RSS

Category Archives: Uncategorized

‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு

இனிய அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!

பல்கலாசார நாடான இங்கு நாம் நலமே இருக்கிறோம். வளமோடும் பாதுகாப்போடும் கூடவே,

எனினும் உலகம் முழுவதிலும் நிறம், இனம், மதம், மொழி, தேசம் என்று பல பல காரணங்களுக்காக நாட்டில் அநீதிகள் நடந்த வண்ணமே உள்ணன. ஈழ நாட்டில் சிறுபாண்மை இனத்துக்கெதிராகவும் அவுஸ்திரேலியாவில் இந் நாட்டு பழங்குடி மக்களுக்கெதிராகவும் நடந்து கொண்டிருக்கும் மனிதாபிமானமற்ற கொலைகளும் வன்முறைகளும் அற்ப காரனங்களுக்கான உயிர் பறிப்புகளும் இறப்புகளும்  நாம் ஒரு நாகரிகமான உலகத்தில் தான் வாழ்கிறோமா என்ற சிந்தனையை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவருடய கொலை – அதுவும் வெள்ளையரான பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டதென்பது உலகம் பூராகவும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

cnn

அது உலகம் பூராவுக்குமான ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக; கொரானா கட்டுப்பாடுகளை மீறி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அக் கறுப்பின மனிதர் George Floyd இனை விழுத்தி கழுத்தில் அதிக அழுத்தம் கொடுத்து கொன்ற வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை உலகமெங்கும் கொடுக்கிறது. அதே நேரம் ‘Black lifes matter’ போராட்டத்தின் போது ஒரு கருப்பினத்தவர் காயப்பட்ட வெள்ளை இனத்தார் ஒருவரை தூக்கிச் செல்லும் காட்சி இரு கறுப்பு / வெள்ளை இனத்தாரிடமும் இருக்கிற சிந்தனையின் வேறுபாட்டை சுட்டிக்காட்டும் விதமாக உலகமெங்கும் பரவி வருகிறது.

அதே நேரம் இந்தப் போராட்டத்தின் போது வெள்ளை இன பொலிஸ் ஒருவரின் முன்னால் ஒரு இளம் கறுப்பினப் பெண் அழுவதும் அவளை அணைத்து அப் பொலிஸ் அதிகாரி ஆறுதல் சொல்லும் வீடியோ காட்சியும் அனைவர் மனதையும் உருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

பொலிசோடு அழும் காட்சி

இவை எல்லாம் மீடியாக்களின் வலிமையையும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தையும் யாரும் தவிர்க்க முடியாதபடி நம் வீட்டு வரவேற்பறைக்குள்ளே வருகின்றன.

நாம் நம் சமூக கடமைகளை செய்யவேண்டிய நேரமிது. சமூக நீதிக்காக குரல் கொடுக்க சக மனிதனாக சக மனிதனுக்கு நடக்கும் அநீதிக்கெதிராக குறைந்த பட்சம் குறைந்த பட்சம் ஒரு கவிதையாவது நாம் தர வேண்டாமா?

CamScanner 06-17-2020 10.29.57

உலகம் முழுக்க பேனாக்களும் இலத்திரனியல் ஊடகங்களும் நீதிக்கான குரலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பேனாக்களும் அவற்றுக்காகக் கொஞ்சம் உயிர்க்கட்டுமே!

இம்மாத இறுதிக்கிடையில் ( 30.6.2020) உங்களுக்குரிய தனிமனித சுதந்திரத்தோடு உங்கள் கவிதைகளைத் தாருங்கள்.

கவிதைகளை uyarthinai@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த மாத முதற் கிழமையில் அவை கிடைக்கப் பெற்ற ஒழுங்கில் பிரசுரமாகும்.

மிக்க நன்றி.

தமிழால் இணைந்திருப்போம்.

 
Leave a comment

Posted by on 17/06/2020 in Uncategorized

 

கொரோனா வைரஸ் குறித்த கவிதைகள்

    1. கொரோனா

    கவிஞர். எ.இரவிச் சந்திரன், பிறிஸ்பேன். ( 15.03.2020 )

உலகத்தையே நடுங்க வைக்குது கொரோனா

உடைத்தெல்லாத் தடையும் தாண்டி வரானாம்

கலகத்தையே காணுது பார் அங்காடி

காணோம்’அந்தக் காகிதமே’ எங்கேடி

விலகியோடு எங்கும் கண்டால் தும்மலே

விபரீதம் என்ன ஆகுமோ தெரியல

நிலையில்லாத வாழ்க்கை என்று உணர்த்துதே

நிதமும் வாழு அன்பு ஒன்றே உயர்ந்ததே.

  கவிஞர். எ. இரவிச் சந்திரன், பிறிஸ்பேன்.

  15.03.2020

………………………………………………

 

2. கொல்லுங் கொரோனா

                கவிஞர்.த. நந்தி வர்மன், ( 23.3.2020.)

கிருமி கொரோனா எம்மைத் தாக்கக்

கிலிதான் பிடித்து வாழ்கின்றோம்

இருமல் வந்து இறக்கும் நோயால்

இதயம் கலங்கி நிற்கின்றோம்

செருமல் கேட்டால் கூட நாங்கள்

செத்தோம் என்றே நினைக்கின்றோம்

வருமோ வருமோ என்றே பயந்து

வாழ்வை இழந்து நிற்கின்றோம். (1)

 

எதனால் இந்த நிலைமை எமக்கு

என்றே எண்ணிப் பார்த்தோமா?

முதலில் அதனை நினைத்துப் பார்த்து

முழுதாய் வாழ முனைவோமா?

இதயந் தன்னில் அதனை ஏற்று

இனிதாய் வாழ நினைப்போமா?

அதனை இல்லை என்றே மறுத்து

அவனி முழுதும் அழிப்போமா? (2)

 

மனித நேயங் கொண்டு வாழ

மறுத்து பகையை வளர்த்தோம் நாம்!

புனிதர் போல் மதத்தைச் சொல்லி

புவியில் கொலைகள் செய்தோம் நாம்!

