தாமரைச் செல்வி!
ஈழத்திரு நாடறிந்த எழுத்தாளர்.
ஈழத்தின் சாகித்திய விருதுக்கு பாத்தியதை பெற்றவர்.
வன்னி மண்ணின் இயல்பு நிலையை; மக்களை, மக்களின் வாழ்வியலை, கொண்டாட்டங்களை; துக்கத்தை;குணத்தை; குற்றங்களை மண்மணம் மாறா வகையில் அதன் ஆத்மாவை பேனா முனையில் எடுத்துக் காட்டியதில் அவருடய நாவல்களுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் அவர் எழுதிய சிறுகதைகளுக்கும் காத்திரமான பங்குண்டு.
அந்த வகையில் அவர் ஒரு சமூக வரலாற்றாளருமாவார்.
கலைஞர்கள் சமூகத்துக்கு கலைகளூடாக அளிக்கின்ற பங்களிப்புகள் மனித பண்புகளை; அவர்தம் சிந்தனை ஓட்டங்களை வரலாற்று வரட்சிகள் எதுவுமின்றி எழிலோடு எடுத்து வருபவை.
யுத்தத்துக்கு முன்பான வாழ்வியலை பின்னர் இரத்தமும் தசையுமாக அது இருந்த போதிலும் சரி – அதற்குள் இருந்த வாழ்வதற்கான உந்துதலை; போரின் வலிகளை, வாதைகளை, சின்னச் சின்ன சந்தோஷங்களை, போருக்குள்ளும் முளைவிடும் விடலைப் பருவ விஞ்ஞாபனங்களை வரலாற்றுப் பக்கங்களில் கலைத்துவமாகக் குறித்து வைத்ததில் தாமரைச் செல்விக்கு ஒரு காத்திரமான பக்கசார்பற்ற பக்கங்கள் உண்டு!
அவருடய சிறுகதைத்தொகுதி ஒன்று காலச் சுவடு பதிப்பகத்தினரால் 12.1.18 அன்று கவிஞர் சல்மாவின் தலைமையில் சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.
அவருக்கு உயர்திணை தன் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறது.