RSS

      புத்தக வெளியீடு குறித்த குறிப்பு….

03 May

 ஒரு குடும்பத் திருமணத்துக்கு முதல் நாள் வீட்டு ஆரவாரம் போல அல்லது திருமணம் இனிதே நிறைவேறிய பின்னால் இருக்கும் ஒரு உள்ளார்ந்த மனநிறைவுடன் கூடிய களைப்புப் போல இந்தப் பதிவு.

நம் புத்தக வெளியீட்டு நிகழ்வு குறித்த முறையான கருவி கொண்டு எடுக்கப்பட்ட படங்களோடு கூடிய பதிவு கீதா.மதிவாணனால் முறையாக இங்கு தரப்படும். நானே எப்போதும் எழுதினால் அது நன்றன்று….

நிகழ்வுக்கு வருகிறேன்.
ஞானம் ஐயா அவர்களுடய புத்தகத்தை மையமாக வைத்துக் கொண்டு  சிறந்த ஒரு சிந்தனைப்பகிர்வை;சிந்தனைக்கான சூட்சும இடங்களை அவரவர் பாணியில் அவரவர் அழகுகளோடு முன் வைத்த சான்றோர்களாகிய பேச்சாளர்கள் எல்லோருக்கும் முதலில் என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். ஞானம் ஐயா அவர்களுக்கும் அது திருப்தியைத் தந்திருக்கும் என நம்புகிறேன்.
பிரவீனன் – தம்பி இல்லாத நான் என் தம்பி என உரிமைகோர ஆசைப்படும் இளவல். கேட்டவுடன் எனக்காக வரத்தக்க இயல்பு காட்டி என்னை மேலும் மேலும் பெருமை கொள்ள; பெருமிதமடையச் செய்கிற இளம் புத்திஜீவி! நேற்றய தினம் தன் தகுதிப் பாட்டினை மேலும் நிரூபித்து நமக்கும் பெருமை தேடித்தந்தவர். பிரவீனன், ஞானம் ஐயா சொன்னது போல சிட்னி கொண்டாடத் தக்க ஓராழுமை. அவரை நாம் பெற்றுக் கொண்டதில் உயர்திணையும் பெருமைக் கொள்கிறது. நேற்றய தினம் நிகழ்ச்சியை செவ்வனே நடாத்தி ‘வெளி’ என்ற சொல்லுக்கான பாதையைத் திறந்து வைத்து மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நடாத்தி இருந்தார்.
பாஸ்கரன் அவர்கள் இத் தொகுப்பு பற்றிப் பேசி நேர்காணல்கள்  இலக்கிய வகைக்குள் அடங்குமா  என்ற கேள்வியை முன் வைத்து அது சார்ந்து எழுந்திருக்கும் இலக்கிய வகைகள் பற்றியும் நோக்கி நல்லதொரு சிந்தனைப் பகிர்வை; கேள்வியை முன் வைத்திருந்தார். அண்மைய காலங்களில் ஏற்பட்டிருக்கிற இலக்கிய வகைகள் குறித்த பிரக்ஞைகள் அவை பற்றிய சொல்லாடல்கள் குறித்த நல்லதொரு தேடலை அது தொடக்கி வைத்துச் சென்றது.
சந்திரலேகா வாமதேவா அவர்கள் தன் பல்கலைக்கழக ஆழுமைகளுடனான – நேர்காணலில் இடம்பெற்றிருக்கிற ஆழுமைகள் குறித்த – தன் சொந்த அனுபவங்களோடும் இன்றய வாசிப்பு அனுபவங்கள் குறித்த இளையோர்களின் மனப்பாங்கில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் குறித்தும் உரை தந்து நம் சமூக விழுமியங்களில் அது ஏற்படுத்தத் தக்க மாற்றம் அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து பேசியும் அதனை ஏனைய மொழிக்குடும்பத்தார் அது குறித்து என்ன என்ன காரியங்களை ஆற்றியிருக்கின்றனர் என்பது குறித்தும் பரந்த வாசிப்பின் பின்னணியில் தன் கரிசனையை முன்வைத்திருந்தார்.
தனபால சிங்கம் ஐயா ‘வெளியும் இயக்கமும்’ குறித்த சொற் பொருளுக்குள் நின்றபடி அவர் கூறிய கருத்துக்கள் புத்திஜீவித பாங்கில் அமைந்தவை. இந்த இருபெரு சொற்களுக்கிடையே அகன்று விரிந்து வியாபித்து நிற்கின்ற இலக்கிய பிரபஞ்சத்தில்  தமிழ் குறித்து அவர் முன் வைத்த கருத்துக்கள் யாவும் ஒரு பெரும் சிந்தனைக்குரித்தான சாட்சியங்கள்.