இனிதாம் உலகில் இயற்கைப் பொருளை

எமதே என்றே அழித்தோம் நாம்!

மனதில் பொறாமை கோபம் ஆசை

மறுத்து வாழ மறந்தோம் நாம்! (3)

 

இறைவன் தந்த இந்த உலகில்

இயல்பை மாற்ற நினைத்தோம் நாம்!

குறைகள் வளர்ந்து குணங்கள் இழந்து

கொள்கை இன்றி வாழ்ந்தோம் நாம்!

துறைகள் தோறும் வேட்கையாலே

முறைகள் மாற்றத் துணிந்தோம் நாம்!

இறைவன் கோபம் கொண்டால் எல்லாம்

பொடிதான் என்றே மறந்தோம் நாம்!. (4)

 

துன்பந் தொலைக்கும் வழியே இன்றி

துவண்டு நிற்கும் மனிதர்காள்!

முன்னர் வாழ்ந்த வாழ்வில் மாற்றம்

முடிவாய் காண முயல்வீரோ?

இன்பவேட்கை பகைமை வளர்த்து

இயற்கை அழித்து வாழ்வீரோ?

அன்பை வளர்த்து ஆசை அறுத்து

அகிலங் காத்து வாழ்வீரோ? (5)

கவிஞர்.த. நந்தி வர்மன்,

23.3.2020.

…………………………………………………………

  3. கவிஞர்: மது.எமில் ( 30.3.2020.)

அது இங்கே வந்தது

எது எங்கே போனது

இது இதுதான்…

 

யாருக்கும் காட்ட முடியவில்லை

யாராலும் தொட முடியவில்லை

யாமார்க்கும் குடியல்லோம் என்ற

மனிதனுக்கு யமனாகி வந்ததன்றோ?

 

கைகளால் உழைத்தார்

சிந்திய வியர்வையை

கைகளால் துடைத்தார்

கையெடுத்துக் கும்பிட்டு

கைகளால் பரிமாரினார்

 

என் கையே எனக்குதவி

என்றிருந்த நாலை மறந்து…

தன் கைநீட்டி நின்றார்

விஞ்ஞானத்திடம்…

 

இன்று கைகளைக் கழுவுகின்றார்

தாம் செய்த தவறை உணர்ந்தவராய்…

* இதுவும் கடந்து போகும்

 

இனிவரும் தலைமுரையும்

புதுயுகம் படைக்கும்

அங்கே கர்வம்

கண்மூடிக் கொள்ளும்.

கவிஞர். மது. எமில் 

30.3.2020.

…………………………………….

                      4. அவுஸ்திரேலியாவின் நிலை

                      கவிஞர்.ஆறு.குமாரசெல்வம் ( 22.4.2020.)

தீயில் கொல்வதும் – கொரோனா

நோயில் கொல்வதும்

தெய்வத்தின் செயலோ?

 

தேதியாய் தேய்ந்து

தேனடையாய் காய்ந்தோரை

தீய்ப்பதும் மாய்ப்பதும்

முறையோ?

 

இறைவா என்றே

இடைவிடாது நின்றே

இசைத்தார் நன்றே ஆயினும்

 

நோயும் மென்றே

நொடியில் தின்றே

நோகடிக்குது கொன்றே!

 

உலகின் நிலை

 

முதுமையைப் பாரமென்பார்

புதுமையைப் பாரடா பாரிலே

கதையைப் பொய்யாக்குவோம்

கரோனா கிருமியை இல்லாதாக்குவோம்!

 

கட்டி அணைப்பதும் இதழை

ஒட்டி இழுப்பதும்

தட்டிப்பறிக்கும் உயிரை

தவிர்ப்போம் காப்போம் உயிர்ப்பயிரை!

 

அளவுக்கு மிஞ்சினால்

அமிர்தமும் நஞ்சு

அதை மறக்கும் போது தான்

அதிகம் துடிக்கிறது நெஞ்சு

 

ஆளைக் கொல்லுதாம் கிருமி மனம்

அவதிக்குள்ளாகுது பொருமி

வேளைக்குப் பலரைக் கொன்று

வேட்கை தணியுமோ தின்று?

 

மனித சதியோ? அன்றிது

மகேசன் இட்ட விதியோ?

புனிதம் போற்றும் புவியெங்கும்

மனிதர் நோயால் மாய்வது முறையோ?

 

ஓரணியில் உலகோ ரெல்லாம்

ஒன்றிணைந்தால் வெல்லலாம்

பேரணியைத் தவிர்த்து நின்று நோயற்ற

பெருவாழ்வை நாம் வாழலாம்!

 

வாழும்வரை நல்லவராய் நின்று

வாழும் மனிதகுணம் உள்ளவராய்

நாளும் நன்மை செய்திடுவோம்

நற்கதி நாமும் எய்திடுவோம்.

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

22.4.2020.

………………………………………..

5. பாமதி. சோமசேகரம் ( 25.4.2020.)

தன் கண்களாலே காணமுடியாத

ஒரு கொலையாளியிடமிருந்து

எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது?

 

ஒருமனிதன் நீண்ட நேரம் அமர்ந்து

சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

அவசரமாக வீதியில் இறங்கி நடந்தான்.

தன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும்

முறைத்துப் பார்த்தான்.

தன் மூக்கை மூடிக் கொண்டே

வீட்டுக்கு ஓடினான்.

வீட்டின் கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டான்.

யன்னல்களை இழுத்துப் பூட்டிக் கொண்டான்

அறையில் நிறைந்திருக்கும் காற்றை

கைகளால் துளாவினான்.

நீ எங்கே இருக்கிறாய்? பேசு! என்று

கோபமாய் சத்தமிட்டான்.

தன் கண்ணாடில் தன் விம்மத்தைச்

சந்தேகத்துடன் பார்த்தான்.

தன் கண்களை விரித்து

தன் கண்ணுக்குள்ளே பார்த்தான்.

 

சாடையாக இருமினான்.

தன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான்.

மறுபடியும் இருமினான்.

