RSS

2. அகதிப்படகு – கவிஞர்களின் கவிதைகள்

02 Jan

 

அகதிப்படகு

அகதிப்படகு சட்டவிரோதமானது
எல்லை ரோந்து கண்காணிக்கிறது

குழந்தைகளை படகில் ஏற்றாதீர்கள்
கடல் பாதுகாப்பானதல்ல

நாட்டை விட்டு வெளியேறாதீர்கள்
எந்த நாடும் உங்களை அனுமதிக்காது

கம்பி வேலிகள் இங்குமுண்டு
மீண்டும் அகதி முகாம்களை
தேர்ந்தெடுக்காதீர்கள்

அகதிகள் என்றும்
அத்துமீறிக் குடியேறியவர்கள் என்றும்
ஊடகங்கள் நஞ்சை வீசும்

உண்மைதான்
மரணத்தால் கட்டப்பட்ட நிலத்திலிருந்து
கட்டாயமாக வெளியேறியதால்
நானும் ஓர் அகதி

கனத்த இதயத்துடன்
புதிய நிலத்தை நோக்கி நகர்ந்தோம்

கையில் எதுவும் இல்லாதபோதும்
அன்பைச் சாப்பிட்டுக் கண்ணீரைக் குடிக்க
எங்களுக்காக ஒரு கடல் காத்திருந்தது

எங்கள் விதியின் தூசியை விலக்கி வைக்க
நறுக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் காத்திருந்தன

எங்கள் மாமிசத்தை சுவைக்காத
ஓர் நாட்டை நோக்கிப் பயணித்தோம்
எங்கள் தலையைக் கொய்யாத
ஓர் நாட்டை நோக்கிப் பயணித்தோம்

இரவின் இருண்ட விளிம்பில்
கசிந்துகொண்டிருக்கும் சிறிய படகில்
போராடி உயிர் பிழைத்தவர் நாங்கள்

எங்கள் ஈரமான கண்களுக்கு
கொஞ்சம் நம்பிக்கை தாருங்கள்

மொழிபெயர்ப்பாளர்கள் எங்கே?

எங்கள் பெயர்களின்று
மூடுபனியால் எழுதப்பட்டிருக்கிறது
எங்களை அடையாளம் காணுங்கள்

ஒரு கைதியைப் போல
கிறிஸ்துமஸ் போன்ற தெரியாத தீவில்
தடுப்பு மையத்தில் தங்க வைக்காதீர்கள்

நீங்கள் கொடுத்த போர்வை சூடேற்றவில்லை
இங்கு எதுவும் சிறந்த நிலையில் இல்லை

மனித உரிமை பேசும்
ஜனநாயக நாட்டில் கூட
அகதிப்படகுக்கு வரவேற்பு இல்லை

எங்கே நாம் சுதந்திரத்தைத்தேடி வந்தோமோ
அங்கேயும் சுதந்திரம் இல்லை

நானும் எனது மக்களும் இப்போது எங்கு செல்வது?

கடைசி எல்லைக்கு வந்தபின்பு
இந்தப் பறவைகள் எங்கே பறப்பது?
கடைசி வானமென்று ஒன்றுண்டா?

கவிஞை. செளந்தரி. கணேசன்.
28.12.2019.

……………………………………………………………………….

அகதிப் படகு”

 

ஒருநாளா இருநாளா ஒப்பரிய ஐந்தாண்டு

உல்லாசப் படகாகப் பலகடல்கள் சுற்றிவந்தேன்

வருகின்ற பயணிகளோ எனைத்தேடி நின்றார்கள்

வனப்புமிகும் என்னழகு ஈர்த்ததிலே வியப்பேது?

திருமணமும் ஆகாத திடமான வாலிபர்கள்

தேன்நிலவைக் கழிக்கவரும் மானின்;விழி மங்கையர்கள்!

பருவத்து எழில்கொஞ்சும் பாவையர்கள்; அப்பாடா!

பார்த்ததிலே இன்பத்தின் எல்லையெலாங் கண்டேனே!

