RSS

Category Archives: உயர்திணைக் கவிஞர் கவிதைகள்

மனித நேயம்

அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இம்மாதம் அதாவது ஜனவரி மாதத்துக்கான கவிதைத் தலைப்பாக ’மனித நேயம்’ என்பதை கவிஞர். ஆறு.குமாரசெல்வம் அவர்கள் பரிந்துரைத்திருந்தார்கள். அதற்கு, பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார். பாரதி அவர்களின் கவிதை மாத்திரம் வரக் கிட்டியது. கூடவே தைப் பொங்கலோடு கவிஞர் ஆறு. குமாரசெல்வம் அவர்களுடயதும்…இரண்டையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனினும், தாமதமாக அதனை இங்கு பகிர்ந்து கொள்வதை இட்டு மனம் வருந்துகிறேன்.

 

2w5nlzo

 

  மனித நேயம்

                 பல் வைத்திய கலாநிதி இளமுருகனார்பாரதி.

 

உள்ளமதிற் கிளர்த்தெழும்நற் குணங்கள்பல இணைந்த

உயர்ந்ததனிப் பெருங்குணமே மனிதநேயம் அன்றோ?

வள்ளுவனார்  குறள்கொண்டு மனிதநேயம் உரைத்தார்

மாதவத்துத் திருமூலர் மந்திரமாய்த் தந்தார்

தெள்ளுதமிழ்த் திருமுறைகள் அள்ளியள்ளி முகிழ்த்தன

சித்தர்கள் பலர்தோன்றிச் சிறப்பாக வளர்த்தனர்

கொள்ளைபோகா ததனைவருஞ் சந்ததியர் வளர்க்கக்

குழந்தைகளை வழிநடத்தல் பெற்றோர்கடன்  அன்றோ?

 

ஆதரவாய் உணவூட்டி வளர்த்துவரும் வேளை

அன்பதனின் இலக்கணத்தைப் பூரணமாய் விளக்கி

சாதகமாய் நற்பழக்க வழக்கமெலாம் பழக்கி

நல்லதொரு குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்க்க

பாதகமாயப்; பிறர்மனதை வருத்திடாநற் பண்பொடு

பரந்தமனப் பான்மைமிகு பாலகனாய் மலர

மாதவத்தால் பிறந்திட்ட பிள்ளைதானோ வென்று

மனிதநேயம் மிக்கோனெனப் பார்ப்பவர்வாழ்த் திடுவர்!

 

ஆறறிவு பெற்றிட்ட மனிதர்கள் சிலரில்

அரியபெரும் மனிதநேயம் வற்றிமறைந் ததாலே

வீறுகொண்டு விலங்குகள்போல் வெறித்தனம்மி குத்து

வேட்டையாடி மனிதர்களைக் கொல்பவரும் உள்ளார்

கூறுபோடச் சாதிமத பிரிவினையைத் தூண்டிக்

குறிக்கோளாய்ச்; சீர்கேட்டை வளர்ப்பவரும் உள்ளார்

பேறுகளை வென்றெடுக்கப் பெரும்பாவம் செய்யும்

பேடிகளாய்ப் பேய்களைப்போல் வாழ்பவரும் உள்ளார்.

 

இறைவனவன் மாந்தர்களைப் படைத்திட்ட போது

ஈடில்லா மனிதநேய நற்பண்பைச் சேர்த்து

நிறைவாகக் கொடுத்திருக்கச் சிலரதற்கு மேலே

நிரைநிரையாய்த் தீயகுணப் போர்வைகளைப் போர்த்துக்

கறையுறையாய்த்  தம்மனத்தைத் துருப்பிடிக்க வைத்துக்

காலமெல்லாம் புனிதமிகு மனிதநேயப் பண்பைச்

சிறைவைத்து வாழ்கின்றார் சிந்தையறிந் திரங்கிடாச்

சிந்தையராற் சமூகமைதி சிதைந்துபோகு தையா!

 

பரம்பொருளின்; படைப்பினிலே உயர்ந்திட்ட இனமாய்ப்

பழந்தமிழன் பண்பாட்டில் மலர்ந்ததொரு காலம்!

கரங்கூப்பிப் பெரியோரைச்; சிரந்தாழ்த்தி வணங்கிக்

காத்திருந்து வருவிருந்து ஓம்பிநலங் காத்து

வரமெனவே மனிதநேயம் தம்முயிரிற் கலந்து

வாழ்ந்துயர்ந்த பெற்றியெலாம் உரைத்திட்டாற் போமோ?

தரங்கெட்டுப் போகாது புலம்பெயரந்த நாட்டில்

தமிழினத்தின் தகைமைகளைக்; காப்பதெங்கள் கடனே!

29.01.2020

 

…………………………………………………………………………………..

 

பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் ஈழத்துப் புலவர் பரம்பரையை இலங்கச்செய்யத் தோன்றிய நவாலியூர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களின் மூத்த புதல்வர் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வன்; என்பது குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………………….

 2.மனித நேயம்

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

விக்கிபீடியாவுக்கு 003

மகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனதில் எழுச்சி பொங்க வேண்டும்,\.

மலர்ச்சி பொங்க வேண்டும்

வாழ்வில் கிளர்ச்சி பொங்க வேண்டும்!

உயர்ச்சி பொங்க வேண்டும்

சிந்தையில் உணர்ச்சி பொங்க வேண்டும்

முயற்சி பொங்க வேண்டும்

மலரின் முகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனித நேயம் பொங்க வேண்டும்

விவசாயி / மாக்கள் மகிழும்

நாளாய் பொங்க வேண்டும்.

…………..

15.1.2020 கவிஞர். ஆறு.குமார செல்வம்.