இவர்கள் எல்லோருடய உரைகளிலும் காணப்பட்ட சிறப்பம்சங்களும் அவரவர் பாணியில் அவரவர் தந்து சென்ற கருத்துக்களும் அறிமுகநூலின் ஆழத்தையும் அகலத்தையும் சிறப்பாக விதந்துரைக்கத் தக்கனவாக இருந்தன. தனபாலசிங்கம் ஐயா சொன்னது போல – ஒரு சிறுகதை முடிந்தபின் சொல்லி நிற்கிற சொல்லாதவிடயங்கள் குறித்த சிந்தனை விரிவினப் போல இந்த நிகழ்வும் புத்த்கத்தைச் சூழ்ந்து நின்றபடி சொல்லாத பல விஷயங்களைச் சொல்லின.
மிகச் சிறந்த ஒரு சிந்தனை விரிப்புக்கான விதைகள் அவை! அவர்கள் விதைத்துச் சென்றவை விருட்சத்துக்கான வீரியங்கள் கொண்ட விதைகள்! என்னைத் தனிப்பட்ட முறையில் பெருமை கொள்ளச் செய்த தருணங்கள் இவை என நான் நிமிர்ந்து நின்று சொல்வேன்.
இது ஒரு சிறு அமைப்பு. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் மிகச் சிறு அமைப்பு. எந்த ஒரு செல்வாக்குப் பின்னணியும் இல்லாத; ஆர்வமும் ஆசையுமே அதன் மூலதனமாகக் கொண்டிருக்கிற அறிவை நேசிக்கும் ஒரு சிறு அமைப்பு. இருந்த போதும் இப் புத்திஜீவித குணாம்சம் கொண்ட எளிமையும் அதே நேரம் ஆழமும் கொண்டிருக்கிற; வாசிப்பினை தம் வாழ்நாளாகக் கொண்டிருக்கிற;அதனை நம்மோடும் பகிர்ந்து கொள்ள சம்மதம் கொண்டிருக்கிற;  இவர்கள் மூவரும் இந் நிகழ்வுக்கு வரச் சம்மதம் தந்து, அது குறித்த உங்கள் ஆழத்தையும் அகலத்தையும் நமக்கு விரித்து வைத்து வாசிப்புப் பசிக்கு பெருவிருந்து படைத்துச் சென்றார்கள். என்னளவில் சபை சிறிதே எனினும் கனமான சபை. அத்தோடு, பேச்சாளப் பெருமக்களின் அறிவுச் செழுமையினால் அது உயர்ந்ததும் சிறந்ததுமே ஆகும். அந்த ஆத்மதிருப்தியை அது நிச்சயமாகத் தந்து சென்றது.
ஞானம் ஐயா!  எங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பினை தந்ததும் புத்தகம் பற்றிய அவர் பேச்சுக்களும் வளமை போலவே நிதானமும் அழகும் எளிமையும் ஆழமானவையும். அவருடய இந்தப் புத்தக அறிமுகம் குறித்த அவரது ஏற்புரைக்கும் பிறகு அவர் தந்த சிற்றிலக்கியங்கள் குறித்த சிறப்புரைக்கும் நம் நன்றி என்றும் உரியதாகும்.
கார்த்திகா கணேசர்! பல்வேறு ஆழுமைகளால் நம்மை வியக்க வைக்கும் உயர்திணையின் அத்திவாரம்! சிவனின்றி சக்தி இல்லை என்பார்கள். எனக்கும் அவருக்குமான உறவும் நெருக்கமும் அது போன்றது. நிகழ்வுகள் குறித்த விமர்சனத்துக்கு நான் எப்போதும் அவரையே நாடி நிற்பேன். எல்லாவற்றையும் விமர்சன நோக்கில் பார்த்து பயமின்றி கருத்துச் சொல்லத் தக்க ஆழுமை! விமர்சனங்கள் குறித்து விவாதிப்பதில் நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அதன் முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதில் நமக்கு அக்கறை இருப்பதில்லை. விவாதிப்பின் முடிவில் முன்வைக்கப் பட்ட கருத்துக்கள் நம்மை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்தி இருக்கும். பார்க்காத கண்ணோட்டங்களை இரண்டு பேருக்கும் அது தந்திருக்கும்.அவர் எனக்கான ஒரு பலம்! பெரும் பலம்!!
