள் உருவாவதற்கு தளமாக அமைவதோடு பயிற்சிக்களமாகவும் அமையும்.

3) இந்த இதழ்கள் வாசகர்களைக் கவர்வதற்குச் சமரசம் செய்வதில்லை
4) தொடர்ச்சியான இலக்கியச் சிந்தனைக்கும் ஆக்கபூர்வமான இலக்கியம் சம்பந்தப்;பட்ட விவாதத்திற்கும் இடமளித்தல், புதிய படைப்பு முயற்சிகளை ஊக்குவித்தல், காய்தல் உவத்தல் இன்றி விமர்சனங்களை வரவேற்றல், நவீன இலக்கியத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துதல், தமிழ் இலக்கியப் பரப்பிலும்; உலக இலக்கிப்பரப்பிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்களை அறிவித்தல் போன்ற பணிகளை சிற்றிதழ்கள் ஆற்றுகின்றன. வாசகனை தீவிர இலக்கியத்துக்கு ஆற்றுப்படுத்த, பொதுவெளியில் எழுத்தாளர்கள் வாசகர்களை ஒன்றிணைக்க சிற்றிதழ்கள் உதவுகின்றன.

சிற்றிதழ்களின் உள்ளடக்கங்களாக, சிறந்த இலக்கியப் படைப்புகளை வெளியிடுதல், சிறந்த இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம். மொழிபெயர்ப்புப்படைப்புகள், நேர்காணல்கள், கலைஇலக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவுகள,; புதிய நூல்கள்பற்றிய அறிமுகங்கள் என அமையும்.
ஆனாலும்; சிற்றிதழ்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட இந்த அளவுகோல்களின்படி உள்ளனவா? இது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இன்று எமக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள் மேற்குறிப்பிட்ட அளவுகோல்கள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வு செய்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச் சிற்றிதழ்கள்தான் என்பதை அறிய முடியும். ஈழத்தில் சிற்றிதழ்கள் எண்ணிக்கையிலும் ஆழத்திலும் பரப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஈழத்தில் இதுவரை காலத்தில் நூற்றுக்கும்; மேற்பட்ட சிற்றிதழ்கள் தோன்றியுள்ளன. பாரதி, மறுமலர்ச்சி, கலைச்செல்வி மல்லிகை, குமரன், இளம்பிறை, சிரித்திரன், விவேகி, மரகதம், தேனருவி, மலர், மாலை முரசு, நதி, அலை, திர்த்தக்கரை, அஞ்சலி, கொழுந்து, நந்தலாலா, பூரணி, சுடர் புதுசு, தோழி, நிவேதினி, பெண், புதுமை இலக்கியம், வசந்தம் அஞ்சலி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம் குன்றின்குரல், தாரகை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, தாயகம், வசந்தம், எழில்,. நாவேந்தன், குங்குமம், கற்பகம், சிலம்பொலி தமிழமுது, வைகறை பொய்கை, காவலன், களனி, கலை, பொன்மடல், களன், விருத்தம், கிருதாயுகம், தேன் மொழி, கவிஞன், க-வி-தை, பொறிகள், சுவடுகள், விடிவெள்ளிகள், பூபாளம், பொன்மடல், முனைப்பு, பெருவெளி, தாகம், விளக்கு, வெளிச்சம் சுதந்திரப்பறவைகள், வியூகம், மூன்றாவது மனிதன், முனைப்பு, பூவிழி, ஆகவே, யாத்திரா, இருப்பு, மறுகா, மறுபாதி, எதுவரை, செங்கதிர், நீங்களும் எழுதலாம் போன்ற இன்னும் பல சிற்றிதழ்கள் தோன்றி மறைந்திருக்கின்றன.

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி, கலைமுகம் மட்டக் களப்பிலிருந்து மகுடம், அனுராதபுரத்திலிருந்து படிகள், கொழும்பிலிருந்து ஞானம், தாயக ஒலி; புன்னகை போன்ற இதழ்கள் வெளிவருகின்றன.
இங்கே நான்குறிப்பிட்ட சிற்றிதழ்கள் யாவற்றைப்பற்றியும் விபரிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. எனவே எனக்குத் தரப்பட்ட 30 மணித்துளிகளி;ல் வரலாற்று ரீதியாக வகைமாதிரிக்கு சில சிற்றிதழ்கள் பற்றி மட்டும் குறிப்பிடுவேன்.

தமிழில் சிற்றிதழ்களின் தோற்றம்பற்றி ஆராய்ந்தால் தமிழகத்தில் ஆனந்தவிகடன் போன்ற வணிக இதழ்களின் போக்குகளில் அதிருப்தியுற்ற சி. சு. செல்லப்பா என்பவர் எழுத்து என்ற சஞ்சிiயை ஆரம்பித்து நடத்தினானார.; அதனைத் தொடர்ந்து ஏராளமான சிற்றிதழ்கள் காலத்துக்குக் காலம் தமிழகத்திலே தோன்றின.

ஈழத்தில் நிலைமை வேறானது. ஈழத்து இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் 1930 இல் தோன்றிய ஈழகேசரி பத்திரிகை பெரும்பணி ஆற்றியது. ஈழத்து நவீன இலக்கியத்தின் கருக்கட்டல் ஆரம்பித்தபோது இப்பத்திரிகை தோன்றி 1958ஆம் ஆண்டுவரை வெளிவந்தது. இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தவர் குரும்பசிட்டியைச் சேர்ந்த நா. பொன்னையா என்னும் பெரியார்.
இப்பத்திரிகையில் ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் எனக்கூறப்படும் இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் உட்பட மேலும் சிலர் சிறுகதைகள் எழுதியுள்ளனர்.
ஈழத்து இலக்கியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்கள் எனக்குறிப்பிடப்படும் சொக்கன், கனக செந்திநாதன், வ. அ. இராசரத்தினம் போன்றோரும் மேலும் சிலரும் எழுதியுள்ளனர்.
மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்படும் எஸ.; பொ. டொமிக் ஜீவா, டானியல் போன்றோரும் இதில் எழுதியுள்ளனர்.
எனவே, ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசரி பத்திரிகைக்கு முக்கிய இடமுண்டு.

அதேவேளையில் ஈழகேசரியில் பண்டிதர்கள,; வித்துவான்கள் பலரும் எழுதிக்கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் இலக்கியம் என்பது பழைய சங்கப்பாடல்களும் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் போன்றவையுமே எனவும் பொதுவாக இலக்கியம் என்பது செய்யுள் வடிவத்தில் மட்டுமே உள்ளவை எனவும் கருதினார்கள். நிகண்டு தொல்காப்பியம் முதலான நூல்களைக்கற்ற பண்டிதர்களும் வித்துவான்களும் மட்டுமே இலக்கியம் செய்யத்தகுதியுடையவர்கள் என்று கருதினார்கள், சிறுகதைகள் நாவல்கள் என்பன பொழுது போக்காக பாமரர்கள் படிக்கும் விடயம் என்று கருதினார்கள்.
ஈழகேசரி தனது இலக்கியத்துறையில் பழைய பண்டிதத் தனத்தில் காலூன்றி நின்றது. புதிய இலக்கியத்துறையில் ஓரளவே அக்கறை காட்டியது இதனால் நவீன இலக்கியத்துக்கான சஞ்சிகை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில் இளம் எழுத்தாளர்களாக எழுதிக்கொண்டிருந்த வரதர், அ. செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கு இருந்தது. இவர்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கினார்கள்.

இந்தச்சங்கத்தினூடாக மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையை வெளிக் கொணர்ந்தார்கள். இந்தச்சஞ்சியை வெளியிட பணம் தெவைப்பட்டபோது சங்கத்தின் ஐந்து நண்பர்கள் சேர்ந்து ஒவ்வொருவரும் ஐம்பது ரூபா முதல் போட்டு 250 ரூபா மூலதனத்தில் மறுமலர்ச்சி சஞ்சிகையை அச்சிட்டார்கள். 1946 மார்ச் மாதத்திலிருந்து 1948 ஒக்டோபர் மாதம் வரை 24 இதழ்கள் வெளிவந்தன. இந்த மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன இலக்கியச் சிற்றிதழ் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது. மூலதனப் பற்றாக்குறை காரணமாக மறுமலர்ச்சி சஞ்சிகை தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

இந்த மறுமலர்ச்சி இதழ்பற்றி பேராசியர் சிவத்தம்பி பின்வருமாறு ஞானம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ‘பிற்பட்ட காலத்தில் முற்போக்கு இயக்கம் மிகச் செழிப்பாக தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது என்னவென்றால் ஏற்கனவே இருந்த ஒரு சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கினால் ஏற்பட்டது. அது ஈழகேசரிக்குள்ளால் வரவில்லை. இந்த மறுமலர்ச்சி சஞ்சிகையின் வருகையும் மறுமலர்ச்சியின் போக்கும்; எனக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டமாகபடுகிறது”
இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவெனில் தமது சமகாலத்தில் இலக்கியப்பணி புரிந்து கொண்டிருந்த ஈழகேசரி பத்திரிகைமீது கருத்தியல் ரீதியாக அதிருப்தி கொண்ட மறுமலர்ச்சி குழுவினர் தாம் பிரிந்து தமது கருத்தியலுக்கு அமைய சஞ்சிகை ஒன்றை புதிதாகத் தொடங்கி சிலகாலம் நடத்தி பொருளியல் ரீதியாக தம்மால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் தாம் நடத்திய பத்திரிகையை நிறுத்தி விடுகின்றனர்.