 

2. அகதிப்படகு – கவிஞர்களின் கவிதைகள்

 

அகதிப்படகு

அகதிப்படகு சட்டவிரோதமானது
எல்லை ரோந்து கண்காணிக்கிறது

குழந்தைகளை படகில் ஏற்றாதீர்கள்
கடல் பாதுகாப்பானதல்ல

நாட்டை விட்டு வெளியேறாதீர்கள்
எந்த நாடும் உங்களை அனுமதிக்காது

கம்பி வேலிகள் இங்குமுண்டு
மீண்டும் அகதி முகாம்களை
தேர்ந்தெடுக்காதீர்கள்

அகதிகள் என்றும்
அத்துமீறிக் குடியேறியவர்கள் என்றும்
ஊடகங்கள் நஞ்சை வீசும்

உண்மைதான்
மரணத்தால் கட்டப்பட்ட நிலத்திலிருந்து
கட்டாயமாக வெளியேறியதால்
நானும் ஓர் அகதி

கனத்த இதயத்துடன்
புதிய நிலத்தை நோக்கி நகர்ந்தோம்

கையில் எதுவும் இல்லாதபோதும்
அன்பைச் சாப்பிட்டுக் கண்ணீரைக் குடிக்க
எங்களுக்காக ஒரு கடல் காத்திருந்தது

எங்கள் விதியின் தூசியை விலக்கி வைக்க
நறுக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் காத்திருந்தன

எங்கள் மாமிசத்தை சுவைக்காத
ஓர் நாட்டை நோக்கிப் பயணித்தோம்
எங்கள் தலையைக் கொய்யாத
ஓர் நாட்டை நோக்கிப் பயணித்தோம்

இரவின் இருண்ட விளிம்பில்
கசிந்துகொண்டிருக்கும் சிறிய படகில்
போராடி உயிர் பிழைத்தவர் நாங்கள்

எங்கள் ஈரமான கண்களுக்கு
கொஞ்சம் நம்பிக்கை தாருங்கள்

மொழிபெயர்ப்பாளர்கள் எங்கே?

எங்கள் பெயர்களின்று
மூடுபனியால் எழுதப்பட்டிருக்கிறது
எங்களை அடையாளம் காணுங்கள்

ஒரு கைதியைப் போல
கிறிஸ்துமஸ் போன்ற தெரியாத தீவில்
தடுப்பு மையத்தில் தங்க வைக்காதீர்கள்

நீங்கள் கொடுத்த போர்வை சூடேற்றவில்லை
இங்கு எதுவும் சிறந்த நிலையில் இல்லை

மனித உரிமை பேசும்
ஜனநாயக நாட்டில் கூட
அகதிப்படகுக்கு வரவேற்பு இல்லை

எங்கே நாம் சுதந்திரத்தைத்தேடி வந்தோமோ
அங்கேயும் சுதந்திரம் இல்லை

நானும் எனது மக்களும் இப்போது எங்கு செல்வது?

கடைசி எல்லைக்கு வந்தபின்பு
இந்தப் பறவைகள் எங்கே பறப்பது?
கடைசி வானமென்று ஒன்றுண்டா?

கவிஞை. செளந்தரி. கணேசன்.
28.12.2019.

……………………………………………………………………….

அகதிப் படகு”

 

ஒருநாளா இருநாளா ஒப்பரிய ஐந்தாண்டு

உல்லாசப் படகாகப் பலகடல்கள் சுற்றிவந்தேன்

வருகின்ற பயணிகளோ எனைத்தேடி நின்றார்கள்

வனப்புமிகும் என்னழகு ஈர்த்ததிலே வியப்பேது?

திருமணமும் ஆகாத திடமான வாலிபர்கள்

தேன்நிலவைக் கழிக்கவரும் மானின்;விழி மங்கையர்கள்!

பருவத்து எழில்கொஞ்சும் பாவையர்கள்; அப்பாடா!

பார்த்ததிலே இன்பத்தின் எல்லையெலாங் கண்டேனே!

 

நன்னனெனும் பெயர்கொண்டோன் நாணயத்தை மறந்தறியான்

நாளெல்லாம் என்னழகு நனிசிறக்க வழிசெய்வான்

வன்னப்பூத் தேர்ந்தெடுத்து வகையாகச் சோடிப்பான்;

வடிவழகன்; வாசனைக்கு ஏதேதோ பூசிடுவான்

மின்வேக மாயென்னை வெகுகவன மாயோட்டி

வேடிக்கை யாயவனோ விளையாட்டுக் காட்டிடுவான்

என்னினிய பயணிகளை என்றுமவன் மகிழ்விப்பான்

இன்முகத்தன் நன்னனவன் பொன்மனமும் நானறிவேன்

 

இரவுபகல் பாராது ஆழிபல சுற்றிடுவான்

என்காது கேட்டதெல்லாம் இனிக்கின்ற சல்லாபம்!

பரவசத்தாற் கிறங்கிநிற்பேன்! பாசமொடு நன்னனவன்

பக்குவமாய்ப் பணிசெய்யப் பார்த்துநான் மகிழ்ந்திருப்பேன்!

நிரைநிரையாய் நடந்தவற்றை நினைவுகூரக் கண்ணயர்ந்;தேன் 

நிம்மதியும் நிறைமனமும் நிமிடத்தில் போனதம்மா!

இரைச்சலொடு இடிபோலத் துவக்குவெடிச் சத்தமெனை

என்றுமிலா அச்சத்துடன் எழுப்பியதும் பதற்றமுற்றேன்.

 

பக்கமாக வந்தபெரும் கப்பலொன்றைக்; கண்டவுடன்

பணிவாக நந்தனவன் வெள்ளைக்கொடி காட்டவேறு

திக்கிருந்து வந்ததோட்டா சென்றவனைக் கொன்றதம்மா!

திகைப்புடனே திரும்புமுன்னர் சிப்பாய்கள்; என்மேலே

கொக்கிபோட்டு ஏறிவேறு திசைநோக்கிக் கொண்டுசென்றார்

கொஞ்சுமெழி;ல் விஞ்சுமொரு கரையில்நங் கூரமிட்டார்

அக்கணம்நான் பட்டதுயர் அப்பாடா கொஞ்சமில்லை!

