RSS

விண்ணைத் தாண்டி வருவேனே! (சிறுகதை) ஸிட்னி இரா. சத்யநாதன்

29 Mar

 

டேவிட்  தனது இருக்கையில் இருந்தவாரே கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார் த்தான். காலை பத்து மணிதான் என்ற போதும் மார்ச் மாத வெய்யில் அந்த நேரத்திலும் சற்று உக்கிரமாகவே இருந்தது. 

‘டிம் இன்னும் வரவில்லை; நேரத்திற்கு வந்துவிடுவானே; ட்ரபிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். ‘டிம் நல்லவன். அவனைப்போல, தொழிலில் அக்கறையும் திறமையும் உள்ளவனைத் தேடிப்பிடிப்பது இலேசல்ல’ என்பது டேவிட்டுக்குத் தெரியும்.

 விவசாயிகளுக்கு மாரி பொய்த்துப்போவது போல, டேவிட்டுக்கு இந்த கோடையும் பொய்த்துப்போனது.’ டிசம்பர் தொடக்கம் மார்ச் வரை நீடிக்கும் இந்த வெய்யில் காலத்தில் பிஸினஸ் நன்றாகவே நடக்கும்; எப்படியாவது ஒரு புதிய ஹெலிகாப்டர் வாங்கிவிடலாம்’ என்று நினைத்திருந்தான். இருநூறு கில்லோ மீட்டர் வேகத்தில் பதினாலு பேரை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய, ‘ஸிக்கோஸ்கி – எஸ் 76(Sikorsky -s76) வகை ஹெலிகாப்டரை, சில மாதங்களுக்கு முன்புதான், பாரிஸில் நடைபெற்ற ஹெலிகாப்டர் ஷோ ஒன்றில் பார்த்திருந்தான். வேகம் மட்டுமல்ல, பாதுகாப்பும் அதிகம் உள்ள ‘ட்வின் எஞ்சின்’ ஹெலிகாப்டர் அது.

அந்த வருட இறுதியில் ‘ஸிட்னி 2000’ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவிருந்ததால், வருடத்தின் முற்பகுதியிலேயே பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வந்து குவிவார்கள் என்று உல்லாசப் பயணத்துறை கணித்திருந்தது. ஆஸ்திரேலிய டாலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்திருந்ததால், இது வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவேயில்லை.

‘ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நெருங்க நெருங்க, அடுத்தடுத்த மாதங்களில், பிஸினஸ் சூடு பிடிக்கும் என்பது நிச்சயம். அப்போதும் என்னிடம் இந்த பழைய ‘த்ரீ ஸீட்டர்’, ‘போர் ஸீட்டர்கள்’ தானே இருக்கும். இவற்றை வைத்துக்கொண்டு காசு பார்ப்பது எப்படி’ என்பதே அவனது சிந்தனையாக இருந்தது.

டேவிட்டிடம் இரண்டு ‘BELL 47 G’யும் ‘ROBINSON  R 22’ ஒன்றும் இருந்தன. ROBINSON சற்றுப் புதிது. ஆனால் இரண்டு BELL லும் 1976 இல்  தயாரிக்கப்பட்டவை. பெல் நிறுவனம், ஜப்பானில் காவசாகி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கடைசி மாடல் அது.    

 டிம் காரை, கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருவது தெரிந்தது. டிம் இன்று வழக்கத்திற்கு மாறாக, சந்தோஷமாக, விசில் அடித்தபடி, வந்து கொண்டிருந்தான். இன்று தொடக்கம் அவன் தன் மகளுக்கு, பராமரிப்புத்தொகை கட்டவேண்டியதில்லை என்பதுதான் அவனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

அவனது மகளுக்கு நேற்றோடு பதினெட்டு வயது ஆகிவிட்டது. எட்டு வருடங்களுக்கு முன்பு, அவனது மனைவி விவாகரத்துப் பெற்று, மகளையும் கூட அழைத்துக்கொண்டு,

பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பின்பு அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டாள். அவளது புதிய கணவனுக்கும் அவனது முந்தைய மனைவி மூலமாக  இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

 தனது மகளுக்கு பதினெட்டு வயதாகிவிட்டதால், டிம் இனி, பராமரிப்புத்தொகை கட்டத்தேவையில்லை. தனது காதலி, ரோஸியைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அவனுக்குத் தடையில்லை. ரோஸியும் முன்பு ஒருவனோடு ‘டி பெக்டோ’ வாக (de-facto) இருந்தவள் தான். ஆனால் அவளுக்குக் குழந்தைகள் இல்லை.