நாசங்கெட்ட சனியனே நீ

எனக்குள் தானா இருக்கிறாய் என்றான்.

இதோ உன்னைக் கொல்கிறேன் பார்

என்று ஆவேசமாய் கத்தினான்.

அறையின் பலகணிக் கதவைத் திறந்தான்.

சுவர் விளிம்பில் ஏறி நின்றான்

செத்து ஒழி சனியனே என்றபடி

தரை நோக்கி பறந்தான்.

 

யார் இப்போது வைரஸ்?

மனிதனா.. கண்ணுக்குத் தெரியாத

அந்தக் கொலையாளியா?

 

எல்லாம் கலந்த பின்

மனிதனே வைரஸ்

வைரஸே மனிதன்.

கவிஞர். பாமதி. சோமசேகரம்

25.4.2020.

…………………………………………………

6. கொறோனா’விற்கோர் கவிதை!

கவிஞர். பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

பழந்தமிழன் வாழ்க்கைமுறை பழக்கவழக் கங்களையும்
பலன்தருநற் பண்பட்ட விழுமியங்கள் பலதினையும்
இழந்திடாது ஓம்பிடுவீர்! ஈடிணையி லாதவற்றை
எந்நாட்டு மக்களெலாம் இதமாகப் பின்பற்றிப்
பழக்கமாய் நடைமுறையில் பகலிரவாய்ச்; செயவைக்க
எங்கிருந்தோ வந்ததையா! எங்குமதன் பேச்சுத்தான்!
மழமழவென் றேபெருகி மன்பதையை அழித்துவரும்
மாபெரும் உயிர்க்;கொல்லி கொறோனா வைறஸ்சே!
————————————————————————————-

“கொறோனா’ வாய்திறந்தால்…..

கொட்டிடுமே கவிதை” — கேட்டிடுவீர்!

இயற்கையை அழித்திட்டு எழிற்சுற்றம் பாழாக்கி
இதமான காற்றினையே மாசுபடச் செய்திட்டு
செயற்கையிலே வாழ்ந்திட்டு தேடியே’போர்’ ‘கொலைகொள்ளை’
செய்துவரும்; மானிடரே செப்புவதைக் கேட்டிடுவீர்!……….

பேய்போலப் புலப்படாத் தோற்றமுடன் உலகமெங்கும்
பெருகிவிட்ட என்குலத்திற்(கு) இனியபெயர் தேர்ந்தெடுத்து
‘நோயாகப் பெருமளவில் நொடியிற்பர வக்கண்டு
நொந்துநல் லோரைதனில் “கொறோனா’ வெனப் பெயரிட்டார்!:

ஊனக்கண் கொண்டென்னை ஒருவருமே கண்டிலரே!
ஞானக்கண் கொண்டுசைவ ஞானியரும் என்றைக்கோ
வானத்திற்; சுற்றிவரும் வடிவங்கள் அறிந்தபோதே
வகைவகையாய் வரவிருக்கும் ‘வைறஸ்’சையும் அறிந்தாரே!

மனிதகுலம் இயற்கைதனை மண்ணாக்கி மகிழ்கிறதே!
புனிதமிகு தென்றலுமே புழுதியுடன் வீசிடுதே!
அநியாய மாயுயிர்கள் பலவழியால் இறக்கிறதே!
இனிப்பொறுக்க முடியாது பழிவாங்க நான்வந்தேன்!

அன்றுவாழ்ந்த தமிழர்தம் அறவாழ்க்கை நானறிவேன்!
வென்றவர்கள் ஞானறிவால் மேலோங்கி இருந்தார்கள்
அன்றென்போர் அவர்பக்கம் அணுகிடவோ அஞ்சிநின்றோம்!
இன்றுலகின் அவலநிலை கண்டஞ்சாது வந்திட்டேன்!

கண்டவுடன்; கைகுலுக்கி; இறுகணைத்தல் அன்றில்லை!
கருணையொடு எட்டிநின்று கைகூப்ப நான்கண்டேன்!
கொண்டவளை யன்றிப்பிற மாதர்கொஞ்சக் காணவிலை
குடும்பமென்றால் ஒருவனுக்கு ஒருத்தியென வாழக்கண்டேன்!

மருந்தெனவே உணவுதனை உண்டுவந்த காலமது!
மறந்திடாது கையலம்பி இறைதொழுது உண்டார்கள்!
விருந்தினர்க்கும் செம்பினில்நீர் கொடுத்துக்கை அலம்பவைத்து
விதம்விதமாய் அறுசுவையோ டமுதளிக்க நான்கண்டேன்.

ருசியான குத்தரிசி குரக்கன்சம் பாதினையும்
புரதமிகு தானியமும் இஞ்சிமஞ்சள் மிளகுசுக்கும்
புசித்துவந்தார் நானறிவேன்! போற்றுகிறேன் அவர்களன்று
பசித்திடமுன் உண்டிடாது பலன்கண்டார் மெச்சிநின்றேன்!

கோலமிட்டு மஞ்சள்நீர் தெளிப்பதொடு கோமயத்தால்
குடிசைநிலம் மெழுகுவதின் சிறப்பையெலாம் கண்டுவந்தேன்!
காலணியை வெளிவிட்டுக் காலலம்பி வீட்டிற்குள்
காலடிவைத் துச்சுத்தம் காத்தவர்கள் தமிழரன்றோ?

ஒருவருக்குத் தொற்றுநோய் உண்டென்று கண்டவுடன்
ஓரறையில் தனிமைப் படுத்திவைத்துப் பராமரிப்பர்!
திரைமறைவில் வேப்பமிலைக்; கொப்பதனைத் தொங்விட்டு
தினம்மஞ்சள் நீர்தெளிப்பர் தீபதூபம் காட்டிடுவர்!

முற்றமதில் வேம்பிருக்கும் மூலையிலோர் துளசிமாடம்
பெற்றுநின்றார் போதுமான பிராணவாயு அப்பாடா!
சுற்றுப்புறத் தூய்மையொடு இயற்கைவளம் பேணிவந்தார்!
கற்றவற்றை நடைமுறையிற் செயற்படுத்திப் பயன்பெற்றார்.