கீதா – தவறி நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிற ஒரு ஆட்டுக் குட்டி. அவரிடம் இருக்கிற திறமைக்கும் ஆற்றலுக்கும் நேர்த்தி மிக்க செயல்திறனுக்கும் அவர் இருக்கவேண்டிய இடம் வேறு.அதனை நான் எப்போதும் ஆதங்கத்தோடு அவருக்கும் குறிப்பிடுவது உண்டு.  பாரதப் பெண்ணாய் கொஞ்சுதமிழின் சொந்தக் காரியாய் நம்மோடு கூடவே வரும் செந்தமிழ் தேன்மொழியாள் கீதாவுக்கு என் அன்பு என்றும் உரியதாகும். கீதா என் பாதி பலம்.
மணிமாறன் அவர்கள்! எப்போதும் நம் நிகழ்வுக்காக நிழல்படமும் ஒளிப்படமும் எடுத்து உடனடியாக அவற்றை என்னிடம் ஒப்படைக்கும் ஒருவர். இல்லை என்றால் இந் நிகழ்வுக்கான எந்த தடயங்களும் நம்மிடம் இருக்காது. அது காலத்தால் செய்யும் நன்றி. புரிந்து கொண்டு உதவும் மனப்பாங்கு. அவருக்கு மீண்டும் என் நன்றி.
நேற்றய புத்தக வெளியீடு சபை சிறிதே என்ற குறைபாடு இருந்த போதும் ( அன்றய தினம் வேறொரு சிறந்த நிகழ்வும் இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக இருந்தது) என்னளவில் திருப்தியத் தந்தது என்று நான் துணிந்து சொல்வேன்.சிந்தனைக்கான  பல பாதைகளை அது திறந்து விட்டிருந்தது. சாதாரணமாக இலக்கியக் கூட்டங்கள் ஏனைய நிகழ்வுகளைப் போல கவர்ச்சிகரமாக மக்களுக்கு இருப்பதில்லை. கவர்ச்சிகரமாக்கினால் அது தன் சோபையை இழந்துவிடும் சாத்தியங்கள் இருப்பதால் அது நமக்கு பிரியமானதாக இருப்பதும் இல்லை.
இதனை நம்மளவில் வெற்றிகரமாக்கியதில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பங்குண்டு. நிகழ்வு முடிந்து மண்டபத்து சபையினரோடு நிகழ்வம்சங்கள் குறித்து அளவளாவிக் கொண்டிருந்த போது டொக்டர்.கெளரிபாலன் அவர்கள் கலாநிதி சந்திரலேகா. வாமதேவா அவர்கள் குறிப்பிட்டிருந்த வாசிப்பு மரதன் பற்றிக் குறிப்பிட்டு தான் அதற்கு 1000 டொலர்கள் நிதிப் பங்களிப்பை நமக்கு நல்குவதாகவும்; எவ்வாறு தமிழ் வாசகரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த அதனைப் ஒரு பரிசுத் தொகையாக அறிவித்து செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து தனக்குச் சொல்லுமாறும் கூறினார்.
வந்திருந்த சுமார் 30 – 35 பேர் கொண்ட பார்வையாளர்களில் – அத்தனை பேரும் விரும்பி வந்த இலக்கிய ஆர்வலர்கள் – வைக்கப்பட்ட பல புத்தகங்களில் கனிசமான அளவு புத்தகங்கள் விற்பனையானதும்; சில புத்தகங்கள் விற்று முடிந்து விட்டதும்; ‘ஈழத்துத் தமிழ் நவீன இலக்கிய வழி’ என்ற இத் தொகுப்பு நூல் (  $40.00 பெறுமதியானவை) 8 நூல்கள் விற்பனையானதும் கூட நம்மளவில் வெற்றிகரமான நிகழ்வு தான்.
தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளி என்ற நேர்காணல் தொகுப்பு நூலை வைத்து ’வெளியும் இயக்கமும்’ குறித்து பேசினார். வெளியினைக் கொண்டாடிய அந்த நிகழ்வில் இயக்கத்துக்கான விதை ஊன்றப்பட்டதும் மிகத் திருப்தியைத் தந்திருந்த முடிவான ஒரு நிகழ்வு.
இவர்கள் எல்லோரும் அதன் காரணகாரர். அவர்கள் எல்லோராலும் நாம் பெருமை கொண்டோம். தொடர்ந்து நம்மோடு இணைந்திருக்குமாறும் நாம் மேலும் வளர; நம்மைத் தீட்ட; தனி நபர் புகழாரங்களில்லாத உங்கள் விமர்சனங்களையும் பங்களிப்புகளையும் தந்துதவுமாறு இந்த சந்தர்ப்பத்தில் அன்போடு கேட்டு மீண்டும் மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்தும் தமிழால் இணைந்திருப்போம்.
அன்புள்ள யசோதா.ப.