“ஹாய்….பாஸ்..” என்று சொல்லிக்கொண்டே,  டிம் உள்ளே நுழைந்தான். வைட்போர்ட்டில் எழுதப்பட்டிருந்த நாளாந்த ஸெட்யூலை நோட்டம் விட்டான்.

” ஒரு கஸ்டமர் பத்து மணிக்கு…..பிறகு ..ஒரு மணிக்கு இன்னொன்று..?” என்று டேவிட்டைப் பார்த்துக் கேட்டான்.

 டேவிட் ‘ ஆம்’ என்பது போல இலேசாகப் புன்னகை செய்தான்.

 அப்போது, சடாரென்று கண்ணாடிக் கதவைத்திறந்து கொண்டு, ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.

 இவள் எப்போது வந்தாள்? எப்படி வந்தாள்? கார் பார்க்கிங்கில் புதிதாக கார் ஏதும் பார்க் செய்யப்படவில்லையே? டாக்ஸியில் வந்திருப்பாளோ?’ இருவரது சிந்தனையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

 அவள் நல்ல அழகி. நல்ல உயரம். வயது சுமார் முப்பத்தைந்து இருக்கலாம். ரஷ்யப் பெண்ணாக இருக்கவேண்டும். அல்லது ரஷ்ய ரத்தம் கலந்தவளாக அவள் இருக்கக்கூடும் என்று டேவிட் நினைத்தான்.

 அவள் கோடைக்காலத்திற்கு இதமாக, கொஞ்சமாக உடை அணிந்திருந்தாள். மேலே கை இல்லாத ஒரு ‘சிங்லட்’ ; கீழே, அநியாயத்திற்கு சிறிய ஸைஸில் ‘ ஷார் ட்ஸ்’ ; காலில் ‘தொங்ஸ்’ என்ற ரப்பர் செருப்பு ; கைகளில், இரண்டு ‘ ஷாப்பிங் பைகளில்’ எதையோ திணித்து வைத்திருந்தாள். 

“ஹாய்… நான் லூஸி…   பத்து மணிக்கு ‘புக்’ செய்திருந்தேனே..! “

 “ஓ….. நோ ப்ரப்ளம்….நான் டேவிட்….. இது டிம்……..டிம்…..இது லூஸி…உன்னுடைய கஸ்டமர்..   ” என்றான் டேவிட்.

 “இந்தப்பக்கமா வாங்க மேடம்…” என்றபடி, லூஸி பின் தொடர, பின் கதவைத்திறந்து கொண்டு, ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த புல் வெளிப்பகுதிக்குச் செல்ல முற்படும் போது, லூஸி கையில் இருந்த பைகளை மீண்டும் கவனித்தான், டேவிட்.

 “அது எதற்கு இடைஞ்சலாக..அங்கே அந்த நாற்காலி மேலே வைத்து விட்டுப் போகலாமே…?”

 அவள் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

 ‘த்ரீ ஸீட்டர் ஹெலி தானே….பக்கத்து ஸீட்டில் வைத்துக்கொள்வாள்’ என்று

முடிவு செய்து கொண்டு, ‘ பதினாலு ஸீட்டர்’ கனவுகளில் மீண்டும் மூழ்கிப்போனான் டேவிட்.

 “இப்போது நாங்கள் ஹோம்புஷ் பே பகுதியை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறோம். அஞ்சே நிமிஷந்தான். அதுக்குப்பிறகு, ‘ஸிட்னி 2000’ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறப்போகும் பகுதியில் இரண்டு சுற்று சுற்றி விட்டு, ஹார்பர் பிரிட்ஜ் ட்ரெக்கைப் பிடித்தால், பத்தே நிமிஷத்திலே ஹார்பர் பிரிட்ஜ், சேர்குலர் கீ, ஒப்பரா ஹவுஸ், ஸிட்டி என்று பெரிய ரவுண்ட் ஒன்று அடித்துவிட்டு, சரியாக முப்பதே  நிமிஷத்தில மறுபடியும் இங்கே வந்து விடலாம். அதன்பிறகு, நீங்கள் விரும்பினால், அதோ அங்கே தூரத்தில், மேற்குப்பக்கமாகத் தெரியும் ஒலிம்பிக் வில்லேஜ், அக்குவாடிக்சென்டர் எல்லாம் தொட்டுக்கொண்டு திரும்ப வேண்டியதுதான்.” டிம் மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே வந்தான்.