தொன்றுதொட்டுத் தமிழரோம்பி வந்தநல்ல பழக்கமெலாம்
நன்றுநன்று உலகமக்காள் நாள்தோறும் ;;கடைப்பிடிப்பீர்”
என்றுநானும் நினைத்தவுடன் எங்குமதை உலகெங்கும்
இன்றுகடைப் பிடிக்கின்றார் இனியதென்றுந்; தொடரட்டும்!

பாடசாலை தொழிற்சாலை பலவற்றை மூடவைத்தேன்
பலரின்வாய் மூக்கிற்குக் ‘கடிவாளம்’ போட்டுவைத்தேன்
கூடிப்பலர் பேசுவதும் கொஞ்சுவதும் கைகுலுக்கிக்
கூத்தாடும் போக்கெல்லாம் தவிர்த்திடவே ஆணையிட்டேன்!

காரசார மான’ரசம்’ காசினியில் மணக்கவைத்தேன்
கசந்திடுமெம் மஞ்சளிலே தேநீரும் போடவைத்தேன்!
ஆரவாரம் இல்லாது வீட்டிலிருந்து வேலைசெய்து
அன்போடு குடும்பத்தைப் பார்த்திருக்க வழிசமைத்தேன்!

‘கலகத்தைக் கடும்போரைக்’ கைவிட்டு ஒற்றுமையாய்க்
காசினியிற் சமாதானம் நிலைக்கவழி சமைக்காது
உலகத்து நாடெல்லாம் என்னையின்று ஒழிப்பதிலே
ஒன்றுபட்டு ஒற்றுமையாய் ஓலமிடக் காண்கின்றேன்!

‘பாரதி’லே பலநாட்டிற்;;பவனிவநம் உயிர்க்கொலியாய்
‘பாரதி’ர்ந்து ஓலமிடப் பேரழிவு செய்கின்றேன்!;
‘பாரதி’யின் அருள்பெற்றுப் பாவெழுதும் பாவலனாம்
‘பாரதி’யைக் கொண்டின்று பாவெழுதச் செய்துவிட்டேன்!.

உலகத்தில் மனிதரெலாம் ஒற்றுமையாய் அன்பென்னும்
ஒருராகம் பாடிடாது ஒப்பரிய இயற்கையொடு
பலவழியில் ஒன்றுபடாப் பாழ்நிலையைக் கண்டேனெனில்
பலவைறஸ் கூட்டிவந்து பலியெடுப்பேன் யாக்கிரதை!!

……………. இப்படிக்கு உயிர்க்கொல்லி “கொறோனா”

இவற்றை வெல்ல என்ன செய்வோம்??

மறுபிறவி பிறந்திடாதோர் முத்திநிலை அடைந்துய்யும்
வகைதெரிவீர்! சிவத்தொண்டு சிவத்தியானம் இயற்றிவீர்!
நெறிநின்று இருக்கும்வரை நீவிரிமைப் பொழுதெலாம்
நெஞ்சிலுறை பரம்பொருளை நினைந்தேத்தி வாழ்ந்திடுவீர்!

பிறைசூடி பாகத்தாள் பெய்தளித்த ஞானப்பால்
குறையாது பருகித்தேன் தமிழில்மந் திரமாக
மறைஞான சம்பந்தன் அருளியதிரு முறைகளைநாம்
முறையாக ஓதிவரக் கொறோனாவும் விலகிடுமே!

பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

29.4.2020

7. கொரோனாவை நினைத்த படி….

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு….

குர் குர் சத்தங்கள்…
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்…
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்…
குறு குறு பார்வைகள்…
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்…
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்…

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு…
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை…
தாயாகும் தந்தைமை…
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு….

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து….
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து….
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து…
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து….
………………..

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல….

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு….

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு….

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்

2.5.2020.

 
Leave a comment

Posted by on 01/05/2020 in Uncategorized

 

கொரோனா – கவிதைகளுக்கான அழைப்பு

corona

2020 உலகுக்கு அறிமுகப்படுத்திய; இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடிய கிருமி கொரோனா. coronavirus அல்லது covid 19 pandemic என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லிக் கிருமி உலகத்தையே முடக்கிப் போட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் சீனாவில் உள்ள Wuhan மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த உயிர்கொல்லிக் கிருமி இன்று மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.  உலகளவில் 2,704,676 பேர் பாதிக்கப்பட்டும் 738,032 பேர் குணமாகியும் 190,549 பேர் இறந்தும் போயுள்ளனர். ( 22.4.2020 திகதிக் கணக்குப் படி)

கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு உலகம் போராடுகிறது.

இவ் வருட ஆரம்பத்தில் நடந்த அனர்த்தமான காட்டுத்தீயில் இருந்து அவுஸ்திரேலியா தன்னை சுதாகரித்துக் கொள்ளுவதற்கிடையில் இங்கும் கொரோனா வைரசின் பரவல் நாட்டை முடக்கிப் போட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து போயுள்ளனர். அநேக வியாபாரத் தலங்கள் மூடப்பட்டு விட்டன. பாடசாலைகள் இயங்குவது கணனி வழியிலானதாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் அநேகர் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். பொது கேளிக்கைகள், கடற்கரைகள், இறப்பு வீடுகள், திருமணங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளுக்குள் திடீரென முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களின் இந்த எதிர்பாராத முடக்க நிலையும் நிதி நிலவரம் போன்ற இன்னோரன்ன காரணங்களும் மக்களை மனதளவில் பெருமளவில் பாதிக்க, அதன் காரணமாக மதுபாவனை அதிகரிப்பும் குடும்பவன்முறைகளும் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கணக்குச் சொல்கிறது. அந்த நிலையை நீக்குவதற்காக அரசு மேலதிகமாக பல இலட்சங்களை ஒதுக்கி இருக்கிறது. ஆஸ்பத்திரிகளோ நோயாளிகளால் நிறைந்து போயுள்ளன. 22.4.2020 கணக்கெடுப்பின் படி அவுஸ்திரேலியாவில் 6,667 பேருக்கு இந் நோய் அடையாளம் காணப்பட்டும் அதில் 5,095 பேர் குணமாகியும் 76 பேர் இறந்தும் போயுள்ளனர்.

தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாதிருக்கும் இன்றய நிலையில் அதன் துரித பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் வேண்டி Social Isalation என்னும் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

அது பல்வேறு விதமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நன்மையும் தீமையும்; குழப்பமும் பிரச்சினைகளும் சட்ட அமைவுகளும் தீர்வுகளுமாக சமூகம் முன் எப்போதும் நம் வாழ்நாளில் சந்தித்திருக்காத புதிதான நிலை ஒன்றை எட்டி இருக்கிறது.

அது குறித்து நம் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கருத்தோவியங்களை; கவிபேழைகளை; உணர்வில் தோய்ந்த கான பெட்டகங்களை; உயர்திணை அவுஸ்திரேலிய தமிழ் கவிஞர்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக இங்கு ஆவணப்படுத்த விளைகிறது.

அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!

உங்கள் கவிமழைகளை இம்மாத இறுதிக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் அத்தனை பேரின் கவிதைகளும் அதன் திகதி வாரியாக அடுத்த மாத ஆரம்பத்தில் இதே தளத்தில் நிச்சயமாகப் பிரசுரமாகும்.

காலப்போக்கில் இதுவரை வெளிவந்தவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதாஆவணமாக ஆக்குவது எங்கள் நோக்கமாகும்.

 
Leave a comment

Posted by on 24/04/2020 in Uncategorized

 

மழை

மழை பொழிந்தது!

நீண்ட பெரும் காத்திருப்புக்குப் பின் மழை சோ எனப் பெய்தது. நிலம் குளிர்ந்தது. மனம் நிறைந்தது.

இரண்டு கவிஞர்கள் அதனை தம் கவிக் கிண்ணங்களில் ஏந்தி இங்கு தருகிறார்கள்.

 

1. கவிஞர். பாமதி சோமசேகரம்

rain

ஒரே ஒரு மழை

லட்சம் மழைத்துளிகள்

பறக்கும் பந்து போல அசுரக்காற்று

பெருத்த கண்களையொத்த

நீர்த்துளிகள்.

 

யன்னல்கள் பூத்தகண்கள்

வாஞ்சையாய் அழைக்கின்றன

வேர்த்துக் கிடக்கும் கண்கள் அவை.

அழமறுக்கும் கண்கள் அவை.

 

மழைக்குள் கோபம்.

காடுகள் தீப்பற்றி எரிந்த கோபம்

காற்று மரங்களின் தலையை

பிடித்து கோரமாய் ஆட்டியது.

எங்கே பிஞ்சுப் பறவைகள்

என்றழுதது…..

பற்களை நறநறவென்று நெரித்து

வீடுகளை முட்டி மோதியது.

இறுதியாக அது எதையோ பேச

விரும்புகிறது.

 

மனிதர்கள் எல்லோரும் ஒளிந்து

கொண்டார்கள் கோழைகள்…

வீட்டின் கூரைகள்

மூடப்பட்ட சவப் பெட்டிகள் போல

மழையில் மெளனமாய் நனைந்தன.

நான் மட்டும் எப்படி வெளியே வந்தேன்?

இப்போது மழையானேன்?

ஏரிகளின் எல்லைகளை உடைத்து

ஓடினேன்..

மண்ணைத் தன்னில்

சுமந்து கொண்டோடிய

வெள்ளத்திடம் மறக்காமல் கேட்டேன்

இப்போது இது யார் தேசமென்று…

வாகனங்கள் வரும் தெருக்களில்

நின்று கைகளை அசைத்து

நர்த்தனமாடினேன்

அடர்காட்டின் நிலங்களை

மூடியிருந்த

வேர்களை விரல்களால்

தொட்டு ஸ்பரிசித்தேன்.

பறக்கும் மழைத்துளிகளின்

இறகுகளை முத்தமிட்டேன்…

 

மழை பாடியது காற்றின் பாடலை

அலைகளின் பாடும் அதே ஓசை.

வெள்ளைக் கடலொன்று

அலைகளை எறிந்து விட்டு காற்றில்

ஏறி மிதக்கிறது

மழையென்றே!

 

எங்கு ஒழிந்து கொண்டாய்?

என் நூற்றாண்டுக் காதலனே,

வெளியே வா!

காற்றில் மிதக்கின்ற கடல் போல

நாமும் மழையில் நனைவோம்.

மழை பாடும்

பிரபஞ்ச ஆத்மாவின் பாடலை

சேர்ந்தே இசைப்போம்.

மழைத்துளிகளால் நனைந்த

நம் உடல்களை பூமியின் நிலத்தில்

விதைப்போம்.

 

நாளை

நானும் நீயும் ஒரு பச்சை

வனமாவோம்

பறவைகளைச் சுமப்போம்.

காட்டுத்தீயை விழுங்குவோம்.

செந்தீயில் மறுபடியும் மறுபடியும்

பல நிலங்களாக வானத்தைப்

பார்க்க உயிர்ப்போம்.

பூமியின் மண்ணை எம் மூச்சில்

சுமப்போம்….

 

இப்போதே பறந்து வா என்னுடன்….

கவிஞை. பாமதி சோமசேகரம் – 9.2.2020.