அந்தக்கரை சிறீலங்காக் காலிமுகாம் எனவறிந்தேன்

 

உல்லாசப் படகான என்னினிய பயணிகளின்

உடைமைகளை முகாமிலுள்ள படைவீரர் பறித்தெடுத்தார்

எல்லையிலா இன்பந்தரும் நினைப்பினிலே வாழ்ந்தவென்றன்;

இந்தநிலை மாறுமென்று என்றேனும் நினைக்கவில்லை!

சல்லடையிட் டுச்சந்தெலாம்  தேடியேயெம் இளைஞர்களைக்

கொல்லாமற் கொல்வதற்கு வெள்ளைவானிற் கொண்டுவந்தார்

மெல்;லமெல்லச் சாகடிக்கும் மிருகச்செயல் கண்டுநொந்தேன்!

மேற்கொண்டு  கன்னியரின் கண்ணீர்க்கதை யார்க்குரைப்பேன்!

 

குடித்தபின்னர் அவர்களிட்ட கொடுமையெலாம் கண்டழுதேன்;

இடித்திடித்து வசைபாடி எத்தனையோ கேள்விகேட்டுப்

பிடித்தவர்கள் சேலைபற்றி இழுத்துரிவர்!; கண்ணீரைத்

துடைக்குமுன்னர் வார்குழலை வலிந்திழுத்துக் குலைத்துடலை

அடித்திடுவர்! நொந்தமேனி துடித்திடவே பலர்கூடிக்

கெடுத்தகதை எத்தனையோ கேட்டென்மனம் வெடித்ததையா!

படித்தபுத்த நீதியெலாம் விடுத்துநின்ற வெறிக்கும்பல்

பாபச்செயல் அத்தனையும் பண்ணக்கண்டு மயக்கமுற்றேன்!.

 

அல்லும்பகல் நோட்டமிட்டுத் தேடிவரும் தமிழர்களை

அடிவருடும் எட்டப்பர் அடையாளம் காட்டிநிற்கப்

பொல்லாவின வெறிப்படையும் கைதுசெய்து  முகாமதிலே

புலன்விசாரணை எனக்கூறிப் புல்லர்கள் பலர்;கூடிக்

கொல்லாத விதமாக கொடும்வதையைச் செய்தபின்னர்

குற்றுயிராய்ப் புதைகுழியில் போனவிடந் தெரிந்திடாது

மெல்லமூடி விட்டவர்கள் விருந்துவைத்து மகிழ்ந்தகதை

மெதுவாகச் சொல்லிச்சிலர் விம்மியதை நானறிவேன்

 

நாள்கள்பல சென்றபின்னோர் நண்பகலில் யாரோவொரு

நாட்டாண்மைக் காரனவன் ‘கலுபண்டா’ எனும்பெயரோன்

தாள்களாகப் பலலட்சம் முகாமின்தலை வனுக்களித்துத்

தனதூருக்(கு)என்னைக்கரை ஓரமாகக் கொண்டுசென்று

வாழ்ந்துய்ய வழிதேடி வெளிநாடு செலவிரும்பும்

வன்முறையாற் பாதிக்கப் பெற்றலைந்த தமிழர்களை

ஆழ்கடலுக் கப்பாலே அவுஸ்திரேலியா நாட்டிற்கு

அகதிகளாய் அனுப்பிவைக்கப்; படகாகத் தேர்ந்தெடுத்தான்

 

அகதிகளை அவுஸ்திரேலியாவிற் கனுப்பிடுவேன் என்றுசொல்லி

அரசாங்க ஊழியரின் கண்களிலே மண்தூவி

பகடைக்காய் எனத்தமிழர் உயிருக்கு விலைபேசி

ஆளுக்கு ஐந்துலட்சம் ரகசியமாய்; வசூலித்து

மிகநல்லவ னாய்நடித்து அவுஸ்திரேலியா அனுப்பிவைக்க

வேண்டியதிட் டங்களையும் விரைவாகச் செய்திருந்தான்

சகநண்பர் கூடியொரு படகோட்டும் மாலுமியைச்

சந்தித்துக் காலிமுகக் கடற்கரைக்கு அழைத்துவந்தான்

 

ஐந்தாண்டாய் ‘உல்லாசப் படகு’என்ற மிடுக்கோடு

ஆழிபல ஆசையொடு பவனிவந்த என்பெயரைச்

சிந்தைநோக‘அகதிப் படகு’ என்;றவனும் மாற்றிவிட்டான்

தினம்மதுர சங்கீதம் சிற்றின்ப நடனங்கள்

விந்தையாக விருந்துவைக்கும் ‘இளசுகளின்’ ஒய்யாரம்

வேடிக்கை யாய்ப்பேசும் நன்னனவன் விகடங்கள்

அந்தநாள் நினைவுவாட்ட அழுதழுது நாள்கழித்தேன்

ஆசையெலாம் அழிந்தொழிய இலவுகாத்த கிளியானேன்.!.

 

அகதிப்பட கோட்டியென ‘அமரசிங்கி’ பதவியேற்றான்;

அதிரடிப்படைச் சிப்பாயாய்ப் பதவிவிட்ட இனவெறியன்!

சுகவாழ்வு தெலைந்ததெனச் சோர்வுற்று நிற்கையிலே

தூரத்திற்; பெரியதொரு பேருந்தைக் கண்ணுற்றேன்

மிகக்களைத்த நிலையினிலே ‘கலுபண்டா’ வழிகாட்ட

மெள்;ளமெள்;ளப் பலரென்னை நாடிவரக் கண்டுநின்றேன்!

அகப்பட்டு விட்டோமினி அவன்விட்ட வழி’யென்ற

ஆதங்கப் பட்டோரின்;; பெருமூச்சும் கேட்டதம்மா.