 அவள் ஒன்றுமே பேசவில்லை. அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள்.

 ஹெலிகாப்டரின் முதுகின் மீது சுழன்றுகொண்டிருந்த இராட்சத ரோட்டர்களின் சப்தம்  காபினுக்குள்ளும் தெளிவாக க் கேட்டது. காபினும் கூரைப்பகுதியும் கண்ணாடி முட்டை போன்ற வடிவத்தில் இருந்ததால், தலைக்கு மேலே ரோட்டர் சுழல்வது நன்றாகவே தெரிந்தது. தலைக்கு மேலே வானத்தையும் இடம், வலம் மற்றும் முன்பக்கம் அனைத்தையும் சுமார் நூற்றியென்பது பாகை கோணத்தில் சீராகப் பார்க்க முடிந்தது.

 முழுமையாக க் கட்டி முடிக்கப்பட்டிருந்த பிரதான விளையாட்டரங்கு, மிக அருகில் தெரிந்தது.

 டிம், லாவகமாக ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் சற்று மேலே எழும்பி, குறுக்கு வெட்டாக மெதுவாகப் பயணித்தான். அதற்குள் அவள் பலமுறை, கைக் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள்.  இப்போது அவள் பார்வை, இடது பக்கத்தில், ஏதோ ஒரு பகுதியை நோக்கித் திரும்பியிருந்தது.

 ஹெலிகாப்டரில் ஏறிய பின்பு, அவள் முதல் முறையாகப் பேசினாள்.

 “அதோ… அங்கே……நாலுபக்கமும் கட்டடம்; நடுவிலே ஒரு புல் தரைப் பகுதியும் தெரிகிறதே….. அது என்ன?”

 டிம் ஹெலிகாப்டரைச் சற்று சரித்து, அவள் காட்டிய திசையில் பார்த்தான்.

 “ஓ…… அதுவா…….?  அதுதான் ‘ ஸில்வர்வோட்டர் ஜெயில்’. அந்தப் பகுதியில் இந்த அளவுக்கு தாழ்வாகப் பறக்கமுடியாது. வேண்டுமானால், கொஞ்சம் உயரம் போய், மூன்றே நிமிஷத்தில் சுற்றிக்கொண்டு வந்துவிடலாம்.”

 “நிச்சயமாக, டிம்” என்றாள் அவள்.

 கண்மூடி, கண்திறப்பதற்கு முன், ஹெலிகாப்டர், ‘ ஸில்வர்வோட்டர்’ ஜெயிலுக்கு மேலே வட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

 “இன்னும் கொஞ்சம் கீழே போக முடியாதா?” அப்பாவி போலக் கேட்டாள் லூஸி.

 “நிச்சயமாக முடியாது மேடம். பாதுகாப்பு அதிகமான பகுதி இது..”

 லூஸி சட்டென்று ஷாப்பிங் பைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுத்தாள். அதை அவனது முகத்திற்கு அருகில் கொண்டு வருவது தெரிந்தது. அது என்ன என்று அவன் பார்க்க எத்தனிக்கும் முன்பே, அவனது இடது கண்ணுக் கும் காதுக்கும் இடையில் அதை வைத்து கையால் அழுத்தினாள். அதிர்ச்சியடைந்த டிம், மெதுவாக ஓரக்கண்ணால் அது என்ன என்று பார்த்தான்.

 லூஸியின் கையில் இருந்தது, ஒரு சிறிய பிஸ்டல்.

 அவள் அமைதியாகச் சொன்னாள்:

 “டிம், அங்கே கீழே, ‘ ஸில்வர்வோட்டர்’ ஜெயிலில், ஒரு நபரை நான் பிக் -அப் செய்யவேண்டியிருக்கிறது. நான் சொல்லுகிறபடி நீ நடந்து கொண்டால், உன் உயிருக்கு பழுதில்லை. “

 “அது செய்யக்கூடிய….. காரியம் மாதிரி…… எனக்குத் தெரியவில்லை…” டிம் பதட்டத்துடன் கூறினான்.