ஆனாலும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி இலக்கியப் பத்திரிகையின் இலக்கியப்பணியும் மறுமலர்ச்சியின் இலக்கியப்பணியும் இன்றும் விதந்து பேசப்படுகின்றன.

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்களின் வரலாற்றினை எடுத்து நோக்கினால் இத்தகைய ஒரு நிலைமை தொடர்வதைக்காண்கிறோம். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குழுவினர் தோன்றி தமது காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகளில் அதிருப்திகொண்டு ‘இவர்களது சஞ்சிகையின் போக்குச் சரியில்லை, இவர்களுக்குச் சஞ்சிகை நடத்தத் தெரியவில்லை” எனக் குறைகண்டு தாம் புதிதாக ஒரு சஞ்சிகையைத் தொடங்கி சிலகாலம் நடத்தி பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாமல் நட்டமடைந்து சஞ்சிகையை நிறுத்திவிடும் போக்கினைக் காண்கிறோம். கடந்த 70 வருட சஞ்சிகை வரலாறு பெரும்பாலும் இத்தகையதாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு சிறு சஞ்சிகையாளர்களும் தனித்தனியாகப் பிரி;ந்து நின்று நாங்கள் எழுதுவதுதான் இலக்கியம் என்று பேனா யுத்தம் நடத்தும் போக்கினை வரலாற்று ரீதியாகப் பார்க்கமுடிகிறது.

மறுமலர்ச்சி இதழ் தோன்றுவதற்கு மூன்று மாதத்துக்கு முன்னர் பாரதி என்ற சிற்றிதழை கே.கணேஷ் அவர்களும் ராமநாதன் என்பவரும் கூட்டாகச் சேர்ந்து கொழும்பில் வெளியிட்டுள்ளார்கள். இவர்களே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்கள். 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவரத் தொடங்கிய பாரதி, எட்டு இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டது. ஈழத்தின் முதல் சஞ்சிகை, முற்போக்கு சஞ்சிகை என்ற பெருமைக்குரியது பாரதி. முதற்தலைமுறை முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்டமை, மொழிபெயர்ப்புகளை வெளியிட்டமை, சர்வதேசப் பார்வை முகிழ்க்க வழிகோலியமை போன்றவை இந்த இதழின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

1948இல் பாரதி என்ற பெயரில் இன்னுமொரு சிற்றிதழ் கிழக்கிலங்கையில் மண்டூரில் இருந்து வெளிவந்தது. இந்த இதழ் மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. ஆய்வுக்க கட்டுரைகளுக்கு முதன்மை அளித்தது. சமூக அரசியல் நிலைமைகளை வெளிப்படுத்தியமை, மட்டக்களப்பு பிரதேசச் சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்களை உருவாக்கியமை இந்த இதழின் பணியாகக் குறிப்பிடக் கூடியவை. அமரர் பண்டிதர் ம. நாகலிங்கம், அமரர் கு. தட்சணாமூர்த்தி திரு. த. சபாரத்தினம் ஆகியோர் இதன் கூட்டாசிரியர்கள். இச்சஞ்சிகையின் 36 இதழ்கள் வெளிவந்ததாகவும் அறியமுடிகிறது.

1956 இல் ஏற்பட்ட சிங்கள மயமாக்கல் போன்ற அரசியல் மாற்றங்களால் ஈழத்தவர் என்ற உணர்வு மக்கள் மயப்படுத்தப்பட்டது. இக்காலத்திலேதான் ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள் என்ற அறிவு பூர்வமான பிரக்ஞை திரட்சியாக வெளிப்படத் தொடங்கியது. 1960 இல் இலங்கை வந்திருந்த பகீரதன் என்ற எழுத்தாளர் ஈழத்து இலக்கியம் தமிழக இலக்கியத்தை விட 20 வருடங்கள் பின் தங்கியுள்ளது என்றார.; தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கலைமகள் ஆசிரியர் கி. வ. ஜகந்நாதன் ஈழத்துப் படைப்புகளில் வரும் மண்வளச் சொற்களுக்கு அடிக்குறிப்பு தேவை என்றார். கி. ராஜநாராயணன் என்ற எழுத்தாளர் ஈழத்து மண்வளச் சொற்களைப் புரிந்து கொள்ள அகராதி தயாரித்தல் நல்லது என்றார். இத்தகைய சூழல்; இலங்கை எழுத்தாளர்கள் மத்தியில் இனி என்றுமே இந்தியாவை நம்பியிருக்கக் கூடாது என்ற வரலாற்றுப் புரட்சிக்கான கோசங்களைத் தோற்றுவித்தது.

1958 ஆம்ஆண்டு ஆடி மாதம் சிற்பி அவர்களால் கலைச்செல்வி மாத இதழ் வெளியிடப்பட்டது. ஈழத்து இலக்கிய உணர்வு மேற்கிழம்பிய காலச் சூழலில் வெளிவந்து கொண்டிருந்த கலைச்செல்வி அந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுத்தும்; செயற்களமாக இயங்கியது.
கலைச்செல்வி வெளிவந்தகாலம் ஈழத்த இலக்கிய உலகில் மரபு, பண்டிதப்போக்கு, இழிசினர் இலக்கியம், யதார்த்தம், மண்வாசனை முதலியவைபற்றி பகிரங்கமாக விவாதிக்கப்பட்டகாலம். .அக்காலகட்டத்தில் இவை சம்பந்தமான தம் சிந்தனையின் அடிப்படையில் எழுத்தாளர்களுட் பலர் இருவேறு அணிகளாகப் பிரிந்திருந்தனர். அணிசாரா எழுத்தாளர்களும் இருந்தனர். தமிழ் இலக்கியத்தில் மரபு என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் அந்த மரபை மீறும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது கலைச்செல்வியின் நிலைப்பாடாக இருந்தது. ஈழத்தின் புகழ்மிக்க ஓர் எழுத்தாளர் பட்டாளத்தை உருவாக்கிய பெருமை சிற்றிதழ்வரலாற்றில் கலைச்செல்விக்கே உரியது. ‘ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்ட கலைநயம்மிக்க எழுத்தாளர்களால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையை செழுமைப்படத்திவரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்;கை, ச. வே. பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன், வே. குமாரசாமி, மயிலன். பொ. சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி.ஞானசேகரன், மு.கனகராஜன், பா.சத்தியசீலன், மட்டுவிலான், கவிதா, பாமா இராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்திலிங்கம், வி.க. ரட்னசபாபதி, இளையவன், செ. கதிர்காமநாதன், முனியப்பதாசன், க.பரராஜசிங்கம், மணியம், முகிலன், பெரி சண்முகநாதன் ஆகியோர் கலைச்செல்விப் பண்ணையில் வளர்ந்தவர்களே” என ஞானத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பதிவு செய்துள்ளார் சிற்பி. இவர்கள் ஈழத்தின் நான்காம் தலைமுறை எழுத்தாளர்கள். ‘முற்போக்கு இலக்கியம் உச்சக்கட்டத்தில் இருந்த அறுபதுகளை ஒட்டிய காலப்பகுதியில் எதிரணியில் இருந்தவர்களுக்கு ஓர் ஒதுக்கிடமாக கலைச்செல்வி இருந்தது” என பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.

இக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கியம் என்ற உணர்வு மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்களின் புரட்சிகர முழக்கங்களாகவும் வெளிவரத்தொடங்கின 1961 இல் பாரதி இதழுக்குப் பின்னர் கொழும்பில் இருந்து வெளிவரத்தொடங்கிய மிக முக்கியமான முற்போக்கு இதழ் மரகதம். இதன் ஆசிரியர் சுபைர் இளங்கீரன் ஆவார். இந்த இதழ் ஈழத்து இலக்கியம், தேசிய இலக்கியம் போன்ற கருத்தாக்கங்கள், சிந்தனைகள் போன்றவற்றை கட்டுரைகளினூடாக விவாதத்திற்கு உட்படுத்தியது.