 

வந்தகும்;பல் தமிழரென ஒருவாறு ஊகித்தேன்

மந்தைகளைப் பலிக்கெடுத்துப் போவதுபோல் நிரையாக

நொந்துநின்ற நூற்றைம்பது ‘அகதிகளை’ எண்ணிஎண்ணி

நொடியிலே என்மேலே எற்றிவிட்டான் ‘அமரசிங்கி’

விந்தையாக‘அப்பியமு’‘அப்பியமு’ எனக்கூவி

விசைதன்னை அழுத்தியதும் படகும்பாய்ந்  தோடியதே! 

சந்ததமும் தனித்துவத்தைக் காத்திடுவேன் என்றிருக்கத்

தமிழர்களின் நிலைபோல விலைபேசி அழித்தானே!

 

ஏற்றமுடியாப் பாரமதை எந்தனுடல் மிகநோக

ஏற்றிக்கொண் டாழ்கடலை எதிர்நோக்கிச் சென்றதுவே!

காற்றும்மிக வேகமாகச் சாதகமாய் வீசியதே1

கந்தவேளே கதிநீயே’ என்றுகூவு வோர்களையும் 

ஆற்றிடாது அறவட்டி கொடுத்தெடுத்த  பலலட்சம்

அவுஸ்திரேலியா சேர்த்திடுமோ எனப்புலம்பு வோர்களயும்

தேற்றிடுவோர் இன்றியழு வோர்களையும் பார்த்தநான்;;

தினந்தமிழர் இழந்ததெல்லாம் நினைந்துமனம் நொந்திழைத்தேன்

 

தாலிதனை இழந்;ததுயர் தாங்கிடாத தாய்மாரைக்

காதலரைப் பறிகொடுத்த கட்டழகுக் கன்னியரைப்

பாலியலுக் குட்படுத்திப் பசிதீர்த்தோர் கதைகளையும்

வாலைப்பரு வத்தோராய் வதைபட்ட வாலிபரைக்

காலிமுகக்’காய்ம்பிருந்துமீட்டெடுத்த கதைகளையும்

களைத்தொளித்து வெளிநாடே தஞ்சமென்றோர்  கதைகளையும்

போலிக்கடவுச் சீட்டொடு பயணிப்போர் சொலக்கேட்டேன்!

பொங்கிவரும் அவர்கண்ணீர் துடைக்கவழி கண்டறியேன்!

 

சாவைத் தவிர்ப்பதற்குத் தமதுபொருள் நகைகளுடன்;

சந்ததியாய் வந்தநிலம் சகலதையும் விற்றசிலர்

தேவைக்குப் பலலட்சம் ரூபாய்கள் சேர்த்தந்தப்

பாவியான ‘ஏஜென்ரிடம்’ பதட்டமுடன் கொடுத்ததுவும்

மூவைந்து வாரங்கள்; பின்னொருநாள் அவசரமாய்

முத்தையன் எனும்தரகன் முறையாக வந்தழைத்துக்

காவத்தை’க் கலுபண்டா கரைசேர்ப்பான்” எனச்சொல்லிக்

கடைசியிலென் மீதேற்றி விட்டதையும் நானறிந்தேன்.

 

வாரமிரண் டாகியதே வழிமாறி நடுக்கடலில்

வலுவான அலைகளொடு போட்டியிட்டுச் சென்றேனே!

தூரவழிப் பாதையொன்றால் தொடர்;ந்திட்டோம் பயணத்தை!

தூக்கமில்லைச் சீரான உணவுமில்லை யெனவாடிச்

சேருவமோ அவுஸ்திரேலியா எனச்சித்தங் கலங்கியெமைப்

பாராது ஆழியிலே பாய்ந்திருவர் மாய்ந்தபெருந்

தீராத்துயர்  வாட்டிநிற்கச் செயலற்று நீர்சொரிந்தேன்!

தினமவர்கள் ‘ஆவி’யெலாம் கனவில்வரக் கண்டுழன்றேன்!

 

பலநாளாய்ப் பாலின்றிப்; பச்சைக்கு ழந்தையொன்று 

பரிதாப மாய்க்கதறித் தாய்மடியில் மயங்கியதைச்

சிலநிமிடங் கூடவவள்; பொறுக்காது குழந்தைதனைச்

சேர்த்தணைத்து இறுதிமுத்தம் ஏக்கமொடு கொடுத்துவிட்டு

சலசலக்கும் ஆழ்கடல்தான் சாந்திதரும்’எனச்சொல்லித்

தன்கணவன் அழைக்கின்றான் சந்திப்போம்’ எனக்கதறிப்;

பலமெல்லாங் கூட்டியவள் பாய்ந்தந்தோ உயிர்மாய்த்தாள்;;

பார்த்தவரின் கண்களெலாம் செவ்விரத்தஞ் சிந்தினவே!

 

வந்தவர்கள் மூச்செல்லாம் ஏக்கப்பெரு மூச்சாக

வரங்கேட்டுத்  தங்கள்குல தெய்வங்களை வணங்கிநிற்க

விளையாட்டாய்த்; தூரமதில் தரையின்கரை தெரியுதென்று

வேதனையை மறப்பதற்கு ‘அமரசிங்கி’ முணுமுணுத்தான்

அடுத்தசில மணிக்குப்பின் றோந்துசுற்றும் விசைப்படகு

ஆகாயம் நோக்கியந்தோ அடுக்கடுக்காய்ச் சுட்டதுவே!.

மந்தபுத்திக் காரனான அமரசிங்கி தன்துவக்கால்

மாறிமாறி அப்படகைக் குறிவைத்துச் சுட்டுநிற்க

 

தற்பாது காப்பாகச் சுடப்பட்ட தோட்டாவோ

தப்பாதெம் மாலுமியைச் சாகடித்து வி;ட்டதுவே

சொற்பமாக இருந்துவந்த நம்பிக்கையும் தொலைந்ததென்று

சோகமாக இருந்தவேளை சூழ்ந்திட்ட இராணுவமோ

சற்றுமெதிர் பாராவிதம்;; எமைத்தமது படகேற்றிச்

சாதுரிய மாகவொரு கரைதனிலே இறக்கிப்பின்

குற்றஞ்செய் தோர்போலத் துப்பாக்கி முனையிலெமைக்

கொண்டுசென்று ‘கிறிஸ்மஸ்’;சுத் தீவிலடைத் தனரம்மா!