 

நன்னனெனும் பெயர்கொண்டோன் நாணயத்தை மறந்தறியான்

நாளெல்லாம் என்னழகு நனிசிறக்க வழிசெய்வான்

வன்னப்பூத் தேர்ந்தெடுத்து வகையாகச் சோடிப்பான்;

வடிவழகன்; வாசனைக்கு ஏதேதோ பூசிடுவான்

மின்வேக மாயென்னை வெகுகவன மாயோட்டி

வேடிக்கை யாயவனோ விளையாட்டுக் காட்டிடுவான்

என்னினிய பயணிகளை என்றுமவன் மகிழ்விப்பான்

இன்முகத்தன் நன்னனவன் பொன்மனமும் நானறிவேன்

 

இரவுபகல் பாராது ஆழிபல சுற்றிடுவான்

என்காது கேட்டதெல்லாம் இனிக்கின்ற சல்லாபம்!

பரவசத்தாற் கிறங்கிநிற்பேன்! பாசமொடு நன்னனவன்

பக்குவமாய்ப் பணிசெய்யப் பார்த்துநான் மகிழ்ந்திருப்பேன்!

நிரைநிரையாய் நடந்தவற்றை நினைவுகூரக் கண்ணயர்ந்;தேன் 

நிம்மதியும் நிறைமனமும் நிமிடத்தில் போனதம்மா!

இரைச்சலொடு இடிபோலத் துவக்குவெடிச் சத்தமெனை

என்றுமிலா அச்சத்துடன் எழுப்பியதும் பதற்றமுற்றேன்.

 

பக்கமாக வந்தபெரும் கப்பலொன்றைக்; கண்டவுடன்

பணிவாக நந்தனவன் வெள்ளைக்கொடி காட்டவேறு

திக்கிருந்து வந்ததோட்டா சென்றவனைக் கொன்றதம்மா!

திகைப்புடனே திரும்புமுன்னர் சிப்பாய்கள்; என்மேலே

கொக்கிபோட்டு ஏறிவேறு திசைநோக்கிக் கொண்டுசென்றார்

கொஞ்சுமெழி;ல் விஞ்சுமொரு கரையில்நங் கூரமிட்டார்

அக்கணம்நான் பட்டதுயர் அப்பாடா கொஞ்சமில்லை!

அந்தக்கரை சிறீலங்காக் காலிமுகாம் எனவறிந்தேன்

 

உல்லாசப் படகான என்னினிய பயணிகளின்

உடைமைகளை முகாமிலுள்ள படைவீரர் பறித்தெடுத்தார்

எல்லையிலா இன்பந்தரும் நினைப்பினிலே வாழ்ந்தவென்றன்;

இந்தநிலை மாறுமென்று என்றேனும் நினைக்கவில்லை!

சல்லடையிட் டுச்சந்தெலாம்  தேடியேயெம் இளைஞர்களைக்

கொல்லாமற் கொல்வதற்கு வெள்ளைவானிற் கொண்டுவந்தார்

மெல்;லமெல்லச் சாகடிக்கும் மிருகச்செயல் கண்டுநொந்தேன்!

மேற்கொண்டு  கன்னியரின் கண்ணீர்க்கதை யார்க்குரைப்பேன்!

 

குடித்தபின்னர் அவர்களிட்ட கொடுமையெலாம் கண்டழுதேன்;

இடித்திடித்து வசைபாடி எத்தனையோ கேள்விகேட்டுப்

பிடித்தவர்கள் சேலைபற்றி இழுத்துரிவர்!; கண்ணீரைத்

துடைக்குமுன்னர் வார்குழலை வலிந்திழுத்துக் குலைத்துடலை

அடித்திடுவர்! நொந்தமேனி துடித்திடவே பலர்கூடிக்

கெடுத்தகதை எத்தனையோ கேட்டென்மனம் வெடித்ததையா!

