
அவுஸ். காட்டுத் தீ – 2019 கார்த்திகை
1. உன் பசி அடங்காதோ ஓகோர நெருப்பே
உன் பசி அடங்காதோ ஓகோர நெருப்பே
ஊரெல்லாம் எரிக்கின்றாய் உனக்கிலையோ பொறுப்பே
நன்புசித்தாய் வளங்களை நீ நடமிடவும் களமிதுவா
நாசங்களை விளைப்பதற்கு நாடிவந்த நாடிதுவா
அன்றொருநாள் கண்ணகிக்காய் மதுரையினை எரித்தாயாம்
அரசனாலே நீதிகெட்ட தலைநகரைச் சரித்தாயாம்
இன்றுவந்து ஆசைநாட்டில் ஏன்புகுந்தாய் சொல்லாயோ?
எழில்மிகுந்த ஊர்களெலாம் எரிகிறதே நில்லாயோ?
தருமபுரி எரியூட்டித் தருமத்தைத் தாமெரித்தார்
தகுமாசொல் கும்பகோணக் குழந்தைகளை நீயெரித்தாய்
அரும்புகின்ற முலைகளை அவிழுமுன்னர் அழித்தாயே
அக்கிரமம் நீயென்று அவனியெலாம் பழித்தாரே
விரும்புகிற ஈழத்தின் விழிநிகராம் வீரர்களை
வென்றிடவே இயலாமல் வீசினார்கள் கந்தகத்தை
திரும்புகின்ற பக்கமெல்லாம் மக்களையும் பொசுக்கினார்கள்
தீயபோர் நடத்தித்தான் விடுதலையை நசுக்கினார்கள்
அழகான பண்ணைவீடு அங்குபல கால்நடைகள்
ஆயிரமாம் வேலிகளில் பெருமரங்கள் விலங்கினங்கள்
மெழுகானது இப்போது மூண்டெழுந்து எரித்தாயே
முன்பொருநாள் கருப்புச்சனி நீயெம்மைக் கரித்தாயே
முழுதாகப் பத்தாண்டு முடிந்ததென வந்தாயோ
முடிந்தஉயிர் சிலநூறு நீகண்ணீர் சிந்தாயோ
பழுதாயின எம்வாழ்க்கை பழையகதை இனிவேண்டாம்
போதும் போதும் புறப்படுநீ எப்போதும் வரவேண்டாம்.
– கவிஞர். எந்திராஜ்.ரவிச்சந்திரன், பிறிஸ்பேர்ன், 17.11.2019 –
………………………………………………………………………………………………………………………..
2. காட்டுத்தீ
அடுக்களைத் தீயது அன்னம் தரும்
ஆலயத்துத் தீயது ஒளி தரும்
இதயத்துத் தீயது எழுச்சி தரும்
எதனையப்பா தந்திடுமிக் காட்டுத்தீ?
மும்மாரிமழை பொழிவதற்கே
முறைமுறையாய்க் காடு சமைத்தார்
ஏன் மாறிப் போனதிந்த இயற்கையது
எதனாலோ ஏற்றிவிட்டதிந்தக் காட்டுத்தீ?
நாடு அது மக்கள் வாழ
காடு அது மாக்கள் வாழ
வெந்தணலும் காடு புக
செத்து வீழ்வதன்றோ விலங்கினங்கள்
வேண்டாமே காட்டுத்தீ
தீதறியா திவ்யப் பொருள்
தீயதுவே தீண்டி விட்டால்
தீய்ந்துவிடும் போயதுவே
காய்ந்து விட்ட சருகெல்லாம்
காட்டினிலே
களையெடுக்க வந்ததிந்த
காட்டுத்தீ யதுவோ?
-கவிஞர். ஆறு.குமாரசெல்வம், சிட்னி, 18.11.2019 –
………………………………………………………………………………………………………
3. மகத்தான அதிசயம்
எண்திசையும் வெந்தணலை வீசிவளைத்து
நிற்கும் நடக்கும் பறக்கும் உயிரையெலாம்
ஆகுதியென அள்ளித்தின்று செமித்தபின்னும்
அடங்காப்பசியோடலையும் வெஞ்சாபமுனது.