சிரித்திரன் தமிழின் முதல் நகைச்சுவை சித்திர திங்கள் ஏடு. இது கார்ட்டூன் சஞ்சிகையாகவும் விளங்கியது. ஆரம்பத்தில் 1963 இல் கொழும்பில் இருந்து வெளிவந்த இந்த இதழ் பின்னர் 1971 இல் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.. சி சிவஞானம் என்ற சுந்தர் இதன் ஆசிரியர். சிரித்திரனின் ஆயுட்காலம் 28 ஆண்டுகள். எல்லாமாக 318 இதழ்கள் வெளிவந்தன. பின்னாளில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுத்ததிலும் இந்த இதழ் தனது தனித்துவமான முத்திரையை பதித்திருந்தது.
1960 இல் விவேகி என்ற சிற்றிதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இந்த இதழுக்கு பிரபல எழுத்தாளர்களான செம்பியன் செல்வன,; செங்கை ஆழியான் ஆகியோர் ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள். முன்னோடிச் சிறுகதைகள், அவை சார்ந்த கட்டுரைகள் பல இந்த இதழில் வெளியாகின.

இளம்பிறை 1960-70களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1964 கார்த்திகையில் வெளிவந்தது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான். இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்த இந்த இதழ் உள்ளடக்கத்தில் இஸ்லாமியச் சிந்தனைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை, கவிதை நூல்விமர்சனம் போன்றவற்றைத் தாங்கிவந்தது. 1972 நவம்பரில் இதன் கடைசி இதழ் வெளிவந்தது. பல இதழ்களில் எஸ். பொ. அவர்களின் படைப்புகளைக் காணமுடிகிறது. புனைபெயரிலும் சொந்தப்பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார்.

மல்லிகை இதழ் 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானது. இந்த இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா. இவர் மல்லிகையின் ஆரம்பபம் பற்றி பின்வருமாறு குறிப்படுகிறார். ‘மனைவியினுடைய காப்பை முன்னர் அடைவு வைத்திருந்தேன். அதை மீட்டு விற்றேன். 360 ரூபா கிடைத்தது. தோழர் அரியரத்தினம் 40 ரூபா அன்பளிப்புச் செய்தார். பூபாலசிங்கம் 25 ரூபா தந்துதவினார். அந்தப்பணத்தில் முதல் இதழை வெளிக் கொணர்ந்தேன்”. ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் மல்லிகை சாதனை படைத்தது. ஏறத்தாழ 48 வருடங்கள் மல்லிகை இலக்கிய உலகில் பவனி வந்தது. முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மல்லிகை பின்னர் கொழும்பிலிருந்து வெளிவந்தது. போரச் சூழல் தந்த நெருக்கடிகளால் டொமினிக்ஜீவா கொழும்புக்கு இடம்பெயர நேர்ந்தது. 1996 ஆம் ஆண்டு தை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து சகலதையும் இழந்து 360 ரூபா காசுடனும் இரண்டு சோடி உடுப்புடனும் கொழும்பு வந்ததாகப் பதிவு செய்துள்ளார் ஜீவா. மல்லிகை வெளியானதும் அந்த இதழ்களைச் சுமந்து சென்று நேரடியாக வாசகர்களிடம் கொடுத்து அடுத்த இதழ் வெளியிடுவதற்கான பணத்தை அவர் சேகரித்து விடுவார். ‘பிரதிகளைத் தோளில் சுமந்து வீதி வீதியாக விற்கத் தொடங்கினேன் என்பதைவிட திணிக்கத் தொடங்கினேன் என்பதே சரியாகும்” எனக் குறிப்பிடும் ஜீவா, ஒரு முழுநேர இலக்கிய உழைப்பாளியாக இருந்து மல்லிகையை வெளியிட்டார.; மல்லிகை முற்போக்கு எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரை இனங்காட்டியதோடு பிரதேச மலர்கள், ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கிய சர்ச்சைகள் பலவற்றை வெளியிட்டது. முகப்பு அட்டையில் கலை இலக்கிய வாதிகள் கல்விமான்கள், அறிஞர்கள் முதலானோரின் முகங்களை பதிவு செய்து அவர்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை வெளியிட்டது. முதுமை காரணமாக ஜீவாவால் மக்களிடம் சென்று அடுத்துவரும் மல்லிகைக்கான பொருள்தேட்டத்தைப் பெறமுடியாத நிலையில் மல்லிகை நின்று விட்டது.
மலர் என்ற சஞ்சிகை கிழக்கிலங்கையில் இருந்து 1970 இல் வெளிவந்தது. அன்புமணி இதன் ஆசிரியர். இவர் மலர்க் குழுவொன்றை உருவாக்கி அதில் அங்கம் வகித்த அங்கத்தவர் ஐவரிடம் தலா 500 ரூபா பெற்று முதலிட்டு மலர் சிற்றிதழை வெளியிட்டார். இந்த இதழ் கிழக்கு மாகாண எழுத்தாளர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திய போதிலும் எட்டு இதழ்களுடன் பொருளாத ரீதியில் நட்டமடைந்து 1971 ஒக்டோபர் இதழுடன் நிறுத்தப்பட்டது. முறையான வினியோகத்திட்டம் இல்லாமையும் வினியோகத்தர்களின் நேர்மையற்ற போக்குமே சிற்றிதழ்கள் மடிந்து போகின்றமைக்கு காரணம் என மலர் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

15-01-1971இல் குமரன் என்ற இதழை செ. கணேசலிங்கன் வெளிக்கொணர்ந்தார். அந்த இதழ் 1983 வரை வெளிவந்தது. ஆரம்பத்தில் சில இதழ்கள் சிறுவர்களுக்காக வெளிக்கொணரப்பட்டன. பின்னர் சகல வயதினருக்குமான சஞ்சிகையாக வளர்ச்சி பெற்றது முக்கியமாக மார்க்சியக் கோட்பாடுகளை முன்னெடுக்கும் சஞ்சிகையாக அது பரிணமத்தது. சீனச்சார்புடைய மார்க்சியக் கோட்பாடகளில் குமரன் ஆர்வங்காட்டியது. சாதியத்துக்கு எதிரான பல ஆக்கங்களை இது வெளியிட்டது. கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம்,  நாடகம் முதலான துறைகளில் விஞ்ஞான பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 1976 ஜூன் மாதத்தில் 56 ஆவது இதழுடன் தடைப்பட்டு மீண்டும் 1982 நவமபரில் தொடங்கி 1983 ஜூன் மாதத்தில் தடைப்பட்டு 1989இல் மீண்டும் வெளிவரத் தொடங்கி 1990 ஜூன் மாத இதழுடன் நின்று விட்டது. எல்லாமாக 77 இதழ்கள் வெளியாகின.
பொழும்பில் இருந்து பூரணி என்ற இதழ் 1972 ஆடி- புரட்டாதி இதழாக வெளியானது 8 இதழ்களே வெளிவந்த போதிலும் தரமான இலக்கிய இதழாக இது வெளிவந்தது. இதன் இணை ஆசிரியர்களாக என். கே. மகாலிங்கம் க. சட்டநாதன் ஆகியோர் விளங்கினர். பூரணி மு. தளையசிங்கத்தின் முக்கிய சிந்தனையான பிரபஞ்ச யதார்த்த வாதத்தை முன்வைத்தது.. பிற்பட்ட காலத்தில் பூரணி இலக்கியக் குழுவினரிடையேயும் கருத்து வேறுபாடுகள் தோன்றி இதழின் மறைவுக்குக்காரணமாகியது.

1974 சித்திரை மாதம் தாயகம் என்ற இதழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வரத் தொடங்கியது. நான்கு வெளியீடுகளின் பின் தடைப்பட்டு 1980 ஆம் ஆண்டு மீண்டும் வரத் தொடங்கியது இந்த இதழின் ஆசிரியர் திரு க. தணிகாசலம். ‘ கலை இலக்கியத் துறையில் தேசிய தேவைகளை – உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளையும் பலமான அணியையும் உருவாக்க வேண்டிய அவசியத் தேவையை உணர்ந்தே தாயகம் தோன்றியிருக்கிறது. முற்போக்கு விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் சரித்திர மாறுதல்களைப் பிரதிபலித்தும் அதற்காக வேண்டியும் நிற்கிற தேசிய சக்திகளின் ஆயுதமாகவும் தாயகம் விளங்கும்” என்ற பிரகடனத்துடன் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. 43 வருடகால நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த இதழ் அவ்வப்போது மலர்ந்து இதுவரை 70 இதழ்கள் வெளியாகியுள்ளன.
1975இல் அமைக்கப்பட்ட அலை இலக்கிய வட்டம் காலாண்டு இதழாக அலை என்ற சஞ்சிகையை வெளியிட்டது. அதன் ஆசிரியர்குழுவில் அ. யேசுராசா, மு. புஷ்பராஜன், குப்பிளான் ஐ.சண்முகன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர் இருந்தனர். ஆனாலும் அலையின் உள்ளடக்கம் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் தோன்றி பின்னாளில் அலை ஆசிரியர்களாக யேசுராசாவும் புஷ்பராஜனும் மட்டுமே இணை ஆசிரியர்களாக இருந்தனர். 1975க்குப் பின்னர் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இது இலக்கியச் செயற்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் வெளிவந்த அலை சஞ்சிகை தமிழ்த் தேசியப்பிரச்சினைமீது கவனம் செலுத்தியது. அது முற்போக்கு எழுத்தாளர்கள் தேசிய இனப்பிரச்சினைமீது கவனம் செலுத்தாமையையும் சுட்டிக் காட்டியதோடு முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் மீதும் விவாதங்களை முன்வைத்தது. இது தொடர்பாக அதன் ஆசிரியர் யேசுராசா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஸ்தாபித பலம் பெற்றிருந்த வறட்டிலக்கிய வாதிகள், தேசிய இன ஒடுக்கு முறைகளைக்கண்டும் மௌனம் சாதித்த போலி முற்போக்குகள் போன்றோருக்கு எதிரான ‘கலைக்குரலாக” அதிருப்தி யாளர்களின் வெளிப்பாடாகவே அலை வெளிவரத்தொடங்கியது”. இந்த இதழ் பல புதிய விடயங்களையும் சிற்றிதழ்களின் பேசு பொருளாக்கியது. நவீன சினிமா, ஓவியங்கள், கலைத்தன்மையினுடனான பத்தி எழுத்துக்கள் போன்றவை அலையில் இடம்பெற்றன. 1990 வைகாசிவரை வெளிந்த அலை 35 இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

