RSS

Monthly Archives: May 2020

கொரோனா வைரஸ் குறித்த கவிதைகள்

    1. கொரோனா

    கவிஞர். எ.இரவிச் சந்திரன், பிறிஸ்பேன். ( 15.03.2020 )

உலகத்தையே நடுங்க வைக்குது கொரோனா

உடைத்தெல்லாத் தடையும் தாண்டி வரானாம்

கலகத்தையே காணுது பார் அங்காடி

காணோம்’அந்தக் காகிதமே’ எங்கேடி

விலகியோடு எங்கும் கண்டால் தும்மலே

விபரீதம் என்ன ஆகுமோ தெரியல

நிலையில்லாத வாழ்க்கை என்று உணர்த்துதே

நிதமும் வாழு அன்பு ஒன்றே உயர்ந்ததே.

  கவிஞர். எ. இரவிச் சந்திரன், பிறிஸ்பேன்.

  15.03.2020

………………………………………………

 

2. கொல்லுங் கொரோனா

                கவிஞர்.த. நந்தி வர்மன், ( 23.3.2020.)

கிருமி கொரோனா எம்மைத் தாக்கக்

கிலிதான் பிடித்து வாழ்கின்றோம்

இருமல் வந்து இறக்கும் நோயால்

இதயம் கலங்கி நிற்கின்றோம்

செருமல் கேட்டால் கூட நாங்கள்

செத்தோம் என்றே நினைக்கின்றோம்

வருமோ வருமோ என்றே பயந்து

வாழ்வை இழந்து நிற்கின்றோம். (1)

 

எதனால் இந்த நிலைமை எமக்கு

என்றே எண்ணிப் பார்த்தோமா?

முதலில் அதனை நினைத்துப் பார்த்து

முழுதாய் வாழ முனைவோமா?

இதயந் தன்னில் அதனை ஏற்று

இனிதாய் வாழ நினைப்போமா?

அதனை இல்லை என்றே மறுத்து

அவனி முழுதும் அழிப்போமா? (2)

 

மனித நேயங் கொண்டு வாழ

மறுத்து பகையை வளர்த்தோம் நாம்!

புனிதர் போல் மதத்தைச் சொல்லி

புவியில் கொலைகள் செய்தோம் நாம்!

இனிதாம் உலகில் இயற்கைப் பொருளை

எமதே என்றே அழித்தோம் நாம்!

மனதில் பொறாமை கோபம் ஆசை

மறுத்து வாழ மறந்தோம் நாம்! (3)

 

இறைவன் தந்த இந்த உலகில்

இயல்பை மாற்ற நினைத்தோம் நாம்!

குறைகள் வளர்ந்து குணங்கள் இழந்து

கொள்கை இன்றி வாழ்ந்தோம் நாம்!

துறைகள் தோறும் வேட்கையாலே

முறைகள் மாற்றத் துணிந்தோம் நாம்!

இறைவன் கோபம் கொண்டால் எல்லாம்

பொடிதான் என்றே மறந்தோம் நாம்!. (4)

 

துன்பந் தொலைக்கும் வழியே இன்றி

துவண்டு நிற்கும் மனிதர்காள்!

முன்னர் வாழ்ந்த வாழ்வில் மாற்றம்

முடிவாய் காண முயல்வீரோ?

இன்பவேட்கை பகைமை வளர்த்து

இயற்கை அழித்து வாழ்வீரோ?

அன்பை வளர்த்து ஆசை அறுத்து

அகிலங் காத்து வாழ்வீரோ? (5)

கவிஞர்.த. நந்தி வர்மன்,

23.3.2020.

…………………………………………………………

  3. கவிஞர்: மது.எமில் ( 30.3.2020.)

அது இங்கே வந்தது

எது எங்கே போனது

இது இதுதான்…

 

யாருக்கும் காட்ட முடியவில்லை

யாராலும் தொட முடியவில்லை

யாமார்க்கும் குடியல்லோம் என்ற

மனிதனுக்கு யமனாகி வந்ததன்றோ?

 

கைகளால் உழைத்தார்

சிந்திய வியர்வையை

கைகளால் துடைத்தார்

கையெடுத்துக் கும்பிட்டு

கைகளால் பரிமாரினார்

 

என் கையே எனக்குதவி

என்றிருந்த நாலை மறந்து…

தன் கைநீட்டி நின்றார்

விஞ்ஞானத்திடம்…

 

இன்று கைகளைக் கழுவுகின்றார்

தாம் செய்த தவறை உணர்ந்தவராய்…

* இதுவும் கடந்து போகும்

 

இனிவரும் தலைமுரையும்

புதுயுகம் படைக்கும்

அங்கே கர்வம்

கண்மூடிக் கொள்ளும்.