 

நிகழ்வு நடக்கு முன்னரே வந்து மண்டபத்தைச் சோபிக்கச் செய்த கார்த்திகா கணேசரும் கீதா மதிவாணனும்.

வைக்கப் பட்ட காட்சிப் பொருட்களும் காட்சிக்கும் பொருள்களுக்கும் சொந்தக் காரரான திரு. சிவசோதி அவர்கள்.

நிகழ்வு நிறைவுற்ற பின் டொக்டர்.கெளரிபாலன் அவர்கள் கலாநிதி சந்திரிக்கா வாமதேவாவுடன் உரையாடும் போது….

எழுத்தாளர் ரஞ்சகுமார் அவர்களோடு ஞானம். ஞானசேகரன் அவர்கள்.

புத்தகங்களோடு திருமதி ஞானம் அவர்களும் நிகழ்வினை சிறப்பாக நடாத்தித் தந்த சிட்னி பல்கலைக் கழக விரிவுரையாளர் பிரவீனனும்.

ஞானம் அவர்களின் மகனார் புத்தக விற்பனையில் மும்மரமாக இருந்த ஒரு பொழுது….

பல்வைத்திய நிபுணரும் தங்கத் தாத்தா. சின்னத்தம்பிப் புலவரின் வாரிசும் கவிஞருமாகிய பாரதி அவர்கள் சிவசோதி அவர்களோடு…

கீதா ஞானம் ஞானசேகரன் அவர்களோடு….

திரு.திருமதி வாமதேவா அவர்கள் கூடவே டொக்டர் கெளரிபாலன் அவர்களுடன்…..

கீழே வருவது யசோதாவினால் ஆற்றப்பட்ட அறிமுக உரையும் வெளியீட்டுரையும்  ஒரு பதிவுக்காக….

மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களுக்கும், இலக்கியக் கூட்டத்திற்கென வருகை தந்திருக்கும் தமிழ் பற்றாளர்களுக்கும், நேசர்களுக்கும், உயர்திணையின் அமைப்பாளர் என்ற வகையில், என் தாழ்மையும், அன்பும், கனிந்த வணக்கங்கள்!

இலக்கிய நிகழ்வின் அருமையான; பெருமையான இந்தத் தருணத்தில், மேடைக்கலை தெரியாத நான் சிவ பூசையில் கரடி போல வந்து நிற்பதற்கு சில விளக்கங்களை அளிக்க வேண்டி இருப்பது ஒரு முக்கிய காரணம்.

