2020 உலகுக்கு அறிமுகப்படுத்திய; இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடிய கிருமி கொரோனா. coronavirus அல்லது covid 19 pandemic என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லிக் கிருமி உலகத்தையே முடக்கிப் போட்டுள்ளது.
கடந்த வருட இறுதியில் சீனாவில் உள்ள Wuhan மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த உயிர்கொல்லிக் கிருமி இன்று மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. உலகளவில் 2,704,676 பேர் பாதிக்கப்பட்டும் 738,032 பேர் குணமாகியும் 190,549 பேர் இறந்தும் போயுள்ளனர். ( 22.4.2020 திகதிக் கணக்குப் படி)
கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு உலகம் போராடுகிறது.
இவ் வருட ஆரம்பத்தில் நடந்த அனர்த்தமான காட்டுத்தீயில் இருந்து அவுஸ்திரேலியா தன்னை சுதாகரித்துக் கொள்ளுவதற்கிடையில் இங்கும் கொரோனா வைரசின் பரவல் நாட்டை முடக்கிப் போட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து போயுள்ளனர். அநேக வியாபாரத் தலங்கள் மூடப்பட்டு விட்டன. பாடசாலைகள் இயங்குவது கணனி வழியிலானதாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் அநேகர் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். பொது கேளிக்கைகள், கடற்கரைகள், இறப்பு வீடுகள், திருமணங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வீடுகளுக்குள் திடீரென முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களின் இந்த எதிர்பாராத முடக்க நிலையும் நிதி நிலவரம் போன்ற இன்னோரன்ன காரணங்களும் மக்களை மனதளவில் பெருமளவில் பாதிக்க, அதன் காரணமாக மதுபாவனை அதிகரிப்பும் குடும்பவன்முறைகளும் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கணக்குச் சொல்கிறது. அந்த நிலையை நீக்குவதற்காக அரசு மேலதிகமாக பல இலட்சங்களை ஒதுக்கி இருக்கிறது. ஆஸ்பத்திரிகளோ நோயாளிகளால் நிறைந்து போயுள்ளன. 22.4.2020 கணக்கெடுப்பின் படி அவுஸ்திரேலியாவில் 6,667 பேருக்கு இந் நோய் அடையாளம் காணப்பட்டும் அதில் 5,095 பேர் குணமாகியும் 76 பேர் இறந்தும் போயுள்ளனர்.
தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாதிருக்கும் இன்றய நிலையில் அதன் துரித பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் வேண்டி Social Isalation என்னும் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
அது பல்வேறு விதமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நன்மையும் தீமையும்; குழப்பமும் பிரச்சினைகளும் சட்ட அமைவுகளும் தீர்வுகளுமாக சமூகம் முன் எப்போதும் நம் வாழ்நாளில் சந்தித்திருக்காத புதிதான நிலை ஒன்றை எட்டி இருக்கிறது.
அது குறித்து நம் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கருத்தோவியங்களை; கவிபேழைகளை; உணர்வில் தோய்ந்த கான பெட்டகங்களை; உயர்திணை அவுஸ்திரேலிய தமிழ் கவிஞர்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக இங்கு ஆவணப்படுத்த விளைகிறது.
அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!
உங்கள் கவிமழைகளை இம்மாத இறுதிக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் அத்தனை பேரின் கவிதைகளும் அதன் திகதி வாரியாக அடுத்த மாத ஆரம்பத்தில் இதே தளத்தில் நிச்சயமாகப் பிரசுரமாகும்.
காலப்போக்கில் இதுவரை வெளிவந்தவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதாஆவணமாக ஆக்குவது எங்கள் நோக்கமாகும்.