கவிஞர். மது. எமில் 

30.3.2020.

…………………………………….

                      4. அவுஸ்திரேலியாவின் நிலை

                      கவிஞர்.ஆறு.குமாரசெல்வம் ( 22.4.2020.)

தீயில் கொல்வதும் – கொரோனா

நோயில் கொல்வதும்

தெய்வத்தின் செயலோ?

 

தேதியாய் தேய்ந்து

தேனடையாய் காய்ந்தோரை

தீய்ப்பதும் மாய்ப்பதும்

முறையோ?

 

இறைவா என்றே

இடைவிடாது நின்றே

இசைத்தார் நன்றே ஆயினும்

 

நோயும் மென்றே

நொடியில் தின்றே

நோகடிக்குது கொன்றே!

 

உலகின் நிலை

 

முதுமையைப் பாரமென்பார்

புதுமையைப் பாரடா பாரிலே

கதையைப் பொய்யாக்குவோம்

கரோனா கிருமியை இல்லாதாக்குவோம்!

 

கட்டி அணைப்பதும் இதழை

ஒட்டி இழுப்பதும்

தட்டிப்பறிக்கும் உயிரை

தவிர்ப்போம் காப்போம் உயிர்ப்பயிரை!

 

அளவுக்கு மிஞ்சினால்

அமிர்தமும் நஞ்சு

அதை மறக்கும் போது தான்

அதிகம் துடிக்கிறது நெஞ்சு

 

ஆளைக் கொல்லுதாம் கிருமி மனம்

அவதிக்குள்ளாகுது பொருமி

வேளைக்குப் பலரைக் கொன்று

வேட்கை தணியுமோ தின்று?

 

மனித சதியோ? அன்றிது

மகேசன் இட்ட விதியோ?

புனிதம் போற்றும் புவியெங்கும்

மனிதர் நோயால் மாய்வது முறையோ?

 

ஓரணியில் உலகோ ரெல்லாம்

ஒன்றிணைந்தால் வெல்லலாம்

பேரணியைத் தவிர்த்து நின்று நோயற்ற

பெருவாழ்வை நாம் வாழலாம்!

 

வாழும்வரை நல்லவராய் நின்று

வாழும் மனிதகுணம் உள்ளவராய்

நாளும் நன்மை செய்திடுவோம்

நற்கதி நாமும் எய்திடுவோம்.

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

22.4.2020.

………………………………………..

5. பாமதி. சோமசேகரம் ( 25.4.2020.)

தன் கண்களாலே காணமுடியாத

ஒரு கொலையாளியிடமிருந்து

எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது?

 

ஒருமனிதன் நீண்ட நேரம் அமர்ந்து

சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

அவசரமாக வீதியில் இறங்கி நடந்தான்.

தன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும்

முறைத்துப் பார்த்தான்.

தன் மூக்கை மூடிக் கொண்டே

வீட்டுக்கு ஓடினான்.

வீட்டின் கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டான்.

யன்னல்களை இழுத்துப் பூட்டிக் கொண்டான்

அறையில் நிறைந்திருக்கும் காற்றை

கைகளால் துளாவினான்.

நீ எங்கே இருக்கிறாய்? பேசு! என்று

கோபமாய் சத்தமிட்டான்.

தன் கண்ணாடில் தன் விம்மத்தைச்

சந்தேகத்துடன் பார்த்தான்.

தன் கண்களை விரித்து

தன் கண்ணுக்குள்ளே பார்த்தான்.

 

சாடையாக இருமினான்.

தன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான்.

மறுபடியும் இருமினான்.

நாசங்கெட்ட சனியனே நீ

எனக்குள் தானா இருக்கிறாய் என்றான்.

இதோ உன்னைக் கொல்கிறேன் பார்

என்று ஆவேசமாய் கத்தினான்.

அறையின் பலகணிக் கதவைத் திறந்தான்.

சுவர் விளிம்பில் ஏறி நின்றான்

செத்து ஒழி சனியனே என்றபடி

தரை நோக்கி பறந்தான்.

 

யார் இப்போது வைரஸ்?

மனிதனா.. கண்ணுக்குத் தெரியாத

அந்தக் கொலையாளியா?

 

எல்லாம் கலந்த பின்

மனிதனே வைரஸ்

வைரஸே மனிதன்.

கவிஞர். பாமதி. சோமசேகரம்

25.4.2020.

…………………………………………………

6. கொறோனா’விற்கோர் கவிதை!