பலரும் இது என்ன! ’உயர்திணை’? அப்படி என்றால் என்ன? ஏன் இப்படி ஒரு பெயர்? தமிழ் மன்றம், இலக்கிய மன்றம் இப்படி ஏதேனும் ஒரு பெயர் வைத்திருக்கலாமே என்று கேட்கிறார்கள். நாம் 2012ம் ஆண்டு இலக்கியம் பேச,பகிர,விவாதிக்க,இலக்கிய ஆழுமைகளைச் சந்திக்க என ஒரு வெளி வேண்டும் என்று எண்ணி, இன்று இங்கு மேடையில் இருக்கும் பாஸ்கரன், நம் நிகழ்வைந் நடாத்திக்கொண்டிருக்கும் பிரவீனனின் தாயாரான எழுத்தாளர் கோகிலா மகேந்திரன்  – அப்போது அவர் இங்கிருந்தார் – இன்றுவரை இவ் அமைப்பின் ஒரு பெரும் தூணாக இருக்கும் கார்த்திகா கணேசர் மற்றும் என் இலக்கிய நண்பர்கள் சிலர் சேர்ந்து ‘இலக்கியச் சந்திப்புகளை’ வைப்பதற்கென ஓரமைப்பை ஏற்படுத்திய போது அதற்குப் பெயர் வைக்கிற தேவை நமக்கு ஏற்பட்டது. அதற்கான தேடலை நாம் எல்லோரும் நமக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களிடமும் விடுத்திருந்தோம். வந்து சேர்ந்திருந்த பல பெயர்களுள், மெல்போர்ன் நகரில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் ஜேகே என அறியப்படும், ஜெயக்குமரன் அவர்களிடம் இருந்து கிடைத்த ’உயர்திணை’ என்ற பெயர் ஏகமனதாக எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்தது. அப்பெயரை வழிமொழிந்தவர் பாஸ்கரன்.( நம் அமைப்புக்கான இலட்சினையை பொதுவாகக் கோரிய போது எளிமையாகவும் கச்சிதமாகவும் உடனடியாகவும் உருவாக்கித் தந்தவர் எழுத்தாளர். ரஞ்சகுமார் அவர்கள்.)

உலக உயிரினங்களில் மனித உயிரினங்களை மாத்திரமே, நாம் உயர்திணை என்கிறோம். ஏனைய உயிரினங்கள் யாவும் அஃறிணையாகும். இவ் உயிரின்ங்கள் உஆவற்ரையும் வேறுபடுத்தி நிற்கும் ஒரே ஒரு கூறு மனித உயிரினங்களுக்குச் சிறப்பாக அமைந்திருக்கும் பகுத்தறியும் குணாம்சம்! நம் அமைப்பும் பகுத்து அறிகிற தன்மையை – காலத்துக்குக் காலம் வெளிப்படுத்தி நிற்கும் கலையின் ஒரு கூறாகிய – இலக்கியத்தின் வழி; பகுத்தறிந்து காணுதல் பொருட்டு, அதன் சிறப்புப் பெயரால் இவ் அமைப்பை குறித்து நிற்கிறோம். வேந்தவை (வேந்தர்கள் அவை) எனப் பொருள்படும் ‘றோயல் சொசைட்டி’ என்ற அறிவுநூல் புலவர் குழு லண்டன் மாநகரில் பல காலமாக இயங்கி வருவதும்; அவர்களது உலகளாவிய பார்வையும் இங்கு மனம் கொள்ளத் தக்கன. ( இலக்கியக் கட்டுரைகள், சுவாமி விபுலானந்தர், இயல் இசை நாடகம், பக். 76)

அந்த வகையில் நம்மால் நிகழ்த்தப்பட்ட எழுத்தாளர்கள் சந்திப்புக்கள், இலக்கியச் சந்திப்புக்கள், விமர்சன அரங்கு, மற்றும் வெளியீட்டு அரங்குகள் யாவும் ஒரு வித உரையாடல் பாங்கில் அமைந்தவை. கடந்த தைமாதம் முதலாவது புத்தக வெளியீட்டினை நடாத்தி இருந்தோம். அது அவுஸ்திரேலிய தமிழர்கள் உலகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது என பெருமை கொள்ளத் தக்க கீதா மதிவாணனின் அவுஸ்திரேலிய செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஷனின் ’என்றாவது ஒரு நாள்’. கூடவே அறிமுகப் படுத்தத் தக்க தகைமையோடு விஞ்ஞானக் கதைகள் புத்தகமாகி வந்த பின்னும், இன்னும் வெளியீடு செய்யப் படாமல் இருக்கிறது பிரவீனனின் ’ஏலியன் கதைகள்’ . கார்த்திகா கணேசரின் நடனக் கலை குறித்தான ஆய்வு நூல் ஒன்றும் வெளிவரக் காத்திருக்கிறது.