 

உல்லாசப் படகாக உலகமெலாம் சுற்றிவந்தேன்

உயிர்மதியா இனவெறியர் கொடுஞ்செயல்கள் நானறிந்தேன்

கல்மனமும் கசிந்;துருகும் கதைகேட்டு நானழுதேன்

‘‘கலுபண்டா’ போன்றோரின் கைபடாது நானின்று

செல்லாக்கா சுபோலவேயென் சிறப்பெல்லாம் இழந்தாலும்

சீரிளமைத் தமிழ்பேசும் செல்வங்களை வாழ்த்தினின்று

அல்லும்பகல்; என்கனவில் தமிழ்வெல்லக் காண்கின்றேன்;.

அகதிப்படகு”ப் பெயருடன் அகதியாகத் துயில்கின்றேன்.

REFUGE BOAT (4)

கவிஞர். பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார் பாரதி.
28.12.2019. 11.44.

……………………………………………………………………………………………..

3. அகதிப்படகு

வலியும்துயரும்ஆற்றாமையும்
வாழும்வகையென்றுகாட்டிடும்
நம்பிக்கையும்அவநம்பிக்கையும்
ஆசையும்கனவும்ஏக்கமும்
நேசமும்அன்பின்தவிப்புமென
உள்ளூறும்அத்தனையுணர்வும்
ஆழியின்அலைகள்அலைக்கழிக்க
அச்சந்தரஆடிவரும்அகதிப்படகிது

கைத்திணித்தப்பொருள்பொறுத்து
கலம்திணித்தப்பெரும்பாரம்சுமந்து
நிறைசூலியெனநிலைகொள்ளாது
கரைகாணாகடல்நடுவேநில்லாது
உவர்நீர்த்தாகமெனஉயிர்குடித்து
இன்னல்பலவும்இடர்பலவும்கடந்து
கொந்தளிக்கும்உணர்வுகளோடு
கொந்தளிக்கும்கடலேகும்அவதிப்படகிது

நேர்வழிமறந்துநெஞ்சம்குறுகி
திரைகடலோடிதினவெடுத்தேகி
சோறுதண்ணீர்சொந்தம்மறந்த
சுகவீனபலவீனமனங்கள்சுமந்து
மண்ணிற்பாதம்பதிக்குமுன்னே
கண்மறைந்துபொறுப்புதுறந்து
அந்தோவெனவிட்டுவிரையும்
அபாயமிகுஆட்கடத்திப்படகிது

யாதும்ஊரேயாவரும்கேளிரென்று
பரதேசம்தருமொருபுதுவாழ்வென்று
பாதுகாப்பின்எல்லைதுணிந்துகடந்து
பத்திரவாழ்வுக்கொருஉத்தரவாதமின்றி
நித்திரைதொலைத்துநீலக்கடல்வழி
ஆங்காங்கேஉயிருதிர்த்துஉறவுதிர்த்து
எத்தரையேனும்சேர்ந்திடத்துடிக்கும்
இதயங்கள்சுமந்துவரும்எந்திரப்படகிது

கவிஞை. கீதா.மதிவாணன்.
30.12.2019.

…………………………………………………………………..

4. அகதிப்படகு

 

‘அகதிப்படகு’ தலைப்பை

அறிந்தால் அதிரும் குடகு

(குடகு – குடகுமலை)

அனுபவம் இல்லா செயலால்

ஆழ்கவி எழவில்லை தன்னால்!

 

கற்பனைக்கு ஆட்படும் தலைப்பல்ல

கண்,கால் கை வெட்டுண்டதை என்சொல்ல

விற்பனைக்குண்டு விலங்குத் தலை!

வீதியில் தொங்கியதன்றோ மனிதத்தலை!

 

மனிதனை மனிதன் கொல்வதா?

மாநிலம் இதை ஏற்றுக் கொள்வதா?

புனிதமாய் புத்தரைப் போற்றுவோர்

புலையராய் புவியினில் வாழ்வதா?

 

நாதியற்ற மனிதரெல்லாம் தப்பித்தே

நாவாயேறி ஆழ்கடல் தனில்

நாற்புறம் பயணம் மேற்கொண்டார் – நற்கதி

தருவாரெவரென நடுக்குண்டார்

 

வலியார் மெலியாரை அடக்குவதும்

வரிந்து கொண்டு ஒடுக்குவதும்

புலியது மானைப் புசிப்பதுவும்

பொல்லா விலங்குக்கன்றி

மனிதருக்கன்றே?

 

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு

ஊரூராய் புகலிடம் தேடியலையும்

மானிடரையெலாம் தாய்மையுடன்

மறுப்பின்றி ஏற்றி வரும்

அகதிப்படகு

 

உண்ண உணவுமின்றி உடுத்த

உடையுமின்றி உறங்கியெழ

திண்ணை ஏதுமின்றி வாழ்வின்

திக்கறியா மாந்தரின் அடைக்கலம்

 

சொந்த நாட்டிலே சுதந்திரமாய்

சுற்றித் திரிய உரிமையற்று

நொந்த மாந்தருக்கு விடுதலையை

நுகர்வதற்கு வந்த அடிமைக் கப்பல்.

கவிஞர். ஆறு. குமாரசெல்வம்.

01.01.2020.

 

– ’2020’ -தானாய் மலர்ந்த புத்தாண்டுக் கவிதைகள் –

2020

கவிஞர். செ. பாஸ்கரன்

பழகிய ஆண்டு விடைபெறும் போது

மனதினில் ஆயிரம் நினைவுகள் வந்தன.

புதிய ஆண்டினில் புகும் இந் நேரம்

ஆயிரம் கனவுகள் எழுந்து முன் வந்தன.