புதிசு என்ற இதழ் 80 களில் யாழ்ப்பாணம் ஏழாலையில் இருந்து வெளிவரத்தொடங்கியது. இதன் நிர்வாக ஆசிரியர் நா. சபேசன் ஆசிரியர்குழுவில் இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அளவெட்டி அ. ரவி, ஆகியோர் அங்கம் வகித்தனர். இலக்கியம் சார்ந்த இதழாக வெளிவந்த இச்சஞ்சிகையில் பல சிறந்த விமர்சன ரீதியான கட்டுரைகள் வெளிவந்தன 1985 நவம்பர் மாதம்வரை 10 இதழ்கள் வெளிவந்தன. எண்பதுகளில் புதிய தiமுறை எழுத்தாளர்கள் தோன்ற இச்சஞ்சிகை வழிவகுத்தது.

மலையக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தீர்த்தக்கரை இலக்கிய வட்டம் 1980 ஜூனில் தீர்த்தக்கரை என்ற இதழை வெளியிடத் தொடங்கியது. எல். வசந்தகுமாரை பிரதம ஆசிரியராகவும் எஸ். நோபட், எம். தியாகராம், எல்.ஜோதிக்குமார் ஆகியோரை ஆசிரியர் குழுவிலும் கொண்டு வெளிவந்த இந்த இதழ் ஐந்து இதழ்களுடன் 1982 அக்டோபர் மாதத்தில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

தீர்த்தக்கரையைச் சார்ந்த சில இளம் எழுத்தாளர்கள் தீர்த்தக்கரையின் தொடர்ச்சியாக 1992 இல் நந்தலாலா என்னும் சஞ்சிகையை வெளிக்கொணரத் தெடங்கினார்கள். நீண்ட இடைவெளிகளில் அவ்வப்போது இந்த சஞ்சிகை வெளிவருகிறது இதன் கடைசி இதழ் 2014 பெப்ரவரியில் வெளிவந்தது
வெளிச்சம் இதழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 90 களிலிருந்து இந்த இதழ் வெளியானது. ஈழப்போர் முடிந்ததோடு 27 இதழ்களுடன் இந்த இதழின் வருகையும் நின்றுவிட்டது. தரமான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், இவ்விதழில் வெளிவந்துள்ளன. அத்தோடு விடுதலைப்போராட்டம், போராளிகளின் நினைவுப் பகிர்வுகள், என்பவற்றையும் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது. படைப்புகளின் கருப்பொருள் பெரும்பாலும் போருடன் தொடர்பு கொண்டதாக அமைந்தது. இந்த இதழ் தமிழ்மக்களிடையே விடுதலை எழுச்சியை ஏற்படுத்தியது.

பெண் என்ற இதழ் மட்டக்களப்பு சூரியா பெண்கள் நிலையத்தினரின் வெளியீடு. 1991ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழ் முதலில் காலாண்டு இதழாக வெளிவந்தது. தற்போது அரையாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதழின் ஆசிரியை விஜயலட்சுமி சேகர். பெண்ணியம் பேசும் தனித்துவ இதழாக வெளிவரும் இந்த இதழில் கவிதைகள், உளவியல் கட்டுரைகள், சமூகவியல் கட்டுரைகள், அரசியல், கல்வி சமூகப் பொருளாதாரத்தில் பெண்களின் நிலை பற்றிய ஆய்வுகள், சமகாலத்தில் பெண் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்ச்சினைகள் போன்றவை உள்ளடக்கமாக அமைகின்றன.
1994 பங்குனி மாதத்தில் இருந்து நிவேதினி என்ற பெண்களுக்கான இதழ் கொழும்பில் இருந்து வெளியாகத் தொடங்கியது. இந்த இதழின் ஆசிரியர் செல்வி திருச்சந்திரன். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடாக இந்த இதழ் வெளியானது. பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்ற விடயங்கள் இந்த இதழில் வெளியாகின. பெண்ணியம் சார் கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்தன.
மூன்றாவதுமனிதன் இதழ் கொழும்பில் இருந்து 1996 வைகாசி-ஆனியில் வெளிவரத்தொடங்கியது. இதன் ஆசிரியர் எம். பௌசர். 2007 ஜனவரிவரை 19 இதழ்கள் வெளிவந்துள்ளன. நேர்காணல், விமர்சனம், கவிதை சிறுகதை, அரசியல் என பல தரமான விடயங்களைத்தாங்கி இவ்விதழ் வெளியானது. ஈழத்து இலக்கியத்தின் திசைகளை செப்பனிட்டது. வடிவநேர்த்தியுடன் இந்த இதழ்கள் வெளிவந்தன.

2006 ஆவணியில்; அக்கரைப் பற்றிலிருந்து பெருவெளி என்ற இதழ் வெளிவரத்தொடங்கியது. 2011 தை மாதம்வரை இந்த இதழ் வெளிவந்தது. எம். ஐ.எம்.ரஸப், மஜித், அப்துல் ரசாக், ரியாஸ் குரானா, மிஷாத், ஐ. எஸ். காலித், றபியூஸ், எஸ். எம். ரியாஸிடீன் ஆகியோர் இதன் செயற்பாட்டுக்குழுவினர். ஏழு இதழ்களே இக்காலப்பகுதியில் வெளிவந்தபோதும் தரமான இலக்கியம,; அரசியல் சார்ந்த இதழாக இது வெளிவந்தது. பின்நவீனத்துவம் சார்ந்த பல படைப்புகள் இதில் வெளியாகின. புதிய தலைமுறை கிழக்கிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களை இது இனங்காட்டியது.

2007 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து இருமாத இதழாக ஜீவநதி இதழ் ஆரம்பிக்கப்பட்டது. 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவருகிறது. ஜீவநதியின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன். ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் 100 இதழ்களைத் தாண்டிய இதழ்களில் ஒன்று என்ற பெருமை ஜீவநதிக்கு உண்டு. சிற்றிதழ்களுக்குரிய உள்ளடக்கங்களுடன் வெளிவரும் ஜீவநதி பல சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. உளவியல் சிறப்பிதழ், சிறுகதைச்சிறப்பிதழ் பெண்ணியச்சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ்கள் இளம் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் ;சிறப்பிதழ், கனடாச்சிறப்பிதழ் மலையகச்சிறப்பிதழ், திருகோணமலைச் சிறப்பிதழ் என்பவை குறிப்பிடத்தக்கன. ஜீவநதியின் 100 ஆவது இதழ் 575 பக்கங்களில் ஈழத்து பெண் எழுத்தாளர் சிறப்பிதழாக வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் ஞானம் மாதம் தவறாது வெளிவந்து 200 இதழ்களைத் தாண்டியுள்ளது. ஈழத்துச் சிற்றிதழ் வரலாற்றில் அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் ஒரே இதழ் ஞானம் மட்டும்தான். இதன் 150 ஆவது இதழ் 600 பக்கங்களில் ஈழத்து போர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்தது. 175 ஆவது இதழ் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளிவந்தது. போர் இலக்கியமும் புலம்பெயர் இலக்கியமும் ஈழத்தமிழர்கள் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய புதிய இலக்கிய வகைமைகள் என்பதை ஞானம் இவ்விரு தொகுப்புகள் மூலம் வெளிக்காட்டியது. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் உலக நிலையினான அதன் ஊடாட்டத்தையும் இயக்கி நிற்கும் முக்கிய தொடர்புசாதனமாக ஞானம் இதழ் இயங்கிவருகிறது. ஞானத்தின் 200 ஆவது இதழ் 60 இலக்கிய ஆழுமைகளின் நேர்காணல்கள் தொகுப்பாக 1000 பக்கங்களில் வெளிவந்துள்ளது. ஈழத்து இலக்கியச் செல்நெறியை கருத்தியல் ரீதியாகவும் படைப்புகள் மூலமும் திசைவழிப்படுத்திய இலக்கிய ஆழுமைகள் பலரின் நேர்காணல்கள் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன. அந்த வகையில்; ஈழத்து நவீன இலக்கியத்துக்கான அடையாள முத்திரையாக இத்தொகுப்பு திகழ்கிறது ஞானம் அதனது உள்ளடக்கத்தில் பல புதிய விடயங்களையும் சிற்றிதழ்களின் பேசு பொருளாக்கியுள்ளது. முந்தையோர் ஈழத்தவரே என்ற பகுதி, ஈழமும் தமிழும் என்ற ஆய்வு நிலைக்குறிப்புகள் மற்றும் பயண இலக்கியத் தொடர்கள் என்பன இவற்றுள் அடங்கும்.