படித்தபுத்த நீதியெலாம் விடுத்துநின்ற வெறிக்கும்பல்

பாபச்செயல் அத்தனையும் பண்ணக்கண்டு மயக்கமுற்றேன்!.

 

அல்லும்பகல் நோட்டமிட்டுத் தேடிவரும் தமிழர்களை

அடிவருடும் எட்டப்பர் அடையாளம் காட்டிநிற்கப்

பொல்லாவின வெறிப்படையும் கைதுசெய்து  முகாமதிலே

புலன்விசாரணை எனக்கூறிப் புல்லர்கள் பலர்;கூடிக்

கொல்லாத விதமாக கொடும்வதையைச் செய்தபின்னர்

குற்றுயிராய்ப் புதைகுழியில் போனவிடந் தெரிந்திடாது

மெல்லமூடி விட்டவர்கள் விருந்துவைத்து மகிழ்ந்தகதை

மெதுவாகச் சொல்லிச்சிலர் விம்மியதை நானறிவேன்

 

நாள்கள்பல சென்றபின்னோர் நண்பகலில் யாரோவொரு

நாட்டாண்மைக் காரனவன் ‘கலுபண்டா’ எனும்பெயரோன்

தாள்களாகப் பலலட்சம் முகாமின்தலை வனுக்களித்துத்

தனதூருக்(கு)என்னைக்கரை ஓரமாகக் கொண்டுசென்று

வாழ்ந்துய்ய வழிதேடி வெளிநாடு செலவிரும்பும்

வன்முறையாற் பாதிக்கப் பெற்றலைந்த தமிழர்களை

ஆழ்கடலுக் கப்பாலே அவுஸ்திரேலியா நாட்டிற்கு

அகதிகளாய் அனுப்பிவைக்கப்; படகாகத் தேர்ந்தெடுத்தான்

 

அகதிகளை அவுஸ்திரேலியாவிற் கனுப்பிடுவேன் என்றுசொல்லி

அரசாங்க ஊழியரின் கண்களிலே மண்தூவி

பகடைக்காய் எனத்தமிழர் உயிருக்கு விலைபேசி

ஆளுக்கு ஐந்துலட்சம் ரகசியமாய்; வசூலித்து

மிகநல்லவ னாய்நடித்து அவுஸ்திரேலியா அனுப்பிவைக்க

வேண்டியதிட் டங்களையும் விரைவாகச் செய்திருந்தான்

சகநண்பர் கூடியொரு படகோட்டும் மாலுமியைச்

சந்தித்துக் காலிமுகக் கடற்கரைக்கு அழைத்துவந்தான்

 

ஐந்தாண்டாய் ‘உல்லாசப் படகு’என்ற மிடுக்கோடு

ஆழிபல ஆசையொடு பவனிவந்த என்பெயரைச்

சிந்தைநோக‘அகதிப் படகு’ என்;றவனும் மாற்றிவிட்டான்

தினம்மதுர சங்கீதம் சிற்றின்ப நடனங்கள்

விந்தையாக விருந்துவைக்கும் ‘இளசுகளின்’ ஒய்யாரம்

வேடிக்கை யாய்ப்பேசும் நன்னனவன் விகடங்கள்

அந்தநாள் நினைவுவாட்ட அழுதழுது நாள்கழித்தேன்

ஆசையெலாம் அழிந்தொழிய இலவுகாத்த கிளியானேன்.!.

 

அகதிப்பட கோட்டியென ‘அமரசிங்கி’ பதவியேற்றான்;

அதிரடிப்படைச் சிப்பாயாய்ப் பதவிவிட்ட இனவெறியன்!

சுகவாழ்வு தெலைந்ததெனச் சோர்வுற்று நிற்கையிலே

தூரத்திற்; பெரியதொரு பேருந்தைக் கண்ணுற்றேன்

மிகக்களைத்த நிலையினிலே ‘கலுபண்டா’ வழிகாட்ட

மெள்;ளமெள்;ளப் பலரென்னை நாடிவரக் கண்டுநின்றேன்!