கனவுகள் யாவும் நிஜமென மாற்றி

இனிய வாழ்வினை அனைவரும் பெறுவோம்.

புதிய கவிதைகள் ஆயிரம் படைப்போம்.

உயர்திணைக் கவியென

உலகினில் பறப்போம்.

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

அன்புடன் செ.பாஸ்கரன்.

………………………………………………….

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

ன்பும் பண்பும் மலரட்டும்

சையும் கோபமும் உலரட்டும்

னிமையே நாவில் தவழட்டும்

கை எண்னம் கமழட்டும்

ண்மை என்றும் நிலைக்கட்டும்

ழல் சிந்தனை தொலையட்டும்

ங்கும் கருணையே பரவட்டும்

ற்றமுடன் மானிடர் உயரட்டும் 

யம் மனதினில் அழியட்டும்

ற்றுமை உணர்வே விளையட்டும்

யாது மானிடம் உழைக்கட்டும்

தே நன்றென திளைக்கட்டும்!

 

இனிதே மலர்ந்தது

புத்தாண்டு Twent – Twenty

இன்பமும் மகிழ்வும்

இணைந்தே தரும்

என்றும் வெற்றி! வெற்றி!

’உயர்திணை’

உயர்ந்தோர் சிந்தனைக் கருவூலம்

’அயர்வினை’

அகற்றும் அன்பாளர்

இணைப்புப் பாலம்.

மகிழ்வுடன்,

ஆறு.குமாரசெல்வம்.

( வாழ்த்திய கவி/ கருணை உள்ளங்களை வணங்குகிறேன்.வந்ததோர் 2020ஆண்டில் வாழ்த்தி மனம் மகிழ்கிறேன்)

…………………………………………………………….

கவிஞர். நந்திவர்மன்.

இருபது பிறந்திட

வருவது சிறந்திட

இன்பம் நிறைந்திட

துன்பம் மறைந்திட

அறிவு பெருகிட

உறவு உருகிட

மகிழ்ச்சி பொங்கிட

புகழ்ச்சி தங்கிட

நலங்கள் சேர்ந்திட

உளங்கள் ஆர்த்திட

ஆழ்ந்த அன்புடன்

வாழ்த்து கின்றனன்.

– த. நந்திவர்மன். 

………………………………………………….

பிறந்திருக்கின்ற இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அன்பையும் மகிழ்வையும் உடல் நலத்தையும் மன அமைதியையும் தருவதாக!

 

”காட்டுத் தீ” – அவுஸ். கவிஞர்களின் கவிதைகள் – 1

 

Aust.b.f

அவுஸ். காட்டுத் தீ – 2019 கார்த்திகை

 

1. உன் பசி அடங்காதோ ஓகோர நெருப்பே

உன் பசி அடங்காதோ ஓகோர நெருப்பே
ஊரெல்லாம் எரிக்கின்றாய் உனக்கிலையோ பொறுப்பே
நன்புசித்தாய் வளங்களை நீ நடமிடவும் களமிதுவா
நாசங்களை விளைப்பதற்கு நாடிவந்த நாடிதுவா
அன்றொருநாள் கண்ணகிக்காய் மதுரையினை எரித்தாயாம்
அரசனாலே நீதிகெட்ட தலைநகரைச் சரித்தாயாம்
இன்றுவந்து ஆசைநாட்டில் ஏன்புகுந்தாய் சொல்லாயோ?
எழில்மிகுந்த ஊர்களெலாம் எரிகிறதே நில்லாயோ?

தருமபுரி எரியூட்டித் தருமத்தைத் தாமெரித்தார்
தகுமாசொல் கும்பகோணக் குழந்தைகளை நீயெரித்தாய்
அரும்புகின்ற முலைகளை அவிழுமுன்னர் அழித்தாயே
அக்கிரமம் நீயென்று அவனியெலாம் பழித்தாரே
விரும்புகிற ஈழத்தின் விழிநிகராம் வீரர்களை
வென்றிடவே இயலாமல் வீசினார்கள் கந்தகத்தை
திரும்புகின்ற பக்கமெல்லாம் மக்களையும் பொசுக்கினார்கள்
தீயபோர் நடத்தித்தான் விடுதலையை நசுக்கினார்கள்

அழகான பண்ணைவீடு அங்குபல கால்நடைகள்
ஆயிரமாம் வேலிகளில் பெருமரங்கள் விலங்கினங்கள்
மெழுகானது இப்போது மூண்டெழுந்து எரித்தாயே
முன்பொருநாள் கருப்புச்சனி நீயெம்மைக் கரித்தாயே
முழுதாகப் பத்தாண்டு முடிந்ததென வந்தாயோ
முடிந்தஉயிர் சிலநூறு நீகண்ணீர் சிந்தாயோ
பழுதாயின எம்வாழ்க்கை பழையகதை இனிவேண்டாம்
போதும் போதும் புறப்படுநீ எப்போதும் வரவேண்டாம்.

– கவிஞர். எந்திராஜ்.ரவிச்சந்திரன், பிறிஸ்பேர்ன், 17.11.2019 –

………………………………………………………………………………………………………………………..

 

2.  காட்டுத்தீ 

அடுக்களைத் தீயது அன்னம் தரும்

ஆலயத்துத் தீயது ஒளி தரும்

இதயத்துத் தீயது எழுச்சி தரும்

எதனையப்பா தந்திடுமிக் காட்டுத்தீ?

 

மும்மாரிமழை பொழிவதற்கே

முறைமுறையாய்க் காடு சமைத்தார்

ஏன் மாறிப் போனதிந்த இயற்கையது

எதனாலோ ஏற்றிவிட்டதிந்தக் காட்டுத்தீ?