……………………………………………………………………………..

rain 1

       மழையே தொடர்வாய்

                                    கவிஞர். நந்திவர்மன்

மழையே பொழிவாய் மனது மகிழ

அழைத்தோம் வந்தாய் அன்பே நன்றி

அழிவைத் தடுக்கும் ஆற்றல் உடையாய்

குழைகள் தளிர்க்கக் கூடப் பெய்வாய்! (1)

 

காதல் இல்லாக் கணவன் போலே

வாதஞ் செய்து வாராதிருந்தாய்

பேதங் கொண்டாய் பின்னை வந்த போதும்

உடனே போனாய் ஓடி! (2)

 

எங்கே காணோம் என்றே தேடி

மங்கும் மனமாய் மகிழ்ச்சி இழந்தோம்

பங்கம் தீர பச்சை எங்கும்

பொங்கும் வரைக்கும் பொழிந்து போவாய்! (3)

 

பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்

உள்ளம் குதிக்க ஒலிக்கும் இசையாய்

வெள்ளம் போடும் வேக மழையாய்

வள்ளல் போலே வாரி வழங்காய்! (4)

 

எந்தாய் போலே இரக்கம் கொண்டு

வந்தாய், இன்றுன் வரவால் மகிழ்ந்தோம்

தந்தாய் தண்ணீர் தழைக்க நாங்கள்

எந்தை பெருமான் ஈசன் அருளே! (5)

 

கவிஞர். த. நந்திவர்மன், தை 2020.

 
Leave a comment

Posted by on 23/04/2020 in Uncategorized

 

காட்டுத் தீ – மழைக்கான கவிதை –

2020 ஜனவரி மாதம் நாம் நம் வாழ்நாளில் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு காட்டுத்தீயின் பரவலையும் சேதத்தையும் அவுஸ்திரேலியா சந்தித்தது.

புகை போர்த்த மண்டலமாய் வானுக்கும் மண்ணுக்கும் இடையிலான காற்றுவெளி கபில நிறமாய் சூழ, தீயின் வெப்பியாரத்தின்  பல்வேறு விதமான வடிவங்களையும் தீ பரவாத பிராந்தியங்களும் சந்தித்தன. பல இலட்சக்கணக்கான வனவிலங்குகள், விவசாயிகளின் கால்நடைகள், மாடுகள், செம்மறி ஆடுகள், குதிரைகள், கோழிகள், பூனை, நாய் ஆகிய வீட்டு உயிரினங்கள்,மரங்களில் வாழ்வன என சொல்லவொணா எண்னிக்கையில் செத்தொழிந்தன; கருகி மாண்டன.  பல இலட்சக்கணக்கான ஹெக்ரெயர் கொண்ட காட்டு வளங்கள் காணாமலே போயின. பல லட்சக்கணக்கான உடமைகள் சேதமாயின. சில மணித்துளிகளுக்குள்ளேயே பல ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாயினர்.

வாரக் கணக்காகச் சூரியன் சுட்டெரித்த படி இருந்தான். மருந்துக்கும் மழை இல்லை. இத்தகைய காட்டுத்தீயை எதிர்கொள்லத் தயாரான நிலையில் தீயனைப்புப் படையினரிடமும் போதிய வளங்கள் இருந்திருக்கவில்லை. சூரியனின் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 48 பாகையில் காய்ந்தது.

அவுஸ்திரேலியாவுக்குக் காட்டுத்தீ புதிதல்ல என்றாலும் இந்தக் காட்டுத்தீயும் அது விளைவித்த சேதங்களும் புதிது! 2020 புது வருடத்தின் தொடக்கமே நமக்கு சேதத்தோடும் உக்கிரமான சூரியனின் கோப நாக்குகளோடுமே தொடங்கி இருக்கிறது.

அது குறித்து நம் கவிஞர்கள் தந்த கவிதைகள் இங்கு பிரசுரமாகின்றன. அவற்றைப் பணிவன்போடு இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

bush fire. 2019 aus.

1.                                               மழையே பொழியாயோ?

கவிஞர் நந்திவர்மன். 

வருண பகவானே!

மழையாய் பொழியாயோ?

மரணப்படுக்கையிலே

மருண்டு நிற்கின்றோம்

தருணம் இதுவே தான்

மழையைத் தாராயோ?

கருணை காட்டாயோ?

கலக்கந் தீராயொ (1)

 

நாடு முழுவதுமே

நன்றாய்த் தீப்பற்றிக்

காடு எரிகின்ற

காட்சி கதிகலக்கும்

வீடு பல எரிய

விலங்கு பலமாள

பாடுபடுகின்றோம்

பதைப்பைத் தீராயோ? (2)

 

மெல்லப் பெய்தாயே

மேனி நனைந்திடவே

சொல்லிக் கொள்லாமல்

தொலைந்து போனாயே?

அல்லும் பகலும் நாம்

அல்லல் படுகின்றோம்

தொல்லை தீராயோ?

தொடர்ந்து பெய்யாயோ? (3)

 

தொடர்ந்து பெய்தால் தான்

துயரம் தீருமன்றோ?

அடர்ந்த காடெரியும்

அவலந் தீருமன்றோ?

படர்ந்த தியணையப்

பச்சை மரம் வளர

இடர்கள் போயகல

இசையாய் பொழியாயோ? (4)

 

நீண்ட காலங்கள்

நின்னைக் காணாது

வேண்டும் நீரின்றி

விதிர்த்துப் போனோம் நாம்

மூண்ட பெருந் தீயால்

முறிந்து போனோம் நாம்

மீண்டும் பெய்யாயோ?மேகம் பொழியாயோ? (5)

 

வரண்டு போனோமுன்

வரவைக் காணாமல்

இருண்ட காடெரியும்

எங்கும் தீப் பரவும்

திரண்டு அணைக்கின்ரார்

தீயோ அணையவில்லை

முரண்டு பிடிக்காதே

முகிலே பொழியாயோ? (6)

 

ஊழிக்காலத்து

ஒருவா சிவனேநாம்

வாழ வேண்டியுனை

வாழ்த்தி வனங்குகிறோம்

ஆழிக்கடலரையன்

அடமே பிடிக்கின்றான்

வீழும் மழையாகப்

பொழியப் பணிப்பாயே! (7)

 

– ஆழிக்கடலரையன் – கடலுக்கு அரசனாகிய வருணன்.

ஆக்கம்:த. நந்திவர்மன், சிட்னி, அவுஸ்திரேலியா, தை 7.2020.

