அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.
இம்மாதம் அதாவது ஜனவரி மாதத்துக்கான கவிதைத் தலைப்பாக ’மனித நேயம்’ என்பதை கவிஞர். ஆறு.குமாரசெல்வம் அவர்கள் பரிந்துரைத்திருந்தார்கள். அதற்கு, பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார். பாரதி அவர்களின் கவிதை மாத்திரம் வரக் கிட்டியது. கூடவே தைப் பொங்கலோடு கவிஞர் ஆறு. குமாரசெல்வம் அவர்களுடயதும்…இரண்டையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனினும், தாமதமாக அதனை இங்கு பகிர்ந்து கொள்வதை இட்டு மனம் வருந்துகிறேன்.
மனித நேயம்
பல் வைத்திய கலாநிதி இளமுருகனார்பாரதி.
உள்ளமதிற் கிளர்த்தெழும்நற் குணங்கள்பல இணைந்த
உயர்ந்ததனிப் பெருங்குணமே மனிதநேயம் அன்றோ?
வள்ளுவனார் குறள்கொண்டு மனிதநேயம் உரைத்தார்
மாதவத்துத் திருமூலர் மந்திரமாய்த் தந்தார்
தெள்ளுதமிழ்த் திருமுறைகள் அள்ளியள்ளி முகிழ்த்தன
சித்தர்கள் பலர்தோன்றிச் சிறப்பாக வளர்த்தனர்
கொள்ளைபோகா ததனைவருஞ் சந்ததியர் வளர்க்கக்
குழந்தைகளை வழிநடத்தல் பெற்றோர்கடன் அன்றோ?
ஆதரவாய் உணவூட்டி வளர்த்துவரும் வேளை
அன்பதனின் இலக்கணத்தைப் பூரணமாய் விளக்கி
சாதகமாய் நற்பழக்க வழக்கமெலாம் பழக்கி
நல்லதொரு குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்க்க
பாதகமாயப்; பிறர்மனதை வருத்திடாநற் பண்பொடு
பரந்தமனப் பான்மைமிகு பாலகனாய் மலர
மாதவத்தால் பிறந்திட்ட பிள்ளைதானோ வென்று
மனிதநேயம் மிக்கோனெனப் பார்ப்பவர்வாழ்த் திடுவர்!
ஆறறிவு பெற்றிட்ட மனிதர்கள் சிலரில்
அரியபெரும் மனிதநேயம் வற்றிமறைந் ததாலே
வீறுகொண்டு விலங்குகள்போல் வெறித்தனம்மி குத்து
வேட்டையாடி மனிதர்களைக் கொல்பவரும் உள்ளார்
கூறுபோடச் சாதிமத பிரிவினையைத் தூண்டிக்
குறிக்கோளாய்ச்; சீர்கேட்டை வளர்ப்பவரும் உள்ளார்
பேறுகளை வென்றெடுக்கப் பெரும்பாவம் செய்யும்
பேடிகளாய்ப் பேய்களைப்போல் வாழ்பவரும் உள்ளார்.
இறைவனவன் மாந்தர்களைப் படைத்திட்ட போது
ஈடில்லா மனிதநேய நற்பண்பைச் சேர்த்து
நிறைவாகக் கொடுத்திருக்கச் சிலரதற்கு மேலே
நிரைநிரையாய்த் தீயகுணப் போர்வைகளைப் போர்த்துக்
கறையுறையாய்த் தம்மனத்தைத் துருப்பிடிக்க வைத்துக்
காலமெல்லாம் புனிதமிகு மனிதநேயப் பண்பைச்
சிறைவைத்து வாழ்கின்றார் சிந்தையறிந் திரங்கிடாச்
சிந்தையராற் சமூகமைதி சிதைந்துபோகு தையா!
பரம்பொருளின்; படைப்பினிலே உயர்ந்திட்ட இனமாய்ப்
பழந்தமிழன் பண்பாட்டில் மலர்ந்ததொரு காலம்!
கரங்கூப்பிப் பெரியோரைச்; சிரந்தாழ்த்தி வணங்கிக்
காத்திருந்து வருவிருந்து ஓம்பிநலங் காத்து
வரமெனவே மனிதநேயம் தம்முயிரிற் கலந்து
வாழ்ந்துயர்ந்த பெற்றியெலாம் உரைத்திட்டாற் போமோ?
தரங்கெட்டுப் போகாது புலம்பெயரந்த நாட்டில்
தமிழினத்தின் தகைமைகளைக்; காப்பதெங்கள் கடனே!
29.01.2020
…………………………………………………………………………………..
பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் ஈழத்துப் புலவர் பரம்பரையை இலங்கச்செய்யத் தோன்றிய நவாலியூர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களின் மூத்த புதல்வர் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வன்; என்பது குறிப்பிடத்தக்கது.
…………………………………………………………………….
2.மனித நேயம்
கவிஞர். ஆறு.குமாரசெல்வம்
மகிழ்ச்சி பொங்க வேண்டும்
மனதில் எழுச்சி பொங்க வேண்டும்,\.
மலர்ச்சி பொங்க வேண்டும்
வாழ்வில் கிளர்ச்சி பொங்க வேண்டும்!
உயர்ச்சி பொங்க வேண்டும்
சிந்தையில் உணர்ச்சி பொங்க வேண்டும்
முயற்சி பொங்க வேண்டும்
மலரின் முகிழ்ச்சி பொங்க வேண்டும்
மனித நேயம் பொங்க வேண்டும்
விவசாயி / மாக்கள் மகிழும்
நாளாய் பொங்க வேண்டும்.
…………..
15.1.2020 கவிஞர். ஆறு.குமார செல்வம்.