 

நாடு அது மக்கள் வாழ

காடு அது மாக்கள் வாழ

வெந்தணலும் காடு புக

செத்து வீழ்வதன்றோ  விலங்கினங்கள்

 

வேண்டாமே காட்டுத்தீ

தீதறியா திவ்யப் பொருள்

தீயதுவே தீண்டி விட்டால்

தீய்ந்துவிடும் போயதுவே

 

காய்ந்து விட்ட சருகெல்லாம்

காட்டினிலே

களையெடுக்க வந்ததிந்த

காட்டுத்தீ யதுவோ?

-கவிஞர். ஆறு.குமாரசெல்வம், சிட்னி, 18.11.2019 –

………………………………………………………………………………………………………

 

3. மகத்தான அதிசயம்

எண்திசையும் வெந்தணலை வீசிவளைத்து
நிற்கும் நடக்கும் பறக்கும் உயிரையெலாம்
ஆகுதியென அள்ளித்தின்று செமித்தபின்னும்
அடங்காப்பசியோடலையும் வெஞ்சாபமுனது.

ஏக்கர்களை எரித்தொழித்தபின்னும்
ஏக்கம் தீராது எரிந்துகொண்டிருக்கிறாய்…
மானுடர் வாழ்வைப் புசித்தபின்னும்
மையல் தீராது மாய்த்துக்கொண்டிருக்கிறாய்

ஓங்கியுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின்
தைலச்சாற்றின் கடும்மணத்தால் பிச்சியாகி..
உன்மத்தங்கொண்டு அலைகிறாய்.. சுழல்கிறாய்
கதிரையும் காற்றையும் துணைக்கழைத்து ஓலமிடுகிறாய்..

கானகத்தின் ஈமத்தைக் காவிவந்து
கண்ணைக் கரிக்கிறது கரிக்காற்று
சீர்கெட்டபுவிவெப்பம்பகர்ந்து
செவியோரம் சிரிக்கிறது கொடுங்கூற்று

மூச்சடைக்கும் வனக்காற்றிடை
மிதந்து வருகிறது பிணவாடை
வாதையிலுழலும் வனத்திடை
வாட்டிப்பொசுக்குகிறது வெங்கோடை

சூழ்ந்தெரியும்உன் சுடுதழல்களால்
வெந்துகருகிய கானுயிர்கள் ஒரு புறம்
வனமிடை வாழ்வே வாழ்வென வாழ்ந்தின்று
இல்லும் பொருளும் இழந்தோரொரு புறம்..

பொசுக்கென்று பற்றி புலனுணருமுன்னே
பொசுக்கிப் போக்கிய உயிர்களொரு புறம்..
உயிர்ப்பணயம் வைத்து ஓயப் பொழுதின்றி
தீயணைக்கப் போராடும் திடமனங்களொரு புறம்..

வரலாறு காணா இடரிதுவென்றுணர்ந்து
வலிந்துதுவி நல்கும் நல்லுள்ளங்கள் ஒருபுறம்..
இவர்க்கு நடுவே தாம் வாழ்கின்றன
இச்சைக்காய் தீவளர்க்கும் தீக்குணமும் ஒரு புறம்..

கை நோக கோல் கடைந்துனைக்கொணரும்
அந்நாள் போன்று ஆதிச்சங்கடமில்லை இன்று.
தினவெடுத்தக் கரம் உரசுமொரு தீக்குச்சி
நொடியில் முடித்துவைத்துவிடுகிறது
நெடுவனங்களின் பெருவாழ்வை.
அப்பாவி உயிர்களின் அரும்வாழ்வை..

வேள்வித்தீயென எரிந்துகொண்டே
கேள்வித்தீயினை எறிகிறாய்…
எரியும் தவறு எனதென்றால்
எரிக்கும் தவறு உமதன்றோ?
வாழும் உலகைப் பாழாக்கி
வஞ்சகர் செய்யும் வேலையன்றோ?
பூமிப்பந்தின் வெப்பமுயர்த்தி
பருவம் மாற்றும் பாவமன்றோ..
போதாக்குறைக்கு பொறுப்பிலிகளின்
பேதைமையும் பெருங்காரணமன்றோவென
மூண்டெழும்பும் கேள்வியினுள்ளிருந்து
நீண்டெழும்பித் தீண்டுகிறது அறத்தின் சுவாலை.
கள்ளமௌனம்காத்து தவிர்க்கிறோம் பதிலை.

வனம் கனலுதலென்பது வரலாற்றில் புதிதல்ல…
தானே எரியும் வனம் தானே அணையும்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுத்தாலும் ஏற்றாலும் மாறா நியதி..
சிலேட்டுப்பலகையில் அழித்தெழுதும் சிறுமியென.
வனமழித்து வனமுயிர்த்தலுன் வாடிக்கை
பச்சாதாபமின்றி பற்றியழித்துப் பார்ப்பதுன் வேடிக்கை.
அழிகின்ற வனத்தின் சாம்பலுரம்
எழுகின்ற வனத்திற்கு அடியுரம்
எல்லாமறிந்தும் ஏனோ மனக்கலக்கம்
எதார்த்தம் உணர்ந்தும் எழும் மதிமயக்கம்

எரிந்தடங்கிய பொழுதொன்றில்
என்றாவது விழும் வான்துளியொன்றில்
பெரு நம்பிக்கையோடு எழக்கூடும்
நாளைய தருவின் கருக்கூட்டம்.
அழித்தொழித்த பின்னும் முளைவிட்டு தளிர்விட்டு
அடுத்தொரு வனம் வளரும் அதிசயமே
மண்ணுயிரை வாழ்விக்கும் மகத்தான அதிசயம்.

– கவிஞை. கீதமஞ்சரி. மதிவாணன், சிட்னி, 24.11.2019 –

…………………………………………………………………………………………….