 
Leave a comment

Posted by on 23/04/2020 in Uncategorized

 

மனித நேயம்

அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இம்மாதம் அதாவது ஜனவரி மாதத்துக்கான கவிதைத் தலைப்பாக ’மனித நேயம்’ என்பதை கவிஞர். ஆறு.குமாரசெல்வம் அவர்கள் பரிந்துரைத்திருந்தார்கள். அதற்கு, பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார். பாரதி அவர்களின் கவிதை மாத்திரம் வரக் கிட்டியது. கூடவே தைப் பொங்கலோடு கவிஞர் ஆறு. குமாரசெல்வம் அவர்களுடயதும்…இரண்டையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனினும், தாமதமாக அதனை இங்கு பகிர்ந்து கொள்வதை இட்டு மனம் வருந்துகிறேன்.

 

2w5nlzo

 

  மனித நேயம்

                 பல் வைத்திய கலாநிதி இளமுருகனார்பாரதி.

 

உள்ளமதிற் கிளர்த்தெழும்நற் குணங்கள்பல இணைந்த

உயர்ந்ததனிப் பெருங்குணமே மனிதநேயம் அன்றோ?

வள்ளுவனார்  குறள்கொண்டு மனிதநேயம் உரைத்தார்

மாதவத்துத் திருமூலர் மந்திரமாய்த் தந்தார்

தெள்ளுதமிழ்த் திருமுறைகள் அள்ளியள்ளி முகிழ்த்தன

சித்தர்கள் பலர்தோன்றிச் சிறப்பாக வளர்த்தனர்

கொள்ளைபோகா ததனைவருஞ் சந்ததியர் வளர்க்கக்

குழந்தைகளை வழிநடத்தல் பெற்றோர்கடன்  அன்றோ?

 

ஆதரவாய் உணவூட்டி வளர்த்துவரும் வேளை

அன்பதனின் இலக்கணத்தைப் பூரணமாய் விளக்கி

சாதகமாய் நற்பழக்க வழக்கமெலாம் பழக்கி

நல்லதொரு குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்க்க

பாதகமாயப்; பிறர்மனதை வருத்திடாநற் பண்பொடு

பரந்தமனப் பான்மைமிகு பாலகனாய் மலர

மாதவத்தால் பிறந்திட்ட பிள்ளைதானோ வென்று

மனிதநேயம் மிக்கோனெனப் பார்ப்பவர்வாழ்த் திடுவர்!

 

ஆறறிவு பெற்றிட்ட மனிதர்கள் சிலரில்

அரியபெரும் மனிதநேயம் வற்றிமறைந் ததாலே

வீறுகொண்டு விலங்குகள்போல் வெறித்தனம்மி குத்து

வேட்டையாடி மனிதர்களைக் கொல்பவரும் உள்ளார்

கூறுபோடச் சாதிமத பிரிவினையைத் தூண்டிக்

குறிக்கோளாய்ச்; சீர்கேட்டை வளர்ப்பவரும் உள்ளார்

பேறுகளை வென்றெடுக்கப் பெரும்பாவம் செய்யும்

பேடிகளாய்ப் பேய்களைப்போல் வாழ்பவரும் உள்ளார்.

 

இறைவனவன் மாந்தர்களைப் படைத்திட்ட போது

ஈடில்லா மனிதநேய நற்பண்பைச் சேர்த்து

நிறைவாகக் கொடுத்திருக்கச் சிலரதற்கு மேலே

நிரைநிரையாய்த் தீயகுணப் போர்வைகளைப் போர்த்துக்

கறையுறையாய்த்  தம்மனத்தைத் துருப்பிடிக்க வைத்துக்

காலமெல்லாம் புனிதமிகு மனிதநேயப் பண்பைச்

சிறைவைத்து வாழ்கின்றார் சிந்தையறிந் திரங்கிடாச்

சிந்தையராற் சமூகமைதி சிதைந்துபோகு தையா!

 

பரம்பொருளின்; படைப்பினிலே உயர்ந்திட்ட இனமாய்ப்

பழந்தமிழன் பண்பாட்டில் மலர்ந்ததொரு காலம்!

கரங்கூப்பிப் பெரியோரைச்; சிரந்தாழ்த்தி வணங்கிக்

காத்திருந்து வருவிருந்து ஓம்பிநலங் காத்து

வரமெனவே மனிதநேயம் தம்முயிரிற் கலந்து

வாழ்ந்துயர்ந்த பெற்றியெலாம் உரைத்திட்டாற் போமோ?

தரங்கெட்டுப் போகாது புலம்பெயரந்த நாட்டில்

தமிழினத்தின் தகைமைகளைக்; காப்பதெங்கள் கடனே!

29.01.2020

 

…………………………………………………………………………………..

 

பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் ஈழத்துப் புலவர் பரம்பரையை இலங்கச்செய்யத் தோன்றிய நவாலியூர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களின் மூத்த புதல்வர் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வன்; என்பது குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………………….

 2.மனித நேயம்

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

விக்கிபீடியாவுக்கு 003

மகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனதில் எழுச்சி பொங்க வேண்டும்,\.

மலர்ச்சி பொங்க வேண்டும்

வாழ்வில் கிளர்ச்சி பொங்க வேண்டும்!

உயர்ச்சி பொங்க வேண்டும்

சிந்தையில் உணர்ச்சி பொங்க வேண்டும்

முயற்சி பொங்க வேண்டும்

மலரின் முகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனித நேயம் பொங்க வேண்டும்

விவசாயி / மாக்கள் மகிழும்

நாளாய் பொங்க வேண்டும்.

…………..

15.1.2020 கவிஞர். ஆறு.குமார செல்வம்.

 

புத்தகங்கள் அறிமுகம்

அன்புடையீர்,

நம் உயர்திணை அமைப்பின் ஆரம்பகாலத்தில் இருந்து உறுப்பினராகச் செயற்பட்டு வரும் நாட்டியக் கலாநிதி. கார்த்திகா. கணேசரின் மூன்று ஆய்வுப் பின்னணி கொண்ட நாட்டியக் கலை குறித்த புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

காலம்தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், மற்றும் இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய நூல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆலயமுற்றலின் மருங்கில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந் நிகழ்வு சிறப்புற அமைய உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பாத்திருக்கும் அதே நேரம் இந் நிகழ்வு சிறப்புற அமைய உயர்திணை தன் வாழ்த்துக்களையும் இவ் அரிய நூல்களைத் தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு ஆக்கி அளித்த நாட்டியக்கலாநிதிக்குத் தன் மனமார்ந்த பாராட்டுக்களையும் சொரிந்து மகிழ்கிறது.