கவிஞர். பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

பழந்தமிழன் வாழ்க்கைமுறை பழக்கவழக் கங்களையும்
பலன்தருநற் பண்பட்ட விழுமியங்கள் பலதினையும்
இழந்திடாது ஓம்பிடுவீர்! ஈடிணையி லாதவற்றை
எந்நாட்டு மக்களெலாம் இதமாகப் பின்பற்றிப்
பழக்கமாய் நடைமுறையில் பகலிரவாய்ச்; செயவைக்க
எங்கிருந்தோ வந்ததையா! எங்குமதன் பேச்சுத்தான்!
மழமழவென் றேபெருகி மன்பதையை அழித்துவரும்
மாபெரும் உயிர்க்;கொல்லி கொறோனா வைறஸ்சே!
————————————————————————————-

“கொறோனா’ வாய்திறந்தால்…..

கொட்டிடுமே கவிதை” — கேட்டிடுவீர்!

இயற்கையை அழித்திட்டு எழிற்சுற்றம் பாழாக்கி
இதமான காற்றினையே மாசுபடச் செய்திட்டு
செயற்கையிலே வாழ்ந்திட்டு தேடியே’போர்’ ‘கொலைகொள்ளை’
செய்துவரும்; மானிடரே செப்புவதைக் கேட்டிடுவீர்!……….

பேய்போலப் புலப்படாத் தோற்றமுடன் உலகமெங்கும்
பெருகிவிட்ட என்குலத்திற்(கு) இனியபெயர் தேர்ந்தெடுத்து
‘நோயாகப் பெருமளவில் நொடியிற்பர வக்கண்டு
நொந்துநல் லோரைதனில் “கொறோனா’ வெனப் பெயரிட்டார்!:

ஊனக்கண் கொண்டென்னை ஒருவருமே கண்டிலரே!
ஞானக்கண் கொண்டுசைவ ஞானியரும் என்றைக்கோ
வானத்திற்; சுற்றிவரும் வடிவங்கள் அறிந்தபோதே
வகைவகையாய் வரவிருக்கும் ‘வைறஸ்’சையும் அறிந்தாரே!

மனிதகுலம் இயற்கைதனை மண்ணாக்கி மகிழ்கிறதே!
புனிதமிகு தென்றலுமே புழுதியுடன் வீசிடுதே!
அநியாய மாயுயிர்கள் பலவழியால் இறக்கிறதே!
இனிப்பொறுக்க முடியாது பழிவாங்க நான்வந்தேன்!

அன்றுவாழ்ந்த தமிழர்தம் அறவாழ்க்கை நானறிவேன்!
வென்றவர்கள் ஞானறிவால் மேலோங்கி இருந்தார்கள்
அன்றென்போர் அவர்பக்கம் அணுகிடவோ அஞ்சிநின்றோம்!
இன்றுலகின் அவலநிலை கண்டஞ்சாது வந்திட்டேன்!

கண்டவுடன்; கைகுலுக்கி; இறுகணைத்தல் அன்றில்லை!
கருணையொடு எட்டிநின்று கைகூப்ப நான்கண்டேன்!
கொண்டவளை யன்றிப்பிற மாதர்கொஞ்சக் காணவிலை
குடும்பமென்றால் ஒருவனுக்கு ஒருத்தியென வாழக்கண்டேன்!

மருந்தெனவே உணவுதனை உண்டுவந்த காலமது!
மறந்திடாது கையலம்பி இறைதொழுது உண்டார்கள்!
விருந்தினர்க்கும் செம்பினில்நீர் கொடுத்துக்கை அலம்பவைத்து
விதம்விதமாய் அறுசுவையோ டமுதளிக்க நான்கண்டேன்.

ருசியான குத்தரிசி குரக்கன்சம் பாதினையும்
புரதமிகு தானியமும் இஞ்சிமஞ்சள் மிளகுசுக்கும்
புசித்துவந்தார் நானறிவேன்! போற்றுகிறேன் அவர்களன்று
பசித்திடமுன் உண்டிடாது பலன்கண்டார் மெச்சிநின்றேன்!

கோலமிட்டு மஞ்சள்நீர் தெளிப்பதொடு கோமயத்தால்
குடிசைநிலம் மெழுகுவதின் சிறப்பையெலாம் கண்டுவந்தேன்!
காலணியை வெளிவிட்டுக் காலலம்பி வீட்டிற்குள்
காலடிவைத் துச்சுத்தம் காத்தவர்கள் தமிழரன்றோ?

ஒருவருக்குத் தொற்றுநோய் உண்டென்று கண்டவுடன்
ஓரறையில் தனிமைப் படுத்திவைத்துப் பராமரிப்பர்!
திரைமறைவில் வேப்பமிலைக்; கொப்பதனைத் தொங்விட்டு
தினம்மஞ்சள் நீர்தெளிப்பர் தீபதூபம் காட்டிடுவர்!

முற்றமதில் வேம்பிருக்கும் மூலையிலோர் துளசிமாடம்
பெற்றுநின்றார் போதுமான பிராணவாயு அப்பாடா!
சுற்றுப்புறத் தூய்மையொடு இயற்கைவளம் பேணிவந்தார்!
கற்றவற்றை நடைமுறையிற் செயற்படுத்திப் பயன்பெற்றார்.

தொன்றுதொட்டுத் தமிழரோம்பி வந்தநல்ல பழக்கமெலாம்
நன்றுநன்று உலகமக்காள் நாள்தோறும் ;;கடைப்பிடிப்பீர்”
என்றுநானும் நினைத்தவுடன் எங்குமதை உலகெங்கும்
இன்றுகடைப் பிடிக்கின்றார் இனியதென்றுந்; தொடரட்டும்!

பாடசாலை தொழிற்சாலை பலவற்றை மூடவைத்தேன்
பலரின்வாய் மூக்கிற்குக் ‘கடிவாளம்’ போட்டுவைத்தேன்
கூடிப்பலர் பேசுவதும் கொஞ்சுவதும் கைகுலுக்கிக்
கூத்தாடும் போக்கெல்லாம் தவிர்த்திடவே ஆணையிட்டேன்!

காரசார மான’ரசம்’ காசினியில் மணக்கவைத்தேன்
கசந்திடுமெம் மஞ்சளிலே தேநீரும் போடவைத்தேன்!
ஆரவாரம் இல்லாது வீட்டிலிருந்து வேலைசெய்து
அன்போடு குடும்பத்தைப் பார்த்திருக்க வழிசமைத்தேன்!

‘கலகத்தைக் கடும்போரைக்’ கைவிட்டு ஒற்றுமையாய்க்
காசினியிற் சமாதானம் நிலைக்கவழி சமைக்காது
உலகத்து நாடெல்லாம் என்னையின்று ஒழிப்பதிலே
ஒன்றுபட்டு ஒற்றுமையாய் ஓலமிடக் காண்கின்றேன்!

‘பாரதி’லே பலநாட்டிற்;;பவனிவநம் உயிர்க்கொலியாய்
‘பாரதி’ர்ந்து ஓலமிடப் பேரழிவு செய்கின்றேன்!;
‘பாரதி’யின் அருள்பெற்றுப் பாவெழுதும் பாவலனாம்
‘பாரதி’யைக் கொண்டின்று பாவெழுதச் செய்துவிட்டேன்!.

உலகத்தில் மனிதரெலாம் ஒற்றுமையாய் அன்பென்னும்
ஒருராகம் பாடிடாது ஒப்பரிய இயற்கையொடு
பலவழியில் ஒன்றுபடாப் பாழ்நிலையைக் கண்டேனெனில்
பலவைறஸ் கூட்டிவந்து பலியெடுப்பேன் யாக்கிரதை!!

……………. இப்படிக்கு உயிர்க்கொல்லி “கொறோனா”

இவற்றை வெல்ல என்ன செய்வோம்??

மறுபிறவி பிறந்திடாதோர் முத்திநிலை அடைந்துய்யும்
வகைதெரிவீர்! சிவத்தொண்டு சிவத்தியானம் இயற்றிவீர்!
நெறிநின்று இருக்கும்வரை நீவிரிமைப் பொழுதெலாம்
நெஞ்சிலுறை பரம்பொருளை நினைந்தேத்தி வாழ்ந்திடுவீர்!

பிறைசூடி பாகத்தாள் பெய்தளித்த ஞானப்பால்
குறையாது பருகித்தேன் தமிழில்மந் திரமாக
மறைஞான சம்பந்தன் அருளியதிரு முறைகளைநாம்
முறையாக ஓதிவரக் கொறோனாவும் விலகிடுமே!

பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

29.4.2020

7. கொரோனாவை நினைத்த படி….

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு….

குர் குர் சத்தங்கள்…
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்…
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்…
குறு குறு பார்வைகள்…
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்…
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்…

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு…
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை…
தாயாகும் தந்தைமை…
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு….

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து….
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து….
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து…
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து….
………………..

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல….

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு….

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு….

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்

2.5.2020.

 
Leave a comment

Posted by on 01/05/2020 in Uncategorized