காட்டுத்தீ

ஓர் வறண்ட நாளில்

ஒளிரும் சிவப்பில்

நடுங்கும் கண்களும் கூசும் வண்ணம்

மிகச்சிறிய தீப்பொறியொன்று

ஏணியின்றி வானத்தில் ஏறியது

 

இதுவரை உதவிய

பொல்லாத காற்றும்

நெருப்பைத் தனக்குள் வளைத்துப்போட

குதிரையைவிட அதிகமாய்ப் பாய்ந்து

போட்டி போடுது பகைவனாய் நின்று

 

மண்ணின் புதையல்கள்

வாழ்க்கையின் சேமிப்பை

வேகமாக இழந்துகொண்டிருந்தன

 

மிருகங்கள் பறவைகள்

மற்றும் மரங்களின் ஓலங்கள்

உதவியைநாடி ஒன்றாக ஒலித்தன

 

வானத்தின் மாடத்தில்

எந்த நட்சத்திரமும் பிரகாசிக்கவில்லை

 

பெரிய பறவைகள்

பாதுகாப்பை நோக்கி மேலே உயர

பயமறியாத சிறிய பறவைகள்

கீழே விவாதித்துக் கொண்டிருந்தன

 

ஒரு மனித முனகல்

குரங்கின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது

ஒரு தாடி வைச்ச குவாலா

நிர்வாணப்பட்டு நிற்கதியாய் நின்றது

 

கடுமையான வெப்பம்

காலில் பரவ

சிறு முயலின் பாய்ச்சல்

மரணத்தை நோக்கி மெதுவாகச் சென்றது

 

உடல் உழைப்பில்

சற்று ஓய்வெடுத்த

கால்நடை ஒவ்வொன்றும்

காட்டுத்தனமாக சவாரி செய்தன

 

எரியும் தீயில்

செயலிழந்த சிறிய பிஞ்சுகள்

வலியால் கதறித் துடித்தன

 

இன்னும் காடு எரிகிறது

இன்னும் வெப்பம் உலை போல் கொதிக்கிறது

 

நீண்ட நெடிய மரங்களே

உங்கள் பாதங்கள் வேரூன்றிய போதும்

இரக்கமற்ற நெருப்பிற்குத் தலைவணங்குங்கள்

 

சிறிய கிளைகளே

உயிருக்கு மன்றாடி

உங்கள் கைகளை உயர்த்துங்கள்

 

நாளைய விதைகளே

நெருப்பால் உடைபடும் வரை

செயலற்ற நிலையில் மறைந்திருங்கள்

 

எந்தக் குளிர்ந்த படுக்கையிலும்

இந்த நெருப்பு படுத்துக் கொள்ளாது

 

என் இதயம்

மரங்களுக்கும் அப்பால் செல்கிறது

 

கருப்பு உடை தரித்து

புகைபோக்கிபோல் தனித்து நிற்கும்

எரிந்த மரங்கள் வழியே

என் தேசத்தைப் பார்க்கிறேன்

சேகரிப்புக்காய் காத்திருந்த

என் உறவுகளின்

உடல் வரிசையைப் பார்க்கிறேன்

இன்னும் சில மரணங்களும்

உயிர்களும் எஞ்சியுள்ளன

 

இப்படியே போனால்

எத்தனை பேர் மிஞ்சுவோம்

 

இயற்கையைக் காயப்படுத்தி

அணுசக்தி யுத்தம் பேசும்

புத்திசாலிக் கூட்டமே

அழிவு என்பது

நாம் கற்றுக்கொண்ட ஓர் வாழ்க்கை முறை

 

எரிந்தவற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்

தடவிக் கொடுப்போம்

தப்பித்த வேர்கள் மீண்டும் முளைக்கட்டும்

இயற்கை நன்றியுடன் சிரிக்கட்டும்

கவிஞை செளந்தரி. கணேசன், சிட்னி, 28.11.2019

…………………………………………………………………………………………………………………………………..

 

20/20 இல் 50/50 – கவிஞர். குமாரசெல்வம்

உயர்திணை அன்பர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்!

பல மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் புத்துணர்வோடு நாம் எழுந்து வருகிறோம்.

uyarthinai-logo

புது வருடத்தில் (2020) இருந்து பல புதிய விடயங்களை அவுஸ்திரேலிய மண்ணில் காத்திரமாய் கொடுக்கலாம் என்பதை இலக்கியக் குழுவினராக நாம் மனமார நம்புகிறோம்.

அது பற்றிய உரையாடல் நிகழ்ந்த போது, உடனடியாக நம் கவிஞ அன்பர்; நம் உயர்திணையின் ஆரம்பகாலத்தில் இருந்து தன் பங்களிப்புகளைச் காத்திரபூர்வமாக, ஆத்மார்த்தமாக அளித்து வரும் கவிஞர். குமாரசெல்வம் அவர்கள் இயற்றி அனுப்பிய கவிதையை நம் எல்லோருக்குமாக ஓர் உற்சாக பானமாக இங்கு பிரசுரிக்கிறேன். அது ஒரு விடிகாலை நேர ஒரு குவளை தேனீரின் உற்சாகத்தை தரவல்லது என்பது என் நம்பிக்கை!

தமிழின் அமுதமெனவும் இங்கு அது அளிக்கப்படுகிறது.

நேற்றயதினம் ( 14.11.2019 ) அன்று கிட்டிய கவிதை இது.

மனமென்ற ஒன்றினை

குணமென்ற இரண்டினை

இணைத்திட்ட உயர்திணை

இதற்குண்டோ ஈடு இணை!

 

துளிர்விட்ட சிந்தனைக்கு

தூயவனென் வந்தனை!

குளிர்விட்டு வசந்தம் வர

கூடி அமைர்வோம் கூற்றுப் பெற!

 

மலர் மலராய் சேர்ந்தோம்

மாலையாகக் கூடுவோம்!

வண்ணம் வண்ணமாய் கரைந்து

வானவில்லாய் மாறுவோம்!

 

உயர்திணைக்கு வேண்டும் நம்

ஒவ்வொருவர் உறுதுணை

ஒன்றிணைவோம் வரும் ஆண்டு

20/20 ( Twenty / Twenty )

உழைப்பும் தொண்டும் நமக்குள்

50/ 50 ( Fifty / Fifty )

  • கவிஞர். குமார செல்வம். 14.11.2019