 “அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் சொல்லுகிறபடி மட்டும் நீ செய்,….. புரிகிறதா?”

 “ம்……”

 “அதோ பார்! அங்கே கட்டடங்களுக்கு நடுவில் இருக்கும் புல்வெளியில், கைதிகள் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அங்கே…..தெற்கு மூலைப்பக்கமாக இறங்கு. இறங்கின பின், என்ஜினை ‘ஆப்’ செய்துவிடாதே……சரி..சரி…சீக்கிரமாக இறங்கு.”

 டிம் ஒரு கணம் யோசித்தான். ‘ட்ரான்ஸ்பொன்டர்’ பட்டனை அழுத்துவதற்காக, விரலைக் கொண்டு போனான்.

 பிஸ்டலால் அவன் விரல் மீது ஓங்கி அடித்தாள், லூஸி.

 “ஓ….கோட்…” என்று அலறினான் டிம்.

 “டிம், உன்னால் முடிக்க முடியாத எதையும் ஆரம்பித்து விடாதே….” லூஸியின் வலது கை சுட்டு விரல், பிஸ்டலின் ‘ட்ரிகரில்’ உறுதியாக இருந்தது.

 ‘இவள் போதுமான ‘ ஹோம்வர்க்’ செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறாள் ‘ என்பது டிம்முக்குப் புரிந்துவிட்டது. ‘ ட்ரான்ஸ்பொன்டர்’ பட்டனை அழுத்தியிருந்தால், தான் ஆபத்தில் சிக்கியிருப்பது, தரையிலுள்ள கட்டுப்பாட்டறைக்கு, தெரியவந்திருக்கும்.

 டிம் தலையில் மாட்டியிருந்த ‘இயர்போனை’யும், லூஸி பலவந்தமாக க் கழற்றி கீழே எறிந்தாள். ‘டேஷ்போர்ட்டில்’ இருந்த ‘ ரேடியோ  கம்யுனிகேசன்’ சுவிச்சையும் ‘ஆப்’ செய்தாள். ‘மெக்னடோ சுவிச்’சில் கை வைக்க க் கூடாதென்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதை ‘ஆப்’ செய்தால், ‘பவர்’ துண்டிக்கப்பட்டுவிடும்.

 வலது கையில் பிஸ்டலைப் பிடித்தவாறே இடது கையால் மீண்டும் ஷாப்பிங் பைகளைக் குடைந்தாள், லூஸி.

 இப்போது அவள் கையில் இருந்தது, ஒரு ‘ஆட்டோமட்டிக்’ துப்பாக்கியின் மூன்று வெவ்வேறு பாகங்கள்.

 நன்கு பயிற்சி பெற்ற போராளி போல, முப்பது செக்கன்ட்களில், மூன்று பாகங்களையும் ஒன்றாக இணைத்தாள், லூஸி. சுமார் இரண்டு அடி நீளமான, ‘ஆட்டோமட்டிக்’ துப்பாக்கி ஒன்று இப்போது அவள் கையில் தயாராக இருந்தது.

 ‘இனி, இவளது ‘ட்யூனுக்கு’ ஆடுவதைத் தவிர வேறு வழி யில்லை’ என்பது, டிம்முக்கு, சட்டென்று புரிந்தது.

 லூஸி சொன்ன இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கினான், டிம். தரையைத்தொட முன்னர், தொட்டில் போல, சற்று முன்னும் பின்னுமாக ஆடிய ஹெலிகாப்டர், நோகாமல், புல் தரையைத் தொட்டது. அதன் முதுகிலிருந்த ‘ரோட்டர்கள்’ படு வேகமாகவும் பலத்த சப்த த்துடனும் சுழன்று கொண்டிருந்தன. அந்த பலத்த சப்தம் நிலைமையை, இன்னும் படு பயங்கரமாக்கிக் கொண்டிருந்தது.