அநேக இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் கலைஞர்களிடம் இருக்கிற முக்கியமான பலவீனம் என்னவென்றால் அவர்களால் ஒரு புத்தகக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே முடிகிறது. அதனை சமூகத்துக்குக் கொண்டு செல்லும் முக்கிய பணியை அவர்கள் ஆற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. என் பிள்ளையை நானே எப்படிப் பாராட்டிக் கொள்வது என்ற கூச்சம் காரணமாக இருக்கலாம். இத்தகைய கலை இலக்கிய வாதிகளை இனம் காண்பதும்; சிறந்த பிரசுரங்களை சமூகத்துக்கு எடுத்து வருவதும்; அதனைப் பலர் அறியச் செய்வதும் கூட நம் எதிர்கால இலக்காக இருக்கும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த வகையில் தான், நாம் இந்தத் தொகுப்புக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனைப் பெருமையோடு இன்று அறிமுகம் செய்திருக்கிறோம். ஈழத்தினுடய இலக்கிய மரபை நோக்கினால், நம்மிடம் ஆவணப்படுத்தும் மரபு – இலக்கியமாக்கி வைக்கும் பண்பு –  மிக அரிதாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் விளைவை நாம் ‘வந்தேறு குடிகள்’ என பெரும்பாண்மை சமூகம் சுட்டிக் காட்ட காரணமாய் அமைந்திருக்கிறது. அவர்களிடம் இருந்த மகாவம்சம், சூள வம்சம் போன்ற இலக்கிய வழி வரலாற்றைப் பேணும் மரபு நம்மிடம் இல்லாதிருந்த காரணத்தால் நாம் மெளனிக்க நிர்பந்திக்கப் பட்டிருந்தோம். சிங்கள பெளத்தம் என்ற கோஷம் எழவும்; இது நம் நாடு என அவர்கள் உரிமை கோரவும்; போர் ஒன்று தோன்றவும்; இன்று நாம் எல்லாம் புலம் பெயரவும் கூட, அதுவே காரனமாயிற்று. இதிலிருந்தே நாம் இலக்கியங்களின் வரலாற்றுப் பெறுமதியை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் தான் இன்று வெளியீடு செய்யப் பட இருக்கும் இத் தொகுப்பு நூல் முக்கிய இடம் பெறுகிறது. தனித்தும் வேறு பட்டும் சிறப்பாகவும் காணப்படும் தற்கால ஈழத்து இலக்கியப் போக்கில் முக்கியமான கூறுகள் இரண்டுள. ஒன்று போர். அது சார்ந்து எழுந்த போர்க்காலஇலக்கியங்கள். 2. புலப் பெயர்வு. அது சார்ந்து எழுந்த புலம்பெயர்இலக்கியங்கள். இவை இரண்டையும் இரு தொகுதிகளை ஒவ்வொன்றும் சுமார் 1000 பக்கங்களை உள்ளடக்கியதாக தொகுத்து தமிழ் சமூகத்துக்கு அளித்த பெருமை திரு ஞானம் அவர்களையும் அவர் தம் குடும்பத்தாரையும் சாரும்.

அந்த வகையில், இது அவர்களது மூன்றாவது தொகுப்பு நூல். இது ஈழத்து ஆளுமைகளின் நேர்காணல்களின் தொகுப்பு. இது ஒரு சமகால சிந்தனைப் புலங்களின் ஆவணக் களஞ்சியம் என்று சொல்லலாம். இப்படியாக 3 பெரும் தொகுப்புகளை தனி ஒருவராக – எந்த ஒரு நிதிப் பின்னணியும் இன்றி -தமிழுக்காகவும் தமிழருக்காகவும் அவர்கள் செய்து முடித்திருக்கிற இந்த சாதனை  – பணி – தொண்டு – விதந்து போற்றுதற்குரியது.