ஈழத்து சிற்றிறதழ்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டுமுயற்சியாகத்தான் பல சிற்றிதழ்கள் தோன்றியிருக்கின்றன. அவை குழு மோதல்களால் அற்ப ஆயுளில் மறைந்தன.
இதனைவிட, சிற்றிதழ்கள் அற்ப ஆயுளில் மறைந்து போவற்கு பொருளாதாரப் பற்றாக்குறையே முதற்காரணியாக இருந்துள்ளது. அடுத்த நிலையில் முறையான வினியோகத்திட்டம் இல்லாமையும் பெரும்பாலான வினியோகத்தர்களின் நேர்மையற்ற போக்குமே காரணிகளாக அமைந்துள்ளன.
தனிமனித முயற்சியினால் வெளிவந்த மல்லிகை, சிரித்திரன், ஜீவநதி, ஞானம் போன்ற சிற்றிதழ்களே நீண்டகாலம் நிலைத்திருக்கும் வல்லமை பெற்றிருந்தன என்பதும் கவனிக்கக் கூடியதாக உள்ளது.

1980களின் பின்னர் போர்க்காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சிற்றிதழ்கள் ஊடக சுதந்திரமற்ற நிலையில் வெளிப்படையாக எதனையும் எழுதமுடியாத நிலையில் இருந்தன என்பதும் அந்த நிலைமை சிற்றிதழ்களின் தனித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதும்; குறிப்பிடத்தக்கது.
சில இதழ்கள் ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கில் சில கால கட்டத்தின் இலக்கியபப் போக்கினை கூர்மைப்படுத்தி நுண்மைப் படுத்தியுள்ளன.
ஈழத்தின் முதலாவது இதழான மறுமலர்ச்சி ஈழத்து நவீன இலக்கியத்தின கருக்கட்டல் காலத்தை கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.
கலைச்செல்வி இதழ் ஈழத்து நவீன இலக்கியத்தின் தனித்துவத்தை முதன்முதலில் கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.

மல்லிகை இதழ் மார்க்சியக் கோட்பாட்டை ஈழத்து நவீன இலக்கியத்தில் அறிமுகப்படுத்தி கருத்தியல் ரீதியல் கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.
போர்க்காலத்தில் தோன்றிய ஞானம் இதழ் ஈழத்து நவீன இலக்கியத்தில் தமிழ்த் தேசிய உணர்வை கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.
தொகுத்து நோக்கும்போது ஈழத்துச் சிற்றிதழ்கள் எல்லாமே அவை ஓரிரு இதழ்கள் வந்த போதிலும் தத்தம் நிலையில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கிற்கு சிறப்பான பணி ஆற்றிவந்துள்ளமையைக் காண முடிகிறது

 
Leave a comment

Posted by on 04/05/2017 in Uncategorized

 

      புத்தக வெளியீடு குறித்த குறிப்பு….

 ஒரு குடும்பத் திருமணத்துக்கு முதல் நாள் வீட்டு ஆரவாரம் போல அல்லது திருமணம் இனிதே நிறைவேறிய பின்னால் இருக்கும் ஒரு உள்ளார்ந்த மனநிறைவுடன் கூடிய களைப்புப் போல இந்தப் பதிவு.

நம் புத்தக வெளியீட்டு நிகழ்வு குறித்த முறையான கருவி கொண்டு எடுக்கப்பட்ட படங்களோடு கூடிய பதிவு கீதா.மதிவாணனால் முறையாக இங்கு தரப்படும். நானே எப்போதும் எழுதினால் அது நன்றன்று….