அகப்பட்டு விட்டோமினி அவன்விட்ட வழி’யென்ற

ஆதங்கப் பட்டோரின்;; பெருமூச்சும் கேட்டதம்மா.

 

வந்தகும்;பல் தமிழரென ஒருவாறு ஊகித்தேன்

மந்தைகளைப் பலிக்கெடுத்துப் போவதுபோல் நிரையாக

நொந்துநின்ற நூற்றைம்பது ‘அகதிகளை’ எண்ணிஎண்ணி

நொடியிலே என்மேலே எற்றிவிட்டான் ‘அமரசிங்கி’

விந்தையாக‘அப்பியமு’‘அப்பியமு’ எனக்கூவி

விசைதன்னை அழுத்தியதும் படகும்பாய்ந்  தோடியதே! 

சந்ததமும் தனித்துவத்தைக் காத்திடுவேன் என்றிருக்கத்

தமிழர்களின் நிலைபோல விலைபேசி அழித்தானே!

 

ஏற்றமுடியாப் பாரமதை எந்தனுடல் மிகநோக

ஏற்றிக்கொண் டாழ்கடலை எதிர்நோக்கிச் சென்றதுவே!

காற்றும்மிக வேகமாகச் சாதகமாய் வீசியதே1

கந்தவேளே கதிநீயே’ என்றுகூவு வோர்களையும் 

ஆற்றிடாது அறவட்டி கொடுத்தெடுத்த  பலலட்சம்

அவுஸ்திரேலியா சேர்த்திடுமோ எனப்புலம்பு வோர்களயும்

தேற்றிடுவோர் இன்றியழு வோர்களையும் பார்த்தநான்;;

தினந்தமிழர் இழந்ததெல்லாம் நினைந்துமனம் நொந்திழைத்தேன்

 

தாலிதனை இழந்;ததுயர் தாங்கிடாத தாய்மாரைக்

காதலரைப் பறிகொடுத்த கட்டழகுக் கன்னியரைப்

பாலியலுக் குட்படுத்திப் பசிதீர்த்தோர் கதைகளையும்

வாலைப்பரு வத்தோராய் வதைபட்ட வாலிபரைக்

காலிமுகக்’காய்ம்பிருந்துமீட்டெடுத்த கதைகளையும்

களைத்தொளித்து வெளிநாடே தஞ்சமென்றோர்  கதைகளையும்

போலிக்கடவுச் சீட்டொடு பயணிப்போர் சொலக்கேட்டேன்!

பொங்கிவரும் அவர்கண்ணீர் துடைக்கவழி கண்டறியேன்!

 

சாவைத் தவிர்ப்பதற்குத் தமதுபொருள் நகைகளுடன்;

சந்ததியாய் வந்தநிலம் சகலதையும் விற்றசிலர்

தேவைக்குப் பலலட்சம் ரூபாய்கள் சேர்த்தந்தப்

பாவியான ‘ஏஜென்ரிடம்’ பதட்டமுடன் கொடுத்ததுவும்

மூவைந்து வாரங்கள்; பின்னொருநாள் அவசரமாய்

முத்தையன் எனும்தரகன் முறையாக வந்தழைத்துக்

காவத்தை’க் கலுபண்டா கரைசேர்ப்பான்” எனச்சொல்லிக்

கடைசியிலென் மீதேற்றி விட்டதையும் நானறிந்தேன்.

 

வாரமிரண் டாகியதே வழிமாறி நடுக்கடலில்

வலுவான அலைகளொடு போட்டியிட்டுச் சென்றேனே!

தூரவழிப் பாதையொன்றால் தொடர்;ந்திட்டோம் பயணத்தை!

தூக்கமில்லைச் சீரான உணவுமில்லை யெனவாடிச்

சேருவமோ அவுஸ்திரேலியா எனச்சித்தங் கலங்கியெமைப்

பாராது ஆழியிலே பாய்ந்திருவர் மாய்ந்தபெருந்

தீராத்துயர்  வாட்டிநிற்கச் செயலற்று நீர்சொரிந்தேன்!