புத்தக அறிமுகம்

 
Leave a comment

Posted by on 30/01/2019 in Uncategorized

 

இலக்கியச் சந்திப்பு – 28 –

இலக்கிய சந்திப்பு - 28 - 24.6.18.

இனிய தமிழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.

எல்லோரும் நலம் தானா?

இவ் வருடம் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் வெறுமனே ஓடிப் போயின. சற்றே வருத்தம் தான். புலம்பெயர் நாடுகளில் நேரத்தைத் துரத்திப் பிடிக்கும் நம் நாளாந்த பந்தயத்தில் இத்தகைய நெஞ்சுக்கு நெருக்கமான பல விடயங்கள் தவறிப்போய் விடுகின்றன.

மன்னிப்பீர்களாக!

அண்மையில் உலக புத்தக தினத்தைக் உலகமே கொண்டாடியது. யாழ் நூலக அழிப்பு நாள் நிகழ்வை சிட்னி தமிழ் அறிவகம் நினைவுகூர்ந்தது.

எழுத்தியலின் ஆற்றலைக் கொண்டாடும் நாம் என்ன செய்தோம்?

இந்தக் கேள்விக்குப் பதிலாய் இம் மாதம் ’புத்தகங்களின் சம்பாசனையை’  நினைவு கூர்வோம்.

ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு சம்பாசனைகளை நிகழ்த்துகின்றன. அவைகள் நம்மோடு அந்தரங்கமாகப் பேசுகின்றன. எம் சிந்தனைகளில்; அறிவுப் புலங்களில்; நாளாந்த வாழ்க்கையில் கத்தி இன்றி இரத்தம் இன்றி புரட்சிகளைச் செய்ய வல்ல ஆற்றல்களை அவை கொண்டிருக்கின்றன. புத்தகங்களைக் கொண்டாடும் நாங்கள் அவற்றை அனுபவித்து உணர்ந்திருக்கிறோம்.

அவைகள் குறித்து பேசும் சந்திப்பாக இம்மாத இலக்கிய சந்திப்பு அமைவதாக!

நீங்கள் வாசித்து கொண்டாடிய புத்தகங்களுள் உங்களை மிகவும் பாதித்த ஒரு புத்தகம் பற்றி நம்மோடு கலந்துரையாட வாருங்கள். அதனை எழுதியவர் பற்றியும்; அதன் உள்ளடக்கம் பற்றியும்; உங்களை அது பாதித்த விதம் பற்றியும் கலந்துரையாடி அறிவதன் ஊடாக மேலும் பல அறிவுத் தளங்களுக்கு இலகுவாக நாம் பயணிக்கலாம்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்!

உங்கள் அனைவரையும் அன்போடு கலந்துரையாடல் சந்திப்புக்கு அழைக்கிறோம்.

 

தமிழால் இணைந்திருப்போம்.

காலம்: 24.6. 18 ஞாயிற்றுக் கிழமை.

இடம்: சிட்னி தமிழ் அறிவகம்.

தொடர்புகளுக்கு: யசோதா. பத்மநாதன். 0403051657

 
Leave a comment

Posted by on 03/06/2018 in Uncategorized

 

தாமரைச் செல்வியின் வன்னியாச்சி

தாமரைச் செல்வி!

ஈழத்திரு நாடறிந்த எழுத்தாளர்.

thaamarai selvi

ஈழத்தின் சாகித்திய விருதுக்கு பாத்தியதை பெற்றவர்.

வன்னி மண்ணின் இயல்பு நிலையை; மக்களை, மக்களின் வாழ்வியலை, கொண்டாட்டங்களை; துக்கத்தை;குணத்தை; குற்றங்களை மண்மணம் மாறா வகையில் அதன் ஆத்மாவை பேனா முனையில் எடுத்துக் காட்டியதில் அவருடய நாவல்களுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் அவர் எழுதிய  சிறுகதைகளுக்கும் காத்திரமான பங்குண்டு.

அந்த வகையில் அவர் ஒரு சமூக வரலாற்றாளருமாவார்.

கலைஞர்கள் சமூகத்துக்கு கலைகளூடாக அளிக்கின்ற பங்களிப்புகள் மனித பண்புகளை; அவர்தம் சிந்தனை ஓட்டங்களை வரலாற்று வரட்சிகள் எதுவுமின்றி எழிலோடு எடுத்து வருபவை.

யுத்தத்துக்கு முன்பான வாழ்வியலை பின்னர் இரத்தமும் தசையுமாக அது இருந்த போதிலும் சரி – அதற்குள் இருந்த வாழ்வதற்கான உந்துதலை; போரின் வலிகளை, வாதைகளை, சின்னச் சின்ன சந்தோஷங்களை, போருக்குள்ளும் முளைவிடும் விடலைப் பருவ விஞ்ஞாபனங்களை வரலாற்றுப் பக்கங்களில் கலைத்துவமாகக் குறித்து வைத்ததில் தாமரைச் செல்விக்கு ஒரு காத்திரமான பக்கசார்பற்ற பக்கங்கள் உண்டு!

அவருடய  சிறுகதைத்தொகுதி ஒன்று காலச் சுவடு பதிப்பகத்தினரால் 12.1.18 அன்று கவிஞர் சல்மாவின் தலைமையில் சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.

அவருக்கு உயர்திணை தன் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறது.

 
Leave a comment

Posted by on 13/01/2018 in Uncategorized

 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

em32

புது வருடத்தில் புத்தக நண்பன் துணை இருக்க இலக்கிய மற்றும் புத்தகப் பிரியர்களுக்கு உயர்திணையின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
Leave a comment

Posted by on 13/01/2018 in Uncategorized