2020 ஜனவரி மாதம் நாம் நம் வாழ்நாளில் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு காட்டுத்தீயின் பரவலையும் சேதத்தையும் அவுஸ்திரேலியா சந்தித்தது.
புகை போர்த்த மண்டலமாய் வானுக்கும் மண்ணுக்கும் இடையிலான காற்றுவெளி கபில நிறமாய் சூழ, தீயின் வெப்பியாரத்தின் பல்வேறு விதமான வடிவங்களையும் தீ பரவாத பிராந்தியங்களும் சந்தித்தன. பல இலட்சக்கணக்கான வனவிலங்குகள், விவசாயிகளின் கால்நடைகள், மாடுகள், செம்மறி ஆடுகள், குதிரைகள், கோழிகள், பூனை, நாய் ஆகிய வீட்டு உயிரினங்கள்,மரங்களில் வாழ்வன என சொல்லவொணா எண்னிக்கையில் செத்தொழிந்தன; கருகி மாண்டன. பல இலட்சக்கணக்கான ஹெக்ரெயர் கொண்ட காட்டு வளங்கள் காணாமலே போயின. பல லட்சக்கணக்கான உடமைகள் சேதமாயின. சில மணித்துளிகளுக்குள்ளேயே பல ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாயினர்.
வாரக் கணக்காகச் சூரியன் சுட்டெரித்த படி இருந்தான். மருந்துக்கும் மழை இல்லை. இத்தகைய காட்டுத்தீயை எதிர்கொள்லத் தயாரான நிலையில் தீயனைப்புப் படையினரிடமும் போதிய வளங்கள் இருந்திருக்கவில்லை. சூரியனின் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 48 பாகையில் காய்ந்தது.
அவுஸ்திரேலியாவுக்குக் காட்டுத்தீ புதிதல்ல என்றாலும் இந்தக் காட்டுத்தீயும் அது விளைவித்த சேதங்களும் புதிது! 2020 புது வருடத்தின் தொடக்கமே நமக்கு சேதத்தோடும் உக்கிரமான சூரியனின் கோப நாக்குகளோடுமே தொடங்கி இருக்கிறது.
அது குறித்து நம் கவிஞர்கள் தந்த கவிதைகள் இங்கு பிரசுரமாகின்றன. அவற்றைப் பணிவன்போடு இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
1. மழையே பொழியாயோ?
கவிஞர் நந்திவர்மன்.
வருண பகவானே!
மழையாய் பொழியாயோ?
மரணப்படுக்கையிலே
மருண்டு நிற்கின்றோம்
தருணம் இதுவே தான்
மழையைத் தாராயோ?
கருணை காட்டாயோ?
கலக்கந் தீராயொ (1)
நாடு முழுவதுமே
நன்றாய்த் தீப்பற்றிக்
காடு எரிகின்ற
காட்சி கதிகலக்கும்
வீடு பல எரிய
விலங்கு பலமாள
பாடுபடுகின்றோம்
பதைப்பைத் தீராயோ? (2)
மெல்லப் பெய்தாயே
மேனி நனைந்திடவே
சொல்லிக் கொள்லாமல்
தொலைந்து போனாயே?
அல்லும் பகலும் நாம்
அல்லல் படுகின்றோம்
தொல்லை தீராயோ?
தொடர்ந்து பெய்யாயோ? (3)
தொடர்ந்து பெய்தால் தான்
துயரம் தீருமன்றோ?
அடர்ந்த காடெரியும்
அவலந் தீருமன்றோ?
படர்ந்த தியணையப்
பச்சை மரம் வளர
இடர்கள் போயகல
இசையாய் பொழியாயோ? (4)
நீண்ட காலங்கள்
நின்னைக் காணாது
வேண்டும் நீரின்றி
விதிர்த்துப் போனோம் நாம்
மூண்ட பெருந் தீயால்
முறிந்து போனோம் நாம்
மீண்டும் பெய்யாயோ?மேகம் பொழியாயோ? (5)
வரண்டு போனோமுன்
வரவைக் காணாமல்
இருண்ட காடெரியும்
எங்கும் தீப் பரவும்
திரண்டு அணைக்கின்ரார்
தீயோ அணையவில்லை
முரண்டு பிடிக்காதே
முகிலே பொழியாயோ? (6)
ஊழிக்காலத்து
ஒருவா சிவனேநாம்
வாழ வேண்டியுனை
வாழ்த்தி வனங்குகிறோம்
ஆழிக்கடலரையன்
அடமே பிடிக்கின்றான்
வீழும் மழையாகப்
பொழியப் பணிப்பாயே! (7)
– ஆழிக்கடலரையன் – கடலுக்கு அரசனாகிய வருணன்.
ஆக்கம்:த. நந்திவர்மன், சிட்னி, அவுஸ்திரேலியா, தை 7.2020.