 புல்வெளியில் சுமார் ஐம்பது அல்லது அறுபது கைதிகள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில், ஓரிரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஹெலிகாப்டர் இறங்கியதைக் கண்ட கைதிகள், தாங்கள் செய்துகொண்டிருந்த உடற்பயிற்சியை மறந்து, ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தார்கள்.

 ஆனால் அவர்களுள் ஒருவன் மட்டும், ஹெலிகாப்டரை நோக்கி வந்து கொண்டிருந்தான். மற்றைய கைதிகளைப் போலவே, கரும் பச்சை நிற ‘ட்ராக் பேன்டு’ம் அதே நிறத்தில் ‘போலோ’ மேற்சட்டையும் அணிந்திருந்த அவன்,மிக வேகமாக ஓடி வந்து, ஹெலிகாப்டரின் கதவைத்திறந்து கொண்டு, உள்ளேநுழைந்தான். கதவைத் திறந்ததும், லூஸி கையிலிருந்த ‘ஆட்டோமட்டிக்’ கை, வாங்கிக்கொண்டான். பின்பு, பக்க வாட்டில் சரிந்து, பின்னால் இருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டான்.

 வெளியே, மற்றைய கைதிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது, கேட்டுக்கொண்டே இருந்தது.

 இருபத்துமூன்று வருட சிறைத்தண்டனை பெற்ற வங்கிக்கொள்ளைக்காரனான ஜோன், மூன்றே மாத த்தில் சிறையிலிருந்து தப்பிச் செல்வது, சார்லஸ் பரொன்சனின் ‘ப்ரெக்அவுட்’ (Break-out) திரைப்படத்தைப் பார்ப்பது போல ஜாலியாக இருந்தது அவர்களுக்கு.

 “எடு…எடு.. சீக்கிரமாக க் கிளம்பு…..” கத்தினான் ஜோன்.அப்போது சிறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கையில் ரிவால்வருடன் ஹெலிகாப்டரை நோக்கி ஓடிவருவதைக் கண்டான் ஜோன். படாரென்று, தனது இருக்கைக்குப் பக்கத்திலிருந்த சிறு ஜன்னலைத் திறந்து, தன்னிடமிருந்த ‘ஆட்டோமாட்டிக்’ கை அந்த அதிகாரியைக் குறி வைத்து திருப்பினான். ஜோன் கையிலிருந்த ‘ஆட்டோமாட்டிக்’கைக் கண்ட அந்த அதிகாரி உடனேயே பின் வாங்கினார்.

 தூரத்தில் துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. “ஜோன்….குட்லக்” என்ற கைதிகளின் கூச்சலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது.

 ஹெலிகாப்டர் மெதுவாக மேலே எழுந்தது. திடீரென்று வேகம் எடுத்து, ‘ ஜிவ்’ வென்று விண்ணில் பாய்ந்தது. சட்டென்று மறைந்து போனது.

 “குட் ஜாப் மை பாய்..” டிம்மின் முதுகில் தட்டிக்கொடுத்தான் ஜோன்.

 டிம், திரும்பி, ஜோனைப் பார்த்தான். பின்பு எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

 ஜோன் மீண்டும் சொல்லத்தொடங்கினான்.

 “இதோ பார்…!  உன் கையில் இருக்கும் கோப்பைக்கும் உன் உதட்டுக்கும் இடையே உள்ள தூரத்தில்தான் உன் விடுதலையும் இருக்கிறது. நாங்கள் சொன்னபடி செய்தால், உனக்கு ஒரு பிரச்சனையுமில்லை.”

 லூஸி மீண்டும் பைகளைக் குடையத் தொடங்கினாள். நான்கைந்து வரைபடங்களை எடுத்து, மேலும் கீழுமாகப் பார்த்த பின், ஒரு வரை படத்தைத் தெரிவு செய்தாள். அதை டிம்மின் முகத்திற்கு முன் நீட்டினாள்.

 “டிம், இதோ பார்..! நாங்கள் இப்போது இந்த இடத்தில் இருக்கிறோம். வடக்குப்பக்கமாக, வட்டம் போட்டுக் காட்டப்பட்டிருப்பது, கிரிஸ்டி பார்க். இந்த பார்க், இங்கிருந்து சுமார், எட்டு கிலோ மீட்டரில் இருக்கிறது. அங்கே வடக்கு எல்லையில் ஆள் நடமாட்டம் இருக்காது. நேராக அங்கே கொண்டுபோய் இறக்கு. என்ன புரிகிறதா?”