நிகழ்வுக்கு வருகிறேன்.
ஞானம் ஐயா அவர்களுடய புத்தகத்தை மையமாக வைத்துக் கொண்டு  சிறந்த ஒரு சிந்தனைப்பகிர்வை;சிந்தனைக்கான சூட்சும இடங்களை அவரவர் பாணியில் அவரவர் அழகுகளோடு முன் வைத்த சான்றோர்களாகிய பேச்சாளர்கள் எல்லோருக்கும் முதலில் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். ஞானம் ஐயா அவர்களுக்கும் அது திருப்தியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்.
பிரவீனன் – தம்பி இல்லாத நான் என் தம்பி என உரிமைகோர ஆசைப்படும் இளவல். கேட்டவுடன் எனக்காக வரத்தக்க இயல்பு காட்டி என்னை மேலும் மேலும் பெருமை கொள்ள; பெருமிதமடையச் செய்கிற இளம் புத்திஜீவி! நேற்றய தினம் தன் தகுதிப் பாட்டினை மேலும் நிரூபித்து நமக்கும் பெருமை தேடித்தந்தவர். பிரவீனன், ஞானம் ஐயா சொன்னது போல சிட்னி கொண்டாடத் தக்க ஓராழுமை. அவரை நாம் பெற்றுக் கொண்டதில் உயர்திணையும் பெருமைக் கொள்கிறது. நேற்றய தினம் நிகழ்ச்சியை செவ்வனே நடாத்தி ‘வெளி’ என்ற சொல்லுக்கான பாதையைத் திறந்து வைத்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடாத்தி இருந்தார்.
பாஸ்கரன் அவர்கள் இத் தொகுப்பு பற்றிப் பேசி நேர்காணல்கள்  இலக்கிய வகைக்குள் அடங்குமா  என்ற கேள்வியை முன் வைத்து அது சார்ந்து எழுந்திருக்கும் இலக்கிய வகைகள் பற்றியும் நோக்கி நல்லதொரு சிந்தனைப் பகிர்வை; கேள்வியை முன் வைத்திருந்தார். அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கிற இலக்கிய வகைகள் குறித்த பிரக்ஞைகள் அவை பற்றிய சொல்லாடல்கள் குறித்த நல்லதொரு தேடலை அது தொடக்கி வைத்துச் சென்றது.
சந்திரலேகா வாமதேவா அவர்கள் தன் பல்கலைக்கழக ஆழுமைகளுடனான – நேர்காணலில் இடம்பெற்றிருக்கிற ஆழுமைகள் குறித்த – தன் சொந்த அனுபவங்களோடும் இன்றய வாசிப்பு அனுபவங்கள் குறித்த இளையோர்களின் மனப்பாங்கில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் குறித்தும் உரை தந்து நம் சமூக விழுமியங்களில் அது ஏற்படுத்தத் தக்க மாற்றம் அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து பேசியும் அதனை ஏனைய மொழிக்குடும்பத்தார் அது குறித்து என்ன என்ன காரியங்களை ஆற்றியிருக்கின்றனர் என்பது குறித்தும் பரந்த வாசிப்பின் பின்னணியில் தன் கரிசனையை முன்வைத்திருந்தார்.
தனபால சிங்கம் ஐயா ‘வெளியும் இயக்கமும்’ குறித்த சொற் பொருளுக்குள் நின்றபடி அவர் கூறிய கருத்துக்கள் புத்திஜீவித பாங்கில் அமைந்தவை. இந்த இருபெரு சொற்களுக்கிடையே அகன்று விரிந்து வியாபித்து நிற்கின்ற இலக்கிய பிரபஞ்சத்தில்  தமிழ் குறித்து அவர் முன் வைத்த கருத்துக்கள் யாவும் ஒரு பெரும் சிந்தனைக்குரித்தான சாட்சியங்கள்.
இவர்கள் எல்லோருடய உரைகளிலும் காணப்பட்ட சிறப்பம்சங்களும் அவரவர் பாணியில் அவரவர் தந்து சென்ற கருத்துக்களும் அறிமுகநூலின் ஆழத்தையும் அகலத்தையும் சிறப்பாக விதந்துரைக்கத் தக்கனவாக இருந்தன. தனபாலசிங்கம் ஐயா சொன்னது போல – ஒரு சிறுகதை முடிந்தபின் சொல்லி நிற்கிற சொல்லாதவிடயங்கள் குறித்த சிந்தனை விரிவினப் போல இந்த நிகழ்வும் புத்த்கத்தைச் சூழ்ந்து நின்றபடி சொல்லாத பல விஷயங்களைச் சொல்லின.
மிகச் சிறந்த ஒரு சிந்தனை விரிப்புக்கான விதைகள் அவை! அவர்கள் விதைத்துச் சென்றவை விருட்சத்துக்கான வீரியங்கள் கொண்ட விதைகள்! என்னைத் தனிப்பட்ட முறையில் பெருமை கொள்ளச் செய்த தருணங்கள் இவை என நான் நிமிர்ந்து நின்று சொல்வேன்.
இது ஒரு சிறு அமைப்பு. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் மிகச் சிறு அமைப்பு. எந்த ஒரு செல்வாக்குப் பின்னணியும் இல்லாத; ஆர்வமும் ஆசையுமே அதன் மூலதனமாகக் கொண்டிருக்கிற அறிவை நேசிக்கும் ஒரு சிறு அமைப்பு. இருந்த போதும் இப் புத்திஜீவித குணாம்சம் கொண்ட எளிமையும் அதே நேரம் ஆழமும் கொண்டிருக்கிற; வாசிப்பினை தம் வாழ்நாளாகக் கொண்டிருக்கிற;அதனை நம்மோடும் பகிர்ந்து கொள்ள சம்மதம் கொண்டிருக்கிற;  இவர்கள் மூவரும் இந் நிகழ்வுக்கு வரச் சம்மதம் தந்து, அது குறித்த உங்கள் ஆழத்தையும் அகலத்தையும் நமக்கு விரித்து வைத்து வாசிப்புப் பசிக்கு பெருவிருந்து படைத்துச் சென்றார்கள். என்னளவில் சபை சிறிதே எனினும் கனமான சபை. அத்தோடு, பேச்சாளப் பெருமக்களின் அறிவுச் செழுமையினால் அது உயர்ந்ததும் சிறந்ததுமே ஆகும். அந்த ஆத்மதிருப்தியை அது நிச்சயமாகத் தந்து சென்றது.
ஞானம் ஐயா!  எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பினை தந்ததும் புத்தகம் பற்றிய அவர் பேச்சுக்களும் வளமை போலவே நிதானமும் அழகும் எளிமையும் ஆழமானவையும். அவருடய இந்தப் புத்தக அறிமுகம் குறித்த அவரது ஏற்புரைக்கும் பிறகு அவர் தந்த சிற்றிலக்கியங்கள் குறித்த சிறப்புரைக்கும் நம் நன்றி என்றும் உரியதாகும்.
கார்த்திகா கணேசர்! பல்வேறு ஆழுமைகளால் நம்மை வியக்க வைக்கும் உயர்திணையின் அத்திவாரம்! சிவனின்றி சக்தி இல்லை என்பார்கள். எனக்கும் அவருக்குமான உறவும் நெருக்கமும் அது போன்றது. நிகழ்வுகள் குறித்த விமர்சனத்துக்கு நான் எப்போதும் அவரையே நாடி நிற்பேன். எல்லாவற்றையும் விமர்சன நோக்கில் பார்த்து பயமின்றி கருத்துச் சொல்லத் தக்க ஆழுமை! விமர்சனங்கள் குறித்து விவாதிப்பதில் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அதன் முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதில் நமக்கு அக்கறை இருப்பதில்லை. விவாதிப்பின் முடிவில் முன்வைக்கப் பட்ட கருத்துக்கள் நம்மை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்தி இருக்கும். பார்க்காத கண்ணோட்டங்களை இரண்டு பேருக்கும் அது தந்திருக்கும்.அவர் எனக்கான ஒரு பலம்! பெரும் பலம்!!
கீதா – தவறி நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிற ஒரு ஆட்டுக் குட்டி. அவரிடம் இருக்கிற திறமைக்கும் ஆற்றலுக்கும் நேர்த்தி மிக்க செயல்திறனுக்கும் அவர் இருக்கவேண்டிய இடம் வேறு.அதனை நான் எப்போதும் ஆதங்கத்தோடு அவருக்கும் குறிப்பிடுவது உண்டு.  பாரதப் பெண்ணாய் கொஞ்சுதமிழின் சொந்தக் காரியாய் நம்மோடு கூடவே வரும் செந்தமிழ் தேன்மொழியாள் கீதாவுக்கு என் அன்பு என்றும் உரியதாகும். கீதா என் பாதி பலம்.
மணிமாறன் அவர்கள்! எப்போதும் நம் நிகழ்வுக்காக நிழல்படமும் ஒளிப்படமும் எடுத்து உடனடியாக அவற்றை என்னிடம் ஒப்படைக்கும் ஒருவர். இல்லை என்றால் இந் நிகழ்வுக்கான எந்த தடயங்களும் நம்மிடம் இருக்காது. அது காலத்தால் செய்யும் நன்றி. புரிந்து கொண்டு உதவும் மனப்பாங்கு. அவருக்கு மீண்டும் என் நன்றி.
நேற்றய புத்தக வெளியீடு சபை சிறிதே என்ற குறைபாடு இருந்த போதும் ( அன்றய தினம் வேறொரு சிறந்த நிகழ்வும் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக இருந்தது) என்னளவில் திருப்தியத் தந்தது என்று நான் துணிந்து சொல்வேன்.சிந்தனைக்கான  பல பாதைகளை அது திறந்து விட்டிருந்தது. சாதாரணமாக இலக்கியக் கூட்டங்கள் ஏனைய நிகழ்வுகளைப் போல கவர்ச்சிகரமாக மக்களுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிகரமாக்கினால் அது தன் சோபையை இழந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதால் அது நமக்கு பிரியமானதாக இருப்பதும் இல்லை.
இதனை நம்மளவில் வெற்றிகரமாக்கியதில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பங்குண்டு. நிகழ்வு முடிந்து மண்டபத்து சபையினரோடு நிகழ்வம்சங்கள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்த போது டொக்டர்.கெளரிபாலன் அவர்கள் கலாநிதி சந்திரலேகா. வாமதேவா அவர்கள் குறிப்பிட்டிருந்த வாசிப்பு மரதன் பற்றிக் குறிப்பிட்டு தான் அதற்கு 1000 டொலர்கள் நிதிப் பங்களிப்பை நமக்கு நல்குவதாகவும்; எவ்வாறு தமிழ் வாசகரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த அதனைப் ஒரு பரிசுத் தொகையாக அறிவித்து செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து தனக்குச் சொல்லுமாறும் கூறினார்.
வந்திருந்த சுமார் 30 – 35 பேர் கொண்ட பார்வையாளர்களில் – அத்தனை பேரும் விரும்பி வந்த இலக்கிய ஆர்வலர்கள் – வைக்கப்பட்ட பல புத்தகங்களில் கனிசமான அளவு புத்தகங்கள் விற்பனையானதும்; சில புத்தகங்கள் விற்று முடிந்து விட்டதும்; ‘ஈழத்துத் தமிழ் நவீன இலக்கிய வழி’ என்ற இத் தொகுப்பு நூல் (  $40.00 பெறுமதியானவை) 8 நூல்கள் விற்பனையானதும் கூட நம்மளவில் வெற்றிகரமான நிகழ்வு தான்.
தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி என்ற நேர்காணல் தொகுப்பு நூலை வைத்து ’வெளியும் இயக்கமும்’ குறித்து பேசினார். வெளியினைக் கொண்டாடிய அந்த நிகழ்வில் இயக்கத்துக்கான விதை ஊன்றப்பட்டதும் மிகத் திருப்தியைத் தந்திருந்த முடிவான ஒரு நிகழ்வு.
இவர்கள் எல்லோரும் அதன் காரணகாரர். அவர்கள் எல்லோராலும் நாம் பெருமை கொண்டோம். தொடர்ந்து நம்மோடு இணைந்திருக்குமாறும் நாம் மேலும் வளர; நம்மைத் தீட்ட; தனி நபர் புகழாரங்களில்லாத உங்கள் விமர்சனங்களையும் பங்களிப்புகளையும் தந்துதவுமாறு இந்த சந்தர்ப்பத்தில் அன்போடு கேட்டு மீண்டும் மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்தும் தமிழால் இணைந்திருப்போம்.
அன்புள்ள யசோதா.ப.

 

நிகழ்வு நடக்கு முன்னரே வந்து மண்டபத்தைச் சோபிக்கச் செய்த கார்த்திகா கணேசரும் கீதா மதிவாணனும்.

வைக்கப் பட்ட காட்சிப் பொருட்களும் காட்சிக்கும் பொருள்களுக்கும் சொந்தக் காரரான திரு. சிவசோதி அவர்கள்.