ஏக்கர்களை எரித்தொழித்தபின்னும்
ஏக்கம் தீராது எரிந்துகொண்டிருக்கிறாய்…
மானுடர் வாழ்வைப் புசித்தபின்னும்
மையல் தீராது மாய்த்துக்கொண்டிருக்கிறாய்
ஓங்கியுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின்
தைலச்சாற்றின் கடும்மணத்தால் பிச்சியாகி..
உன்மத்தங்கொண்டு அலைகிறாய்.. சுழல்கிறாய்
கதிரையும் காற்றையும் துணைக்கழைத்து ஓலமிடுகிறாய்..
கானகத்தின் ஈமத்தைக் காவிவந்து
கண்ணைக் கரிக்கிறது கரிக்காற்று
சீர்கெட்டபுவிவெப்பம்பகர்ந்து
செவியோரம் சிரிக்கிறது கொடுங்கூற்று
மூச்சடைக்கும் வனக்காற்றிடை
மிதந்து வருகிறது பிணவாடை
வாதையிலுழலும் வனத்திடை
வாட்டிப்பொசுக்குகிறது வெங்கோடை
சூழ்ந்தெரியும்உன் சுடுதழல்களால்
வெந்துகருகிய கானுயிர்கள் ஒரு புறம்
வனமிடை வாழ்வே வாழ்வென வாழ்ந்தின்று
இல்லும் பொருளும் இழந்தோரொரு புறம்..
பொசுக்கென்று பற்றி புலனுணருமுன்னே
பொசுக்கிப் போக்கிய உயிர்களொரு புறம்..
உயிர்ப்பணயம் வைத்து ஓயப் பொழுதின்றி
தீயணைக்கப் போராடும் திடமனங்களொரு புறம்..
வரலாறு காணா இடரிதுவென்றுணர்ந்து
வலிந்துதுவி நல்கும் நல்லுள்ளங்கள் ஒருபுறம்..
இவர்க்கு நடுவே தாம் வாழ்கின்றன
இச்சைக்காய் தீவளர்க்கும் தீக்குணமும் ஒரு புறம்..
கை நோக கோல் கடைந்துனைக்கொணரும்
அந்நாள் போன்று ஆதிச்சங்கடமில்லை இன்று.
தினவெடுத்தக் கரம் உரசுமொரு தீக்குச்சி
நொடியில் முடித்துவைத்துவிடுகிறது
நெடுவனங்களின் பெருவாழ்வை.
அப்பாவி உயிர்களின் அரும்வாழ்வை..
வேள்வித்தீயென எரிந்துகொண்டே
கேள்வித்தீயினை எறிகிறாய்…
எரியும் தவறு எனதென்றால்
எரிக்கும் தவறு உமதன்றோ?
வாழும் உலகைப் பாழாக்கி
வஞ்சகர் செய்யும் வேலையன்றோ?
பூமிப்பந்தின் வெப்பமுயர்த்தி
பருவம் மாற்றும் பாவமன்றோ..
போதாக்குறைக்கு பொறுப்பிலிகளின்
பேதைமையும் பெருங்காரணமன்றோவென
மூண்டெழும்பும் கேள்வியினுள்ளிருந்து
நீண்டெழும்பித் தீண்டுகிறது அறத்தின் சுவாலை.
கள்ளமௌனம்காத்து தவிர்க்கிறோம் பதிலை.
வனம் கனலுதலென்பது வரலாற்றில் புதிதல்ல…
தானே எரியும் வனம் தானே அணையும்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுத்தாலும் ஏற்றாலும் மாறா நியதி..
சிலேட்டுப்பலகையில் அழித்தெழுதும் சிறுமியென.
வனமழித்து வனமுயிர்த்தலுன் வாடிக்கை
பச்சாதாபமின்றி பற்றியழித்துப் பார்ப்பதுன் வேடிக்கை.
அழிகின்ற வனத்தின் சாம்பலுரம்
எழுகின்ற வனத்திற்கு அடியுரம்
எல்லாமறிந்தும் ஏனோ மனக்கலக்கம்
எதார்த்தம் உணர்ந்தும் எழும் மதிமயக்கம்
எரிந்தடங்கிய பொழுதொன்றில்
என்றாவது விழும் வான்துளியொன்றில்
பெரு நம்பிக்கையோடு எழக்கூடும்
நாளைய தருவின் கருக்கூட்டம்.
அழித்தொழித்த பின்னும் முளைவிட்டு தளிர்விட்டு
அடுத்தொரு வனம் வளரும் அதிசயமே
மண்ணுயிரை வாழ்விக்கும் மகத்தான அதிசயம்.
– கவிஞை. கீதமஞ்சரி. மதிவாணன், சிட்னி, 24.11.2019 –
…………………………………………………………………………………………….
காட்டுத்தீ
ஓர் வறண்ட நாளில்
ஒளிரும் சிவப்பில்
நடுங்கும் கண்களும் கூசும் வண்ணம்
மிகச்சிறிய தீப்பொறியொன்று
ஏணியின்றி வானத்தில் ஏறியது
இதுவரை உதவிய
பொல்லாத காற்றும்
நெருப்பைத் தனக்குள் வளைத்துப்போட
குதிரையைவிட அதிகமாய்ப் பாய்ந்து
போட்டி போடுது பகைவனாய் நின்று
மண்ணின் புதையல்கள்
வாழ்க்கையின் சேமிப்பை
வேகமாக இழந்துகொண்டிருந்தன
மிருகங்கள் பறவைகள்
மற்றும் மரங்களின் ஓலங்கள்
உதவியைநாடி ஒன்றாக ஒலித்தன
வானத்தின் மாடத்தில்
எந்த நட்சத்திரமும் பிரகாசிக்கவில்லை
பெரிய பறவைகள்
பாதுகாப்பை நோக்கி மேலே உயர
பயமறியாத சிறிய பறவைகள்
கீழே விவாதித்துக் கொண்டிருந்தன
ஒரு மனித முனகல்
குரங்கின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது
ஒரு தாடி வைச்ச குவாலா
நிர்வாணப்பட்டு நிற்கதியாய் நின்றது
கடுமையான வெப்பம்
காலில் பரவ
சிறு முயலின் பாய்ச்சல்
மரணத்தை நோக்கி மெதுவாகச் சென்றது
உடல் உழைப்பில்
சற்று ஓய்வெடுத்த
கால்நடை ஒவ்வொன்றும்
காட்டுத்தனமாக சவாரி செய்தன
எரியும் தீயில்
செயலிழந்த சிறிய பிஞ்சுகள்
வலியால் கதறித் துடித்தன
இன்னும் காடு எரிகிறது
இன்னும் வெப்பம் உலை போல் கொதிக்கிறது
நீண்ட நெடிய மரங்களே
உங்கள் பாதங்கள் வேரூன்றிய போதும்
இரக்கமற்ற நெருப்பிற்குத் தலைவணங்குங்கள்
சிறிய கிளைகளே
உயிருக்கு மன்றாடி
உங்கள் கைகளை உயர்த்துங்கள்
நாளைய விதைகளே
நெருப்பால் உடைபடும் வரை
செயலற்ற நிலையில் மறைந்திருங்கள்
எந்தக் குளிர்ந்த படுக்கையிலும்
இந்த நெருப்பு படுத்துக் கொள்ளாது
என் இதயம்
மரங்களுக்கும் அப்பால் செல்கிறது
கருப்பு உடை தரித்து
புகைபோக்கிபோல் தனித்து நிற்கும்
எரிந்த மரங்கள் வழியே
என் தேசத்தைப் பார்க்கிறேன்
சேகரிப்புக்காய் காத்திருந்த
என் உறவுகளின்
உடல் வரிசையைப் பார்க்கிறேன்
இன்னும் சில மரணங்களும்
உயிர்களும் எஞ்சியுள்ளன
இப்படியே போனால்
எத்தனை பேர் மிஞ்சுவோம்
இயற்கையைக் காயப்படுத்தி
அணுசக்தி யுத்தம் பேசும்
புத்திசாலிக் கூட்டமே
அழிவு என்பது
நாம் கற்றுக்கொண்ட ஓர் வாழ்க்கை முறை
எரிந்தவற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்
தடவிக் கொடுப்போம்
தப்பித்த வேர்கள் மீண்டும் முளைக்கட்டும்
இயற்கை நன்றியுடன் சிரிக்கட்டும்
கவிஞை செளந்தரி. கணேசன், சிட்னி, 28.11.2019
…………………………………………………………………………………………………………………………………..