 “சரி” என்று தலையை ஆட்டினான், டிம்.

 ஹெலிகாப்டர், நேர் கோட்டில் பறந்தது. ஸிட்னி, மாபெரும் நகரங்களுள் ஒன்று என்பதை நம்ப முடியாத வண்ணமாக, பார்க்கும் திசை எல்லாம், மரங்களே அடர்த்தியாக நிறைந்திருந்தன. கிழக்குப்பக்கமாக, தொலைவில், கோர்ட் ஹேங்கர்(coat hanger) வடிவத்தில், ஹார்பர் பிரிட்ஜும் பல உயர்ந்த கட்டடங்களும் தெரிந்தன.

 கிரிஸ்டி பார்க்கின் தெற்குப்பக்கத்தில், இருவழித்தடங்களைக் கொண்ட சாலை; வடக்கில், நெடுஞ்சாலை. நெடுஞ்சாலைக்கும் பார்க்குக்கும் இடையே உயரமான பெரிய மதில் எழுப்ப ப்பட்டிருந்தது.

 லூஸி சொன்னது போல, ஆள் நடமாட்டமில்லாத வடக்கு எல்லையில், லாவகமாக ஹெலிகாப்டரை இறக்கினான், டிம்.

 “சரி, பவரைக் கட் பண்ணு…” என்றாள் லூஸி.

 டிம் பவரைக் கட் பண்ணி, ரோட்டர்களின் சுழற்சியையும் எஞ்சினின் அதிர்வையும் நிறுத்தினான்.

 “சீக்கிரம் கீழே இறங்கு…” கத்தினான் ஜோன்.

 டிம் கீழே இறங்கி சற்றுத்தொலைவில் போய் நின்று கொண்டான். அவனைத்தொடர்ந்து, லூஸியும் ஜோனும் இறங்கினார்கள். ஜோன் தனது கையிலிருந்த ‘ஆட்டோமாட்டிக்’ கை ஹெலிகாப்டரின் பின் இருக்கை மீது தூக்கி எறிந்தான். ஆனால் லூஸி கையில் பிஸ்டல் இருந்தது.

 கீழே இறங்கியதுமே, ஜோனும் லூஸியும் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.

 “ஹனி…நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா…?” என்று லூஸி பலமுறை சொன்னாள் . ஜோன், அவள் உதட்டின் மீது அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டே யிருந்தான். இருவரும் கொஞ்ச நேரம் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்திருந்தார்கள்.

 திடீரென ஏதோ ஞாபகம் வந்தவன் போல ஜோன் உரத்துக் கத்தினான்.

 “டிம்.. இங்கே வா!  ஹெலியில் ஏறிக்கொள்…”

 டிம்மின் கூடவே வந்து, டிம் ஸீட்டில் ஏறிக்கொண்டபின், அவன் அருகிலேயே நின்று கொண்டான் ஜோன். லூஸி, ஹெலியின் மற்றப் பக்கமாய்ப் போய், தான் கொண்டு வந்த பைகளை எடுத்துவந்தாள். அவற்றுக்குள் இருந்து, சிறியதும் பெரியதுமான இரண்டு நைலான் கயிறுகளை எடுத்து ஜோனிடம் கொடுத்தாள்.

 சிறிய கயிற்றால் டிம்மின் கைகளை இறுக்கமாக க்கட்டினான் ஜோன். பின்பு அவனை இருக்கையோடு சேர்த்து பெரிய கயிற்றால் கட்டி, இருக்கையின் பின்புறமாக முடிச்சைப்போட்டான். லூஸி தன் கையிலிருந்த பிஸ்டலை, ஷாப்பிங் பைக்குள் போட்டுக் கொண்டாள்.

 லூஸியின் ஷாப்பிங் பைகளில் இருந்து ஒரு காற்சட்டையையும் டீ சர்ட் ஒன்றையும் எடுத்து அணிந்து கொண்டான் ஜோன். சிறைச் சீருடை யை, பையினுள் திணித்துக் கொண்டான்.