நிகழ்வு நிறைவுற்ற பின் டொக்டர்.கெளரிபாலன் அவர்கள் கலாநிதி சந்திரிக்கா வாமதேவாவுடன் உரையாடும் போது….

எழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்களோடு ஞானம். ஞானசேகரன் அவர்கள்.

புத்தகங்களோடு திருமதி ஞானம் அவர்களும் நிகழ்வினை சிறப்பாக நடாத்தித் தந்த சிட்னி பல்கலைக் கழக விரிவுரையாளர் பிரவீனனும்.

ஞானம் அவர்களின் மகனார் புத்தக விற்பனையில் மும்மரமாக இருந்த ஒரு பொழுது….

பல்வைத்திய நிபுணரும் தங்கத் தாத்தா. சின்னத்தம்பிப் புலவரின் வாரிசும் கவிஞருமாகிய பாரதி அவர்கள் சிவசோதி அவர்களோடு…

கீதா ஞானம் ஞானசேகரன் அவர்களோடு….

திரு.திருமதி வாமதேவா அவர்கள் கூடவே டொக்டர் கெளரிபாலன் அவர்களுடன்…..

கீழே வருவது யசோதாவினால் ஆற்றப்பட்ட அறிமுக உரையும் வெளியீட்டுரையும்  ஒரு பதிவுக்காக….

மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களுக்கும், இலக்கியக் கூட்டத்திற்கென வருகை தந்திருக்கும் தமிழ் பற்றாளர்களுக்கும், நேசர்களுக்கும், உயர்திணையின் அமைப்பாளர் என்ற வகையில், என் தாழ்மையும், அன்பும், கனிந்த வணக்கங்கள்!

இலக்கிய நிகழ்வின் அருமையான; பெருமையான இந்தத் தருணத்தில், மேடைக்கலை தெரியாத நான் சிவ பூசையில் கரடி போல வந்து நிற்பதற்கு சில விளக்கங்களை அளிக்க வேண்டி இருப்பது ஒரு முக்கிய காரணம்.

பலரும் இது என்ன! ’உயர்திணை’? அப்படி என்றால் என்ன? ஏன் இப்படி ஒரு பெயர்? தமிழ் மன்றம், இலக்கிய மன்றம் இப்படி ஏதேனும் ஒரு பெயர் வைத்திருக்கலாமே என்று கேட்கிறார்கள். நாம் 2012ம் ஆண்டு இலக்கியம் பேச,பகிர,விவாதிக்க,இலக்கிய ஆழுமைகளைச் சந்திக்க என ஒரு வெளி வேண்டும் என்று எண்ணி, இன்று இங்கு மேடையில் இருக்கும் பாஸ்கரன், நம் நிகழ்வைந் நடாத்திக்கொண்டிருக்கும் பிரவீனனின் தாயாரான எழுத்தாளர் கோகிலா மகேந்திரன்  – அப்போது அவர் இங்கிருந்தார் – இன்றுவரை இவ் அமைப்பின் ஒரு பெரும் தூணாக இருக்கும் கார்த்திகா கணேசர் மற்றும் என் இலக்கிய நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘இலக்கியச் சந்திப்புகளை’ வைப்பதற்கென ஓரமைப்பை ஏற்படுத்திய போது அதற்குப் பெயர் வைக்கிற தேவை நமக்கு ஏற்பட்டது. அதற்கான தேடலை நாம் எல்லோரும் நமக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களிடமும் விடுத்திருந்தோம். வந்து சேர்ந்திருந்த பல பெயர்களுள், மெல்போர்ன் நகரில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் ஜேகே என அறியப்படும், ஜெயக்குமரன் அவர்களிடம் இருந்து கிடைத்த ’உயர்திணை’ என்ற பெயர் ஏகமனதாக எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்தது. அப்பெயரை வழிமொழிந்தவர் பாஸ்கரன்.( நம் அமைப்புக்கான இலட்சினையை பொதுவாகக் கோரிய போது எளிமையாகவும் கச்சிதமாகவும் உடனடியாகவும் உருவாக்கித் தந்தவர் எழுத்தாளர். ரஞ்சகுமார் அவர்கள்.)

உலக உயிரினங்களில் மனித உயிரினங்களை மாத்திரமே, நாம் உயர்திணை என்கிறோம். ஏனைய உயிரினங்கள் யாவும் அஃறிணையாகும். இவ் உயிரின்ங்கள் உஆவற்ரையும் வேறுபடுத்தி நிற்கும் ஒரே ஒரு கூறு மனித உயிரினங்களுக்குச் சிறப்பாக அமைந்திருக்கும் பகுத்தறியும் குணாம்சம்! நம் அமைப்பும் பகுத்து அறிகிற தன்மையை – காலத்துக்குக் காலம் வெளிப்படுத்தி நிற்கும் கலையின் ஒரு கூறாகிய – இலக்கியத்தின் வழி; பகுத்தறிந்து காணுதல் பொருட்டு, அதன் சிறப்புப் பெயரால் இவ் அமைப்பை குறித்து நிற்கிறோம். வேந்தவை (வேந்தர்கள் அவை) எனப் பொருள்படும் ‘றோயல் சொசைட்டி’ என்ற அறிவுநூல் புலவர் குழு லண்டன் மாநகரில் பல காலமாக இயங்கி வருவதும்; அவர்களது உலகளாவிய பார்வையும் இங்கு மனம் கொள்ளத் தக்கன. ( இலக்கியக் கட்டுரைகள், சுவாமி விபுலானந்தர், இயல் இசை நாடகம், பக். 76)

அந்த வகையில் நம்மால் நிகழ்த்தப்பட்ட எழுத்தாளர்கள் சந்திப்புக்கள், இலக்கியச் சந்திப்புக்கள், விமர்சன அரங்கு, மற்றும் வெளியீட்டு அரங்குகள் யாவும் ஒரு வித உரையாடல் பாங்கில் அமைந்தவை. கடந்த தைமாதம் முதலாவது புத்தக வெளியீட்டினை நடாத்தி இருந்தோம். அது அவுஸ்திரேலிய தமிழர்கள் உலகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது என பெருமை கொள்ளத் தக்க கீதா மதிவாணனின் அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் ’என்றாவது ஒரு நாள்’. கூடவே அறிமுகப் படுத்தத் தக்க தகைமையோடு விஞ்ஞானக் கதைகள் புத்தகமாகி வந்த பின்னும், இன்னும் வெளியீடு செய்யப் படாமல் இருக்கிறது பிரவீனனின் ’ஏலியன் கதைகள்’ . கார்த்திகா கணேசரின் நடனக் கலை குறித்தான ஆய்வு நூல் ஒன்றும் வெளிவரக் காத்திருக்கிறது.

அநேக இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் கலைஞர்களிடம் இருக்கிற முக்கியமான பலவீனம் என்னவென்றால் அவர்களால் ஒரு புத்தகக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே முடிகிறது. அதனை சமூகத்துக்குக் கொண்டு செல்லும் முக்கிய பணியை அவர்கள் ஆற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. என் பிள்ளையை நானே எப்படிப் பாராட்டிக் கொள்வது என்ற கூச்சம் காரணமாக இருக்கலாம். இத்தகைய கலை இலக்கிய வாதிகளை இனம் காண்பதும்; சிறந்த பிரசுரங்களை சமூகத்துக்கு எடுத்து வருவதும்; அதனைப் பலர் அறியச் செய்வதும் கூட நம் எதிர்கால இலக்காக இருக்கும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த வகையில் தான், நாம் இந்தத் தொகுப்புக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனைப் பெருமையோடு இன்று அறிமுகம் செய்திருக்கிறோம். ஈழத்தினுடய இலக்கிய மரபை நோக்கினால், நம்மிடம் ஆவணப்படுத்தும் மரபு – இலக்கியமாக்கி வைக்கும் பண்பு –  மிக அரிதாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் விளைவை நாம் ‘வந்தேறு குடிகள்’ என பெரும்பாண்மை சமூகம் சுட்டிக் காட்ட காரணமாய் அமைந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த மகாவம்சம், சூள வம்சம் போன்ற இலக்கிய வழி வரலாற்றைப் பேணும் மரபு நம்மிடம் இல்லாதிருந்த காரணத்தால் நாம் மெளனிக்க நிர்பந்திக்கப் பட்டிருந்தோம். சிங்கள பெளத்தம் என்ற கோஷம் எழவும்; இது நம் நாடு என அவர்கள் உரிமை கோரவும்; போர் ஒன்று தோன்றவும்; இன்று நாம் எல்லாம் புலம் பெயரவும் கூட, அதுவே காரனமாயிற்று. இதிலிருந்தே நாம் இலக்கியங்களின் வரலாற்றுப் பெறுமதியை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் தான் இன்று வெளியீடு செய்யப் பட இருக்கும் இத் தொகுப்பு நூல் முக்கிய இடம் பெறுகிறது. தனித்தும் வேறு பட்டும் சிறப்பாகவும் காணப்படும் தற்கால ஈழத்து இலக்கியப் போக்கில் முக்கியமான கூறுகள் இரண்டுள. ஒன்று போர். அது சார்ந்து எழுந்த போர்க்காலஇலக்கியங்கள். 2. புலப் பெயர்வு. அது சார்ந்து எழுந்த புலம்பெயர்இலக்கியங்கள். இவை இரண்டையும் இரு தொகுதிகளை ஒவ்வொன்றும் சுமார் 1000 பக்கங்களை உள்ளடக்கியதாக தொகுத்து தமிழ் சமூகத்துக்கு அளித்த பெருமை திரு ஞானம் அவர்களையும் அவர் தம் குடும்பத்தாரையும் சாரும்.

அந்த வகையில், இது அவர்களது மூன்றாவது தொகுப்பு நூல். இது ஈழத்து ஆளுமைகளின் நேர்காணல்களின் தொகுப்பு. இது ஒரு சமகால சிந்தனைப் புலங்களின் ஆவணக் களஞ்சியம் என்று சொல்லலாம். இப்படியாக 3 பெரும் தொகுப்புகளை தனி ஒருவராக – எந்த ஒரு நிதிப் பின்னணியும் இன்றி -தமிழுக்காகவும் தமிழருக்காகவும் அவர்கள் செய்து முடித்திருக்கிற இந்த சாதனை  – பணி – தொண்டு – விதந்து போற்றுதற்குரியது.

அவர்கள் ஆற்றுகிற இந்தத் தமிழ் பணி பற்றிச் சொல்லுகின்ற போது இன்னொரு விடயத்தையும் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். ’ஈழமும் தமிழும்‘ என்ற பெயரில் நம்மிடையே இருந்து மறைந்து, ஒழிந்து போயிருந்த சித்திரக் கவித்திரட்டு, தமிழகத்துக்கு முன்னர் காசிச் செட்டியால் முதன் முதல் வெளியிடப்பட்ட மலையகராதி பற்றிய குறிப்புகள், அதி பழைய ஈழத்து நாடக நூலான தால விருட்சம் மற்றும் யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ் சங்கம் பற்றிய குறிப்புகள், ஈழத்து வானசாஸ்திர நூல், மற்றும் 1759ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பற்றிய தகவல்கள் போன்ற அரிய விடயங்களைத் தக்க ஆதாரங்களோடு வெளிக் கொணரும் பணியில் ஞானசேகரன் அவர்களது மகனார் பாலச்சந்திரன் ஈடு பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இங்கு ஞானசேகரன் அவர்களின் பாரியாரும் வந்திருக்கிறார். அவரும் இந்து சமயம் சார்ந்த சில நூல்களை எழுதி இருக்கிறார். அவைகள் எல்லாம் இங்கு பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. விரும்பியவர்கள் அவற்றையும் வாங்கிச் செல்லலாம்.

நாமே நம்முடய செல்வங்களைத் தெரியாதவர்களாகவே காலம் காலமாக இருந்து வந்திருக்கிறோம். இன்னும் இருக்கிறோம். தமிழ் தாத்தா உவேசா போற்றப்படுகிற அளவுக்கு அதேகாலத்தில் தரமான இலக்கியங்களைப் பதிப்புச் செய்த சி.வை. தாமோதரம் பிள்ளையை நாம் கண்டுகொள்வதில்லை. அகராதி முயற்சியில் தமிழகத்துக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த மலையகராதியையும் இலங்கையரான சைமன் காசிச் செட்டியையும் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்? ஈழத்தவர் பெயர் நம்மாலேயே ஒரு போதும் கண்டுகொள்ளப்படவோ முன்னிலைப்படுத்தப் படவோ இல்லை. சுவாமி விபுலானந்தரின் அநேக ஆக்கங்கள் இன்று நமக்குக் கிடைத்தில. இது கூட மிக அண்மைக்காலத்து நம் தாந்தோன்றித்தனம் தான்….உலகம் எல்லாம் ஓடி ஓடி தமிழ் தூது சென்ற தனிநாயகம் அடிகளாரை நாம் முழுவதுமாக மறந்து விட்டிருக்கிறோம். நாம் ஏன் இவ்வாறு வரலாற்றுப் பிரக்ஞையற்று இருந்தபடி, தமிழ் நாட்டவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவில்லை என்று கோஷம் எழுப்புகிறோம் என எனக்குப் புரியவில்லை. அந்தப் பின்னணியில் தான் ஞானம் ஞானசேகரன் அவர்களதும் அவர் தம் குடும்பத்தாரதும் பணி மெச்சத் தக்கதாக அமைகிறது. அவர்களது ஆவணப்படுத்தும் முயற்சிகளும், மறைந்து போனவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளும் பாராட்டத் தக்கது. காலத்தால் நின்று, தமிழின் பெருமை சொல்லும் சான்றாண்மை கொண்டது. இந்தப் பணிக்கான ஆதரவை வழங்க வேண்டியது நம் கடமை.

இறுதியாக ஒரு வார்த்தை! அது பொருளாதார வளம் பற்றியது. நம்மில் எத்தனையோ பேர் $5.00,  $10.00 டொலர்கள் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கவே பெரிதும் தயக்கம் காட்டுகிறோம். இவர்கள் தம் குடும்ப நிதிக் கருவூலத்தில் இருந்தே இப் புத்தகச் செலவுகளை பார்த்துக் கொண்டதாக அறிகிறேன். அதனை அங்கிருந்து இங்கு கொண்டுவர ஆகும் செலவோ இலங்கையின் பணப் பெறுமதியோடு ஒப்பிடுகையில் மிக அதிகம். இந்தப் புத்தகங்கள் எல்லாம் நம்மைத் தேடி வந்திருக்கின்றன. நான் உள்ளே வருகின்ற போது, மனம் முழுக்க எதிர்பார்ப்புகளோடு, பரிசுகள் கொண்டு வேலையால்  வரும் தந்தைக்காகக் காத்துக் கொண்டு நிற்கும் ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் நம்பிக்கைகளைப் போல; எதிர்பார்ப்புகளைப் போல; ஒவ்வொரு புத்தகங்களும் காத்திருப்பதைப் போல தோன்றியது.

இராமாயணம் என்ற ஓர் உயரிய காவியம் அரச ஆதரவு இல்லாத காரணத்தால் தேக்கமுற்று இருந்த போது  சடையப்பவள்ளல் செய்த உதவியால் அந்நூல் அரங்கேற்றம் கண்டது. அன்று சடையப்பவள்ளல் இருந்திரா விட்டால் இன்று நாம் சுவைத்துக் கொண்டாடும் கம்பராமாயணம் கிட்டி இருக்குமா என்பது சந்தேகம். அதற்கான நன்றியறிதலை கம்பன் கவியால் அலங்கரித்து சுமார் 10 இடங்களில் போற்றிப் போற்றி நெகிழ்கிறான். செல்வமோ செல்வாக்கோ அற்றிருந்த அறிவுநிதி பெருகப் பெற்றிருந்த கம்பகாவியம் எங்கு தோல்வியுற்றிருக்கும் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறந்த உதாரணம். கல்வியும் செல்வமும் தன்னைத் தான் நிரூபித்த இடம் அது.

அதனால் தான் பாரதியார், தன் பாஞ்சாலி சபத்ததை எழுதி விட்டு, அதனை இனி வர இருக்கும் வரகவிகளுக்குத், தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கு, தன் பாஞ்சாலி சபதத்தைக் காணிக்கையாக்குகிறார்.

அத்தகைய இரண்டு பிரபுக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். ஒருவர் எக்சலண்ட் ஜுவலர்ஸ் ஸ்தாபகரும் உரிமையாளருமான திரு. சுந்தர ராசா அவர்கள். கேட்டவுடன் இன்முகத்தோடு வருகை தந்திருக்கும் வர்த்தகப் பிரமுகர்.

மற்றயவர், ஏழைகளின் நலிந்தோரின் நோயாளிகளின் வாழ்த்துக்களைத் தன் பெரு நிதியாகக் கொண்ட பிரமுகர். புத்தகங்களும் நூலகங்களும் நம் கருவூலங்கள் என்பதை அறிந்தவர். இருதய வைத்திய நிபுணர் திரு மனோமோகன் ஐயா அவர்கள்.

இப்பொழுது முதல் பிரதியை ஞானம் ஞானசேகரன் அவர்கள் அளிக்க எக்சலண்ட் ஜுவலர்ஸ் உரிமையாளர் திரு. சுந்தர ராசா அவர்களும் மனமோகன் ஐயா அவர்களும் பெற்றுக் கொள்வார்கள்.

நன்றி.

 

யசோதா.பத்மநாதன். 30.4.17.

மேலும் சில ஒளிப்படங்கள்….

ut20ut21ut22ut23ut24

 
2 Comments

Posted by on 03/05/2017 in Uncategorized