அவர்கள் ஆற்றுகிற இந்தத் தமிழ் பணி பற்றிச் சொல்லுகின்ற போது இன்னொரு விடயத்தையும் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். ’ஈழமும் தமிழும்‘ என்ற பெயரில் நம்மிடையே இருந்து மறைந்து, ஒழிந்து போயிருந்த சித்திரக் கவித்திரட்டு, தமிழகத்துக்கு முன்னர் காசிச் செட்டியால் முதன் முதல் வெளியிடப்பட்ட மலையகராதி பற்றிய குறிப்புகள், அதி பழைய ஈழத்து நாடக நூலான தால விருட்சம் மற்றும் யாழ்ப்பாண மன்னர் நிறுவிய தமிழ் சங்கம் பற்றிய குறிப்புகள், ஈழத்து வானசாஸ்திர நூல், மற்றும் 1759ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பற்றிய தகவல்கள் போன்ற அரிய விடயங்களைத் தக்க ஆதாரங்களோடு வெளிக் கொணரும் பணியில் ஞானசேகரன் அவர்களது மகனார் பாலச்சந்திரன் ஈடு பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இங்கு ஞானசேகரன் அவர்களின் பாரியாரும் வந்திருக்கிறார். அவரும் இந்து சமயம் சார்ந்த சில நூல்களை எழுதி இருக்கிறார். அவைகள் எல்லாம் இங்கு பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. விரும்பியவர்கள் அவற்றையும் வாங்கிச் செல்லலாம்.

நாமே நம்முடய செல்வங்களைத் தெரியாதவர்களாகவே காலம் காலமாக இருந்து வந்திருக்கிறோம். இன்னும் இருக்கிறோம். தமிழ் தாத்தா உவேசா போற்றப்படுகிற அளவுக்கு அதேகாலத்தில் தரமான இலக்கியங்களைப் பதிப்புச் செய்த சி.வை. தாமோதரம் பிள்ளையை நாம் கண்டுகொள்வதில்லை. அகராதி முயற்சியில் தமிழகத்துக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த மலையகராதியையும் இலங்கையரான சைமன் காசிச் செட்டியையும் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்? ஈழத்தவர் பெயர் நம்மாலேயே ஒரு போதும் கண்டுகொள்ளப்படவோ முன்னிலைப்படுத்தப் படவோ இல்லை. சுவாமி விபுலானந்தரின் அநேக ஆக்கங்கள் இன்று நமக்குக் கிடைத்தில. இது கூட மிக அண்மைக்காலத்து நம் தாந்தோன்றித்தனம் தான்….உலகம் எல்லாம் ஓடி ஓடி தமிழ் தூது சென்ற தனிநாயகம் அடிகளாரை நாம் முழுவதுமாக மறந்து விட்டிருக்கிறோம். நாம் ஏன் இவ்வாறு வரலாற்றுப் பிரக்ஞையற்று இருந்தபடி, தமிழ் நாட்டவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவில்லை என்று கோஷம் எழுப்புகிறோம் என எனக்குப் புரியவில்லை. அந்தப் பின்னணியில் தான் ஞானம் ஞானசேகரன் அவர்களதும் அவர் தம் குடும்பத்தாரதும் பணி மெச்சத் தக்கதாக அமைகிறது. அவர்களது ஆவணப்படுத்தும் முயற்சிகளும், மறைந்து போனவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளும் பாராட்டத் தக்கது. காலத்தால் நின்று, தமிழின் பெருமை சொல்லும் சான்றாண்மை கொண்டது. இந்தப் பணிக்கான ஆதரவை வழங்க வேண்டியது நம் கடமை.

இறுதியாக ஒரு வார்த்தை! அது பொருளாதார வளம் பற்றியது. நம்மில் எத்தனையோ பேர் $5.00,  $10.00 டொலர்கள் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கவே பெரிதும் தயக்கம் காட்டுகிறோம். இவர்கள் தம் குடும்ப நிதிக் கருவூலத்தில் இருந்தே இப் புத்தகச் செலவுகளை பார்த்துக் கொண்டதாக அறிகிறேன். அதனை அங்கிருந்து இங்கு கொண்டுவர ஆகும் செலவோ இலங்கையின் பணப் பெறுமதியோடு ஒப்பிடுகையில் மிக அதிகம். இந்தப் புத்தகங்கள் எல்லாம் நம்மைத் தேடி வந்திருக்கின்றன. நான் உள்ளே வருகின்ற போது, மனம் முழுக்க எதிர்பார்ப்புகளோடு, பரிசுகள் கொண்டு வேலையால்  வரும் தந்தைக்காகக் காத்துக் கொண்டு நிற்கும் ஒரு மூன்றுவயதுக் குழந்தையின் நம்பிக்கைகளைப் போல; எதிர்பார்ப்புகளைப் போல; ஒவ்வொரு புத்தகங்களும் காத்திருப்பதைப் போல தோன்றியது.