தினமவர்கள் ‘ஆவி’யெலாம் கனவில்வரக் கண்டுழன்றேன்!

 

பலநாளாய்ப் பாலின்றிப்; பச்சைக்கு ழந்தையொன்று 

பரிதாப மாய்க்கதறித் தாய்மடியில் மயங்கியதைச்

சிலநிமிடங் கூடவவள்; பொறுக்காது குழந்தைதனைச்

சேர்த்தணைத்து இறுதிமுத்தம் ஏக்கமொடு கொடுத்துவிட்டு

சலசலக்கும் ஆழ்கடல்தான் சாந்திதரும்’எனச்சொல்லித்

தன்கணவன் அழைக்கின்றான் சந்திப்போம்’ எனக்கதறிப்;

பலமெல்லாங் கூட்டியவள் பாய்ந்தந்தோ உயிர்மாய்த்தாள்;;

பார்த்தவரின் கண்களெலாம் செவ்விரத்தஞ் சிந்தினவே!

 

வந்தவர்கள் மூச்செல்லாம் ஏக்கப்பெரு மூச்சாக

வரங்கேட்டுத்  தங்கள்குல தெய்வங்களை வணங்கிநிற்க

விளையாட்டாய்த்; தூரமதில் தரையின்கரை தெரியுதென்று

வேதனையை மறப்பதற்கு ‘அமரசிங்கி’ முணுமுணுத்தான்

அடுத்தசில மணிக்குப்பின் றோந்துசுற்றும் விசைப்படகு

ஆகாயம் நோக்கியந்தோ அடுக்கடுக்காய்ச் சுட்டதுவே!.

மந்தபுத்திக் காரனான அமரசிங்கி தன்துவக்கால்

மாறிமாறி அப்படகைக் குறிவைத்துச் சுட்டுநிற்க

 

தற்பாது காப்பாகச் சுடப்பட்ட தோட்டாவோ

தப்பாதெம் மாலுமியைச் சாகடித்து வி;ட்டதுவே

சொற்பமாக இருந்துவந்த நம்பிக்கையும் தொலைந்ததென்று

சோகமாக இருந்தவேளை சூழ்ந்திட்ட இராணுவமோ

சற்றுமெதிர் பாராவிதம்;; எமைத்தமது படகேற்றிச்

சாதுரிய மாகவொரு கரைதனிலே இறக்கிப்பின்

குற்றஞ்செய் தோர்போலத் துப்பாக்கி முனையிலெமைக்

கொண்டுசென்று ‘கிறிஸ்மஸ்’;சுத் தீவிலடைத் தனரம்மா!

 

உல்லாசப் படகாக உலகமெலாம் சுற்றிவந்தேன்

உயிர்மதியா இனவெறியர் கொடுஞ்செயல்கள் நானறிந்தேன்

கல்மனமும் கசிந்;துருகும் கதைகேட்டு நானழுதேன்

‘‘கலுபண்டா’ போன்றோரின் கைபடாது நானின்று

செல்லாக்கா சுபோலவேயென் சிறப்பெல்லாம் இழந்தாலும்

சீரிளமைத் தமிழ்பேசும் செல்வங்களை வாழ்த்தினின்று

அல்லும்பகல்; என்கனவில் தமிழ்வெல்லக் காண்கின்றேன்;.

அகதிப்படகு”ப் பெயருடன் அகதியாகத் துயில்கின்றேன்.

REFUGE BOAT (4)

கவிஞர். பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார் பாரதி.
28.12.2019. 11.44.

……………………………………………………………………………………………..