 எந்த அவசரமும் இல்லாமல், இருவரும்  கைகோர்த்துக் கொண்டு,

 தெற்குப்பகுதியில் இருந்த சாலையை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.  இருவரும்,  உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வந்த காதலர்களைப் போல, ஒருவரை மற்றவர் அணைத்தபடி நடந்து போய்க்கொண்டிருப்பதை, ஹெலியின் ஜன்னலூடாகப் பார்த்துக் கொண்டிருந்தான், டிம்.

 இருவரும் சாலைக்கு வந்தார்கள். மேலும் கீழுமாக நிறைய வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. சிறிது நேரத்தில் டாக்ஸி ஒன்று வந்தது. கையை உயர்த்தி டாக்ஸியை நிறுத்தினான் ஜோன். டாக்ஸி அவர்களுக்கு அருகில் வந்து நின்றது.

 “மெல்பர்ன் போகலாமா?” ட்ரைவரிடம் கேட்டான், ஜோன்.

 டாக்ஸி ட்ரைவருக்குத் தனது காதுகளையே நம்பமுடியவில்லை. ‘ஸிட்னியில் இருந்து மெல்பர்னுக்கு டாக்ஸியா?’

 உற்சாகமாக இறங்கி, டாக்ஸியின் பின் கதவைத் திறந்து விட்டான் ட்ரைவர். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்ட டாக்ஸி, மெல்பர்னை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

 ஆறு வாரங்கள் கழித்து, Sydney Morning Herald பத்திரிகையில், இந்தச்செய்தி, தலைப்புச்செய்தியாக வந்திருந்தது.

 பிரபல வங்கிக் கொள்ளைக்காரன் ஜோன் பிடிபட்டான்பிணமாக!

ஆறு வாரங்களுக்கு முன் ஸில்வர்வோட்டர் ஜெயிலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகத் தப்பிச்சென்ற ஜோன் (வயது 50)நேற்று பிடிபட்டான். ஆனால் காவல் துறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, அவன் இப்போது உயிரோடு இல்லை என்பதுதான் தூரதிர்ஷ்டம்.

 ஸிட்னிக்கு மேற்கே ‘பேஸ் ஹில்’ (Bass Hill) என்ற இடத்திலுள்ள, கரவன் பார்க் ஒன்றின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், நேற்று பிற்பகல் அங்கு விரைந்த பொலிஸார், அங்குள்ள காபின் ஒன்றினுள் ஜோன் இறந்து கிடந்ததைக் கண்டார்கள்.ஜோனின் இருதயத்தை, துப்பாக்கி ரவை ஒன்று துளைத்திருந்தது. அந்தக் காபினில் இருந்த லூஸி என்ற பெண் (வயது 36) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறாள்.

 ஸில்வர்வோட்டர் ஜெயிலில் இருந்து, லூஸிதான் ஹெலிகாப்டர் மூலமாக ஜோனை விடுவித்திருக்க வேண்டும் என்று போலிஸார் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள்.

 வங்கிக் கொள்ளைகளில் கொள்ளையடிபக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை, ஜோன் எங்கோ மறைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அது தொடர்பாக ஜோனுக்கும் லூஸிக்கும் ஏற்பட்ட வாக்குவாத த்தில், லூஸி, பிஸ்டலால் ஜோனைச் சுட்டிருக்க வேண்டும் என்றும் ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜோன், இதற்கு முன்னர், மெல்பரன் பென்ட்ரிஜ் ஜெயிலிலும் ஸிட்னி லோங்பே ஜெயிலிலும் கைதியாக இருந்திருக்கிறான். 1999 இல், ஸிட்னி, மெரிக்வில் பகுதியில், நேஷனல் ஆஸ்திரேலியா வங்கியின் காசாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஐம்பதினாயிரம் டாலர்களைக் கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக, 23 வருட சிறைத்தண்டனை விதிக்கப் பட்டு, ஸில்வர்வோட்டர் ஜெயிலில் ஜோன் அடைக்கப்பட்டிருந்தான்.   

             ்்்்்்்்்்்்்்்்

(குயின்ஸ்லாந்து மாநில தாய் தமிழ் பள்ளி நடாத்திய “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் உயர்திணை அங்கத்தவர் திரு. சத்தியநாதன் அவர்களுடய சிறுகதை)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Leave a comment

Posted by on 29/03/2014 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 
%d bloggers like this: