4.1.2020
காட்டுத்தீ தன் அகோர நாக்குகளால் விலங்குகள், ஊர்வன, பறப்பன, என வனவாழ் உயிரினங்களையும் உயிர்களுக்கு உணவும் அடைக்கலமும் கொடுத்த படி நீண்டுயர்ந்து; தழைத்து;பல வருடக்கணக்காக வளர்ந்திருந்த பச்சை மரங்களையும் புல்வெளிகளையும் வீடுகள், கட்டிடங்கள், பண்ணைகள், அப்பிள் தோட்டங்கள், முந்திரிகைத் தோட்டங்கள், மனிதர்களுடய வளர்ப்புப் பிராணிகளாகிய ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களையும் கொன்றொழித்தும் அடங்க மறுத்து பரவிக்கொண்டிருக்கிறது தீ.
இப்போதும்….
”ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி 1ம் திகதிவரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட்டுள்ளது.
இதுவரை காட்டுத்தீ காரணமாக சுமார் 5 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பு எரிவடைந்துள்ள பின்னணியில் தமது கணிப்பின்படி சுமார் 480 மில்லியன் பறவைகள், பாலூட்டிகள் , ஊர்வன என பலதரப்பட்ட விலங்குகள் பலியாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.” (நன்றி; SBS Tamil)
இன்றுவரை நாட்டின் பொருளாதாரத்தில் 200 கோடி டொலர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ள பின்னணியில் பொது மக்களின் உதவியும் ஒத்துழைப்பும் பிரமிக்கத் தக்க அளவில் இருந்து வருகிறது. நாட்டு மக்கள் பொருளாகவும் பணமாகவும் தங்க இடமாகவும் காட்டுத்தீ முனைகளில் போராடும் தொண்டர்களாகவும் தம் மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு 48 செல்சியஸ் உயர் வெப்பநிலையை எட்டியது இதுவரை யாரும் அனுபவித்து உணராதது. காட்டுத் தீயின் புகைமூட்டங்களால் நாடே மூடப்பட்டிருப்பதும் இதுவரை யாரும் காணாதது.
இத்தகைய பின்னணியில் பல சமூக அமைப்புகளும் தம் நிதிசேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய கம்பன் கழகம் தமிழ் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரு இராப்போசன விருந்து நிதிசேகரிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஒருவருக்கு $25.00 வீதம் நாம் பத்துப் பேர் கொண்ட மேசை ஒன்றினை பதிவு செய்திருந்தோம். மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் நம் சிறிய அமைப்பான ‘உயர்திணை’ $ 605.00 களைக் கையளித்து தன் சமூகப்பங்களிப்பை மனநிறைவோடு செலுத்தி இருந்தது.
கேட்ட உடனேயே தாம் சார்ந்த தொழில் நிறுவனங்களூடாக தம் பங்களிப்பை ஏற்கனவே செலுத்தி இருந்த போதும், நிச்சயமாக தமிழர் சார்பாக இங்கும் பங்களிக்க வேண்டும் என்று நிதிப்பங்களிப்புச் செய்தோர் விபரம் கீழ் வருமாறு.
1.யசோதா.பத்மநாதன் குடும்பம் – $ 300.00
2. இந்துமதி. ஸ்ரீநிவாசன் – $ 100.00
3.திரு.திருமதி. ரவி.பானு – $ 50.00
4. திரு. குமாரசெல்வம் – $ 50.00
5. சுலோச்சனா. – $ 30.00
5. கீதா.மதிவாணன் – $ 25.00
6.பெயர்குறிப்பிட விரும்பாத
நலன் விரும்பி – $ 50.00
மனதுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த இந் நிகழ்வு நடைபெற்ற அன்று அங்கு நிலவிய வெப்பநிலை 47 செல்ஸியஸ். ஆகையினால் அன்று நம் அமைப்பின் சார்பாக பங்குபற்றி இருந்தோர் ரவி, பானு, இந்துமதி, சுலோச்சனா, யசோதா, யசோதாவினுடய தாயார் கமலா ஆகிய ஆறுபேர். $ 525.00 ல் இருந்து $ 555.00 ஆக உயர்ந்து பின்னர் மேலும் $ 50.00 இணைத்து $ 605.00 ஆக அதனை முழுமையான நிதியாக்கிய இந்துமதி. ஸ்ரீநிவாசன் சொன்ன ஒரு வாசகம் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கது.
‘ இந் நாட்டின் அரச கொடுப்பனவுகளில் வாழும் மக்களுக்கு இந் நாட்டரசு ஒரு நாளேனும் தாமதமாக அவர்களுக்கான பணத்தை வைப்பிலிடத் தாமதப்படுத்தியதில்லை. மிக அபூர்வமாக கொடுப்பனவு நாளன்று பொதுவிடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முதல் நாளே பணம் அவர்களுடய வங்கிக் கணக்கிலக்கத்திற்குச் சென்று சேர்ந்துவிடும். இந்த அரசுக்கும்; எமக்கு அடைக்கலம் தந்து நம்மை கெளரவமாக வாழ வைத்திருக்கும் இந் நாட்டுக்கும்; நம் மக்களுக்கும்; இழப்பும் துக்கமும் சவால்களும் சூழ்ந்திருக்கும் இப்புதுவருட நாளில் நாம் எவ்வாறு கைகளைக்கட்டிக் கொண்டு பேசாதிருப்பது?’ – என்று கேட்டார்.
உண்மைதான்.
நாம் நம் பங்களிப்பைச் செவ்வனே ஆற்றி இருக்கிறோம் என்பது பெருத்த மனநிறைவைத் தருவது.
இச் சந்தர்ப்பத்தில் கேட்டவுடனேயே நிதிப்பங்களிப்பை வழங்கிய மனிதாபிமான உயர்திணையின் உள்ளங்களுக்கு மனம் கனிந்த நன்றிகள்.
பிற்குறிப்பு:
* சுமார் 25ற்கு மேற்பட்ட தமிழ் சமூக அமைப்புகள் இந் நிவாரண நிதி ஒன்றுகூடலில் பங்குபற்றி இருந்தன.
* மொத்தமாக சேர்ந்த நிதி / அன்றய தினம் தீயணைப்புப் படை அதிகாரிகளிடம் கையளித்த நிதி $ 9001.00
* மெடிஎய்ட் அமைப்பு இவர்களோடு இணைந்து கொடுத்த நிதி $ 10,000.00
* மொத்தமாகக் கையளிக்கப்பட்ட நிதி $ 19,001.00
* வேறும் சில பெரிய தமிழ் அமைப்புகள் தனிப்பட்ட ரீதியிலும் தம் நிதிப் பங்களிப்பைச் செலுத்தி இருப்பதை அறிய முடிகிறது.
…………………………………………………..
இருந்த போதும் ஒரு தமிழ் கேளிக்கை நிகழ்ச்சிக்கு சுமார் $ 125.00 – $150.00 களை மிகச் சாதாரணமாகச் செலுத்தி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் தமிழர்களில் பலர் இங்கு கலந்து கொள்ளவில்லை என்பதும்; கலந்து கொண்டோரில் பலரும் கூட. மிகக் குறைந்த தொகையான $ 25.00 மாத்திரம் செலுத்தியுள்ளனர் என்பதும்; சேர்ந்த நிதி $ 10,000.00 கூட எட்டவில்லை என்பதும்; தமிழர் தம் மனநிலையை காட்டுவதாக இருந்தது என்பதையும் ஒரு பதிவாக இங்கு நிச்சயம் வருத்தத்தோடு குறிப்பிட்டாக வேண்டும்.