இராமாயணம் என்ற ஓர் உயரிய காவியம் அரச ஆதரவு இல்லாத காரணத்தால் தேக்கமுற்று இருந்த போது  சடையப்பவள்ளல் செய்த உதவியால் அந்நூல் அரங்கேற்றம் கண்டது. அன்று சடையப்பவள்ளல் இருந்திரா விட்டால் இன்று நாம் சுவைத்துக் கொண்டாடும் கம்பராமாயணம் கிட்டி இருக்குமா என்பது சந்தேகம். அதற்கான நன்றியறிதலை கம்பன் கவியால் அலங்கரித்து சுமார் 10 இடங்களில் போற்றிப் போற்றி நெகிழ்கிறான். செல்வமோ செல்வாக்கோ அற்றிருந்த அறிவுநிதி பெருகப் பெற்றிருந்த கம்பகாவியம் எங்கு தோல்வியுற்றிருக்கும் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறந்த உதாரணம். கல்வியும் செல்வமும் தன்னைத் தான் நிரூபித்த இடம் அது.

அதனால் தான் பாரதியார், தன் பாஞ்சாலி சபத்ததை எழுதி விட்டு, அதனை இனி வர இருக்கும் வரகவிகளுக்குத், தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப் போகிற பிரபுக்களுக்கு, தன் பாஞ்சாலி சபதத்தைக் காணிக்கையாக்குகிறார்.

அத்தகைய இரண்டு பிரபுக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். ஒருவர் எக்சலண்ட் ஜுவலர்ஸ் ஸ்தாபகரும் உரிமையாளருமான திரு. சுந்தர ராசா அவர்கள். கேட்டவுடன் இன்முகத்தோடு வருகை தந்திருக்கும் வர்த்தகப் பிரமுகர்.

மற்றயவர், ஏழைகளின் நலிந்தோரின் நோயாளிகளின் வாழ்த்துக்களைத் தன் பெரு நிதியாகக் கொண்ட பிரமுகர். புத்தகங்களும் நூலகங்களும் நம் கருவூலங்கள் என்பதை அறிந்தவர். இருதய வைத்திய நிபுணர் திரு மனோமோகன் ஐயா அவர்கள்.

இப்பொழுது முதல் பிரதியை ஞானம் ஞானசேகரன் அவர்கள் அளிக்க எக்சலண்ட் ஜுவலர்ஸ் உரிமையாளர் திரு. சுந்தர ராசா அவர்களும் மனமோகன் ஐயா அவர்களும் பெற்றுக் கொள்வார்கள்.

நன்றி.

 

யசோதா.பத்மநாதன். 30.4.17.

மேலும் சில ஒளிப்படங்கள்….

ut20ut21ut22ut23ut24

Advertisements
 
2 Comments

Posted by on 03/05/2017 in Uncategorized

 

2 responses to “      புத்தக வெளியீடு குறித்த குறிப்பு….

 1. putthan

  03/05/2017 at 10:31 AM

  ஒரு நல்ல நிகழ்சியை தவறவிட்டிட்டேன்….இறுதி நேரத்தில்தான் நிகழ்சி நடப்பதாக அறிந்தேன்.

   
 2. uyarthinai

  04/05/2017 at 12:31 AM

  கருத்துத் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி புத்தன்.

  உங்களுக்கு அனுப்பிய ஒப்ரஸ் மின்னஞ்சல் முகவரி தகவலைச் சமர்ப்பிக்க முடியவில்லை எனத் திரும்பி விட்டது. வேறெந்த வழியிலும் உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இருந்தபோதும் ஏரீபீசி வானொலி மற்றும் தாயகம் வானொலியும் தமிழ்முரசு அவுஸ்திரேலியா இணையத்தளமும் நம் நிகழ்வைச் சொல்லியவண்ணம் இருந்தன.

  உங்கள் தொடர்பினை இப்போது பெற்றுக் கொண்டமையை இட்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நீங்கள் நம்மோடு இணைந்திருக்க வேண்டும். நன்றி.

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: