மழை பொழிந்தது!
நீண்ட பெரும் காத்திருப்புக்குப் பின் மழை சோ எனப் பெய்தது. நிலம் குளிர்ந்தது. மனம் நிறைந்தது.
இரண்டு கவிஞர்கள் அதனை தம் கவிக் கிண்ணங்களில் ஏந்தி இங்கு தருகிறார்கள்.
1. கவிஞர். பாமதி சோமசேகரம்
ஒரே ஒரு மழை
லட்சம் மழைத்துளிகள்
பறக்கும் பந்து போல அசுரக்காற்று
பெருத்த கண்களையொத்த
நீர்த்துளிகள்.
யன்னல்கள் பூத்தகண்கள்
வாஞ்சையாய் அழைக்கின்றன
வேர்த்துக் கிடக்கும் கண்கள் அவை.
அழமறுக்கும் கண்கள் அவை.
மழைக்குள் கோபம்.
காடுகள் தீப்பற்றி எரிந்த கோபம்
காற்று மரங்களின் தலையை
பிடித்து கோரமாய் ஆட்டியது.
எங்கே பிஞ்சுப் பறவைகள்
என்றழுதது…..
பற்களை நறநறவென்று நெரித்து
வீடுகளை முட்டி மோதியது.
இறுதியாக அது எதையோ பேச
விரும்புகிறது.
மனிதர்கள் எல்லோரும் ஒளிந்து
கொண்டார்கள் கோழைகள்…
வீட்டின் கூரைகள்
மூடப்பட்ட சவப் பெட்டிகள் போல
மழையில் மெளனமாய் நனைந்தன.
நான் மட்டும் எப்படி வெளியே வந்தேன்?
இப்போது மழையானேன்?
ஏரிகளின் எல்லைகளை உடைத்து
ஓடினேன்..
மண்ணைத் தன்னில்
சுமந்து கொண்டோடிய
வெள்ளத்திடம் மறக்காமல் கேட்டேன்
இப்போது இது யார் தேசமென்று…
வாகனங்கள் வரும் தெருக்களில்
நின்று கைகளை அசைத்து
நர்த்தனமாடினேன்
அடர்காட்டின் நிலங்களை
மூடியிருந்த
வேர்களை விரல்களால்
தொட்டு ஸ்பரிசித்தேன்.
பறக்கும் மழைத்துளிகளின்
இறகுகளை முத்தமிட்டேன்…
மழை பாடியது காற்றின் பாடலை
அலைகளின் பாடும் அதே ஓசை.
வெள்ளைக் கடலொன்று
அலைகளை எறிந்து விட்டு காற்றில்
ஏறி மிதக்கிறது
மழையென்றே!
எங்கு ஒழிந்து கொண்டாய்?
என் நூற்றாண்டுக் காதலனே,
வெளியே வா!
காற்றில் மிதக்கின்ற கடல் போல
நாமும் மழையில் நனைவோம்.
மழை பாடும்
பிரபஞ்ச ஆத்மாவின் பாடலை
சேர்ந்தே இசைப்போம்.
மழைத்துளிகளால் நனைந்த
நம் உடல்களை பூமியின் நிலத்தில்
விதைப்போம்.
நாளை
நானும் நீயும் ஒரு பச்சை
வனமாவோம்
பறவைகளைச் சுமப்போம்.
காட்டுத்தீயை விழுங்குவோம்.
செந்தீயில் மறுபடியும் மறுபடியும்
பல நிலங்களாக வானத்தைப்
பார்க்க உயிர்ப்போம்.
பூமியின் மண்ணை எம் மூச்சில்
சுமப்போம்….
இப்போதே பறந்து வா என்னுடன்….
கவிஞை. பாமதி சோமசேகரம் – 9.2.2020.
……………………………………………………………………………..
மழையே தொடர்வாய்
கவிஞர். நந்திவர்மன்
மழையே பொழிவாய் மனது மகிழ
அழைத்தோம் வந்தாய் அன்பே நன்றி
அழிவைத் தடுக்கும் ஆற்றல் உடையாய்
குழைகள் தளிர்க்கக் கூடப் பெய்வாய்! (1)
காதல் இல்லாக் கணவன் போலே
வாதஞ் செய்து வாராதிருந்தாய்
பேதங் கொண்டாய் பின்னை வந்த போதும்
உடனே போனாய் ஓடி! (2)
எங்கே காணோம் என்றே தேடி
மங்கும் மனமாய் மகிழ்ச்சி இழந்தோம்
பங்கம் தீர பச்சை எங்கும்
பொங்கும் வரைக்கும் பொழிந்து போவாய்! (3)
பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்
உள்ளம் குதிக்க ஒலிக்கும் இசையாய்
வெள்ளம் போடும் வேக மழையாய்
வள்ளல் போலே வாரி வழங்காய்! (4)
எந்தாய் போலே இரக்கம் கொண்டு
வந்தாய், இன்றுன் வரவால் மகிழ்ந்தோம்
தந்தாய் தண்ணீர் தழைக்க நாங்கள்
எந்தை பெருமான் ஈசன் அருளே! (5)
கவிஞர். த. நந்திவர்மன், தை 2020.