3. அகதிப்படகு

வலியும்துயரும்ஆற்றாமையும்
வாழும்வகையென்றுகாட்டிடும்
நம்பிக்கையும்அவநம்பிக்கையும்
ஆசையும்கனவும்ஏக்கமும்
நேசமும்அன்பின்தவிப்புமென
உள்ளூறும்அத்தனையுணர்வும்
ஆழியின்அலைகள்அலைக்கழிக்க
அச்சந்தரஆடிவரும்அகதிப்படகிது

கைத்திணித்தப்பொருள்பொறுத்து
கலம்திணித்தப்பெரும்பாரம்சுமந்து
நிறைசூலியெனநிலைகொள்ளாது
கரைகாணாகடல்நடுவேநில்லாது
உவர்நீர்த்தாகமெனஉயிர்குடித்து
இன்னல்பலவும்இடர்பலவும்கடந்து
கொந்தளிக்கும்உணர்வுகளோடு
கொந்தளிக்கும்கடலேகும்அவதிப்படகிது

நேர்வழிமறந்துநெஞ்சம்குறுகி
திரைகடலோடிதினவெடுத்தேகி
சோறுதண்ணீர்சொந்தம்மறந்த
சுகவீனபலவீனமனங்கள்சுமந்து
மண்ணிற்பாதம்பதிக்குமுன்னே
கண்மறைந்துபொறுப்புதுறந்து
அந்தோவெனவிட்டுவிரையும்
அபாயமிகுஆட்கடத்திப்படகிது

யாதும்ஊரேயாவரும்கேளிரென்று
பரதேசம்தருமொருபுதுவாழ்வென்று
பாதுகாப்பின்எல்லைதுணிந்துகடந்து
பத்திரவாழ்வுக்கொருஉத்தரவாதமின்றி
நித்திரைதொலைத்துநீலக்கடல்வழி
ஆங்காங்கேஉயிருதிர்த்துஉறவுதிர்த்து
எத்தரையேனும்சேர்ந்திடத்துடிக்கும்
இதயங்கள்சுமந்துவரும்எந்திரப்படகிது

கவிஞை. கீதா.மதிவாணன்.
30.12.2019.

…………………………………………………………………..

4. அகதிப்படகு

 

‘அகதிப்படகு’ தலைப்பை

அறிந்தால் அதிரும் குடகு

(குடகு – குடகுமலை)

அனுபவம் இல்லா செயலால்

ஆழ்கவி எழவில்லை தன்னால்!

 

கற்பனைக்கு ஆட்படும் தலைப்பல்ல

கண்,கால் கை வெட்டுண்டதை என்சொல்ல

விற்பனைக்குண்டு விலங்குத் தலை!

வீதியில் தொங்கியதன்றோ மனிதத்தலை!

 

மனிதனை மனிதன் கொல்வதா?

மாநிலம் இதை ஏற்றுக் கொள்வதா?

புனிதமாய் புத்தரைப் போற்றுவோர்

புலையராய் புவியினில் வாழ்வதா?

 

நாதியற்ற மனிதரெல்லாம் தப்பித்தே

நாவாயேறி ஆழ்கடல் தனில்

நாற்புறம் பயணம் மேற்கொண்டார் – நற்கதி

தருவாரெவரென நடுக்குண்டார்

 

வலியார் மெலியாரை அடக்குவதும்

வரிந்து கொண்டு ஒடுக்குவதும்

புலியது மானைப் புசிப்பதுவும்

பொல்லா விலங்குக்கன்றி

மனிதருக்கன்றே?

 

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு

ஊரூராய் புகலிடம் தேடியலையும்

மானிடரையெலாம் தாய்மையுடன்

மறுப்பின்றி ஏற்றி வரும்

அகதிப்படகு

 

உண்ண உணவுமின்றி உடுத்த

உடையுமின்றி உறங்கியெழ

திண்ணை ஏதுமின்றி வாழ்வின்

திக்கறியா மாந்தரின் அடைக்கலம்

 

சொந்த நாட்டிலே சுதந்திரமாய்

சுற்றித் திரிய உரிமையற்று

நொந்த மாந்தருக்கு விடுதலையை

நுகர்வதற்கு வந்த அடிமைக் கப்பல்.

கவிஞர். ஆறு. குமாரசெல்வம்.

01.01.2020.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 
%d bloggers like this: