இனிய அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!
பல்கலாசார நாடான இங்கு நாம் நலமே இருக்கிறோம். வளமோடும் பாதுகாப்போடும் கூடவே,
எனினும் உலகம் முழுவதிலும் நிறம், இனம், மதம், மொழி, தேசம் என்று பல பல காரணங்களுக்காக நாட்டில் அநீதிகள் நடந்த வண்ணமே உள்ணன. ஈழ நாட்டில் சிறுபாண்மை இனத்துக்கெதிராகவும் அவுஸ்திரேலியாவில் இந் நாட்டு பழங்குடி மக்களுக்கெதிராகவும் நடந்து கொண்டிருக்கும் மனிதாபிமானமற்ற கொலைகளும் வன்முறைகளும் அற்ப காரனங்களுக்கான உயிர் பறிப்புகளும் இறப்புகளும் நாம் ஒரு நாகரிகமான உலகத்தில் தான் வாழ்கிறோமா என்ற சிந்தனையை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவருடய கொலை – அதுவும் வெள்ளையரான பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டதென்பது உலகம் பூராகவும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அது உலகம் பூராவுக்குமான ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக; கொரானா கட்டுப்பாடுகளை மீறி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
அக் கறுப்பின மனிதர் George Floyd இனை விழுத்தி கழுத்தில் அதிக அழுத்தம் கொடுத்து கொன்ற வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை உலகமெங்கும் கொடுக்கிறது. அதே நேரம் ‘Black lifes matter’ போராட்டத்தின் போது ஒரு கருப்பினத்தவர் காயப்பட்ட வெள்ளை இனத்தார் ஒருவரை தூக்கிச் செல்லும் காட்சி இரு கறுப்பு / வெள்ளை இனத்தாரிடமும் இருக்கிற சிந்தனையின் வேறுபாட்டை சுட்டிக்காட்டும் விதமாக உலகமெங்கும் பரவி வருகிறது.
அதே நேரம் இந்தப் போராட்டத்தின் போது வெள்ளை இன பொலிஸ் ஒருவரின் முன்னால் ஒரு இளம் கறுப்பினப் பெண் அழுவதும் அவளை அணைத்து அப் பொலிஸ் அதிகாரி ஆறுதல் சொல்லும் வீடியோ காட்சியும் அனைவர் மனதையும் உருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.
இவை எல்லாம் மீடியாக்களின் வலிமையையும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தையும் யாரும் தவிர்க்க முடியாதபடி நம் வீட்டு வரவேற்பறைக்குள்ளே வருகின்றன.
நாம் நம் சமூக கடமைகளை செய்யவேண்டிய நேரமிது. சமூக நீதிக்காக குரல் கொடுக்க சக மனிதனாக சக மனிதனுக்கு நடக்கும் அநீதிக்கெதிராக குறைந்த பட்சம் குறைந்த பட்சம் ஒரு கவிதையாவது நாம் தர வேண்டாமா?
உலகம் முழுக்க பேனாக்களும் இலத்திரனியல் ஊடகங்களும் நீதிக்கான குரலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பேனாக்களும் அவற்றுக்காகக் கொஞ்சம் உயிர்க்கட்டுமே!
இம்மாத இறுதிக்கிடையில் ( 30.6.2020) உங்களுக்குரிய தனிமனித சுதந்திரத்தோடு உங்கள் கவிதைகளைத் தாருங்கள்.
கவிதைகளை uyarthinai@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த மாத முதற் கிழமையில் அவை கிடைக்கப் பெற்ற ஒழுங்கில் பிரசுரமாகும்.
மிக்க நன்றி.
தமிழால் இணைந்திருப்போம்.